து.பா.பரமேஸ்வரி
“கண்ணாடிக் குப்பிகள்” தமிழ் வெளி பதிப்பகத்தின் வெளியீடாக தினசரி நமது பார்வைக்குள் விழுந்து எழும்பும் துயருற்ற மனிதர்களின் கவனிக்கத்தவறிய வாதைகளுடன் பயணிக்கச் வைக்கிறது. பத்து கதைகளைக் கொண்ட தொகுப்பில்” ஞாபகக்குறி” மற்றும் “நான் பேசுவது கேட்கிறதா” இரண்டும் பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர்களின் வலியை பேசுகிறது.
பிள்ளையை கருவிலேயே பறிகொடுத்த தந்தையின் நொடிந்துப் போன மனதின் காயங்களை கண்ணீர் மல்கக் கதைக்கிறது “ஞாபகக் குறி” கதை.

ஞாபகக்குறி கதை போல “நான் பேசுவது கேட்கிறதா” கதை. அதிகார வர்க்கத்தின் வன்மத்தீயில் சுட்டுக்கொல்லப்பட்ட சலோமிக்குட்டியின் மரணஉபாதைகளை அவளது தாயின் கண்ணீர் வரிகள் வரையும் மனக்கடிதாசியாக வாசகரின் இதயத்தில் பச்சைக் குத்துகிறது. மகளை இழந்த தாயின்அதிகார வர்க்கத்திற்கெதிரான கதை..
“என் ஓட்டு, அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்து விடுமா.”
வன்புணர்வில் மரணித்த பெண்பிள்ளைகளின் மூன்று சம்பவங்கள் அடுத்தடுத்து ஒரு சில நாட்களுக்குள் நிகழ்ந்தேறிய குறிப்புகளை ஆவணப்படுத்துகிறது “அவளின் நாட்குறிப்பு”. கதை சமகாலத்தில் தலைவிரித்தாடி வரும் பாலியல் சித்திரவதைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட ஒரு பெண் பிள்ளையின் மனஓட்டங்களைக் காட்சிப்படுத்துகிறது..
தலைமுறை கதை நமது பழங்குடி மக்களின் நம்பிக்கைகளின் வழியாக மனிதப்பண்பை செவிலி கமலாவிற்கு மட்டுமல்ல.நமக்கும் தொலைத்த நமது பண்பாட்டை மீட்டுருச் செய்கிறது. கொரோனா கால இலக்கியங்களாக மூன்று படைப்புகள் தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. நூலாசிரியர் ஆங்கில மருத்துவராதலால் கொரோனா கால துயர் சம்பவங்களின் அனுபவங்களை கதைகளாகப் பகிர்ந்துள்ளார்.
கொரோனா கால பெரும்சிக்கலான ஆங்கிலமருத்துவத் துறையின் மூடநம்பிக்கையில் உண்டான பல அவதிகளைப் பேசுகிறது “உயிர் கவசம்” கதை. கொரோனா கவச உடைகளால் மருத்துவமனைகளில் பணிபுரிந்த அனைத்து பணியார்களுக்கும் உண்டான அசௌகரியங்களை எதிர் கொண்ட அவதிகள் அதிலும் பெண் மருத்துவர்கள் செவியர்கள் துப்புறவுதொழிலாளர்கள் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் எதிர்கொண்ட அவஸ்தைகளையும் சிக்கல்களையும் மக்கள் வெளியில் கவனப்படுத்தப்படுத்துகிறது கதை.
கொரோனா காலப்பேரிடர் பதிந்த. கொள்ளைநோய்கள் பல ஆவணங்களாக வரலாறுகள் படம்பிடித்துள்ளன. ஆனால் இந்த கொரோனா தொற்றுக் காலங்கள் வரலாறுகளைக் கடந்த பக்கங்கள்.தொகுப்பின் தலைப்பைக் கொண்ட கதையாகக் “கண்ணாடிக் குப்பிகள்”. மனித உயிர்களை காவு வாங்கியது ஒருபுறமிருந்தாலும் மனித உணர்வுகளை மனிதத்தை அறத்தை குழிதோண்டிப் புதைத்த இந்தக் காலத்தின் அவஸ்தைகளை கண்ணீராக வரித்துள்ளார் ஆசிரியர். “தகனவெளி”யும் பேரிடர் காலத்தின் மற்றொரு வாதைக் கதை கதையின் நாயகன் இடுகாட்டு வெட்டியான். பிணங்களினூடே தனது பிரியங்களைப் பிணைத்துக் கொண்டவன். அவனுக்கு எல்லாமே பிணங்கள் தான்.
