மயிலம் இளமுருகு
முனைவர் லோ. ஜெயலட்சுமி அவர்கள் உதவிப்பேராசிரியராக, அண்ணாநகரிலுள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் பணிபுரிந்து கொண்டு வருகிறார். இவர் நல்லாசிரியர் விருது, இளம் எழுத்தாளர் விருது, சேவா ரத்னா விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சொற்பொழிவாற்றியுள்ளார்.
இவர் சிறுகதை, கவிதைகளும் எழுதியுள்ளார். மேலும் ‘கவிஞர் ஆசு’, ‘சங்கச் செவ்வியல் பனுவல்களில் அகமரபு’, ‘அர்த்தநாரீசுவரர் பேரில் பள்ளேசல் நாடகம்’ ஆகிய தலைப்புகளில் இவர் மூன்று புத்தகங்களைப் படைத்துள்ளார். இவருடைய கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பாக, ‘நெஞ்சக நட்பு’ எனும் தலைப்பில் நான்காவது நூல் வெளியிடுவதைக்கண்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூலில் நவீன இலக்கியப் பகுதியில் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளும், மரபு இலக்கியப் பகுதியில் எட்டுக் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

தமிழ் ஆய்வுலகில், குறிப்பிட்ட ஒருவர் எழுதிய பல்பொருண்மை சார்ந்த கட்டுரைகளை ஒன்றாகத் திரட்டி வெளியிடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. அந்த வகையில் முனைவர் லோ. ஜெயலட்சுமி அவர்கள், சூழல்களில், பல்வேறு தேவை கருதி எழுதிய பல கட்டுரைகளைக் கொண்டதாக அமைகிறது இத்தொகுப்பு என்று இந்நூல் குறித்து பேராசிரியர் வீ.அரசு அவர்கள், ‘பல்துறை ஆய்வுகளின் தொகுப்புக் களஞ்சியம்’ என்கிறார்.
செவ்விலக்கிய அகமரபுகளில் உடல் சார்ந்த ஒப்பனைகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. ஒப்பனைகள் என்பவை கவர்ச்சி சார்ந்து அமைவன. அந்த வகையில், தொய்யில் என்ற ஒரு சொல் உடலில் நிகழ்த்தப்படுகிறது. அவ்வகையான ஒப்பனை என்பது உடலில் எவ்வாறு எங்கு வரையப்படுகிறது என்பதற்கும் அகமரபு சார்ந்த உணர்வுகளைப் பேசுவது என்பதற்கும் தொடர்பு உண்டு. அத்தன்மைகளில் அவை செவ்விலக்கியப் பிரதிகளின் தனித்தன்மைகள் என்றும்கூட கூற முடியும்.
இது பிற்கால இலக்கியப் பிரதிகளில் வளர்ச்சியுற்றது. இத்தகைய வரலாறு இந்நூலில் பேசப்படுகிறது. ‘உடலைக் கொண்டாடுதல்’ எனும் அண்மைக்கால உரையாடல்களின் மூலப்பதிவை செவ்விலக்கியப் பிரதிகளில் காணமுடிகிறது. இத்தன்மை அகமரபு சார்ந்த இணைவிழைச்சுக் கூறுகளில் முக்கியமானதாக அமைகிறது.
தமிழ் மரபில் செவ்விலக்கியப் பிரதிகளுக்குப்பின் தமிழ் அறநூல்கள் உருவாயின. இப்பிரதிகள், நல்லது, கெட்டது என்ற இருமைப் பண்புகளைப் பேசின. இவ்வகையில் உருவானவைகளாக நாலடியார் மற்றும் திருக்குறளை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. செவ்விலக்கியத் தன்மைகளிலிருந்து இத்தன்மைகள் வேறுபடும் கூறுகளை இக்கட்டுரையில் காண முடிகிறது. நட்பு எனும் ஒரு பண்பின் பல்பரிமாணங்களைக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.
