நிகழ் அய்க்கண்
இந்நூலானது மார்க்சிஸ்ட் (ஆங்கில) இதழின் இந்தியா @ 75 சிறப்பிதழில் தோழர்கள் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், பி.டி. ரணதிவே, சீத்தாராம் யெச்சூரி, இர்ஃபான் ஹபீப் ஆகியோர் எழுதி வெளியான கட்டுரைகளின் தமிழாக்கமாகும். அத்தோழர்களின் கருத்துக்களைச் சுருக்கி கிழே தந்துள்ளேன்.

இந்தியா @75 – சீத்தாராம் யெச்சூரி:
நமது மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்புக் குடியரசை ஒரு பாசிச ‘இந்துத்துவா ராஷ்ட்ரா’வாக மாற்றுவதற்கு ஒரு புதிய விவரிப்பு எழுதப்பட்டு வருகிறது. இவற்றை முறையாக மதிப்பீடு செய்து இந்தச் சவாலை எதிர்த்து முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ‘செளரிசெளரா’ சம்பவத்திற்குப்பிறகு வாபஸ் பெறப்பட்டது. 1921இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், 1925இல் ஆர்.எஸ்.எஸ்ஸும். நிறுவப்பட்டன. விடுதலையடைந்த இந்திய அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தன்மைகள் எத்தகையதாக இருக்கவேண்டும் என்கிற கருத்தாக்கமானது மேற்சொன்ன மூன்று அமைப்புக்களின் கண்ணோட்டங்களுக்கிடையே நடைபெற்றுவந்த தொடர்ச்சியான போராட்டங்களிலிருந்தே உருவானது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை அங்கீகரித்தவகையில், மொழி, இனம், மதம், பண்பாடு போன்ற அம்சங்கள் மதிக்கப்பட்டு, சமத்துவ அடிப்படையில் நடத்தப்படவேண்டும். அவ்வகையில்தான் ஒரு நாடு என்ற வகையிலும், அதன் மக்கள் என்ற வகையிலும் இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்ற முடிவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் வந்தனர். மூன்றாவது கண்ணோட்டமானது, சுதந்திர இந்தியாவின் தன்மையை அதன் மக்களது மதச்சார்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படவேண்டும் என்றது.
தேச விடுதலையின்போது, ஆர்.எஸ்.எஸ்ஸானது தனது நோக்கத்தை அடையத்தவறிய நிலையில், நவீன இந்தியாவை ஒரு தீவிரமான, சகிப்புத்தன்மையற்ற, பாசிச வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்ரா’வாக மாற்றும் முயற்சியினைத் தொடர்ந்தனர். ஒருபக்கத்தில் ஏகாதிபத்தியத்துடனான கட்சித்தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, நமது குடியரசின் மதச்சார்பற்றச் ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவது; மறுபுறத்தில் கிராமப்புறங்களில் நிலவிவரும் நிலப்பிரபுத்துவத்தின் பிடியிலிருந்து விடுபடுவது என்பதை கம்யூனிஸ்டுகள் வலியுறுத்தி வந்தனர்.

நாட்டின் விடுதலைக்குப்பின்பு, நிலப்பிரபுக்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள முதலாளி வர்க்கம், ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்ததினால், காங்கிரஸினால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட முடியவில்லை. காங்கிரஸானது, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, பெரும்பான்மையான மக்களை சுரண்டலுக்குள் தள்ளியது. இதுவே வகுப்புவாத சக்திகளுக்கு தீனியாகிப்போனது.
இந்தியா என்ற கருத்து உருவாவதற்கு கம்யூனிஸ்டுகள் மிக முக்கியமான பங்கினை வகித்தனர். அதாவது,
1.நிலப்பிரச்சனை. 2. மொழிவழி மாநிலங்கள் மறு சீரமைப்பு. 3. மதச்சார்பின்மையாகும். இன்றைக்கும், இந்தியா என்ற கருத்துருவின் மைய அச்சாக நீடித்துவரும் இம்மூன்று விஷயங்களைப் பார்க்கும்போது இதைப் புரிந்து கொள்ளமுடியும்.
இடதுசாரிகளும் தேசிய இயக்கமும் – இர்ஃபான் ஹபீப்:
கார்ல்மார்க்ஸ் 1883ல் இறந்ததற்குப்பிறகு, இரண்டுவகை வளர்ச்சிப்போக்குகள் உருவாகின. இவை இந்திய தேசிய வாதத்திற்கும், சர்வதேச சோசலிசத்திற்கும் அமைப்புரீதியான வடிவங்களை வழங்கின. 1885ல் இந்திய தேசிய காங்கிரஸும், 1889ல் இரண்டாவது அகிலமும் தொடங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸில் மிதவாத அரசியலும், இரண்டாவது அகிலத்தில் வலதுசாரி சோசலிச ஜனநாயகத்தின் ஆதிக்கம் அதிகரித்திருந்ததால் இவையிரண்டு இயக்கங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகியே இருந்தது.
