ஆயிஷா இரா. நடராசன்
உலகை உலுக்கிய அந்த நூலகத்திற்குப் பெயரே கிடையாது. அது ஓர் எண்ணிடப்பட்ட தங்கும் விடுதியின் அறை. 3327 என்று நாம் விரும்பினால் அந்த அறையை அழைத்துக்கொள்ளலாம். அந்த அரிய நூலகம் 1943 ஜனவரி 9 அன்று உலகின் கவனத்திற்கு வந்தது. ஹோட்டல் நியூயார்க் எனும் அந்த சொற்பத் தொகை வாடகை நிலையத்தையும் அந்த 3327 எண்ணிடப்பட்ட மூன்றாவது மாடி அறையையும் அறிந்து உலகம் அதிர்ந்தது. நூலகன் அங்கே இறந்து கிடந்தான்.

அவன் ஒரு தனியன். ‘தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்’ எனும் கைப்பட எழுதிய பலகை, அறையின் கதவில் தொங்கியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் ஆலிஸ் மொனாஹன் எனும் தூய்மைப் பணி அம்மையார் அறையைத் திறந்து உள்ளே நுழைந்தபோது… நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட புத்தக அலமாரிகளின் இடையே மெலிந்த தேகத்தோடு அந்த நூலக வித்தகன் இறந்து கிடந்தான்… பல அதிசயங்கள் அந்த நூலகத்தில் அடங்கி இருந்தன.
அந்த நூலகம் முழுவதும் ஒருவரே எழுதிய நூல்களால் ஆனதாக இருந்தது. அந்த நூலகத்தில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நூலுக்கும் கச்சிதமாக வரிசை எண் தரப்பட்டிருந்தது. ‘இந்த வரிசையிலேயே வாசிக்கவும்’ எனும் குறிப்பு வேறு. கூடவே அவை அதுவரை வெளிவராத நூல்கள்… அதைவிட அதிர்ச்சி அவை ஒரே ஒருவர் எழுதிய நூல்கள்.. அவை அனைத்தும் முத்தான ஒரு மனிதரின் கையெழுத்துப் பிரதிகள். மொத்தம் 317 நூல்கள்… அவை அந்த தனித்து மரித்த நூலகனாலேயே எழுதப்பட்டவை. அந்த நூல்களின் வழியாக உலகம் பல புதிர்களின் விடை கண்டது தனிகதை… ஏறத்தாழ 600 கண்டுபிடிப்புகள் அந்த 3327 அறை நூலக வினோத நூல்களின் வாசிப்பு வழியே உலகம் அடைந்தபோது நிக்கோலாய் டெஸ்லா எனும் அந்த பசித்த நூலகனின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது.
தொலைக்காட்சிப்பெட்டியை இயக்கும் தானியங்கி ரிமோட், வீடு, அலுவலகம் என யாவற்றையும் இன்று ஆக்கிரமிக்கும் வைஃபை எனும் கம்பி இல்லா மின் ஆற்றல், வாய்வழி உத்தரவுகளை மின் கட்டளைகளாக்கி இயங்கும் தானியங்கிகள்… செயற்கைக் கோள் வழியே நடக்கும் கைபேசி தகவல் பரிமாற்றம்… என பரந்து விரிந்த மின் பொறியியல் 21ம் நூற்றாண்டைக் கலக்குகிறதென்றால் அவற்றின் ஊற்றுக்கண் 3327 நூலகம்தான் என்றால் நம்புவது கஷ்டம். மின்சாரத்திற்கு எதற்கு கட்டணம்? அது தண்ணீரைப்போல இயற்கையில் கொட்டிக் கிடக்கிறதே. காற்றிலிருந்தே எடுத்து விடலாமே… வானின் காற்றுமண்டல அடுக்குகளில் உள்ள நுண் ஆற்றல் வானொலி அலைகள் – மின்காந்த அலைகளின் தொடர் வீச்சு சரியாகப் பயன்படுத்தப்பட்டால், மின்சாரம் என்பது மாறு திசை மின்னோட்ட மின்வலு முறைமைகள் வழியே மின்சார வாரியம் – மின் கம்பி இணைப்பு இல்லாமலேயே உங்கள் வீடுகளை எளிதில் ஒளியேற்ற முடியுமே என மின் வியாபார வணிகத்திற்கு சாவு மணி அடித்தவர்தான் நிக்கோலாய் டெஸ்லா.
