மயிலம் இளமுருகு
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வால் வெளியிடப்பட்ட இரண்டு குழந்தைகள் நூல்களைப் பேசுவதாக இக்கட்டுரை அமைகின்றது.‘மலைகளுக்கு ஒரு பயணம்’ என்ற சிறுவர்களுக்கான நூலை ஸ்வப்னா தத்தா என்பவர் எழுதியுள்ளார். இதனைத் தமிழில் கமலாலயன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகத்திற்கு அழகான ஓவியங்களை ரத்னாகர் சிங் என்பவர் வரைந்து உள்ளார்.

பொதுவாக பள்ளி விடுமுறைக் காலமான கோடை காலத்தில் குழந்தைகளை அவரவர் பெற்றோர்கள் வெளியூர்களுக்குச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வர். அந்தவகையில் இந்த சிறுவர்களுக்கான நூலும் ஒரு பெற்றோர் தம் குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். அந்தச் சுற்றுலா அவர்களின் சொந்த ஊரான டில்லியிலிருந்து மலைகள் இருக்கின்ற பகுதிக்குச் செல்வதாக அமைகின்றது. இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பனிமலைகள் அவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. அங்கே அவர்கள் கோடைகாலத்தை கழிக்க நினைக்கின்றனர்.
மலையின் மேலே இருக்கின்ற அந்தச் சூழலை நம் கண்முன்னே காட்சிப்படுத்துகின்றது எழுத்தாளர் கமலாலயன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு.குழந்தைகள் மலையைக் குறித்தும் மலையில் வாழ்கின்ற மக்களைக் குறித்தும் அவரது பண்பாடு குறித்தும் கேள்வி கேட்பதாக அமைகின்றது. மேலும் அங்கே விளைகின்ற உணவுப் பொருட்களைக் குறிப்பாக ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை வாங்கி அவர்கள் உண்கின்றார்கள். கிராமங்கள் ஏன் இங்கே பசுமையாக இருக்கின்றன என்று கேட்கின்ற வினாவிற்கும் அழகாக பதில் சொல்லப்படுகின்றது.
இயற்கைபற்றியும் பதில் தருவதாக இந்த நூல் நமக்குச் சொல்கின்றது. அங்கு இருக்கின்ற பூக்களைச் சொல்கின்றபோது லில்லி, பாப்பி, பியோனி, ப்ரீம் ரோஸ் என்று பல்வேறு மலர்கள் குறித்தும் இங்குச் சொல்லப்படுகின்றது. மேலும் இந்நூல் அம்மலை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களையும் நமக்குத் தெரிவிக்கின்றது. அங்கு இருக்கின்ற மரங்களின் வகைகள் குறித்தும் சொல்லப்படுகின்றது. ஆக இந்த ஒரு சிறுநூல் குழந்தைகளின் எண்ணற்ற கேள்விகளுக்குப் பதில்களைத் தருவதாக உள்ளது.
மலைகளுக்கு ஒரு பயணம் என்ற இந்நூல் பயணம் சார்ந்த ஓர் இலக்கியமாகவும் இருக்கின்றது. இறுதியாக மலைகளை நேசிக்கிறோம் என்பதற்காக வருகிறவர்களும் உண்டு என்கிறார் குழந்தைகளின் அம்மா. அதற்கு குழந்தைகள், ‘நாங்களும் கூட மலைகளை நேசிக்கிறோம்’ என்று குரல் எழுப்புகிறதாக நூல் முடிகின்றது.
‘ஒரு புதிய விடியல்’ என்ற நூலை எழுத்தாளர் பல்தேவ் சிங் பத்தான் எழுத, இந்த நூலையும் தமிழாக்கம் செய்திருக்கின்றார் கமலாலயன். முகம்மது இப்ராகிம் அவர்கள் இந்த நூலுக்கு ஓவியங்களை வரைந்துள்ளார். இந்த நூலையும் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. நேரு குழந்தைகள் புத்தகாலயம் என்ற வரிசையில் இப்புத்தகங்கள் வந்துள்ளன. இந்த நூலில் சொல்லப்படுகின்ற கதை மிகச் சிறந்த ஒரு கதையாகவும் இருக்கின்றது.
