இரா.தெ.முத்து
இங்கிலாந்திலிருந்து கிளம்பிய கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதி பிரான்சிஸ்டே கப்பல் வழியாக புதுச்சேரி போகிறான். புதுச்சேரியில் மெட்ராஸ் குறித்து கேள்விப்படுகிறான். மெட்ராசில் ஏற்கனவே போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஹிப்ரூ மொழி பேசும் யூதர்கள், சீனர்கள், ஆர்மீனியர்கள் என உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு தொழில்களை வணிகங்களை ஆந்திராவின் கோல்கொண்டாவின் வைரத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி இதற்கு ஈடாக மெட்ராசிற்கு தேவைப்படும் பவளம், வெள்ளி, தங்கம் போன்றவைகளை இறக்குமதி செய்யும் தொழில் என செய்து வருவதை பிரான்சிஸ்டே கேள்விப்படுகிறான்.

இங்கிலாந்துகாரர்கள் மெட்ராசிற்கு இந்தியாவிற்கு வருவதற்கு நூறாண்டு முன்னமே மெட்ராஸ் மயிலாப்பூர் கிராமத்திற்கு வந்து தொழில் செய்து கொண்டிருக்கும் அர்மீனியர்களை போர்த்துகீசியர்களைப் பார்க்கிறான் பிரான்சிஸ்டே. அவர்கள் வழியாக நீண்டு கிடந்த வங்கக்கடலோரத்தை வங்கக்கடலில் வந்து சங்கமிக்கும் அழகான கூவம் நதியை பார்க்கிறான். கூவம் நதி அழகில் மயங்கிப் போகிறான் டே.
மெட்ராசின் சுற்றுப்பட்டு கிராமங்களில் ஊர்களில் பருத்தி மற்றும் மஸ்லின் துணி நெசவு தொழில்கள் நெசவாவதை அறிகிறான் பிரான்சிஸ்டே. இங்கிலாந்து சந்தைக்குத் தேவைப்படும் துணிகளை நூல்களை கொண்டு செல்லும் பொருட்டு கிழக்கிந்திய கம்பெனி சார்பான அலுவலகம் பொருட்களை சேமித்து வைக்கும் கோடவுன் எனும் பொருள்சேமிப்பறைகளை அமைப்பதற்கு கொஞ்சம் நிலம் மெட்ராசில் வாங்க யோசிக்கிறான் பிரான்சிஸ்டே.
மெட்ராஸ் நிலம் பூந்தமல்லியை மையமாகக் கொண்ட நாயக்கர்கள் ஆளும் பிரதேசம் என்றாலும் நாயக்கர்களுக்கு மேல் வேலூர் காட்பாடியின் சந்திரகிரியை மையமாகக் கொண்டு நிர்வாகம் நடத்துகிற சந்திரகிரி ராஜா, விஜயநகர பேரரசின் சார்பாக ஆள்பவர் என்பதை அறிகிற பிரான்சிஸ்டே, காட்பாடி அருகேயான அந்த சந்திரகிரி அரண்மனையில் மெட்ராஸ் வங்கக்கடலில் கூவம் பெருநதி இணைகிற இடத்திற்கு அருகே, வங்கக் கடலிருந்து ஐந்து மைல் (8 கிலோமீட்டர்) நீளத்திற்கும் ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) அகலத்திற்குமான நிலத்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.
வங்கக்கடல் – கோட்டை முதல் வேப்பேரி வரையிலுமான எட்டு கிலோமீட்டர் நீளத்திற்கும், கோட்டை தொடங்கி எழிலகம் வரையான 1.6 கிலோமீட்டர் அகலத்திற்குமான நிலத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.
1640 பிப்ரவரி குளிர்காலம் முடியும் காலத்தில் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திலிருந்து வாங்கப்பட்ட மெட்ராஸ் நிலத்தினுள் ஆன்ட்ரூ கோகன் தலைமையில் பிரான்சிஸ்டே, கிளர்க்கு எனப்படும் எழுத்தர்கள், மருத்துவர்கள், தச்சர்கள், பாதுகாப்பு,பணிவிடை, சமையல் ஆட்கள் என 25 பெயர்கள் குடிமனைபுகுவிழா நடத்துகிறார்கள்.
தொடக்கத்தில் இவர்கள் செயின்ட் ஜார்ஜ் போர்ட் கோட்டையை கட்டவில்லை.வைக்கோல் தளைகள் பனையோலைகள் மூங்கில்கள் கொண்டு சிறு சிறு குடில்களை கட்டி அதில் வசிக்கத் தொடங்குகிறார்கள் பிற்காலத்தில் தமி்ழ்நாட்டை இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள்.
25 பெயர்களாக வந்தவர்கள் மெட்ராசில் தன் வியாபாரத்தை மேம்படுத்த அது தொடர்பான பலதரப்பட்ட தொழிலாளர்களை குடியேற ஆதரவு காட்டுகிறார்கள்.காலடிப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, நெனியப்பன் தெரு என நெசவாளர்களை அவர்களின் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பல்வேறு தொழில் செய்வோர், கடவுள், கடவுளுக்கு வேண்டிய அய்யர் பூசாரிகள் என குடியமர்த்தி, அடுத்த பத்தாண்டுகளில் கோட்டைக்கு உள் இருப்போர் ஒயிட் டவுன்காரர்கள் என்றும் பாரிமுனை, முத்தியாலுப்பேட்டை,அர்மீனியன்தெரு, பவளக்காரத்தெரு, உயர்நீதிமன்றம், பழைய சட்டகல்லூரி இடையே கட்டப்படாமல் இருந்த நிலத்தில் குடியமர்ந்தோர், தங்கசாலை, யானைகவுனி, சூளை போன்ற பகுதிகளில் வாழ்வோர் ப்ளாக் டவுன்காரர்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டு 15000 பெயர் வாழும் ஊராக மெட்ராஸ் வளர்கிறது.
