ஜெ.பி. ஜோஸ்ஃபின் பாபா
யாழ்ப்பாணம் தீவகத்தைச் சேர்ந்த மெலிஞ்சி முத்தனின் நாவலாக, ஆதிரை வெளியீடாக வந்துள்ள நாவல் காந்தப் புலம். தனது அண்ணன் மற்றும் தம்பிக்கு சமர்ப்பித்துள்ள இப்புத்தகம், மனப் பயணக் குறிப்பு என்று குறிப்பிட்டு உள்ளார் எழுத்தாளர். தற்போது கனடாவில் வசித்து வரும் எழுத்தாளர் மெலிஞ்சியில் இயற்பெயர் விஜயனாதன் இயூஜின் என்பதாகும்.

கதை ஆசிரியர் குறிப்பிடுவது போல ஒரு மன உணர்வின் பிரதிபலிப்பாகும் இக்கதை. இலங்கையில் நிலவும் போர்ச் சூழல், அதில் கடலோர மக்கள் நம்பின கத்தோலிக்க கிறிஸ்தவம், பவுத்தம், சைவம், மற்றும் சித்தர் மதங்கள் அத்துடன் கம்யூனிஸ்டு , அம்பேக்கர் கொள்கைகள் சார்ந்த பல கேள்விகளுடன் கதை நகர்கிறது.
பூர்வகுடிகளின் மத நம்பிக்கையில் உள்ள கிழவி, கிழவியை பயப்படும் இன்றைய புதிய மத ஆட்கள்.
இதயங்களை கடவுளை நோக்கி எழுப்புவதை விட, அவர்களின் வாழ்க்கையைப் பசியிலிருந்து காப்பதே தன் முன்னால் இருந்த பெரும்பணி என நம்பின மரிசிலின் சாமியார்; மானிட மீட்புக்கு கிறிஸ்தவம் மட்டுமே என சொல்ல வேண்டிய மரிசிலின் என்ற கிறிஸ்தவ பாதிரியாரின் கடவுள் இயற்கை என மாறிய மன மாற்றம், சிந்தனை, இடது சாரிக் கொள்கைகளை நம்பும் உழைப்பாளியான கொத்தண்ணன், மற்றும் கோயிலை அண்டிப் பிழைத்து வந்த கிறிஸ்து தோத்திரம், மோசமான கிறிஸ்தவத்தின் உருவகமான எழுப்புதல் சாமியார், பவுத்தம் மேல் நம்பிக்கை வைக்கும், நம்பும் சாமிக்கண் இப்படி கதை நகர்கிறது. போர் சூழலில் ராகுன் வாய் பேச இயலாத, காது கேட்க இயலாத தனது அம்மாவுடன் புதிய ஊருக்குப் புலம் பெயர்கிறான்.
அம்மாவுடன் புதிய ஊரில் வந்த ராகுலனுக்கு மரிசலின் என்ற முதியவரின் அறிமுகம் ஆறுதலும் பாதுகாப்பாகவும் அமைகிறது. அவர் ஒரு கத்தோலிக்க பாதிரியாராக இருந்தவர். மக்களுக்கான சேவைக்கு வாய்ப்பு இல்லை என்றதும் சாதாரண மக்களுடன் வாழ ஆரம்பிக்கிறார். கிறிஸ்துதோத்திரம் மகளை மணக்கிறார். அவர்களுக்கு கமலன் என்ற குழந்தை பிறந்த நிலையில் மனைவி இறந்து போகிறாள்.
பின்பு கல்வியில் கமலனை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் இயக்கத்தில் சேரும் கமலம் சில நாட்களில் மாரீசன் தங்கையை கல்யாணம் செய்கிறான். ஜாதி வெறி பிடித்த மாரீசன் தந்தை கமலனை வெட்டிக் கொலை செய்கிறான்.பிற்பாடு மரிசில் தாத்தாவின் வாழ்க்கை இயற்கைக் கடவுளைத் தேடித் திரிகிறது.முடிவில் துயரத்தை வெல்லவே புத்தன் வழியில் சென்றடைகிறது.
நாகங்களை விரும்பும் கிழவி அன்பாக உள்ளாள். ஆனால் வேற்று வகை கடவுள் வணக்கம் உள்ள கிழவி மேல் பயம் மட்டுமே ராகுலன் அம்மாவிற்கு மிஞ்சுகிறது.கிறிஸ்து தோத்திரம் ஒரு பிடிப்பான கிறிஸ்தவராக இருந்தும் புது பாதிரியாரான எழுப்புதல் சுவாமியிடம் தாக்கு பிடிக்க முடியாததால் கோயில் சமையல்காரர் வேலையை விட்டு விட்டு. கொத்தண்ணர் மூலம் மரக்கடை வியாபாரம் செய்ய ஆரம்பிக்கிறார். கொத்தண்ணர் ஓடம் கட்டும் தொழிலாளி என்பதால் இடது கம்யூனிஸ்டு கொள்கையோடு பற்றுள்ளவராக உள்ளார்.