புதிய விடியல் எப்படி மலர்கின்றது என்ற செய்திதான் இங்கே சொல்லப்படுகின்றது. அதாவது காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வருகின்றது. அந்தச் சிங்கம் தன்னுடைய உணவிற்கு அதிகமாக விலங்குகளை வேட்டையாடி தினமும் கொன்று குவிக்கின்றது. ஒரு நாள் காட்டில் உலா வருவதற்காக சிகா என்ற தேவதை செல்கின்றது. அங்கே பார்க்கின்ற காட்சிகளைக்கண்டு மிகவும் வருத்தம் அடைகின்றது.

அந்த சிகா என்ற தேவதை பிறகு தன்னுடைய கூட்டத்தில் வந்து பேசுகின்ற போது தான் கண்டதைச் சொல்லி வருத்தப்படுகின்றது. தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றது. காட்டில் வாழுகின்ற அந்த உயிரினங்கள் எல்லாம் வீணாக தினமும் சிங்கத்தால் இறந்துகொண்டிருக்கின்றன என்று வேதனை கொள்கின்றன. விலங்குகள் வேட்டையாடப்படுகின்ற செய்தியைப் பேசுகின்றபோது அங்கிருக்கின்ற தேவதையெல்லாம் ஒன்று கூடி ஒரு திட்டம் போடுகின்றார்கள். அந்தத் திட்டம் என்னவென்றால் காட்டிற்குச் சென்று எப்படியாவது சிங்கத்தைச் சந்தித்து நாம் சிங்கத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அங்கே வாழ்கின்ற அனைத்துக் காட்டு உயிர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். அதன் அடிப்படையில் இந்த தேவதைகள் மூன்று பேர் செல்கின்றார்கள். காடு ரொம்ப தூரத்தில் இருக்கின்றது. தன்னுடைய பொருட்களையும் காட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அங்கே கரடியாரிடம் ஸ்வீட்டி என்ற தேவதை பேசுகின்றார். “அந்த சிங்கராஜா எங்கே இருக்கின்றது என்றும் அந்தக் குகையைத் தெரியுமா?” என்று கேட்கின்றபோது சிங்கராஜாவா ரொம்ப கஷ்டமாயிற்றே! அது வந்து எல்லாரையுமே ரொம்ப துன்புறுத்துவாரு. சரி, இருந்தாலும் நான் சொல்றேன். நீங்க பத்திரமா இருந்துக்கோங்கன்னு சொல்லிட்டு அந்தக் கரடி, சிங்கராஜா இருக்கின்ற முகவரியைத் தருகின்றார். அதேபோல மற்ற தேவதைகளும் மற்ற உயிரினங்களிடம் கேட்டு சிங்கராஜா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள்.
யானைகளும் பிறகு அங்கு இருக்கின்ற அந்த ஒட்டகச்சிவிங்கி, குரங்குகள், கரடிகள் எல்லாம் வந்து இவர்களை (தேவதைகளை) நினைத்து வருத்தம் அடைகின்றனர். ஏன் என்றால் சிங்கம் வந்து ரொம்பக் கொடுமையான விலங்கு இவர்களை அடித்து துன்புறுத்தி சாப்பிட்டுவிடும் என்று வருத்தப்படுகின்றார்கள். இருப்பினும் அவர்களுக்கு எச்சரிக்கை தருவதற்காகவும் அந்த தேவதைகளை அழைத்து விருந்து கொடுக்கின்றனர்.
யானை தனக்குப் பிடித்த பெரிய கரும்பை உடைத்து வந்து கொடுக்கின்றது. அதைப்போலவே கரடி தேன் கொண்டுவந்து கொடுக்கின்றது. வாழைப்பழங்களையும் மாம்பழங்களையும் கொடுக்கின்றது. மற்ற உயிரினங்கள் எல்லாம் அதுபோல ஒவ்வொன்றாகத் தருகின்றன. தேவதைகள் அனைத்தையும் சாப்பிட்டுவிடுகின்றனர். மறுநாள் சிங்கம் இருக்கின்ற இடத்திற்கு அந்த தேவதைகள் செல்கின்றார்கள். தேவதைகள் சென்றபோது தூங்கிக்கொண்டிருக்கிற சிங்கத்தை அண்ணா, மாமா, பெரியப்பா என்று இந்த தேவதைகள் மூன்று பேரும் கூப்பிடுகின்றார்கள்.
