ச.சுப்பாராவ்
“உங்கள் நூலகத்தில்தான் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றனவே? இன்னும் எதற்காக புதிதாக புத்தகங்களை வாங்குகிறீர்கள்? என்று அவரிடம் ஒரு நண்பர் கேட்டார். அதற்கு அவர், “எனது நூலகம் அக்காலத்து சுல்தான்களின் அந்தப்புரம் போன்றது. ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்தாலும், அவ்வப்போது புதிது புதிதாய் நான்கைந்து மனைவிகளை சேர்த்துக்கொள்ளும் ஆசை சுல்தான்களுக்கு அடங்கவே அடங்காது அல்லவா?“ என்றார். இப்படிச் சொன்ன புத்தகச் சுல்தான் ஜாக் போனெட் என்பவர்.
தம் புத்தகக் காதல் பற்றி இவர் எழுதியுள்ள ‘Phantoms on the Bookshelves’ புத்தகக் காதல் பற்றிய மற்றொரு ஆவணம். இவர் பத்திரிகையாளர். கலை வரலாற்றாளர். அதற்கும் மேலாக தீவிர புத்தகக் காதலர் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. தன் புத்தகச் சேகரிப்பு, அவற்றை அடுக்கி வைப்பது, பராமரிப்பது, அவற்றில் உள்ள பிரச்சனைகள் எல்லாவற்றையும் பற்றி மிகச் சுவையாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார். கூடவே ஆங்காங்கு இவரைப் போன்ற பல புத்தகக் காதலர்கள் பற்றிய சின்ன சின்ன சுவையான தகவல்களும்…
முன்பே சொன்னதுபோல் இவர் வீட்டில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள்.

வீட்டில் குளியலறையில்கூட புத்தகங்கள் என்பதால் சர்வ ஜாக்கிரதையாகக் குளிக்க வேண்டும். தடால்புடால் என்று ஷவரைத் திறந்துவிட முடியாது. அதேபோல், சமையலறை முழுக்க புத்தகங்கள். அடுப்பை பற்ற வைப்பதில்கூட கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் கமகமவென அதீத மணமுள்ள மசாலா சாமான்களைப் பயன்படுத்திக்கூட சமையல் செய்யமாட்டார்கள். அப்புறம் புத்தகங்களில் எல்லாம் ஒரு பீட்சா மணம் கமழும் என்ற அச்சம்!
புத்தகக் காதலர்களுக்குத்தான் எத்தனை பிரச்சனைகள்? வருடக்கணக்கில் தேடிக் கொண்டிருக்கும் புத்தகம் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன், சரியாக நாம் ஆர்டர் செய்தவுடன் அந்தப் புத்தகம் ஸ்டாக் இல்லாமல் போய்விடுகிறது என்று புலம்புகிறார் ஜாக். புத்தகப் பிரியர்களின் மற்றொரு முக்கியப் பிரச்சனை புத்தகங்களை அடுக்கி வைப்பது. நாற்பது புத்தகம் வைத்திருப்பவர் முதல் நாற்பதாயிரம் புத்தகம் வைத்திருப்பவர் வரை எவருக்குமே தீராத பிரச்சனை இது. இந்த நூலின் பெரும்பகுதி அது பற்றியதுதான்.
நம் போன்றவர்களுக்கு அதிகபட்சம், கூடுதலாக ஆங்கிலம் மட்டும்தான் தெரியும் என்பதால் மொழிவாரி பிரச்சனை பெரிதாக வராது. மேலைநாட்டினர் பலரும் பிரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, லத்தீன் போன்ற மொழிகளும் அறிந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு மொழிவாரியாக அடுக்குவது நல்லதா? என்ற குழப்பமும் சேர்ந்து கொள்கிறது. புத்தககங்களை அடுக்கி வைப்பதில் தனக்கு இருந்த பிரச்சனைகளைச் சொல்லும்போது ஜாக் குறிப்பிடும் சில புத்தகக் காதலர்கள் பற்றிய தகவல்கள் வியப்பாக இருக்கின்றன.