அடுத்தும் இடம் பெயரும் நிலையில் வளர்ந்த ராகுலன் தனது மனதான என்ற சடையன் கதாப்பாத்திரத்தைக் கண்டு கொள்கிறான். புது ஊரில் மாணங்கி கூட்டாளாகக் கிடைக்கிறான்.
இளைஞன் ஆன சடையன் வாழ்க்கையில் இயனி வந்து சேர்கிறாள். ஒரு இயக்க போராளியான இயனி ஒரு பெரியாரிய, விடுதலைச் சிந்தனை கொண்ட போராட்ட குணமுள்ள பெண்ணின் உறவு சடையனை பெண்-ஆண் உளவியல்,உறவு சார்ந்து சிந்திக்க வைக்கிறது. ஆனால் இயனியோ மனிதர்களின் உறவை பேணினாலும் உணர்விற்கு இடம் கொடுக்காது உள்ளாள். ஒரு போரில் இயனி மிகவும்மோசமாக கொல்லப்ப்படுகிறாள். இயனி இயனி என்ற மனம் பிற்பாடு சவுகந்திகாவோடு கூடிகுலாவியதைக் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தது.
வளமையான நாடுகளில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக உயிரைக் காப்பாற்ற புகுந்து வாழும் மக்கள், பண்பாட்டு அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களும் பெரிய நிறுவனங்களின் கச்சாபொருளாகும், உற்பத்தியில் இயந்திரமாகும் அவலத்தையும் கூறி உள்ளார்.

கொள்கைகளைப் பல வித ஆசைகள் கற்பனைகள் கனவுகள் வைத்துப் பயணிக்கும் மனிதனின் தனிநபர் வாழ்க்கை எதிர் கொள்ளும் இழப்பு, அதையும் கடந்து தான் கொண்ட கொள்கைக்கே இரையாகும் அவலத்தையும் சொல்லி உள்ளார்.
கதை முடியும் போது சடையன் இரு நபர்களாக நிறைவு பெறுகிறது.ஒருவன் தனது மரபுப் பணியான பொம்மைகளைச் செய்து கொண்டு இருக்கிறார்..
ஒரு மனிதனின் குழந்தைப்பருவம் முதலுள்ள மதம் சார்ந்த பண்பாடு சார்ந்த தேடல், தன்னுடைய அடையாளம் அகச்சிக்கல்களை பல கதாப்பாத்திரம் சம்பவங்கள் ஊடாக சிறப்பாக நகத்தி உள்ளார் எழுத்தாளர்.
ஒரு முடிவிற்குள் வரும் முன் எழுத்தாளர் விடை பெற்றாலும் வாசிப்பவர்கள் மனதில் பல ஆயிரம் வினாக்களைத் தூவிச் சென்றுள்ளது இப்புனைவின் வெற்றி ஆகும்.
இந்த புதினம்,கதை, கதை மாந்தர்கள் மட்டுமல்ல, தான் சார்ந்த சமூகத்தின் நெறிகள், சமூக அவலம் சார்ந்தும் பல இடத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
உதாரணம் குமுதினி கொலை,கிறிஸ்தவ சபைக்குள் பாதிரியார்கள் உருவில் இருந்த ஜாதி வெறி, யுத்தத்தால் உடல் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நிலை மற்றும் மலையகத்தைச் சேர்ந்த ராகுலம் தந்தை இலங்கைத் தமிழ் மக்களிடம் எதிர்கொண்ட பாகுபாடு, சிங்கள மக்களுடன் வாழ இயலாத தமிழர்கள் வாழ்க்கைக்குக் கொஞ்சமும் சிறிது அல்ல.புத்தகம் முழுதும் விரவிக்கிடக்கும் தத்துவ விசாரணைகளும் கவித்துவமான பல வரிகள் இப்புத்தகத்திற்கு வலு சேர்க்கிறது என்றால் மிகையாகாது
“என்னை உடைத்து பார்க்க வேண்டிய நான்
“என்னை தொகுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்”
சிரிப்பு,என்பதற்கு வாய் தேவையா?
“கடல் நீர் உவர்ப்பை உருசித்து கண்ணீரைச் சிறுமைப்படுத்திக் கொண்டேன்”
“கிழவியின் கரிசனைகளை விடவும் கிழவி மீதான அச்சமே மிகுதியாக இருந்தபடியால் கிழவியின் அன்பை யாருமே பொருட்படுத்தவில்லை”
“நான் சத்தங்களையும்,அம்மா மணங்களையும் ரசித்தோம்”
இவ்வனத்தில் முற்றி முறுகி ஆழமாய் வேரோடி நிற்கிறது துஅறமெனும் பெருமரம்”
“உண்மை நிரந்தர அழகு த் தன்மை கொண்டது”
புத்தக உள்ளடக்கத்திற்கும் அட்டைப்படத்திற்கும் சில பொருத்தம் இன்மை ஒரு குறைபாடாகத் தோன்றியது.ஒரு தனித்துவமான நடைக்குத் தகுந்த அட்டைப்படம் அவசியமாக இருந்தது.