இக்கட்டுரைத் தொகுப்பு நூலில், பாரதி, கலைச்செல்வி, எம்.ஜி.சுரேஷ் ஆகிய மூவரின் புனைவுகளைப் பற்றிய உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காண்கிறோம். முழுமை பெறாத பாரதியின், ‘சந்திரிகைக் கதை’யில், பெண்கள் குறித்த பதிவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளது. மறுமணம், குழந்தை மணம் ஆகியவை குறித்து விரிவாக பாரதி பேசியிருக்கிறார்.
சந்திரிகையின் கதையைக் குழந்தை மணத்திற்கு எதிராகவும், விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் பாரதி உருவாக்கியுள்ளார். பாரதி, தம் பாடல்களில் பெண்ணுரிமை குறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளார். அத்தன்மைகளை இக்கதையிலும் வெளிப்படுத்தியிருப்பதைக் கட்டுரை விரிவாகப் பேசுகிறது. பிரதியின் பெண் குறித்த கருத்து நிலையை அறிவதற்கு இக்கட்டுரை உதவுகிறது.
முனைவர் ச. உஷா, அவர்கள் இந்நூல் குறித்து பின்வருமாறு பதிவு செய்துள்ளார். இக்கட்டுரைகள் ஆசிரியரின் எழுத்தின்வழி கருத்தரங்கங்கள் மற்றும் இதழ்களில் வெளிவந்தவையாகும். “விநாயகப் பெருமானைப் போற்றி வழிபடும் பக்தர்களுக்கு அவரைப்போன்று குழந்தை பிறந்தால் ஏற்றுக் கொள்ளும் ஒரு மனநிலை யாருக்காவது உண்டா?” என்ற நிதர்சனத்தை எடுத்தியம்பும் குத்தூசியாரை பல்வேறு நிலைகளில் ஆழ்ந்து நோக்குகிறது ‘குத்தூசி குருசாமி விமர்சனப் போக்கு’ கட்டுரை.
எம்.ஜி.சுரேஷின் படைப்புத் திறனை ஆய்வதுடன், இக்கதை தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற தற்காலத்தில் நம் கண்முன்னே நிகழும் சம்பவங்களை பல நிலைகளில் மாறி வடிவமைக்கின்றன. ஒரு கருத்து ஒருவரிடம் இருந்து கடந்து மற்றொருவரிடம் சென்றடைவதற்குள் அதன் உண்மை மாறி விடுகிறது. இப்படியிருக்கையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள் நம்பகத்தன்மையுடையதுதானா என்ற கேள்வியை முன்னிறுத்துகிறது என்று கூறுவது நம்மையும் சிந்திக்க வைப்பதுடன் ஆசிரியரின் காய்தல், உவத்தல் அற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
எஸ். வையாபுரிப்பிள்ளை சங்க இலக்கிய பதிப்பின் முறைகளை எவ்வகையில் வகைமைப்படுத்தியுள்ளார் என்பது எடுத்தியம்பப்பட்டுள்ளது. ‘தொல்காப்பிய உரை’ முதலியவற்றில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ள சங்கப் பனுவல்களை ஒப்புநோக்கி, முறையான பாடங்காணல் என்ற வகையில் வையாபுரிப்பிள்ளை சங்க இலக்கியப் பதிப்பினை உருவாக்கிய வழிமுறைகளை ஆசிரியர் ‘சங்க இலக்கியத்தின், தொகுப்பு முறை’ எனும் தலைப்பில் விளக்கியுள்ளார்.
