முனைவர் ஆ. திருநாகலிங்கம்
நாடு நன்கறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர் ஆறு.இராமநாதன் அவர்களின் அணிந்துரையுடன் தொடங்கும் இந்நூல் என்னுரை என்னும் முன்னுரை, நிறைவாக என்னும் முடிவுரை நீங்கலாகப் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் வழிபாட்டின் தோற்றம், எட்டுத் தொகையில் தெய்வங்களும் வழிபாடும், பத்துப்பாட்டில் தெய்வங்களும் வழிபாடும் ஆகிய மூன்று இன்றியமையாத இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களை நாட்டுப்புறவியல் கல்வியாளர்கள் அணுகும்போது வெளிப்படும் சமுதாய எதார்த்தத்தை இந்த நூலில் காணமுடிகின்றது. தமிழ் மக்கள் சமுதாயப் பண்பாட்டு மரபுகளை வெளிக்கொண்டுவரும் இத்தகைய முயற்சிகள் எப்போதும் வரவேற்கத் தக்கனவாகும்.

உலகில் தோன்றிய மிகத் தொன்மையான இனங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்ச் சமூகத்தில் தொடக்ககால (Primitive) மக்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை வணங்கி வந்தனர் என்பதை விரிவான சான்றுகளுடன் முதல் இயல் விளக்குகின்றது. இங்கு இயற்கையுடன் வினைபுரிந்த பண்டையத் தமிழ் மக்கள் அவற்றில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகளை அடிப்படையாகக் கொண்ட அனுபவ அறிவின் மூலம் சூரியன், சந்திரன், மழை, காடு, சுனை, மரம், மலை, சோலை, கடல், விலங்கு போன்ற இயற்கையையும், அணங்கு, சூர், பேய் மகளிர், வானர மகளிர் போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் வணங்கியதன் அடிப்படையில் வழிபாட்டின் தோற்றம் நிகழ்ந்துள்ளது என்பது இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இங்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் (Neanderthal) மனிதனின் புதைகுழிகளை ஆராய்ந்த மனிதகுல வரலாற்றாய்வாளர்கள், நமது மூதாதையர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை வழிபட்டுள்ளனர் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் (John C Messenger, ‘Folk Religion’, Folklore and Folklife An Introduction, p. 217) என்று கூறுவது மனங்கொள்ளத்தக்கதாகும்.
மேலும், இங்கு எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் தெய்வங்களைத் தொன்மைத் தெய்வங்கள், ஐந்திணைத் தெய்வங்கள், பொதுவான தெய்வங்கள் எனப் பிரித்து ஆராயும் நூலாசிரியர், தொன்மைத் தெய்வங்களான அணங்கு, சூர், சுறவின்கோடு, நடுகல் போன்றவை தெய்வமாகக் கருதப்பட்டு வழிபடப்பட்ட நிலைகளை விரிவாக ஆராய்கின்றார்.
நடுகல் குறித்த தொல்காப்பிய வெட்சித்திணைக் கருத்துகள் சரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. முன்னோர் வழிபாடாகிய நடுகல் வழிபாடு மிகத் தொன்மையானது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு நடுகல்லைத்தவிர வேறு தெய்வமில்லை (புறம். 335) என்ற மாங்குடி மருதனாரின் தலை சிறந்த பாடலை மேற்கோள் காட்டியிருப்பது சாலச்சிறந்த ஒன்றாகும்.

அடுத்ததாக, இந்தப் பகுதியில் நானிலத் தெய்வங்களான திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகியவை குறித்துச் செய்திகள் தொகுக்கப்பட்டு ஆராயப் பெற்றுள்ளன. இங்கு, குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகனின் மனைவியாக வள்ளி குறிக்கப்படுவதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகின்றார் (ப.94). இதனால், தெய்வானை முருகனின் முதல் மனைவி என்ற கற்பிதம், முருகன் பெருந்தெய்வ மரபு சார்ந்த நிலையில்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. மேலும், சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படையைத்தவிர வேறு நூல்களில் தெய்வானை முருகனின் மனைவி என்பதற்கான சான்று ஏதுவும் காணப்படவில்லை என்பது குறிக்கத்தக்கதாகும்.
இந்த நூலின் மூன்றாவது இயலில் பத்துப்பாட்டு நூல்களில் காணப்படும் தெய்வங்கள் குறித்தும், அவற்றின் வழிபாட்டு முறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் முதலில் தெய்வங்கள் திணைத் தெய்வங்கள், நடுகல் தெய்வங்கள், காடுறை – இல்லுறை தெய்வங்கள், பொதுவான தெய்வங்கள், பிற தெய்வங்கள் என்ற முறையில் பாகுபடுத்தப்பட்டு ஒவ்வொரு தலைப்பும் படிப்படியாக விளக்கப் பெறுகின்றது.