உலகம் அந்த மாமனிதர் சொல்வதை ஏற்றிருந்தால் இன்று 21ம் நூற்றாண்டு அதிசயங்களை அன்று 1910களிலேயே அவர்கள் அடைந்திருப்பார்கள். எந்த அளவிற்கு அறிவியல் மற்றும் அன்றைய வர்த்தக உலகம் டெஸ்லாவை புறக்கணித்திருந்தால் அவர் தனிமைச் சிறையில் அந்த சொற்ப வாடகை 3327 அறையில் பட்டினியால் இறந்திருப்பார் என்பதை கற்பனை செய்யும்போது ரத்தம் கொதிக்கும். ‘தற்கால மின்னியலின் தந்தை’, இன்றைய நான்காம் தொழிற்புரட்சிக்கு அன்றே வித்திட்ட டெஸ்லாவின் வாழ்க்கை பல அற்புதப் புதிர்களால் ஆனது. ஒற்றை – கைப்பிரதி நூலகத்தின் பசித்த கண்டுபிடிப்பாளனின் வாழ்வைவிட சுவாரசியமான மர்ம நூலை நீங்கள் வாசித்திருக்கவே முடியாது.

‘உலகிலேயே பெரிய அறிவாளியாக இருப்பதை எப்படி உணருகிறீர்கள்?’ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது அவர், ‘எனக்குத் தெரியாது… நீங்கள் இந்தக் கேள்வியை டெஸ்லாவிடம்தான் கேட்க வேண்டும்’ என்று பதிலளித்தார். ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்களின் ஆதரவும் ஆச்சரியமும் டெஸ்லா மீது பதிந்திருந்தும் டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளுக்கு எதிரான பிரச்சாரங்களை அன்றைய மின் வினியோக வணிக கார்பரேட்கள் தீவிரமாக மேற்கொண்டு அவரை மரணப் பாதையில் வீழ்த்திய துரோக வரலாறின் வில்லன் பெயரைக் கேட்டால் அதிர்ச்சி ஏற்படும். அது தாமஸ் ஆல்வா எடிசன்தான்.
நிக்கோலாய் டெஸ்லாவுக்கும் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் இடையிலான யுத்த வரலாற்றில் மின்சார யுத்தம் (War of currents) என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின்னோட்டமுறை மாறுதிசை மின்னோட்டமாகும் (A.C.) இவை டிரான்ஸ்ஃபாமர் எனும் மின் மாற்றி மையங்களை அடிப்படையாகக் கொண்டவை. மாறுதிசை மின்னோட்ட அறிவியல் என்பது டெஸ்லாவின் பெருங்கொடை. அவரது மாறுதிசை மின்னோட்டப் பொறி (A/c motor)யை இல்லாமல் செய்ய எடிசன் செய்த சூழ்ச்சிகள் மிக மோசமானவை.
வீடுகளில் நேர்திசை மின்சாரம் (D/C) தருவதைத்தான் எடிசனின் கம்பெனியால் செய்ய முடிந்தது. நேர்திசை மின்சாரம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து இடையில் எந்தத் தடையும் இன்றி பூமிக்கடியில் புதைக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள் வழியே வீடுகளுக்கு நேரடியாக வரும் அமைப்பு. ஒரு வீட்டில் இரு மின் விளக்குகள், ஒரு மின் விசிறி இருப்பின் ஒவ்வொன்றிற்கும் ஒரு மின்கம்பியை நீங்கள் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து நேரடியாக கம்பி மூலம் நீண்ட தூரம் புதைத்து எடுத்து வர வேண்டும். இதனால் பலமடங்கு எடிசனுக்கு லாபம் கிடைக்கும். எனவே ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் எனும் டெஸ்லா ஆதரவு பெற்ற மாறுதிசை மின்சார நிறுவனத்தின் மீது எடிசன் பல அவதூறுகளைப் பரப்பினார். ஏற்கெனவே பெரிய செல்வந்தராகவும் கண்டுபிடிப்பாளராகவும் அறியப்பட்ட எடிசன் பொது ஆளுமையாக இருந்தார். இருப்பினும் அமெரிக்காவில் கொலம்பியா, சிக்காக்கோ, நியூயார்க் என்று மக்கள் மலிவான எளிய விலை மலிவான டெஸ்லாவின் மாற்றுதிசை மின்னோட்டத்தை ஆதரித்தனர்.
