குழந்தைகளுக்கு, புத்தகங்களை ஒரு பள்ளி, கடமை… கட்டாயம் என வலியுறுத்தக்கூடாது. புத்தக வாசிப்பை அவர்களுக்கு ஒரு சாகசமாக அறிமுகம் செய்து ஒப்பற்ற பரிசாக அளித்து மகிழ வேண்டும்
-காரல் சாகன்
பள்ளிக்கு உள்ளே ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம். பள்ளிக்கு வெளியே? ‘இல்லம் தேடிக் கல்வி’ இயக்கம்’ என்ற எழுச்சித் திட்டங்களால், சென்ற கல்வி ஆண்டு ஓரளவு நிறைவு தரும் வண்ணம் அமைந்திருந்தது. கல்வியில் வெறும் அதிகாரிகள் மட்டுமே செயலாக்கம் செய்து வந்ததை மாற்றி, சமூக ஆர்வலர்கள், இயக்கத் தொண்டர்கள், கல்வியாளர்கள் என பரந்துபட்ட ஜனநாயக எழுச்சித்திறளை உள்ளடக்கிய செயல்பாடாக கல்வி மாறியதை கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இந்த ஆண்டு பள்ளிதோறும் வாசிப்பு இயக்கத்தை கொண்டுசெல்ல அரசு பலவகைப் பயிற்சிகளைக் கொடுத்து, கோடை விடுமுறையிலேயே ஆர்வலர்களை – வாசிப்பு இயக்கத் தொண்டர்களாக மாற்றுவதை நாம் வரவேற்கிறோம். சென்ற கல்வியாண்டில் வாசிப்பு இயக்கச் செயலி அறிமுக விழா திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் நடந்தபோது மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்திட ஒரு சிறப்புக் கையேடு வெளியிடப்பட்டது. பள்ளியின் வாசிப்பு இயக்கம் எப்படி நடக்கலாம் என்பதை ஓரளவு இந்தக் கையேடு உறுதி செய்தாலும் கீழ்கண்ட வாசிப்பு இயக்க ஆலோசனகளை பரிசீலிக்குமாறு, ‘புத்தகம் பேசுது’ இதழ், அரசை கேட்டுக்கொள்கிறது.
• புத்தகத் திருவிழாக்களுக்கு ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் வழியாகவே தேவையான, அவர்கள் விரும்பும் – நூல்களை பள்ளி நூலகங்களுக்கு வாங்கி வைக்க வேண்டும்.
• தற்போது இந்தத் திட்டம் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது. அதை தொடக்கப்பள்ளிகளுக்கும் – அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி குழந்தைப் பருவத்தில் இருந்தே வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவருதல் வேண்டும்.
• பள்ளிதோறும் – சாரண சாரணியர் அமைப்புபோல உப கல்வி செயல்பாடாக கட்டாய வாசிப்பு இயக்க உறுப்பினர் அட்டை வழங்கப்படுவதோடு வட்டார, பஞ்சாயத்து, மாவட்ட, மைய நூலகங்களுக்கு மாணவர்களை மாதம் இருமுறை அழைத்துச்செல்ல வேண்டும்.
• நூல் அறிமுகம், புத்தக மதிப்பீடு, புத்தகம் தன்கதை கூறல் போன்ற செயல்பாடுகளை ஊக்குவிக்க நூலகப் பாட வேளையைப் பயன்படுத்த வேண்டும்.
• வாசகர் – எழுத்தாளர் சந்திப்புகளை அந்தந்தப் பள்ளிகளில் நடத்தி புதிய கலாச்சாரத்திற்கு வழிவகுப்பதும் சாலச் சிறந்ததாகும்.
• அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமல்ல… மதுரையில் கலைஞர் நூலகம், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் உட்பட தமிழகத்தின் பெருமை பேசும் நூலகங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்ல மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
• சோவியத் கல்விமுறையின் மாபெரும் வெற்றி, பள்ளி அளவில் தீவிரமாகச் செயல்பட்ட வாசிப்பு இயக்கங்களைச் சார்ந்தது என்று 1961ல் சோவியத் கல்வி குறித்து அறிய விஜயம் செய்த இந்தியக் கல்விக்குழுவின் அறிக்கை சொல்கிறது. சாதி, மத, பாலின வேற்றுமை கடந்து அனைவருக்குமான ஒப்பற்ற, தரமான கல்வி என்பது குழந்தைகளை புத்தக வாசிப்பாளர்களாக ஆக்குவதில்தான் இருக்கிறது. பள்ளி வாசிப்பு இயக்கத்தை வரவேற்போம்; மேம்படச் செய்வோம்.