‘கில்பர்ட் லிலே என்ற கவிஞர் எப்போதுமே தனது அலமாரியில் 100 புத்தகங்கள் மட்டுமே வைத்துக்கொள்வாராம். புதிதாய் ஒன்று வாங்கினால், ஏற்கெனவே உள்ள 100ல் ஏதேனும் ஒன்றை வெளியேற்றி விடுவார்’ என்கிறார் ஜாக். எந்த ஒன்றைத் தூக்கிப் போடுவது என்ற பிரச்சனை இயல்பாகவே அவருக்கு வந்திருக்கும். அதற்கு நாள் கணக்கில் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கக் கூடும். ஏனெனில், புத்தகக் காதலனுக்கு புத்தகங்களைப் பிரிவது மிகவும் கடினம். எத்தனையோ நூலகங்களுக்கு நண்பர்கள் என் சேகரிப்பிலிருந்து எனக்குத் தேவைப்படாத நூல்களை நன்கொடையாகக் கேட்பார்கள். நானும் சரி என்பேன். இதெல்லாம் வேண்டாம் என பத்து புத்தகங்களை எடுத்து வைத்தால், கேட்ட நண்பர் வந்து எடுத்துச் செல்வதற்குள் அதிலிருந்து ஒவ்வொன்றாய் மீண்டும் என் அலமாரிக்குப் போய்விடும்.
அவர் வரும் போது 5-6தான் அவருக்காக எடுத்து வைத்திருக்கும் அந்தக் கட்டைப்பையில் இருக்கும். அதையும் நண்பரிடம் எடுத்துத் தரும்போது சட்டென்று ஒன்றை எடுத்துக் கொண்டு பாக்கியை மட்டுமே தர நேரும். கில்பர்ட் என்ன பாடுபட்டாரோ? ஜாக்கின் மற்றொரு நண்பர் தனது நூலகத்தில் எப்போதுமே 361 புத்தகங்கள் மட்டுமே வைத்திருப்பாராம். சரி, நான் புத்தகக் காதலர் என்று மரியாதையாகச் சொன்னாலும், சமூகம் இது மாதிரியானவர்களை புத்தகக் கிறுக்கு என்றுதானே சொல்கிறது? எனவே, அவர்களும் அவ்விதமே நடந்துகொள்கிறார்கள்.
புத்தகங்கள் வாங்குவதும், படிப்பதும் எதற்காக? ஜாக் நேரடியாக பதில் சொல்லவில்லை. விக்டர் ஹியூகோவின் ‘மரியன் டெல்மோர்’ நாடகத்தில் அரசன், “நீ உயிர் வாழ்வதற்கான காரணம் என்ன?“ என்று கேட்கும்போது எல்.ஏஞ்சலி, “அறிந்து கொள்ளும் ஆர்வம்” என்று பதிலளிப்பதை மேற்கோள் காட்டுகிறார். வாசிப்பின் நோக்கம் அறிதல்.
மிகப் பெரிய நூலகம் வைத்துள்ளோரின் நேரத்தில் பெரும்பகுதி அடுக்கி வைப்பதிலேயே கழிந்து விடுகிறது. ஜார்ஜ் பெரக் என்ற புத்தக வெறியர் கண்டம் வாரியாக அதில் நாடு வாரியாக, அதில் மொழிவாரியாக, அடுக்கி வைத்தாராம். வாங்கிய தேதி வாரியாக அடுக்கி வைப்போர் உண்டு. பதிப்புத் தேதி வாரியாக அடுக்கி வைப்போரும் உண்டு. அடிக்கடி எடுத்துப் பார்ப்பவை, என்றேனும் அபூர்வமாக எடுப்பவை என்ற வகையில் சிலர் அடுக்கி வைப்பார்கள். அடிக்கடி எடுத்துப் பார்க்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். எனவே பெரும்பாலான புத்தகங்களை எவ்வாறு அடுக்குவது என்ற கேள்வி திரும்பவும் வரும். இன்னும் சிலர் நூலாசிரியர் பெயரில் அகர வரிசையில் அடுக்குவார்கள்.