விரைவில் மாறுதிசை மின்னோட்டம் மிகவும் ஆபத்தானது, அது மனிதர்களைக் கொன்றுவிடும். அந்த மின் இணைப்பை வீட்டிற்குப் பெறுபவர்கள் மரணத்தை வரவேற்பார்கள் என எடிசன் பொது வெளியில் பரப்புகிறார். திறந்த மின் கம்ப மின்கம்பிகளை இன்று நாம் யாருமே தொடுவது இல்லை. அன்றும் மாறுதிசை இணைப்பு மின் கம்பக் கம்பிகள் அதே உயரத்தில்தான் சென்றன. ஆனால் எடிசனும் ஹெரால்டு பிரவுன் எனும் மின் பொறியாளரும் இணைந்து டெஸ்லாவின் மின் முறைக்கு எதிராக வேறு உத்திகளைக் கையாண்டனர்.
என்னதான் முயன்றாலும் நேர்திசை மின் இணைப்பில் (D.C) எடிசனால் 330 வோல்ட் மட்டுமே தர முடிந்தது. ஒரு விளக்கை மங்கலாக எரியச் செய்யலாம். ஆனால் மாறுதிசை மின்சாரத்தை மின் மாற்றிகள் மூலம் உயர் வோல்ட் மின்சாரமாக வழங்க முடிந்தது. ஆனால் எடிசனால் அந்தக் கண்டுபிடிப்பின் உரிமத்தை டெஸ்லாவிடமிருந்து விலைக்கு வாங்க முடியவில்லை. அதுதான் டெஸ்லா மீதான எடிசனின் காழ்ப்புணர்ச்சிக்கு காரணம். ஆயிரம் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் எடிசன் அல்லர். மாறாக ஒரு தொழில் அதிபராக- வர்த்தக வித்தகராக ஆயிரம் கண்டுபிடிப்புகளின் உரிமங்களை கண்டுபிடிப்பாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் பெயரில் வைத்துக்கொள்ள அவரால் முடிந்தது.
எடிசனும் பிரவுனும் செய்தது என்ன? அவர்கள் பொதுமக்கள் சபையில் கொலம்பியா கல்லூரி மைதானத்தில் ஒரு செயல் விளக்கம் அளித்தனர். இதற்குப் பொருளுதவி வழங்கியது எடிசன் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம். ஏழெட்டு வீதி நாய்களைப் பிடித்து வந்து முதலில் தங்கள் கம்பெனியின் நேர்திசை மின்சாரத்தை நாய்க்கு செலுத்தினர். அவை லேசான நடுக்கத்துடன் உயிரோடு இருந்தன. ஆனால் உயர் ஆற்றல் மாறுதிசை (A.C) மின்சாரம் செலுத்தப்பட்டபோது நாய்கள் மரித்தன. எனவே நேர்திசை மின்சாரமே பாதுகாப்பானது என தங்கள் கம்பெனிக்கு விளம்பரம் தேடினர். எடிசன் இத்தோடு விடவில்லை. தனது எடிசன்வெஸ்ட்- ஆரஞ்சு (நியூ-ஜெர்சி) ஆய்வக உதவியாளர் ஆர்தர் கென்னலி என்பாரின் உதவியோடு-குதிரை ஒன்றையும் இந்தப் பாணியில் கொன்று… மாறுதிசை மின்சாரம்கூட 330 வோல்ட் வழங்குவதே பாதுகாப்பானது என்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவரைப் பேச வைக்கிறார்.