‘நட்பின் புரிதலை உணர்த்தும் நீதி நூல்கள்’ என்ற தலைப்பில் நட்பின் பெருமையை திருக்குறள், நாலடியார்வழி ஒப்பு நோக்கியுள்ளார் ஆசிரியர். வில்லிசை மன்னர் சுப்பு ஆறுமுகத்தின் இராமாயண கதைப்பாடல்கள் குறித்து உற்று நோக்கப்பட்டுள்ளது. ‘வில்லிசை இராமாயணம் ஓர் ஒப்பீடு’. இந்நூல் மிக எளிய நடையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆசிரியர் முனைவர் லோ. ஜெயலட்சுமி கட்டுரைகளைத் தொகுத்த நேர்த்தியும் தொய்வில்லாமல் கொண்டுசென்ற திறமும் அவர் தமிழில் ஆழங்கால்பட்டவர் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
இந்நூலில் உள்ள கட்டுரைகள் எப்படி, எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பதை நூலாசிரியர் என்னுரையில் கூறியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் பேரா. வீ. அரசு ஐயா அவர்கள், மாணவர்களுக்கு இணையவழியில் இருபதிற்கும் மேற்பட்ட மார்க்சிய வகுப்புகளை நடத்தினார். இந்த வகுப்புகளின் ஊடாக மார்க்சியம் குறித்த புரிதலை என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. இதன் வெளிப்பாடாக மார்க்சிய அறிமுக ஆய்வுக் கட்டுரையாக நா.வானமாமலை அவர்களின் மார்க்சிய அழகியல் சிந்தனை குறித்து எழுதினேன். கொரோனா காலகட்டத்திலும் மாணவர்களுக்காகக் கற்றலை நிகழ்த்தியவர் எங்கள் ஐயா பேரா. வீ. அரசு அவர்கள் என்பதின் மூலமாக ஆசிரியர் மாணவர் உறவைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகள் பின்வருமாறு: 1.’நவீன இலக்கியம்’ 1.’பாரதியின் பெண்ணியச் சிந்தனை’ – ‘சந்திரிகை கதை’ 2.’குத்தூசி குருசாமி விமர்சனப் போக்கு’ 3.’முதலாளித்துவ அரசியல்’ – யுரேகா 4.’எழுத்தாளர் கலைச்செல்வியின் படைப்பாளுமை’
5.’மார்க்சிய அழகியல்’ – நா. வானமாமலை’மரபு இலக்கியம்’ – 6.’வ.சுப. மாணிக்கனார் தெளிவுபடுத்தும் அகச்சொல்’
7.’சங்கப் பனுவல்கள்: கூந்தல் உரிமை’
8.’தொய்யில் – கோலம்’ 9.’சங்க இலக்கியத்தில் செந்நிற அடையாளம்’ 10.’கூந்தல் ஒப்பனை – ஐம்பால்’ 11.’சங்க இலக்கியத் தொகுப்பு முறை: எஸ்.வையாபுரிப்பிள்ளையின் பணி’ 12.’நட்பின் புரிதலை உணர்த்தும் நீதி நூல்கள்: நாலடியார் – திருக்குறள்’ 13.’வில்லிசை இராமாயணம் – ஓர் ஒப்பீட்டாய்வு.’