இன்றைய சென்னை மாநகரத்தின் மக்கள் தொகை ஒரு கோடியாக உயர்ந்து விட்டது. அன்று மெட்ராசில் தொழில் செய்த யூதர்கள் அவர்களுக்காக 1947 ல் அமைந்த இஸ்ரேலுக்கு நகர்ந்து போய் விட்டார்கள். பிரஞ்சியர்கள் புதுச்சேரியில் ஒரு 5000 பெயர் இருக்கலாம். நெதர்லான்ட் நாட்டைச் சார்ந்த டச்சுகார்ர்கள் 18 ஆம் நூற்றாண்டிலேயே பிரிட்டிஷிடம் பேரம் பேசிக் கொண்டு அவர்களின் நாடு போய் சேர்ந்து விட்டார்கள். அர்மீனிய நாட்டின் அர்மீனியர்கள் சென்னையில் இன்றும் ஒரு 50 பெயர் வாழலாம். அர்மீனியன் தெருவில் அர்மீனியர்களுக்கான தேவாலயம் இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது.
1921 ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எழுதி வைக்கப்பட்ட ஆவணங்களிலிருந்தும் 1680 ல் மெட்ராசில் வெளியான க்ரோனிக்கல் நாளேட்டின் தரவுகளிலிருந்தும் தி ஸ்டோரி ஆப் மெட்ராஸ் எனும் ஆங்கில நூலை க்ளின் பார்லோ எனும் எழுத்தாளர் ஹம்பெரி மில்போர்ட்- ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் வெளியீடாக கொண்டு வருகிறார்.
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலில் அவர்களுக்கான வசிப்பிடம் தொழில் அலுவலகம் சார்ந்த கோட்டையை சென்னையில் கட்டுகிறார்கள். மதராசில் காலூன்றி பின்னர் இந்தியா முழுவதும் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆட்சி செய்ய வழி அமைத்தது மெட்ராஸ் என்பதை க்ளின்பார்லோ குறிப்பிடுகிறார்.
மெட்ராஸ் மீது இதன் மக்கள் மீது தொடர்ந்த போர்கள் நடைபெற்று கொண்டே இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி மீதான போர் கொள்ளையடிப்பு என்பது வெள்ளையர்களொடு முடிவுறாமல், கிழக்கிந்திய கம்பெனியை அழிப்பது என்பதற்கு அதன் வணிகர்களை உழைப்பை வழங்கும் உழைப்பாளர்களை அழிப்பது என்ற முறையில் கர்நாடக நவாப் தாவூத்கான், மைசூர் சுல்தான் ஹைதர்அலி அவர் மகன் திப்பு, ஆந்திராவின் கோல்கொண்டா படைகள், பிரஞ்சியர் படையெடுப்பு என மெட்ராஸ் தொடர்ந்து 150 ஆண்டுகளாக தாக்குதல்களை அழிவை சந்திக்கொண்டே வளர்ந்தது.
கடைசியாக 1943 அக்டோபர் 11 இரவின் மெட்ராஸ் மீது ஜப்பான் விமானப்படையின் விமானத்தாக்குதல் என தொடர்ந்த தாக்குதல்களால் மெட்ராஸ் கதி கலங்கிப் போனது. இரண்டாம் உலகப்போர் 1938 ல் தொடங்கும் பொழுதே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குண்டுவீச்சிலிருந்து மெட்ராஸ் பொதுமக்கள் தங்களை எவ்விதம் காப்பாற்றிக் கொள்வது பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற முறைகளில் அரசாங்கத்தால் பயிற்சி தரப்பட்டது. இந்த பதுங்கு குழி பங்கர்களை காசிமேடு கடற்கரையில் அதன் எச்சங்களை இன்றும் காணலாம்
நேமிசந்திரா பெங்களூரூ மேட்டுப்பாளையத்தில் கிருத்துவ இசுலாமிய கல்லறைகளுக்கு இடையில் வித்தியாசமாகத் தெரிந்த கல்லறை ஒரு யூதரின் கல்லறை என்பதை அறிந்து அதன் மீது கன்னடத்தில் எழுதி தமிழாக்கமும் செய்யப்பட்டு தமுஎகச வின் முதல் விருதையும் பின்னர் சாகித்ய அகாடெமி விருதையும் பெற்ற யாத்வஷேம் நாவல் சொல்வதைப் போல, மெட்ராஸ் தங்கசாலை அருகே 500 ஆண்டுகளுக்கு முன் மெட்ராசில் வாழ்ந்த யூதர்களின் கல்லறை இருப்பதை க்ளின் பார்லோ ஆங்கிலத்தில் எழுதியதை ப்ரியாராஜ் தமிழாக்கம் செய்த சென்னையின் கதை எனும் 144 பக்க நூல் சொல்வதை ஒட்டி நமக்கும் இதையொட்டி நாவல் ஒன்று எழுதும் ஆசையின் றெக்கை விரிந்து கொள்கிறது.
மதராசப்பட்டினம்- மெட்ராஸ்- மதராஸ், சென்னை- கறுப்பர்நகரம் குறித்து நம் பார்வைக்கு வராத நிறைய அரிய தகவல்களைக் கொண்ட இந்த நூலை வாசிக்கிற பொழுது வாசிப்பவருக்கும் எழுதுபவருக்கும் முன்னும் பின்னுமாக பகிர்வதற்கு நிறைய விசயங்கள் உண்டு.