காங்கிரஸை உருவாக்கியவர்களில் ஒருவரான தாதாபாய் நெளரோஜி 1876ல் இந்திய மக்களின் வறுமை மற்றும் ஒடுக்குமுறைகள், தொழில் அழிப்பு, வரிவிதிப்புக் குறித்து மனுக்களாகவும், பிரசுரங்களாகவும் எழுதி வெளியிட்டார். இச்செயலானது நிலப்பிரபுக்களையும், முதலாளிகளையும் மக்களை அடையாளம் கண்டுகொள்ளச்செய்தது. மேலும் கிலாஃபாத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் மக்களிடையே எதிர்ப்புணர்வை வளர்த்தெடுத்தது. இதனையொட்டி, தொழிற்சங்க இயக்கமும், விவசாய இயக்கமும் உருவானது.

1922 வாக்கில், கல்கத்தாவில் – முசாஃபர் அகமது; பம்பாயில் –
எஸ்.ஏ.டாங்கே; மெட்ராஸில்- சிங்காரவேலச்செட்டியார்; லாகூரில் – குலாம் ஹூசைன் ஆகியோர் அவரவர் மட்டத்தில் கட்சியைக்கட்டி பரப்புரையை மேற்கொண்டனர். இதற்கிடையே பிரிட்டிஷ் அரசாங்கம் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் நோக்குடன் கைது செய்து, ‘கான்பூர் சதிவழக்கினைப்’ போட்டது. இதனையும்மீறி, 1926ல் கான்பூரில் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில், இந்தியாவை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, உற்பத்தி முறைகள், விநியோகத்தை சமூகமயமாக்குவதன் அடிப்படையில் மாற்றி, ஒரு தொழிலாளி – விவசாயிகள் குடியரசை நிறுவுவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
அடுத்ததாக, 1929ல் நாடு முழுக்க உள்ள கம்யூனிஸ்டுகளை ‘இங்கிலாந்து அரசியின் தன்னாட்சி அதிகாரத்தை அகற்ற சதி செய்ததாகக்கூறி’ மீரட் சதி வழக்கீன்கீழ் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. இதன் காரணமாக, 1929-33 நான்கு ஆண்டுகள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு தலைமையே இல்லாமல் போனது. இதனை காங்கிரஸ் கட்சி தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டது. இச்சூழலில், மாஸ்கோவில் நடந்த மாநாடானது, ஒரு வலுவான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டவேண்டியதன் அவசியத்தையும், விவசாயப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடுவது என வலியுறுத்தியது. இதன்மூலம் ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளி வர்க்கக்கூட்டணியை உடைப்பது என்பதுதான் நோக்கமாகும்.
இந்திய விடுதலை இயக்கத்திலும், சுதந்திர இந்தியாவிலும் இடதுசாரிகள் – இ.எம்.எஸ்:
இந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றிக்கொண்டிருந்த அதேநேரத்தில், காலனி, அரைக்காலனி மற்றும் காலனியாதிக்கத்தை நம்பியிருந்த நாடுகளிலும், குறிப்பாக ஆசியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களில் தீவிரமான போக்குகள் உருவாகிக்கொண்டிருந்தன. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில், இங்கே கோரிக்கைகளுக்கு மனு போடுவது X போராட்டம் நடத்துவது என்பதாகவும், அவர்களை அணுகுவதில் மிதவாத X தீவிரவாதப் போக்குகளும் கடைபிடிக்கப்பட்டன. இந்தியாவிற்கு வெளியே, புரட்சியாளர்களைக்கொண்ட குழுக்கள் பல நாடுகளில் உருவாகி, இந்தியாவை விடுவிப்பதற்கான திட்டங்களைத் தீட்டி வந்தன.
முதலாம் உலகப்போருக்குப்பிறகு, இரண்டு நிகழ்வுகள் இந்திய இடதுசாரிகளுக்கு புத்துணர்வூட்டியது. 1. பிரிட்டிஷ் அரசின் மக்கள் விரோதக் கொள்கையானது, மக்களை ஓரணியில் திரள வைத்தது. 2. காங்கிரஸ் – முஸ்லிம்லீக் இடையே கசப்புணர்வு மங்கி, புதியதொரு எழுச்சிக்கு வித்திட்டது. உள்நாட்டில் நிலவிய இத்தகு நிகழ்வுப்போக்கு ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் ரஷ்யப் புரட்சியானது, வெளிநாடுகளில் இயங்கிவந்த புரட்சிகரக் குழுக்களை இந்தியா நோக்கி ஒன்றிணைத்தது. பெர்லின் மற்றும் ரஷ்யாவில் இயங்கிவந்த குழுக்கள் ஒன்றிணைந்து 1920 அக்டோபர் 21இல் ‘தாஷ்கண்ட்’ நகரில் எம்.என்.ராய் முயற்சியில் உருவக்கப்பட்டதுதான் இந்திய கம்யூனிஸ்டுகட்சி.