பாரதியின் பெண்ணியச் சிந்தனை – சந்திரிகை கதை
பாரதியார் ‘சின்னசங்கரன்’ என்ற பெயரில் எழுதிய நாவல் சுமார் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டதாகும். இதனைத் தொடர்ந்து, ‘சந்திரிகையின் கதை’ எனும் நாவலைப் பாரதி எழுதத் தொடங்கினார். மிக அற்புதமாகத் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட இந்நாவல் ஒன்பதாவது அத்தியாயத்திலேயே முற்றுப்பெறாமல் நின்றுவிட்டது காரணம், பாரதியின் மறைவு. சந்திரிகையின் கதை பாரதியின் கடைசிக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கதையாகும். இக்கதையை நூல் வடிவில் 1925ஆம் ஆண்டு முதற்பதிப்பாகப் பாரதி பிரசுராலயம் வெளியிட்டது. இவைத்தவிர, ‘ஸ்வர்ணகுமாரி’, ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் இரண்டு குறுநாவல்களை எழுதியுள்ளார். இவை இரண்டும் காதல் கதைகள் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டதாகும். ‘நவதந்திரக் கதைகள்’ என்ற பெயரில் இவர் எழுதிய சுமார் முப்பது சிறுகதைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன. மேலும், ‘நிமிடக்கதைகள்’ எனும் மிகச்சிறிய அளவிலான குட்டிக்கதைகளும், சில வேடிக்கைக் கதைகளும் பாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கட்டுரையில் பாரதியின் புதினப் படைப்புகளில் ஒன்றான, ‘சந்திரிகையின் கதை’ எனும் நாவல் ஆய்வின் களமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கதையைப் பாரதி பெண்ணிய சிந்தனை சார்ந்த கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார். பெண் கல்வி, பெண் விடுதலை, சொத்துரிமை, விதவை மறுமணம் எனப் பெண்ணியக் கருத்துகளைப் புனைவின் ஊடாகப் பாரதி வாசகர் மனதில் எவ்வகையில் பதியமிடுகின்றார் என்பதை நாவலைப் படிக்கும் வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும்.
குத்தூசியார்
குருசாமி அவர்கள் ‘விடுதலை’ இதழில் ‘பலசரக்கு மூட்டை’ எனும் பகுதியில் குத்தூசி என்ற புனைபெயரில் 1946 முதல் 1962 வரை 17 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பல விமர்சனக் கட்டுரைகள், தலையங்கம் பல எழுதியுள்ளார். இக்கட்டுரையின் தொகுப்பின் முன்னுரையில் குத்தூசி பெயருக்கான காரணத்தை விளக்குகிறார்.
காலி மணிபர்ஸ், கிறுக்கன், கு.கு, குத்தூசி, குமி, சம்மட்டி, சி.ஐ.டி. சிவப்பழம், தமிழ்மகன், தராசு, தெப்பக்குளம், தொண்டைமண்டலம், பாட்மிண்டன், பிளைன் ஸ்பீக்கர், பென்சில், மதுரைவீரன், விடாக்கண்டன் ஆகியன குருசாமி இதழ்களில் பணியாற்றிபோது கைக்கொண்ட புனைபெயர்கள் ஆகும். இவருடைய பல புனைபெயர்களில் குருசாமி பெயருடன் ஒட்டிக்கொண்டிருப்பது குத்தூசி என்ற புனைபெயர் மட்டுமே.
முதலாளித்துவ அரசியல் – யுரேகா
வரலாற்றினைப் புனைவாகக்கொண்டு, பின்நவீனத்துவக் கருத்துக்களை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவலே எம்.ஜி.சுரேஷ் அவர்களின் யுரேகா என்றொரு நகரம். இந்நாவல் குறித்தும் ஆய்வாளர் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.சுரேஷ் தம் எழுத்தின் வசத்தால் வாசகர்களுக்குப் புதிய புரிதலை உணர்த்துகிறார். இவருடைய நாவல்களை முதலில் படிக்கின்றபொழுது வேறொரு உலகிற்கு அழைத்துச்செல்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நாவல்களை ஆழ்ந்த வாசிப்பின் ஊடாக, அவருடைய எழுத்துலகத்திற்கு வாசகரும் பயணம் செய்வதை உணரலாம். ஒவ்வொரு நாவலிலும் அதன் கருப்பொருள், நடையமைப்பு, சிந்தனை என அனைத்தும் ஒருவிதமாக அமைவதில்லை, மாறுபட்ட நோக்கத்தில் கதைத்தளம் விளக்கிச் சொல்லும் வகையில் படைத்துள்ளார். ஏதாவது புதிது புதிதாகச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் சுரேஷ் படைப்புகளில் இருப்பதைக் காணலாம். அந்த வகையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட நாவல்தான், ‘யுரேகா என்றொரு நகரம்’. இந்நாவலை மையமிட்டுக் கட்டுரைக் களம் அமைகிறது.