அமெரிக்கப் பாராளுமன்றம் விரைவில் மரண தண்டனை ஒருவருக்கு நிறைவேற்ற மின் நாற்காலிகளைப் பயன்படுத்தலாம். அதிக வலி இன்றி மரணம் என எம்.பி.க்களை விட்டு எடிசன் மிகத் தந்திரமாக அழுத்தம் கொடுத்து அதற்கு டெஸ்லாவின் மாறுதிசை மின் மோட்டாரை இணைத்து மரண- மின்சாரம் என்றே பெயரிட்டு பொது வெளியில் டெஸ்லாவை ஒரு வில்லன்போல நிறுத்துகிறார். ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் மனிதர்களை அச்சுறுத்திய மதம் பிடித்த யானை ஒன்றை விலைக்கு வாங்கி அந்த யானையை ஒரு கால்பந்து மைதானத்தில் டெஸ்லா மோட்டார் மூலம் கொன்று-மேலும் தன் கம்பெனி நேர்திசை மின்சாரத்திற்கு ஆதரவு திரட்டினார் எடிசன். ஆனால் அவரால் டெஸ்லாவை வெற்றிகொள்ள முடிந்ததா… அடுத்து மாறுதிசை மின்சார ஆற்றல் தூண்டல் மோட்டாரை (Ac-induction Motor) டெஸ்லா வழங்குகிறார்.
மின் தடைமாற்றி, விசேட மின் தேக்கி, மின் தூண்டி- ஹீட்டர் மற்றும் சூளை அடுப்புகளின் வெப்பநிலை உயர்த்தும் மின் கருவி என அடுத்தடுத்து வந்த டெஸ்லாவின் வேகம் எடிசனை திணறடித்து வீழ்த்தியதே வரலாறு. முக்கிளை மின் வினியோகம் (Three phase) மூலம் டெஸ்லா மின்சார ரயில்களை அமெரிக்காவில்- ஸ்ப்ராக் மின்சார ரயில்வே கம்பெனி இயக்கிட வழிவகுத்தார். டெஸ்லா வளர முயற்சி செய்த ஒவ்வொரு நிறுவனத்தையும் விலை கொடுத்து வாங்கி எடிசன் தன் கம்பெனியோடு இணைத்து அவருக்கு அளவற்ற சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். உரிமங்களை எடிசனுக்கு விட்டுக்கொடுக்காதது மட்டுமல்ல, எடிசனின் நேர்திசை மின்சார வியாபாரத்தை தனது மிக மிக மலிவான எளிய மாறுதிசை மின்சாரத்தின் மூலம் அனைவருக்கும் கிடைக்க வைத்தவர் டெஸ்லா. 1889ல் நடந்ததுதான் பெரிய கூத்து. மின் கம்பிகளில் பழுதுநீக்க மின் கம்பத்தில் ஏறிய வெஸ்டர்ன் யூனியன் மின் நிலைய லைன்மேன் ஜான் ஃபீக்ஸ் என்பவர் கால் இடறி விபத்தின் மூலம் மின்சாரம் தாக்கி இறந்தார்.
மாறுதிசை மின்சாரம் மின் கம்பங்களில் மின் கம்பி மூலம் பாய்வது. எடிசனின் நேர்திசை (D.C.) பூமிக்கு அடியில் புதைத்த கேபிள். எனவே லைன்மேனின் மரணத்தை எடிசன் தனக்கு சாதகமாக்கினார். நார்த்- அமெரிக்கன் இதழில், கொல்லும் மின்சாரம் எனும் தலைப்பில் எடிசன் பூதாகரமாக மரணங்கள் பற்றிய பொய் எண்ணிக்கை காட்டி ஒரு கட்டுரையை ‘அறிவியல்’ என வெளியிடுகிறார். தனது கம்பெனியால் தர முடிந்த 330 வோல்ட் என்பதே பாதுகாப்பானது என்றும் வீட்டு விநியோக மின்சாரத்தை 330 வோல்ட் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தந்திரமாகக் குறிப்பிட்டு கட்டுரையை முடித்தார். திடீரென்று ஓஹியோ, நியூயார்க் பகுதிகளில் அச்சத்துடன் இளைஞர்கள், பொதுமக்களில் சிலர் மற்றும் விஷமிகள் மின் கம்பங்களை சாய்த்து மின் கம்பிகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினர்.