ஜாக்கின் சேகரிப்பு ஆயிரக்கணக்கில் என்பதால், இருவர் சேர்ந்து எழுதிய நூல்களே அவரிடம் ஆயிரக்கணக்கில் இருந்தன. இதில் எவரது பெயரை எடுத்துக் கொள்வது? எவரது பெயரை விடுவது? என்று குழம்பித் தவித்தார். அகர வரிசை எனும் போது எல்லாவிதமான எழுத்தாளர்களும் கலந்துதான், சேர்ந்து வரிசையில் நிற்க நேரிடும். 18, 19ம் நூற்றாண்டுகளில் ஒரு ஆச்சாரமான கிறிஸ்துவப் பெண்மணி தனது நூலகத்தில் புத்தகங்களை எவ்விதமாக அடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததைப் பார்த்தால் சிரிப்பாக வரும்.
நல்ல பக்தியான கிறிஸ்துவப் பெண்மணி தனது நூலகத்தில் ஆண் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வேறு வேறு இடத்தி்ல் வேறு வேறு அலமாரியில் தனித்தனியாகவே வைக்க வேண்டும். குறிப்பிட்ட ஆண் எழுத்தாளரும், பெண் எழுத்தாளரும் கணவன், மனைவி என்றால், அவர்களது புத்தகங்களை ஒன்றாக வைத்திருக்கத் தடையில்லை என்று ஒரு வழிகாட்டல் இருந்திருக்கிறது. நாற்பதாயிரம் புத்தகங்களை ஆண், பெண் எழுத்தாளர்களின் புத்தகங்களாகப் பிரித்து, அவர்களில் கணவன் – மனைவி ஜோடி யார் யாரெல்லாம் என்று பார்த்து பின்னர் அவற்றை தனித்தனியாக அகர வரிசைப்படுத்தி அடுக்க வேண்டும் என்றால், ஐயோ, நினைத்தாலே தலை சுற்றுகிறது… இதைவிட கொடுமை, கார்லோஸ் பாவர் என்ற அறிஞர்.
ஒருவரையொருவர் வெறுக்கும் இரு படைப்பாளிகளின் புத்தகங்களை ஒன்றாகச் சேர்த்து வைக்கமாட்டாராம்… ஜாக் என்ன செய்தாரோ தெரியவில்லை… நம் ஊர்ச் சூழலில் இப்படி அடுக்க வேண்டும் என்றால், அவருக்கு இவர் ஆகாது, இவர் இந்தக் கோஷ்டி, அவர் அந்தக் கோஷ்டி, முற்போக்கு, பிற்போக்கு, நடுப்போக்கு, வலது, அதிதீவிர வலது, இடது, அதிதீவிர இடது, அவ்வப்போது வலதாகும் இடது, சிவப்பு இடது, நீல இடது, காவி இடது என்று விதவிதமான கோஷ்டிகளில் எவர் புத்தகத்தையும் எவர் புத்தகம் அருகிலும் வைக்கமுடியாமல், ஒரு புத்தகத்திற்கு ஒரு தனி அலமாரி என்று பத்து ஏக்கர் நிலப்பரப்பில்தான் சொந்த நூலகத்தை வைத்துக் கொள்ள முடியும்!
ஆனாலும், ஜாக் தன் புத்தகங்களை அத்தனை அழகாகப் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார். வகைமை, துணை வகைமை எனப் பிரித்து, அவற்றில் அகர வரிசைப்படி அடுக்கி வைத்திருக்கிறாராம். இலக்கியம், அபுனைவு, கலைகள் என்று மூன்று முக்கியப் பிரிவுகளாக தனது முழு சேகரிப்புகளையும் பிரித்து வைத்திருக்கிறார். இலக்கியத்தை மொழிவாரியாகப் பிரித்து வைத்திருக்கிறார். அதிலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. கேட்டலான் மொழி புத்தகங்களை ஸ்பானிய மொழி நூல்களோடுதான் வைக்க வேண்டியதாக இருக்கிறது.