கலைச்செல்வியின் படைப்பாளுமை
மனித சமூகம் தற்போதைய காலச்சூழலில் வெறுமையான, கலைச்செல்வி தம் மகிழ்ச்சியற்ற தன்மையில் இயந்திரத்தனமான வாழ்க்கைத் தளத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை எழுத்தாளர் படைப்புகளில் ஆழமாகப் பதிவுசெய்து வருகிறார். இங்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அவரவர் மனநிறைவுக்கும், ஆசைக்கும் ஒருவரை ஒருவர் கொன்று தின்றுகொண்டுதான் இருக்கிறார்கள். கொலையானது அணு அணுவாக, கொஞ்சம் கொஞ்சமாக வக்கிரம் நிறைந்து, அந்த உயிர் சாகும்வரை நெஞ்சைப்பிளந்து தசையையும் ரத்தத்தையும் தின்று கொல்லும் வலி எத்தகையதோ, அதைப்போன்றுதான் தற்போதைய சமுதாயத்தில், வாழ்வில் நிகழ்வுகள் நடைமுறையில் இருப்பதை, தம் படைப்புகளில் யதார்த்தப் போக்கில் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய படைப்புகள் அவை எந்தெந்த ஊடகங்களில் வெளிவந்தன என்பதையும் நூலாசிரியர் கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.
மார்க்சிய அழகியல் -நா.வானமாமலை
ஆராய்ச்சியாளர்களில் / முதன்மையானவராகக் கருதப்படுபவர் பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் பாடல்கள் மட்டுமின்றி… தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு குறித்த ஆராய்ச்சி, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு, மார்க்சிய கருத்தாக்கம் எனப் பலதுறைகளில் தனது ஆளுமையைப் பதித்தவர். 1936களில் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்த காலகட்டம் அந்நேரத்தில் இடதுசாரிக் கருத்துகளால் நா.வானமாமலை ஈர்க்கப்பட்டார். அவ்வியக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டார்.
மார்க்சியம் கலை இலக்கியப் படைப்புகளுக்குப் புறம்பானது என்ற கருத்தை சிலர் முன்னிறுத்துகின்றனர். உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்கள் பலர் மார்க்சிய கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். மனித நலன்களுக்கும் நல்வாழ்க்கைக்கும் தேவையான மூலாதாரமான விடயங்களை மார்க்சியம் என்றும் மறுத்துரைப்பதில்லை என்ற கருத்தை நா.வா. ‘மார்க்சிய அழகியல்’ எனும் இந்நூலில் விளக்குகிறார். இந்நூலை நான்கு வகையான பொருண்மையில் பகுத்துள்ளார். அவை யாவன: 1.கலைப்படைப்பின் ஆக்கம்
2.கலையில் இலட்சியமும் வீரனும்
3.கற்பனைப் படிமமும் இலக்கியப் படைப்பும் 4.மரபும் மாற்றமும்.
வ.சுப.மாணிக்கனார் தெளிவுபடுத்தும் அகச்சொல்
தமிழ்மொழியினை மிகச் சிறந்தளவில் ஆய்வு செய்த ஆய்வாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் வ.சுப.மாணிக்கனார். இவர் கவிதை, நாடகம், உரைநடை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு பல துறைகளில் தம் அறிவினைத் திறம்பட செலுத்தியவர். தமிழிலக்கிய சங்க இலக்கண நூல்களில் ஆழ்ந்த புலமை இவருக்கு உண்டு. வ.சுப., ஆய்விற்கு மாணிக்கனார் தம் வாழ்நாளில் 23 நூல்கள் எழுதி வெளியிட்ட பெருமைக்குரியவர். இவரது முனைவர்பட்ட இலக்கியத்தைக் களமாகக் கைக்கொண்டு ‘The tamil concept of love’ எனும் தலைப்பில் ஆய்வேட்டினை ஆங்கில மொழியில் சமர்ப்பித்தார். இவர்தம் ஆய்வேட்டினைச் சில ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் மொழியில் மொழிபெயர்த்து, ‘தமிழ்க்காதல்’ என்ற தலைப்பில் 1962ஆம் ஆண்டு வெளியிட்டார். தமிழ்மொழியினை ஆராயும் அனைத்து ஆய்வாளர்களும் வ.சுப. மாவின் தமிழ்க்காதல் நூலை வாசிக்கத் தவறியதில்லை. ஏனெனில், அந்த அளவிற்குச் சங்கப் பாடல்களை நுணுக்கமாக ஆய்வுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகம் குறித்து இலக்கண உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் தரும் விளக்கம் அகம் என்ற சொல்லின் பொருண்மையை எவ்வகையில் வ.சுப.மா. தெளிவுபடுத்துகின்றார் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
தொய்யில் கோலம்
தொய்யில் என்பது தோய்த்தல் எனப் பொருள்படும். மகளிர் தங்கள் தோள்களிலும் தனங்களிலும் (நகில்-முலை) சந்தனக் குழம்பினால் எழுதும் வரிக்கோலம். இக்கோலம் மூலம் பூ, இலை, தளிர், கொடி, கரும்பு, வில் எனப் பல வடிவங்களை அழகுபட வரைந்து கொள்வதுண்டு. பெருங்கதையில் தொய்யில் கோலம் வரைவதற்கு எவ்விதமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்குப் பதிவுள்ளது. ‘தண்ணறுஞ் சாந்த நுண்ணிதின் எழுதிப் பதினோ ராண்டினுட் பாற்படக் கிளந்த’ (பெருங்:1:42:1,50-151) இவ்வரிகள், பதினோராண்டு அகவை உடையவள், தனது தோள்களில் கோலத்தை வரைந்துகொண்டாள் என்பதை அறியலாம். அழகிய சந்தனம் மட்டுமின்றி சாதிலிங்கம், சுண்ணம் (நானப்பொடி) ஆகியவற்றை குங்குமக் குழம்பில் கலந்து தொய்யில் எழுதப்பட்டுள்ளது.
இலக்கியங்களில் பெண்கள் தங்கள் தோள்களில் தொய்யில் கோலம் வரைந்து கொண்டதற்கான பதிவுகள் மிகக் குறைந்தளவிலேயே உள்ளன. ஆனால், ஆண், பெண்ணின் தோள் மற்றும் மார்புப் பகுதியில் தொய்யில் வரைந்ததற்கான பதிவுகளைக் கூடுதலாகக் காணமுடிகின்றது.
சங்க இலக்கியத்தில் செந்நிற அடையாளம்
நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு மிக நெருக்கமுடையது. வெண்மை நிறம் அமைதியின் வெளிப்பாடாகவும், கருமை வண்ணம் தீமையின் அடையாளமாகவும், பச்சை வண்ணம் வளமையின் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணமும் ஒரு பொருண்மையின் அடையாளமாகத் திகழ்கின்றன. அவ்வகையில் பண்டைய தமிழர் வாழ்வில் பச்சை, நீலம், வெண்மை, மஞ்சள், கருமை, சிவப்பு ஆகிய வண்ணங்களைப் பெருமளவில் பயன்படுத்தியிருப்பதை அறியலாம். இவற்றுள் செந்நிறம் சிறப்பானதொரு இடத்தைப் பெறுகிறது. சங்க இலக்கியம் இந்நிறத்தின் முக்கியத்துவத்தை சங்கப்பிரதியில் எத்தன்மையில் விவரித்துப் பேசுகிறது என்பதைப் பற்றி இந்நூலில் காணலாம்.