உள்ளே இருந்து வந்த சிங்கமானது பார்க்கின்றது. பார்க்கின்றபோது, ‘என்ன சிங்கங்கள் எல்லாம் வந்திருக்கின்றது?’ என்று யோசிக்கின்றது. அதாவது சிகா என்ற தேவதை போட்ட மந்திரத்தால் அந்த மூன்று தேவதைகளும் சிங்கத்திற்கு சிங்கமாக காட்சி தரும். எனவே சிங்கம்தானே என்று அந்தச் சிங்கத்தோடு பேசிக் கொண்டிருக்கின்றது. ‘நீ செய்வது தவறு பெரியப்பா!’ என்று ஒரு தேவதை சொல்ல, “ஆமாம், தினமும் நிறைய விலங்குகளை எல்லாம் உன் தேவைக்கு அதிகமாக நீ கொல்கின்றாய் உனக்கு எவ்வளவு தேவையோ, அந்த விலங்கை மட்டும் சாப்பிட்டு விட்டால் போதுமே, எதற்காக அதிக எண்ணிக்கையில் உணவிற்காக மற்ற உயிர்களைக் கொல்கிறாய்?” என்று கேட்கின்றார்கள். யோசித்துப் பார்த்து சிங்கமும் சரி என்று ஒத்துக்கொள்கிறது. சிங்கத்திற்கு ஒரு நாளைக்குத் தேவையான உணவுகளைத் தேவதைகள் அந்த மூன்று பேரும் சேர்ந்து மூன்று நாட்கள் கொடுக்கின்றார்கள். நான்காவது நாட்கள் கொடுக்க நினைக்கின்றபோது சிகா என்ற தேவதை யோசிக்கின்றார்.
‘இன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நான் போட்ட மந்திரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும். இன்று இப்போது அந்த மந்திரம் வேலை செய்யாது’ என்று நினைக்கின்றது. அப்போது சிங்கம் வந்து பார்க்கின்றது. சிங்கம் பார்க்கின்றபோது அந்த மூன்று பேரும் தேவதையாக காட்சியளிக்கின்றார்கள். அப்போது உண்மையைச் சிங்கத்திடம் சிகா என்ற தேவதை சொல்லுகின்றது. “நாங்க எல்லாம் உனக்கு அறிவுரை சொல்வதற்காகத்தான் வந்தோம். சிங்கமே! நீ வந்து இப்படிச் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டினோம் அவ்வளவுதான். நீயே யோசித்துப் பார் சிங்கமே! நீ வந்து மற்ற உயிரினங்களை எல்லாம் அளவுக்கு அதிகமாக கொல்லக்கூடாது.

உன் தேவைக்காக உண்பதற்காக மட்டுமே கொல்ல வேண்டும்” என்று பேசுகின்றனர். பிறகு இதை உணர்ந்து கொண்ட அந்த சிங்கமானது சரி, “நான் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் .எனக்கு என்ன தேவையோ அதை மட்டும் நான் வேட்டையாடிக் கொள்கிறேன்” என்று உறுதி அளிக்கின்றது. மற்ற உயிரினங்களிடம் அதாவது விலங்குகளிடம் சென்று, விலங்குகளுக்கு ஒரு புதிய விடியல் மலர்ந்துள்ளதாக தேவதைகள் சொல்கின்றனர். பிறகு அந்த மூன்று தேவதைகளும் தங்களது இருப்பிடத்திற்குச் செல்கின்றனர். அத்தோடு கதை நிறைவடைகின்றது.
இந்த இரண்டு சிறு நூல்களுமே குழந்தைகளுக்குத் தேவையான மிகச்சிறப்பான நல்ல படைப்புகளாக இருக்கின்றன. இந்த நூலில் உள்ள ஓவியங்களும் அதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கின்றன. இந்த இரண்டு நூல்களையும் மொழிபெயர்த்துள்ள கமலாலயன் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. குறிப்பாக குழந்தைகளின் மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக இவர்களுக்கு நன்றி. எளிமையான நடையில் தேவையான கருத்துகளைப் புரியும் முறையில் கொடுத்துள்ள மொழிபெயர்ப்பாளருக்கு வாழ்த்துகள்.
மிகச் சிறப்பாக எழுதியுள்ள ஸ்வப்னா தத்தா&பல்தேவ்சிங் பத்தான் அவர்களுக்கும் குழந்தைகள் சார்ந்த இலக்கியத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்ற நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா நிறுவனத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றியும்.