திணைத் தெய்வங்களில் முருகன், மாயோன், இந்திரன் ஆகிய தெய்வங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருப்பினும் முருகனே முன்னிலை பெற்றிருந்தான் என்பதைக் காணமுடிகின்றது. இதற்குத் திருமுருகாற்றுப் படை முருகனின் அனைத்துச் செயல்பாடுகளையும் அவனுக்குரிய வழிபாட்டு முறைமைகளையும், முருகனை அந்தணர்கள் வழிபடத் தொடங்கியதுமான பல செய்திகளைத் தாங்கி நிற்பதே காரணமாகும்.
இந்தப் பகுதியில் முருகன், சாதாரண மக்களின் வழிபடு தெய்வமாக இருந்து மேல்வர்க்கம் சார்ந்த மக்களின் தெய்வமாக மாறிய நிலைகள் சரியாக ஆராயப்பட்டுள்ளன. மேலும், வேட்டைக்கால மக்களின் தெய்வம் என்ற முறையில் வேலன் எனப்பட்ட முருகன் என்ற நிலை அசுரர்களைக் கொல்வதற்காக முருகனுக்கு வேல் தரப்பட்டது என்ற கற்பிதத்தின் பொருத்தம் மிகச் சரியாகப் பேசப்பட்டுள்ளது.
தொடர்ந்து பொதுத் தெய்வங்களாகச் சிவன், கொற்றவை பற்றிய செய்திகள் தொகுக்கப் பெற்று ஆராயப் பெறுகின்றன. ஐந்நிலத் தெய்வங்களில் கொற்றவை குறித்த செய்திகள் காணப்படவில்லை. மாறாக, புறத்திணையியலில் வெட்சித் திணைக்குப் புறனான குறிஞ்சித் திணையைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அப்படிக் குறிப்பிடும்போது ‘மறங்கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப்புறனே’ (62) என்று குறிப்பிடுவதால் குறிஞ்சிநிலத் தெய்வமாக முருகனைத் தவிர்த்து கொற்றவையும் அமைகின்றது என்று விவாதிக்கும் நூலாசிரியர் கொற்றவை தமிழரின் தாய்த்தெய்வம் என்று பி.எல். சாமி உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி நிறுவியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
மேலும், திணைத் தெய்வங்கள் உருவ வழிபாடு பெற்றுக் கோயிலமைப்பைப் பெற்ற நிலைகள் தொகுத்து ஆராயப்பட்டுள்ளன. சமணம், பெளத்தம் தமிழகத்திற்கு வந்த நிலை கூறப்பட்டுள்ளது. சமண, பெளத்தக் கோட்பாடுகளே தமிழில் போர்க் காவியங்கள் தோன்றாமைக்குக் காரணங்கள். இந்த இயலின் பிற்பகுதியில் குரவையாடி வழிபடுதல், வெறியாட்டெடுத்து வழிபடுதல், நடுகல்லை வழிபடுதல், சுறாமுள்ளை வழிபடுதல், விளக்கேற்றி வழிபடுதல், அந்தணர் வழிபாடு போன்ற வழிபடுமுறைகள் ஆராயப் பெற்றுள்ளன. இங்கு இனக்குழுச் சமூக வழிபாட்டு மரபுகள் அந்தணர் வழிபாட்டு மரபுகளாக மாறிய வரலாற்று நிலைகள் சரியாகப் பேசப்பட்டுள்ளன.
பத்துப்பாட்டு நூல்கள் இனக்குழுச் சமுதாய அமைப்புச் சிதைந்து மூவேந்தர் அரசு தோன்றிய நிலையில் உருவானவை. இதையொட்டியே இனக்குழுச் சமுதாய அமைப்புச் சிதைந்து வைதீக மரபுகள் தோன்றிய நிலையும் இவற்றுள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.
நூலாசிரியர் முனைவர் பே.சக்திவேல் அவர்கள், திருவையாறு அரசர் கல்லூரியில் முதுகலை தமிழ் பயின்றவர். நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சங்க இலக்கியங்களை ஈடுபாட்டுடன் பயின்று தன்னை முழுமைப்படுத்திக் கொண்டவர்.
சங்க இலக்கியம், நாட்டுப்புறவியல் எனும் இரு புலங்களிலும் வலுவாகப் பயின்றவர் என்பதால் இந்நூலில், தான் நினைத்த வழிபாடு என்ற கருதுகோளைச் சரியாக நிறுவியுள்ளார். நூலாசிரியருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!