கூந்தல் ஒப்பனை – ஐம்பால்
சங்கப்பனுவல்களை முழுமையாக ஆராயும்பொழுது/பெண்டிரின் தலை மயிரைக் குறிப்பதற்குக் கூந்தல் சொல்லைத் தவிர, ஓதி, கதுப்பு, கூழை ஆகிய சொற்களின் பதிவுகள் மிகுந்தளவில் உள்ளன. ‘முச்சி’ என்ற சொல் பதிவு, சில இடங்களில் உள்ளதைக் காணலாம். இவைதான் ஐம்பால் முடிப்பு வகையாக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது.
சங்க இலக்கியத் தொகுப்புமுறை:
எஸ். வையாபுரிப்பிள்ளையின் பணி
சங்க இலக்கியப் பிரதியின் மூலம், உரை, எளியவுரை, தெளிவுரை, புத்துரை எனப் பல்வேறு வகைகளில் வெளியாகி பல வெளியிடப்பட்டன. இதுவரை சங்கப்பாடல்கள் பலப்பல பதிப்புகளைப் பெற்றுவருகின்றன. இவற்றுள் இன்றளவும் ‘பாட்டும் தொகையும்’ நூல் குறிப்பிடத்தக்க பதிப்பாகும். இப்பதிப்பின் இரண்டாம் பகுதியில் செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செய்திகள் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் துணை நிற்கின்றன. பேராசிரியர் ந. சஞ்சீவியின் சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணையில் ஆய்வுக்குறிப்புகள் அடங்கிய நூல்கள் தோன்றுவதற்கு இப்பதிப்பே காரணமாய் திகழ்ந்தன. ‘பாட்டும் தொகையும்’ எனச் சுட்டப்பட்ட சங்க நூல்கள், ‘சங்க இலக்கியம்’ என்னும் அரிய பெயரிட்டு, இன்றும் அப்பெயர் பெருவழக்காக நிலைபேறடைவதற்கு காரணமாகப் ‘பாட்டும் தொகையும்’ நூல் அமைந்தது எனலாம். தமிழாராய்ச்சி உலகில் பல்வேறு அணுகுமுறைகளுக்கு இந்நூலை முதன்மையான கருதுகோளாக ஆய்வாளர்கள் ஏற்கின்றனர்.
நட்பின் புரிதலை உணர்த்தும் நீதிநூல்கள்: நாலடியார் திருக்குறள்
சங்கப்பிரதிகளில் நட்பின் ஆளுமைப் பண்புகளைச் சிறப்பித்துக் கூறும்பொழுது அதியமான் – ஒளவையார், பாரி -கபிலர், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் ஆகியோரை வரையறைப்படுத்தக் காணலாம். இதில் ஆழங்கால்பட்ட நேர்த்தியான நட்பின் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பைச் சொல்லாம். இவர்கள் இருவரும் இறக்கும் தருணம்வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதே இல்லையாம். கோப்பெருஞ்சோழனின் கொடைச் சிறப்பைக் கேள்வியுற்ற பிசிராந்தையார், அவர்மீது, பற்றுக்கொண்டு கோப்பெருஞ்சோழனின்மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன்மீது கொண்ட காதலால் தன் பெயரைப் பேதைச்சோழன் என்று மாற்றிக்கொண்டான்.
இப்பதிவின் ஊடாக நல்ல நண்பர்களை எவ்வகையில் இனம் கண்டுகொள்வது? எத்தகையவர்கள் உண்மையான நட்பின் இலக்கணம் என்ன? குணத்தின் அடிப்படையில் நண்பனை எவ்வாறு தேர்வு செய்தல் கூடும்? குற்றம் இருப்பினும் அதனைப் பொறுத்து நண்பனைத் தக்கவைத்துக் கொள்ளல், நட்பின் ஆளுமை மகிழ்ச்சி, ஆராய்ந்து நட்பை பெறுதலின் பயன்பாடு, நட்பில் பிழைபொறுத்தலால் ஏற்படும் பயன்கள், கூடாநட்பு, தீ நட்பு என நட்பின் தோழமையை நாம் பலவகைகளில் ஆராய்ந்து, அறிந்து கொள்ளுவதற்கு நீதிநூல்களான, ‘நாலடியார்’, ‘திருக்குறள்’ பெரிதும் உறுதுணையாக அமைந்திருந்தன.

வில்லிசை இராமாயணம் ஓர் ஒப்பீட்டாய்வு
இராமாயணம் வடமொழியில் வால்மீகியால், எழுதப்பட்டது. இந்திய மொழிகள் பலவற்றுள் இக்காவியத்தின் தாக்கம் அம்மொழி இலக்கியங்களில் பதிவாகியிருப்பதைக் காணலாம். வால்மீகி இராமாயணப் பாடல்கள் முழுமையாகவோ அல்லது காவியத்தின் சில பகுதியாகவோ மொழிபெயர்ப்பு அல்லது தழுவலாக வெளிவந்துள்ளன. குறிப்பாக, தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இராமாயண கதைதொடர்பான பதிவுகள் கி.பி.10ஆம் நூற்றாண்டு முதலாகப் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதைக் காணலாம்.
தமிழில் இராமகதைத் தொடர்பான குறிப்புகள் அகநானூறு (70), புறநானூறு (378) ஆகிய சங்கப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் இராமகதையை உலகம் போற்றும் வகையில் ஒப்பற்ற காவியமாகப் படைத்துள்ளார் எனில், அது மிகையாகாது. தென்னிந்திய மொழிகளில் இராமகதைக்கு இணையாக எதையும் கூறமுடியாது. ‘கம்பரின் இராமாயணம் வால்மீகி இராமாயணத்தையே மிஞ்சி நிற்கும் பெருமையினை உடையது’ என்றுரைக்கிறார் வ.வே.சு.ஐயர்.
‘வில்லிசை இராமாயணம்’ நூல் பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம்வரையான ஆறு காண்டங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் பாமர மக்கள் எளிதில் இராமாயணத்தைப் புரிந்துகொள்ளும் வகையில், தனக்கே உரிய நடையில் எளிமையாகவும் இனிமையாகவும் அழகாகவும் வில்லுப்பாடல் வடிவில் இசையோடு எழுதியிருப்பது பாராட்டிற்குரியது. ‘அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்..! ஆனந்த பைரவி பிறந்ததுவோ..! கண்கள் கலந்தன, பண்கள் இசைத்தன..! கல்யாணி இராகம் உதித்ததுவோ..!’ (வில். இரா. ப. 90).
இவ்வரிகள் கம்பனின் கருத்திற்கும் எண்ணத்திற்கும் ஏற்ற வகையில் ஒத்திருப்பதைக் காணலாம்.
கம்பரின் பாடல் வரிகளை, வில்லிசை இராமாயணத்தில், ‘கம்ப நாட்டாழ்வார் தமிழ்’ எனத் தலைப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார் (ப:215). தமிழில் கம்பர் எழுதிய இராமாயணத்தை அனைவராலும் படிக்க இயலாத சூழல் நிலவும் இக்காலகட்டத்தில், ‘வில்லிசை இராமாயணம்’ அனைவராலும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது. ‘இராமகதை’யில் எவ்வித மாறுபாடும் இல்லாமல் மிக அழகான தமிழில் எளிய நடையில் அனைவரும் படித்து இன்புறும் விதத்தில் வில்லிசைப்பாடல் வடிவில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் எழுதியிருப்பது சிறப்புக்குரிய செயலாகும்.
இந்நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இவற்றை எழுதுவதற்கு நூலாசிரியர் கடுமையாக உழைத்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கின்றபோது தெரிய வரும். நூலை நன்றாகப் பதிப்பித்த மயூரா பதிப்பகத்திற்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் – லோ. ஜெயலட்சுமி அவர்களுக்கும் வாழ்த்துகள்