அப்போதைய சூழலில், வெகுஜன புரட்சிகர நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். தொழிலாளி வர்க்கம், விவசாயி, உழைக்கும் மக்கள் அமைப்புக்கள் உருவாகின. தத்துவார்த்த மட்டத்தில் அகிம்சை X போராட்டம்; சுயராஜ்யம் X விடுதலை; அரசியல் விடுதலை X பொருளாதார விடுதலை; தனிநபர் பயங்கரவாதம் X வெகுஜன நடவடிக்கை என்பதாக இருந்தது.
காங்கிரஸ்காரர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் சோசலிசக் கருத்துடையவர்களாக இருந்துவந்தனர். அதுதவிர, காங்கிரஸ் – சோசலிஸ்ட் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சிக்குள் வேலைசெய்ய வேண்டியிருந்தது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியானது, இந்த இரண்டு குழுக்களோடு உறவுகொண்டும், இணைந்து வேலைசெய்தும் வந்தனர். 1939இல் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலின்போது அக்கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலானது, இந்த மூன்று சக்திகளுக்கு இடையிலான கருத்து மோதல்களை வெளிப்படுத்தியது.

இரண்டாம் உலகப்போர் வெடித்தபிறகு, யுத்த நிலைமையை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள, காங்கிரஸ் – தேச விடுதலையையும்; முஸ்லிம் லீக்-தனிநாடு+தேச விடுதலையையும்; கம்யூனிஸ்டு கட்சியானது பாட்டாளி வர்க்கப்பாதையையும் முன்வைத்தது. காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டமானது பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டது.
40 ஆண்டு சுதந்திரம் – பி.டி. ரணதிவே :
இந்திய சுதந்திரமென்பது, ஏகாதிபத்தியத்திற்கும், பழைய காலனி ஆதிக்க முறைக்கும் ஒரு தீர்மானகரமான அடிகொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தியா சுதந்திரமடைந்து 40 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் வர்க்க நிலைமையில் குணாம்ச ரீதியான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. பூர்த்தியடையாத ஜனநாயகப் புரட்சி முழுமையடைய 40 ஆண்டுகளுக்குமேல் தேவை. இந்நிகழ்ச்சிப் போக்கு நீண்டுகொண்டே போனதற்குக் காரணம், தேசிய விடுதலைப் போராட்டக் களத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பலவீனமாக இருந்ததே. இதன்விளைவாக, இந்தியாவில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி நீண்ட ஸ்திரத்தன்மையைப் பெற்றது.
தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில், ‘நமது புரட்சி’யின் தன்மையானது, அடிப்படையில் நிலபிரபுத்துவ–ஏகாதிபத்திய எதிர்ப்பு; ஏகபோக எதிர்ப்பு மற்றும் ஜனநாயக அம்சம் நிறைந்தது. இந்த யுகத்தில், ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும்; இது சோசலிசத்தை அடைவதற்கான முன்னேற்றப்பயணத்தில் ஓர் அவசியமான நடவடிக்கையாகும்.
தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை அமைப்பது; அந்நிய மூலதனச் சுரண்டலையும், தாக்கத்தையும் ஒழிப்பது; விவசாயப் புரட்சி ஆகியவையே ஜனநாயகப் புரட்சியின் முன்னுள்ள கடமைகளாகும். தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உறுதியான கூட்டணிதான் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படையாகும்.
இந்த 40 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பது; அணிசேரா அயலுறவுக்கொள்கை; இந்திய அரசமைப்புச் சட்டம், நாடாளுமன்றம், பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்படுவது; திட்டமிடுவது; பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெருமளவு கட்டிக்காப்பது சாதகமான அம்சங்களாகும்.
கடந்த 40 வருடங்களில் ஜனநாயக உரிமைகளை மறுப்பது அதிகரித்துள்ளது; அதிகார வர்க்கத்தின் அதிகாரம் வளர்ந்துள்ளது; முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது; மத அடிப்படை வாதமும், மீட்சிவாதமும் மக்களிடம் செல்வாக்கு செலுத்துவதாக இருக்கின்றன