பிரான்ஸின் தென்பாகமான புரோவன்கல் பகுதியில் புழக்கத்தில் உள்ள சுமார் ஆறு மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை பிரெஞ்சு மொழி நூல்களோடுதான் அடுக்கி வைத்திருக்கிறார். ஐஸ்லாண்டிக், டேனிஷ், ஸ்வீடிஷ், நோர்வீஜியன், நோர்ஸ் போன்ற ஸ்காண்டிநேவிய மொழி நூல்கள் அனைத்தும் ஃபின்னிஷ் நூல்களின் வரிசையில்தான் நிற்கின்றன. அபுனைவுகள் பிரிவில் கருத்தியலான துறைகள் சார்ந்தவை, தெளிவாக வரையறுக்கப்பட்ட துறைகள் சார்ந்தவை என்று இரு பெரும் பிரிவுகள் வைத்திருக்கிறார். முன்னதில் தத்துவம், இறையியல், மதங்கள், மனோதத்துவம், உளப்பகுப்பாய்வு. இலக்கிய விமர்சனம், இலக்கிய வரலாறு போன்ற துறை சார்ந்த நூல்கள் வரும். பின்னதில் வரலாறு, அரசியல், மானுடவியல், வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, ஆவணங்கள் போன்றவை வரும்.
கலைகள் என்ற பிரிவை இசை, சினிமா, புகைப்படம், ஓவியம், கட்டிடக் கலை, அருங்காட்சிய கேட்லாக், கலை வரலாறு, கலை விமர்சனம், கலை அழகியல் என்று பிரித்துள்ளார். இந்த மூன்று பெரும் பிரிவுகளில் ஏகப்பட்ட சிறு பிரிவுகள் உண்டு. உதாரணத்திற்கு ஓவியம் என்பதை பிரெஞ்சுப் பாணி, இத்தாலியப் பாணி, ஜெர்மனியப் பாணி. டச்சுப் பாணி என்று பிரித்திருப்பார். பிரித்ததும் பிரச்சனை வந்துவிடும். மோடிக்லியானியை இத்தாலியப் பாணியில் வைப்பதா? இல்லை பிரெஞ்சுப் பாணியில் வைப்பதா? என்று நாள்கணக்கில் யோசிக்க நேரும். பெர்னினியை ஓவியராகக் கருதுவதா? சிற்பியாகக் கருதுவதா? பிக்காஸோ பிரெஞ்சா? இல்லை ஸ்பானிஷா? என்று மாதக்கணக்கில் யோசித்துப் பிரிக்க வேண்டியதாக இருக்கும். இவை போக, அவரது மேஜைக்கு அருகில் ஒரு பெரிய சுவர் முழுக்க ஓர் அலமாரி வைத்து, அதில் அவ்வப்போது எடுத்துப் பார்க்கத் தேவைப்படும் அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் ஆகியவற்றை அடுக்கி வைத்திருப்பார்.
ஜாக் வெறும் சேகரிப்பாளர் மட்டுமல்லர். கூடியமட்டும் வாங்கும் அனைத்தையும் படிப்பவர். ‘புத்தகத்தை வெறுமனே வாங்கி அடுக்கி வைப்பது பழங்களின் படத்தை பிரேம் செய்து வைத்திருப்பது போல, அது நம் பசியைத் தீர்க்காது’ என்கிறார் அவர். ‘ஆனாலும், படிக்காமல் வைத்திருப்பது பற்றி பெரிதாக குற்ற உணர்வு கொள்ள வேண்டியது இல்லை’ என்பது அவர் கருத்து. ‘காரணம் வாசிப்பு என்பது மனித மூளைக்கு மிகவும் சமீப காலத்தில் அறிமுகமான ஒரு விஷயம்தான்’ என்று ஸ்தனிஸ்லாஸ் டிஹாக்னே என்ற அறிஞர் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் ஜாக். ‘எழுதுவது சுமார் 5400 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், அப்போது சித்திரப் படங்கள்தான் எழுத்தாக இருந்தன.
இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்து கண்டுபிடிக்கப்பட்டது 3800 ஆண்டுகளுக்கு முன்புதான். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இது குறுகிய கால இடைவெளிதான். எழுத்தைக் கண்களால் பார்த்து, அதை எண்ணங்களாக, உங்கள் சிந்தனையாக மாற்றுவதற்கான சர்க்யூட்களை உருவாக்க மூளைக்கு பல காலம் பிடித்துள்ளது. (நம்மில் பலரது மூளைகளில் இப்போதும்கூட அந்த சர்க்யூட்கள் சரியாகப் பற்றவைக்கப்பட வில்லை!). எனவே, பொறுமையாக வாசிப்போம்’ என்கிறார்.
புத்தககங்களை கண்ட இடங்களில் வாசிப்பது, புத்தகங்களில் அடிக்கோடு இடுவது, குறிப்புகள் எழுதுவது என்று எல்லா புத்தகக் காதலர்களுக்கும் இருக்கும் கல்யாண குணங்கள் பற்றியும் ஆங்காங்கே ஜாக் சொல்கிறார். ‘நீண்ட பயணங்களின் நேரத்தைக் குறைப்பவை’ புத்தகங்கள்தான் என்கிறார். உண்மைதான். “ஐயையோ, இந்த புக்க முடிக்கறதுக்குள்ள இறங்க வேண்டிய எடம் வந்திருந்சே! என்று நான் எத்தனையோ பயணங்களில் வருத்தப்பட்டிருக்கிறேன்.
புத்தகங்கள் நிறைந்த வீட்டில், அதில் அடிக்கோடிட்டு குறிப்பு எழுதி வைக்கும் பழக்கம் உள்ள ஒருவருக்கு, சுமாரான நினைவாற்றல் இருந்தால் போதும். வாசித்த புத்தகத்தின் விஷயங்களை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தேவையான விஷயம் நம் நூலகத்தில் எந்தப் புத்தகத்தில் இருக்கிறது? அந்தப் புத்தகம் எந்த அலமாரியில் இருக்கிறது? அதில் நாம் எங்கெங்கெல்லாம் குறிப்பு எழுதி வைத்திருக்கிறோம்? என்று ஞாபகம் இருந்தால் போதும்” என்கிறார் ஜாக்.
அதுதானே ஐயா பிரச்சனையே… பி.வி.ஐகதீச அய்யரின் புராதன இந்தியா எனும் பழைய 86 தேசங்களுக்கு அடுத்ததாக பிராட் தோரின் ‘தி அதீனா ப்ராஜெக்ட்’, அதற்கு அடுத்ததாக சிஸ்டர் ஜெஸ்மியின் ‘ஆமென்’, அதற்குப் பக்கத்தில் ம.தவசியின் ‘சேவல் கட்டு’, பக்கத்திலேயே ராணிமைந்தனின் ‘சங்கீதப் பெருங்கடல் பாலமுரளி கிருஷ்ணா’, அடுத்ததாக பிரபீர் புர்கயஸ்தாவின் ‘அங்கிள் சாம்ஸ் நியூக்ளியர் கேபின்’, அசோகமித்திரனின் சில இந்திய மொழிகளில் முதல் நாவல், பொன்னீலனின் தெற்கிலிருந்து, சரவணன் சந்திரனின் ‘அஜ்வா’ என்று கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாங்கிய புத்தககங்களைச் சொருகி வைக்கும் என்னைப் போன்றவர்கள், எதை எங்கு தேடுவது? எம் போன்றோர் திருந்த, ஜாக் போன்றோர் புத்தகங்களை அடுக்கி வைப்பது பற்றி இன்னும் ஒரு நூறு புத்தகங்களாவது எழுத வேண்டும்.