இந்த வன்முறை மூன்று நாள்கள் நீடித்தது. மின் வினியோகம் தடைப்பட்டது. எடிசன், தான் வென்றதாக நினைத்தார். ஆனால் பல இரவுகள் அந்த நகரங்களில் மின்சாரமின்றி பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள். எடிசன் கம்பெனியால் வேகமாக நேர்மின் வினியோகம் தரவும் முடியவில்லை. ஒருபுறம் இருள்… மறுபுறம் கடும் குளிர்… நியூயார்க் உச்ச நீதிமன்றம் மாறுதிசை மின் வினியோகத்தையே பூமிக்கடியில் புதைத்து வழங்கலாம் என்ற இறுதித் தீர்ப்பை தனது அவசர விசாரணை மூலம் தெளிவுபடுத்தியது.
டெஸ்லா அமெரிக்கர் அல்லர். அவர் ஆஸ்திரியாவின் ஸ்மில்ஜன் எனும் ஊரில் பிறந்தவர். தற்போது ஷெர்பியா எனறு அவரது சொந்த நாடு அழைக்கப்படுகிறது. அவரது தந்தை ஒரு கிறித்துவ பாதிரியார். சிறு வயதில் டெஸ்லா விநோதப் பையன் என்று அழைக்கப்பட்டார். சாதாரண மனித செவிக்கு எட்டாது பல மைல் கடந்து ஒலிகளைக் கேட்கும் வண்ணம் நுண் செவித் திறன் தனக்கு இருப்பதாக நம்பினார். பள்ளிக் கணிதத்தை மனதிலேயே கணக்கிட்டு தேர்வுகளில் விடையை மட்டுமே எழுதுவார். இதனால் ஆசிரியர்கள் அவர் ஏமாற்றுவதாகக் கருதினர். ஆஸ்திரியாவின் கிராஸ் மாகாணத்தில் ஆஸ்திரிய பாலிடெக்னிக்கில் மின்- பொறியியல் படித்தார். அங்குதான் மாறுதிசை மின்சார யோசனை ஓர் இயற்பியல் வகுப்பில் அவருக்கு உதித்தது. இந்த உலகம் மாறுதிசை மின் உலகமாவதே சாத்தியம் என்பதை அவர் அப்போது உணர்ந்திருந்தார்.
1881ல் புடாபஸ்ட் தொலைப் பேசியில் இணைந்தபோது… மின்கம்பி இல்லாத தகவல் தொடர்பை அன்றே ஸ்தாபித்தாலும் அது யாருக்கும் விளங்கவில்லை. 1884ல் அமெரிக்கா சென்றார். அப்போது அவரிடம் ஒரு மாற்றுடைகூட கிடையாது. ஆரம்பத்தில் அவருக்கு வேலை கொடுத்தவர் எடிசன். ஆனால் எடிசன் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் எனும் கட்டாயம் டெஸ்லாவை வெறுப்போடு வெளியேற வைத்தது. வெஸ்டிங் ஹவுஸ் என்பார் டெஸ்லாவை ஆதரித்ததோடு அவரது மாறுதிசை (AC) மின்னோட்டத்தின் உரிமத்தைப் பெற்று ஒரு சொந்த ஆய்வகம் தொடங்கும் அளவிற்கு விலை கொடுக்கவும் முடிந்தது.
