நிகழ் அய்க்கண்
தோழர் ஜனநேசனின் இச்சிறுகதைத் தொகுப்பில் பதினேழு கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இச்சிறுகதைகள் பெரும்பாலும் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் ஏழை எளியமக்கள் அனுபவித்த துயரங்களையும், சமூகப் பிரதிபலிப்புக்களையும் யதார்த்தமாக சித்தரித்துள்ளார். ஒவ்வொரு கதையின் சாராம்சத்தினையும் தனித்தனியாக சுருக்கிக் கீழே தரப்பட்டுள்ளது.

‘குருகும் உண்டு மணந்த ஞான்றே’ எனும் கதையில், குடிமைப்பணித் தேர்வுக்காக, பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராகிவரும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவிவந்த உறவு பற்றியும், அதன் விளைவால் ஏற்பட்ட சிக்கல்களையும், அப்பெண் எவ்வாறு உறுதியுடன் எதிர்கொண்டு வெல்கிறாள் என்பதை விவரித்திருக்கிறது. ‘கண்ணீர்படை’ எனும் தலைப்பிலான கதையில், சமூகத்தில் வயிற்றுப்பிழைப்புக்காகப் போராடும் விளிம்புநிலை மக்களின் பரிதாப நிலை; ஏழை – பணக்காரர்களுக்கிடையே நிலவும் சமத்துவமின்மை; குற்றச்செயல்களை பாரபட்சமாக அணுகும் காவல்துறையின் போக்கு; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என உறுதி கூறும் நீதிபதியின் போக்கினைக் காணமுடிகிறது.
‘கனிதல்’ எனும் கதையானது, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமில்லாத தனது மனைவியைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கும் பழக்கத்தினை வளர்த்தெடுக்கும் கணவனின் விதம் பற்றிப் பேசுகிறது. ‘கவ்வும் சூது’ எனும் கதையில், அரசுப் பணியிலிருக்கும் ஒருவர் எப்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, கடனில் மூழ்கி, அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலைக்கு முயல்கிறார் என்பதனைச் சுட்டுகிறது.
‘தொடர் ஓட்டம்’ எனும் கதையில், உலகமயச்சூழலில், அரசானது, நிதிச்சுமையைக் குறைக்கும் எண்ணங்கொண்டு, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதினை அதிகரிப்பதன் வாயிலாக, ஒருபக்கம் ஓய்வூதியப் பலன்களை தள்ளிப்போட வகை செய்வது, இன்னொருபக்கம் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது என விவரிப்பது மட்டுமின்றி, அவ்விளைஞர்கள் அரசு – தனியார் நிறுவனங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஏதுமின்றி குறைந்த ஊதியத்திற்குப் பணியமர்த்தப்படுகிற கொடுமையும் அரங்கேறுவது பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது.
‘எங்கே போகிறோம்’ எனும் தலைப்பிலான கதையானது, தகவல்தொடர்பும், தகவல் தொழில்நுட்பமும் பெருகியுள்ள காலமிது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஒரு சாதாரணக் குடும்பத்துச் குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்காக வாங்கிக்கொடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் அவர்களிடத்தில் ஏற்படுத்திய பக்கவிளைவுகள் பற்றியும், பள்ளிகளில் பாலியல் கல்வியினை பாடத்திட்டமாக வைக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் விவாதிக்கிறது. ‘அன்பால் அணை’ எனும் கதையில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்வது மட்டுமல்லாது, அவர்களுக்கு சமூகப் பொறுப்பினை ஊட்டுவதும், எதைச்செய்தாலும் ஈடுபாட்டோடு செய்வது மட்டுமல்லாது, பிறருக்கு உதவும் வகையிலும் நடந்துகொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. மேலும், ஆசிரியரானவர் மாணவர்களை அன்பால் அரவணைப்பது; இயலாத பட்சத்தில் சொல்லால் கண்டிப்பது;
பாடத்தினை இயன்றளவு எளிமையாகவும், ஈர்ப்பாகவும் மாணவர்களிடையே பதியவைக்கவேண்டும் என்கிறது. எலியோடு வாழ்தல் என்னும் கதையில், கொரோனா நோய்த்தொற்றில் சிக்கிக்கொண்ட ஒருவர், அந்நோயிலிருந்து மீளுவதற்கு என்னென்ன நியாயம் இருக்கிறதோ, அதுபோல ஒரு எலியும் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளவும் நியாயமிருக்கிறது என வலியுறுத்துவதன் மூலம் சக உயிரினங்களின் மீதான அக்கறையை வெளிப்படுத்தாக இருக்கிறது. புதியனபுகுதல் எனும் கதையில், இப்பூவுலகில், பல்லுயிரினங்கள் யாவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளவையாக இருக்கிறதெனவும், அவைகளின் பெருக்கத்திற்கு மனிதர்கள் துணை நிற்கவேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்துகிறது.
‘பாடறிந்து ஒழுகு’ எனும் கதையில், கொரோனா காலத்தில் கிராமப்புற ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை அதன்வழியாகக் காணமுடியாத சூழலிருந்ததையும், சமூக நோக்கங்கொண்ட ஆசிரியர்கள் முயற்சியெடுத்து மாணவர்களின் இல்லம் நோக்கிச்சென்று கல்வி புகட்டுவதையும் விவரிக்கிறது. ‘பருவம் தவறிய மழை’ என்னும் கதையில், மனைவியை இழந்து வாடும் ஒருவரின் தனிமை எப்படியெல்லாம் சிந்திக்கவைக்கிறது என்பதனை விளக்கமாகக் கூறுகிறது. ‘பரிணாமம்’ என்னும் கதையில், கற்றலில் சிறந்த பண்பு எதுவெனில், ஆசிரியர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்வதும்; மாணவர்களிடமிருந்து ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதும் பரஸ்பரமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

‘பரிகாரம்’ என்னும் கதையில், பெண்களால் தங்களது பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும்; அதனை பக்குவமாக எடுத்துச்செல்லவும்; முடிவெடுத்தபின் அதனை செயல்படுத்தவுமான திறமைகளை வெளிப்படுத்தும்விதமாக இருப்பதை விளக்குகிறது.. ‘நொந்த நெஞ்சு’ என்னும் கதையில், ஒருவரை ஒருவர் விரும்பும் ஓர் ஆணும் பெண்ணும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளும் வழிமுறைகளை எடுத்துக்கூறுகிறது.
‘நில்லாது போ பிணியே’ எனும் கதையில், கொரோனா கட்டுப்பாடுகளினால், வீட்டிலிருந்து வெளியே வேலைக்குப் போகமுடியாததால், தனது மனைவி மற்றும் குழந்தைகள் பட்டினியால் இருப்பதுகண்டு மனம் வெதும்பும் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மனக்குமுறல்களைக் கவனப்படுத்துகிறது. ‘வாயுள்ள பிள்ளை’ என்கிற கதையில், போதிய திறனிருந்தும் வசதி வாய்ப்பற்ற ஓர் ஏழைக் கலைஞனுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தருவது சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமை என்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறுதியாக, சொல்லப்படாத கதைகள் எனும் தலைப்பிலான கதையில்,, ஏழை மக்களின் துயரம் நீங்கப் பாடுபடுகிற முற்போக்கு எண்ணங்கொண்டவர்களிடையே புரிதலின்மையும், ஒற்றுமையின்மையுமே சிதறிக்கிடப்பதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