இடுகாடு வெறிச்சோடிய காலத்திலும் வருந்தியதில்லை. தொற்றுக் காலத்தில் நூற்றுக்கணக்கான மனிதச்சடலங்கள் குமிந்து வந்ததில் பெருமிதமும் இல்லை. அவனைப் பொறுத்தவரை ஒவ்வோர் சடலமும் உறவு தான். குழந்தைகளின் சடலங்களைக் கண்டால் அவர்கள் ஆழ்ந்து தூங்குவதைப் போலவே பாவித்து கொஞ்சமும் வதைக்காமல் தகனம் செய்வான் குழந்தைகள் மட்டுமல்ல தொற்றுகாலங்களில் பாலிதீன் உறைகளில் சுற்றப்பட்ட அத்தனை மனிதச்சடலங்களைக் கண்டும் வருந்துகிறான். காற்றுக்குமிழிகள் நிறைந்த இத்தனை பெரிய மண்டலத்தில் மூச்சுத் திணறி பல ஆயிரம் மனித சுவாசங்கள் திணறி மரித்தத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
கொரோனா காலங்களில் ஆங்கில மருத்துவக் கூட்டம் தம்மை தற்காத்துக் கொள்ள அடர்ந்த கவசங்களுக்குள் ஒளிந்துக் கொண்டன. ஆனால் காய்ச்சல் கண்டு இறந்த மனிதர்களை பொழுது முழுதும் எரியூட்டுகிற இவனைப் போன்ற வெட்டியான் குடிமக்களுக்கு கவசம் ஏதும் தரப்படவில்லை. அதைப் பற்றி மருத்துவ கவுன்சில்கள் ஒருபோதும் கவனத்தில் கொள்ளவேயில்லை. உலகத்தை தற்காத்துக் கொள்ள பல உத்திகள் பரிந்துரைத்த மருத்துவர்களின் கண்களுக்கு இவர்கள் ஏன் புலப்படவில்லை
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியின் ஆதங்க தொனியாக ஒலிக்கிறது கண்ணாடிக் குப்பிகள் கதையின் கடைசி கதை “நீதியின் முன் பேசுதல் – 50.”
1829 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட தூக்குதண்டனை கைதியொருவனின் மரண வாக்குமூலமாக அவனின் இறுதி யாத்திரையின் வேண்டுகோளாக எதிரொலிக்கிறது. மனிதத்தன்மையை நமது தேசத்திலும் தொலைத்துக் தான் உள்ளோம் என்று குத்திக் கிழிப்பது போல உறுத்துகிறது.
ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தை நோக்கிய கேள்வியாக. “அத்தனை உயிர்பிரிதலின் நீதியை நிலைநாட்டிய பின்பும் கூட தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவருக்கு மரணத்தின் விதையிலிருந்து சுதந்திரம் கிடைக்காதது ஏன்.”
கிழிந்த சட்டையின் முதுகுப் பகுதியின் வழியே தெரிகிற அடிமைக் காயங்கள் தான் இப்படி கூனை உருவாக்கி இருக்கின்றன என்று பின்னால் வருபவர்களுக்கு தெரியாமலா போய்விடும்.”
இந்த ஆதங்கம் வறியவர்களின் தொனியாகவே ஒலிக்கிறது. இந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வென்பது சட்டையை மட்டுமா கிழித்துக் காட்டுகிறது.. பசிபாட்டையும் சேர்த்தே நிர்வாணமாக்கியுள்ளது. சமூகத்தில் விளிம்பு மனிதர்களின் கையாலாகாத வாழ்வை நிலைகுத்துகிறது “சுவாரஸ்யமான கதை.” கதை சமூகத்தால் தூற்றட்டப்படும் வறியவர்களின் இரண்டு நிகழ்வுகளை நியாயப் படுதுகிறது.
ஒன்று பசியின் கோரப்பிடியில் நாயொன்றைக் கொன்று புசித்துப் பசியாறிய அவன் தரப்பு நியாத்தையும் மற்றொரு புறம் தண்டவாளங்களில் துண்டிக்கப்பட்ட மனிதர்களின் சடலங்களில் மிச்சமாய் இருந்த உடைமைகளை தனது வயிற்றுப்பாடிற்காக தனதாக்கிக் கொள்ளும் ஒரு தரப்பினரின் வாழ்வாதரத்திற்கான நியாயங்களைக் கண்டடைகிறது.
“அப்பாவின் நாற்காலி” கதை குடும்பத்திற்காக இரவு பகல் பாராது பாடுபடும் தந்தையின் தியாகத்தை வலியுடன் கடத்துகிறது. கதையின் வாசிப்பிற்குப் பின் அப்பாக்களின் கடினங்களும் புதைத்து விடும் அவர்களின் தூய அன்பும் அர்ப்பணிப்பும் திறக்கப்படுகிறது.கதைசொல்லியாக நூலாசிரியரே பெருவாரியான கதைகளில் பாத்திரமாக வலம் வருவதும் கவித்துவ மொழியில் கதைகளைப் படைத்திருப்பதும் வாசகரின் மனதில் கதை ஒவ்வொன்றும் நீக்கமற நிறைந்துள்ளது. “கண்ணாடிக் குப்பிகள்” மக்களின் மனங்களை பிரதிபலிக்கிறது.