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்ல வெஸ்டிங் ஹவுஸ் ஏற்பாடு செய்தபோது எல்லாரும் நீர்வீழ்ச்சியை ரசித்த நாளில் டெஸ்லா வழங்கியதுதான் நீர்வீழ்ச்சியில் இருந்து மின்சாரம் எடுக்கும் எளிய திட்டம். ‘நான் நீரைக் காணவில்லை. மின்சாரத்தைக் கண்டேன்’ என்றார் டெஸ்லா. எக்ஸ் கதிர்களின் பின்விளைவுகள் குறித்த அவரது ஆய்வுகள்தான் அதை மருத்துவத்துறை சார்ந்ததாக மாற்றியது என்பது வரலாறு. 1891லேயே சோடியம், நியான் விளக்குகளை உலகிற்கு வழங்கிய டெஸ்லா தனது ஆய்வகத்தின் அதி அற்புத முயற்சியாக 1898ல் எடிசனோடு பொதுவெளி சிக்கல்கள் உச்சத்தில் இருந்தபோதும் டெலி ஆட்டோமேஷன் எனும் புத்துலகை அறிமுகம் செய்கிறார்.
தனது கை ரிமோட் மூலம் ஒரு படகை தன் விருப்பப்படி எல்லாம் இயக்கி மேடிசன் ஸ்கொயர் கார்டனில் தனது கம்பி இல்லா முதல் வைஃபை (wifi)யை ரேடியோ அலைகள் மூலம் இயக்கி உலகின் 21ம் நூற்றாண்டை 19ம் நூற்றாண்டில் அறிவிக்கிறார். 1906ல் மின்சாரத்தை மின் கம்பி இல்லாமலே கடத்தும் ஆண்டனா முறைகளை தன் கொலராடோஸ்பிரிஸ் ஆய்வகத்தில் அறிமுகம் செய்தார். அடுத்த அவரது போராட்டம் மார்கோனியோடு தொடங்கியது. இந்திய விஞ்ஞானியான ஜெகதீஷ் சந்திரபோஸின் கேரிஹரர் கருவியை மார்க்கோனி தந்திரமாக ‘தனதாக்கி’ நோபல் பரிசு பெற்றதை அவர் தோலுரிக்கிறார்.
ஆனால் 1895ல் தொடங்கி தொடர்ந்து ஆறுமுறை அவரது ஆய்வகங்கள் தீயிடப்பட்டன. ஒருமுறை நடந்தால் விபத்து. அடுத்தடுத்து பலமுறை நடந்தால் அதற்கு என்ன பெயர்? 1915ல் டெஸ்லாவும் எடிசனும் இயற்பியல் நோபல் பரிசை பகிர்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது பரிசைப் பெற உடனடியாக மறுப்பை வெளியிட்டார் டெஸ்லா. ஆனால் பிரான்ஸ், யுகோஸ்லேவியா உட்பட 17 நாடுகளின் உயரிய விருதுகள் பெற்றவர் அவர். தனது ஆய்வகங்கள் தீயிடப்பட்ட பிறகு கடும் வறுமையில் அடுத்தடுத்து விடுதிகளில் அறை எடுத்துத் தங்கிட… 1922 முதல் அவர் வாழ்வு அவரைப் பணித்தது. பசியும் பிணியும் வாட்டி எடுத்தன.
அறிவியலுக்காக திருமணம்கூடசெய்து கொள்ளாமல் வாழ்ந்த டெஸ்லா இறுதிவரை இரண்டு பழக்கங்களை கைவிடவில்லை. பூங்காக்களில் புறாக்களுக்குத் தீனி போடுதல்… தேடித் தேடி நூலகங்களில் வாசிப்பு. மார்க்ட்வெயின் போன்ற நவீன எழுத்தாளர்களுடன் நல்உறவு மட்டுமல்ல, அவர்களது முதன்முதல் வாசிப்பாளன் எனும் அந்தஸ்தோடு கைபிரதி வாசிக்கும் நட்பும் அவரது அடையாளம்.
அனைத்தையும் இழந்து உலகம்தான் பேச அனுமதிக்கவில்லை எனும் நிலையில் 117 புத்தகங்கள் மூலம் தனது கண்டுபிடிப்புகளை கைப்பட எழுதிய-தனது விநோத நூலகத்தில் நியூயார்க்கர் விடுதியின் 3327 அறையில் முடிந்த வாழ்க்கை… அந்த அதிசய நூலகத்தின் வழியே நம் இன்றைய கைபேசி உட்பட அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை