சுஜா சுயம்பு
சிந்துவெளி, திராவிட நாகரிகத்தின் அடித்தளம் குறித்துத் தெளிவான நேர்கோட்டுப் பதிவுகளை உருவாக்கிய அண்மைக்கால ஆய்வாளர்களுள் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இணையத்தில் தொடர் சொற்பொழிவாக அவர் நிகழ்த்திய உரைகளின் மேம்படுத்தப்பட்ட கட்டுரை வடிவமாக உருப்பெற்ற நன்னூல், பொன்னூலாகிய இந்நூல். ‘ஓர் ஏர் உழவன்’ என்கிற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்நூல் பத்து கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அத்தனை கட்டுரைகளும் சங்கத் தொடர்களைத் தலைப்பாகக்கொண்டு அமைந்துள்ளன. ‘சங்கச் சுரங்கம்’ என்ற தலைப்பில் வெளியான மூன்றாம் நூல் இந்நூல். ‘கடவுள் ஆயினும் ஆகுக’, ‘அணி நடை எருமை’ என்பன பிற இரண்டு நூல்கள்.
தலைவனின் பிரிவைப் பேசும் பாலைப் பாடல்களுள் ‘ஓர் ஏர் உழவன்’ என்ற உவமையை அறியாதார் இல்லை. ஒரு இலக்கியம் பற்றிய புரிதல் உருவாவது அதனை அணுகும் முறைகளின் பின்புலத்தினைச் சேர்ந்தது. சங்க இலக்கியமும் பல்வேறு கோட்பாட்டுப் பின்புலங்களில் உள்வாங்கப்பட்டுத் தொடர் வாசிப்பிற்கும் பகிர்விற்கும் உள்ளாகி வருகிறது. ஒரு ஏரைக்கொண்ட உழவனின் நிலையை எடுத்துக்கூறும் இந்தப் பாடல் சங்கச் சமூகத்தின் வேளாண்மை குறித்துப் பேசுகிறது. பயிர் விளையும் தன்மைக்கு ஏற்ப வன்புலம், மென்புலம், புன்புலம், களர் நிலம் என்கிற நிலப்பாகுபாட்டுச் சொல்லாடல்களை சங்கப்புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாண்டுள்ளனர்.

தொல்சமூகத்தின் வேளாண் அறிவின் தொடக்க நிலை வளர்ச்சியின் அடிப்படை வேர்கள் குறித்த பதிவாக புன்செய் வேளாண்மை குறித்த செய்திகள் அமைகின்றன. மக்களின் உணவு அவர்களது சூழலை மையமிட்டதாக இருக்கும்; பண்பாட்டின் முக்கியமான அலகுகளில் ஒன்றாகவும் இது உள்ளது. தொல்குடி மக்கள் வேளாண்மை செய்த பயிர் மற்றும் நிலத்திற்கு இடையேயான தொடர்பையும் அந்த நிலத்தலைவர்களின் பொருளாதாரப் படிநிலைக்கும் இடையிலான தொடர்பையும் சங்க இலக்கியத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஊர்கள் உருவாக்கத்திற்காகவும் வேளாண் உற்பத்தியின் எல்லைப் பரப்பளவை அதிகரிப்பதற்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன; மேலும் பாசன வசதியை மேம்படுத்துவதற்காகக் குளங்கள் தோண்டப்பட்டன. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைத்தல் என்பது வேளாண்மையைத் தரப்படுத்தல் என்பதாகவே அமைந்தது. அதேபோல கழுதைகள், யானைகள் மூலமாக விளைநிலங்களை, குறிப்பாக நன்செய் நிலங்களைப் பாழ்படுத்தி அவற்றைப் புன்செய்களாக மாற்றுதல், குளங்களைத் தூர்த்தல் முதலான செயல்கள் அரசுருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தன. இவ்வாறாக நிலையான ஆட்சி மற்றும் பொருளாதாரத்திற்கான வழியாக உழவு- வேளாண்மை மேம்பாடு இருந்தது.
ஆதிச் சமூகத்தின் பகிர்தல் மரபு நெறியில், உற்பத்திச் சாதனங்களின் வளர்ச்சி – உபரி நிலை -உடைமையில் ஏற்றத்தாழ்வு ஆகியன இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் உருவாக்கின. அதன் மூலம் இரத்தல் – ஈதல் கருத்தாக்கங்கள் தோன்றி அறம் என்ற கருத்துருவுக்கு அவை வழிஏற்படுத்தின. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நாற்பொருள் இறுதிக்கான கடவு வழியாக நீதி நூல்கள் அறத்தின் பின்னணியில் ஈகையை முன்வைத்தன. அரசியலையும் அரசினையும் நிர்ணயிக்கும் முக்கிய மையமாக உழவு – வேளாண்மை இருந்தது.
புறநானூற்றின் பாடல்களும் திணைகளும் உரையாசிரியர்கள், பல்வேறு ஆய்வாளர்களின் வாசிப்புத் தளத்தில் பொருள் வேறுபட்டு நிற்பது அப்பாடல்களின் படைப்பு நுட்பத்தையும் பன்முகத்தன்மையையும் காட்டுபவையாக இருக்கும். அத்தகைய ஒரு பாடலாக ‘ஈன்று புறம் தருதல்…’ (புறம்.312) என்கிற பொன்முடியார் பாடலை ஆய்வாளர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் வரும் ‘நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிற வரியில் ‘நடை’ ‘ஒழுக்கம்’ என்று பொருள்கொள்ளப்பட்டது. வேந்தன் தன் குடிகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பவனாக இருக்கிறான் என்கிற மரபான பொருளிலிருந்து மாறுபட்ட பொருளை இந்த வரிகளுக்கு ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
நடை என்ற சொல்லுக்கான தமிழ்ப் பேரகராதியின் ‘தொழில்’ என்கிற பொருளை முன்கொண்டு ‘வேந்தன் என்பவன் தொழிலைக் கொடுப்பவன்’ (2022:20) என்கிறார். சங்க இலக்கியத்தில் நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடை என்கிற சொல் இடம்பெற்றுள்ளது.‘நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி’ என்கிற பெரும்பாணாற்றுப் படை வரியில் (பெரும்.198) நடை உழவுத் தொழிலைக் குறிப்பிடுகின்றது (2002:1270). நடை என்ற சொல் செல்வம் என்ற பொருளையும் குறிப்பிடுவதை வரலாற்றுமுறைத் தமிழ்ப் பேரகராதி எடுத்துக்காட்டுவதையும் நாம் கவனத்தில்கொண்டு இச்சொல்லின் பொருள் வரன்முறையை முழுவதையும் பகுத்தே இந்த ஆய்வினை நாம் மேலும் முன்நகர்த்த வேண்டியுள்ளது.
பயிர்த்தொழில் உயிர்க்கொலையை உடையது; உடல் முயற்சி, பிறரை நாடி வாழும் அவசியம் கருதி பிராமண சத்திரியர்கள் அதனைச் செய்யக்கூடாது என்று போதிக்கும் ஆரிய மனுநீதிப் பதிவுகளுக்கும் சங்க இலக்கிய வேளாண்மைப் பதிவுகளுக்கும் இடையிலுள்ள வேற்றுமையின் ஆழத்தைப் பதிவுசெய்யும் கடன் வாங்கிக் கொடை அளித்த பேரரசனைச் சங்க சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்குக் கொண்டுவந்து அந்தச் சுரங்கம் நமக்குக் கற்றுத்தரும் விழுமியங்களை அதனை இன்றைய சமூகம் பற்றிக் கொள்ள வேண்டியதேவையையும் எடுத்துக்காட்டுகிறார் ஆய்வாளர்.
2016ஆம் ஆண்டு ஒடிசா அரசின் குறு தானிய முனைப்புத் திட்டம் மூலம் தொல்குடிகளின் ஆதி உணவாகிய தினை, வரகு, கொள் உள்ளிட்ட தானியங்களை மீட்டெடுத்து உலகளாவிய கவனம் பெற்று 2023ஆம் ஆண்டை அனைத்துலகச் சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடப்படுவதற்கான தனது பங்களிப்பைச் செய்த இவர், பல முன்னோடிச் சிந்தனைகளுக்கு எவ்வாறு செயல்வடிவம் கொடுப்பது என்ற தயக்கம் இல்லாமல் இயங்கி, தமிழருக்கும்தான் சார்ந்து இருக்கும் ஆட்சிப் பணியாளர் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வினைத் தொடர்புகள் அதன் வளங்கள் பல்வேறு வகைகளில் சுரண்டப்படுவதற்குக் காரணமாகவும் அவ்வாறு சுரண்டலுக்கு ஆட்பட்ட இயற்கை தன்னைத்தானே மீட்டு எடுத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இயற்கை மனிதச் சமூகத்தை ஆட்டிவைக்கும் செயல்களாக அரங்கேறியும் வருகின்றன. இதில் நீருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்பதைச் சென்னை நகர் வாழ்வோர் உணர்ந்த தருணம் 2015.
ஒரு மழையின் பின்னே ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அடைக்கப்பட்ட நீர், தனது வழித்தடங்களை மீண்டும், தானே உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்கிறது. நீரோடு நேரடித் தொடர்புடைய ஓதம் என்ற சொல்லைக் கொண்டு வைகை நதி குறித்துப் பேசுகிறது ஒரு கட்டுரை. இடையில் சங்க இலக்கியம், சிலம்பு உள்ளிட்ட நூல்களின் பதிவுகளை ஆராய்ந்து, சிந்துவெளியின் அழிவுக்கு அடிப்படையாக வெள்ளம் விளங்கியதையும் ஆசிரியர் இக்கட்டுரையில் விவரிக்கிறார். வைகை வெள்ளத்தோடு தொடர்புடைய திருவிளையாடல் கதையையும் குறிப்பிடத் தவறவில்லை.
கடற்கழிமுகத்தில் ஏற்படும் ஓதம் குறித்துப் பேசும்போது சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள இலக்கியக் காட்சியின் இற்றைப் பதிவினையும் சுட்டிச் செல்கிறார். கழிச்சுறா எறிந்த புண்தாள் அத்திரி/ நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந்து, அசைஇ’ (அகம். 120). இந்தப் பாடலில் அத்திரி என்கிற காட்டுக் கழுதை/ கோவேறு கழுதையின் காலைச் சுறாக்குஞ்சுகள் கடிக்கும்”காட்சியை நக்கீரனார் பதிவு செய்துள்ளார். குஜராத் பகுதியிலுள்ள கட்ச் பகுதியில் இந்தக் காட்சியைக் காண இயலும் என்கிற ஆய்வாளரின் பதிவு (2022:55) இலக்கியத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்தி ஆய்வு செய்யவேண்டியதன் தேவையையும் இத்தகைய ஆய்வுகள் நமது செவ்விலக்கியங்களின் தொன்மையையும், மேன்மையையும் உலக இலக்கிய வெளியில் மேலும் அதன் தடத்தை விளங்கச் செய்வதாகவும் அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.
சங்க இலக்கிய உவமைகளின் துல்லியத்தை அதனைப் பயின்றவர்களால் உணர முடியும். ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் சங்கப் புலமையினை ‘பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்’ உவமை மேற்கோளும் காட்டுகிறது (2022:34). சில சங்க இலக்கிய உவமைகளையும் எடுத்துரைப்புகளையும் மிகைக் கற்பனை என்று மிக எளிமையாக நாம் கடந்து விடுவோம். ஆனால் அது தவறு என்று இவரது பதிவுகள் சில காட்டுகின்றன. ‘பொன்படு நெடுவரை’யை (அகம்.398) நான் அப்படித்தான் பார்க்கிறேன் [‘இமய மலை இருக்கும் தௌலா என்ற பழங்குடி மக்கள் ஆற்றில் அமர்ந்து அதில் வரும் சிறிய அளவிலான தங்கத்தினை எடுத்துத் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பயன்படுத்துகின்றனர்’ (2022;71)].
தமிழரையும் தமிழர் இசை மரபையும் தமிழரின் ஆரிய எதிர்ப்பு வாதத்தையும் ஒரே இடத்தில் காண முடியும் என்றால் அது சங்க இலக்கியம்தான். அதற்குக் கட்டியம் கூறும் வரிகளில் ஒன்று, ‘ஆரியர் கயிறாடு பறை’. தமிழின வரலாற்றில் மிகவும் பொறுப்புடனும் கவனத்துடனும் ஆய்வு செய்யவேண்டிய இடங்களுள் ஒன்றாக ஆரியர் குறித்த பகுதியைக் குறிப்பிட வேண்டும். தமிழர்களின் மனதிற்குள் இயங்கும் கூட்டு உளவியலில் வடதிசை – தென்திசைத் தமிழர் கருத்தியலோடு முரண்படும் உரையாடலை நிகழ்த்தியதாகச் சங்க இலக்கியத்தை முன்மொழிகிறார். ‘ஆரியர் கயிறாடு பறை‘ இந்த மூன்று சொற்களின் புழங்குவெளி அவை உணர்த்தும் பொருண்மை எல்லைகளை விரிவாக ஆய்வு செய்து ஒரு தொழிலும் கருவியும் சமகாலப் பண்பாட்டுத் தளத்தில் பெற்ற மாற்றத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரியர்கள் என்று குறிக்கப்பட்டவர்கள் யார்? ஆரியர்களைத் தனிப்பட்ட ஓர் இனமாகக் காட்ட இயலுமா? அல்லது வேறுபட்ட மொழி அடையாளம் கொண்டவர்களை ஒட்டுமொத்தமாக இச்சொல் குறிப்பிட்டதா? என இச்சொல் குறித்த பல கேள்விகள் தமிழ் ஆய்வுப் பரப்பில் வியாபித்துள்ளது. சங்க இலக்கியத்தில் இதற்குச் சில விடைகள் உள்ளன. ஆரியர் என்கிற சொல் சங்க இலக்கியத்தில் 7 இடங்களில் பதிவாகியுள்ளது. தவிர வடவர், வடபுலம், வடமொழி குறித்த பதிவுகளும் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்களிலோ, திருக்குறளிலோ இச்சொல் இடம்பெறவில்லை. சிலப்பதிகாரத்தில் 17 இடங்களிலும் தேம்பாவணியில் 14 இடங்களிலும் இது இடம்பெற்றுள்ளது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் இணக்கமான தொனியில் ஆரியர் என்ற சொல்லைத் தமிழ்ப் புலவர்கள் பதிவு செய்யவில்லை என்ற அவரது பதிவு மிக முக்கியமானது.
ஓர் இலக்கியத்துள் இடம்பெறுகின்ற சொல்லுக்கும் அதனைப் படைத்த புலவனுக்கும் அதனை உள்வாங்குகின்ற புலமைச் சமூகத்திற்கும் இடையே தனிப்பட்ட காரண – காரியத் தொடர்பு இருக்கும். சிலப்பதிகாரத்தினைத் தமிழரின் அடையாள மீட்புக் காப்பியமாக அடையாளப்படுத்தும் தமிழர்களுக்கு இடையில் அதன் பகுதிகளைப் படைத்தவர், அதன் காலம் பற்றிய மாற்றுக் கருத்தினை முன்வைப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்படலாம். சிலம்பின் வஞ்சிக் காண்டம் பிற்சேர்க்கையாக இருக்கவேண்டும் என்கிற கருதுகோளை முன்வைத்தவர்களின் வரிசையில் அக்கருத்துக்கு அரண் செய்யும் கருத்தாக இதனைக் கூறலாம்.
சிலம்பில் இச்சொல் இடம்பெற்றுள்ள 17 இடங்களில் மதுரைக் காண்டத்தில் (சிலம்பு.23:216) ஓர் இடத்திலும் வஞ்சிக் காண்டத்தில் 16 இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. கனக விசையரின் முடியிலேற்றிக் கண்ணகிக்குக் கல் எடுத்தவனாகச் சேரன் குறிப்பிடப்படுவதால் ஆரியர் குறித்துப் பேசுவதற்குத் தகுதியான இடமாக வஞ்சிக்கண்டமே திகழும் என்ற மாற்றுக் கருத்தை முன்வைப்போருக்கு, ஆரிய எதிர்ப்பு வாதத்தை முள்ளூர் மலையன் என்ற குறுநில மன்னனோடும் (நற்.170) வல்லத்தில் சோழர் படைக்குத் தோற்றோடிய ஆரியப் படையையும் (அகம்.336) சோழன் நலங்கிள்ளியின் படையெடுப்பைக் கேள்வியுற்று நடுக்குற்ற வடவர் (புறம்.31) பற்றியும் வடவர் வாடும்படியான வெற்றிச் சிறப்பையுடைய திருமாவளவனையும் (பட்.276-277) கொண்ட சங்கப் புலவர்களின் பதிவுகளின் பின்னணியில் சிலம்பின் புகார்க்காண்டம் ஆரியரைப் பற்றிக் குறித்திருக்கவேண்டும் என்கிற விடையை அளிக்கலாம். ஆனால் அத்தகைய பதிவுகள் அதில் இல்லை. எனின் வஞ்சிக்காண்டம் பிற்சேர்க்கையாகலாம் எனலாம். குறைந்தபட்சம் கடைச்சங்க இலக்கியங்களோடு ஒப்ப வைத்து எண்ணத்தக்க சிலம்பு இந்த நிலையில் சங்கச் செய்யுட்களை ஒத்திராதது ஏன் என்ற கேள்வியையேனும் முன்வைக்கலாம்.
தமிழ்ப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் கடுமையாக எதிர்க்கப்பட்ட இந்த இனம் தமிழரின் ஊர்ப் பெயரிலும் வேரூன்றி இருக்கிறது. தேம்பாவணியின் பாயிரப்பாடலில் இடம்பெற்றுள்ள ஆரியனூர் தொடங்கி ஆரியம்பாக்கம், ஆரியபெரும்பாக்கம், ஆரியபாளையம், ஆரியகவுண்டனூர், ஆரியலூர், ஆரியபடைவீடு, ஆரியப்பட்டி, ஆரியநத்தம் என்ற இந்த நீண்ட பட்டியலில் உள்ள ஊர்களின் பழைய பெயர்களைக் குறித்த ஆய்வின் தேவையை ஆய்வாளர் எடுத்துக்காட்டுகிறார்.
இனவாதப் பேச்சுகளால் இந்தியவியல் ஆய்வுப் புலத்தில் தமிழ்நாட்டு அடையாளங்களை மறைப்பதற்கான – அழிப்பதற்கான வேலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. ‘தவங்கள், வரங்கள், சாபங்கள் மற்றும் வதங்களால் கட்டி எழுப்பப்பட்ட ஆகாசக் கோட்டைகள் ‘அறிவியல் உண்மை’ போலப் பேசப்படுவதும், வசதிப்பட்டு வராத தடயங்களை வரவு வைத்துக்கொள்ளாமல் கடந்து போவதும் இதில் காணப்படும் பழகிப்போன ஓர் அணுகுமுறை’ (2022:69). ஆரியர், ஆரிய எதிர்ப்பு வாதங்களை மையப்படுத்தும் அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை முதலான தொல் இலக்கியப் பதிவுகளை எடுத்துக்காட்டி வடதிசை – இமயம் – ஆரியர் – தமிழரசர் பகை என்ற தோற்றத் தெளிவுடைய சித்திரத்தை இவர் பதிவு செய்கிறார். நிலைதிரிந்த ஆண்ட பரம்பரையினர் (Degraded Khastriyas) என்று தமிழர்களைக் குறிப்பிடும் ஆரியச் செல்லாடல்களையும் ஆரிய மேன்மை வாதத்தின் வறட்டு வாதங்களையும் விவாதங்களையும் சிந்துவெளி – சங்க இலக்கியம் – தமிழகப் பானைக் கீறல்களைக் கொண்டு கட்டுடைக்கிறார். ஐந்திணைப் பறை சாவுப் பறையானது எப்படி என்ற வினாவோடு தமிழ்த் தொன்மங்களின் ஒலியாகப் பறையிசையைப் பார்க்க வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு இருப்பதையும் விளங்கவைக்கிறார்.
‘தமிழின் கடந்த கால அனுபவங்களை மீள் வாசிக்கும்போது செப்பேடுகளையும் மெய்க்கீர்த்திகளையும்விட முக்கியமானது தமிழ் இலக்கியம் இவ்வாறு எதேச்சையாகப் பதிவிடும் வாழ்வியல் உண்மைகளும் கூட்டு உளவியலும்தான். இதை அடையாளம் கண்டு முன்னிறுத்துவதுதான் எனது ஆராய்ச்சியின் மிக முக்கியமான நோக்கமும்கூட’ (2022:76) என்று தன் ஆராய்ச்சியின் நோக்கம் பார்வை குறித்து விளக்கும் ஆய்வாளர் தமிழரின் பழைய பண்பாட்டு மரபின் அடையாளமாக இன்றுவரை தொடர்கின்ற ஏறு தழுவுதல் பற்றி ஒரு கட்டுரையில் பேசுகின்றார். காளையருக்கும் காளைகளுக்குமான உரையாடல்கள் தமிழகத்திற்குப் புதிது அல்ல. அது சங்க காலம் தொடங்கித் தொடர்வது தான். ஆனால் அந்த உரையாடலின் மிகத் தொன்மையான அதற்கு முந்தைய வடிவத்தை, ‘நின்னுகுத்திமாடு’ என்ற மொகஞ்சதாரோ முத்திரையைக்கொண்டு (எண்.422, 2022:90) எடுத்துக்காட்டுகிறார்.
இந்தியப் பண்பாட்டில் ஏறுதழுவுதல் முக்கியமானதொரு செயல்பாடு. இதனைச் சிந்துவெளி வரைந்து வைத்துள்ளது. சங்க இலக்கியம் எழுதி வைத்துள்ளது. இன்றும் இது நேரடி வர்ணனையாகப் பேசப்படுகிறது. இம்மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் வராமல் இந்தியப் பண்பாடு, வரலாறு என்பது முழுமை பெறாது’ (2022:91) என்கிறார். தமிழர் ‘பண்பாட்டு அசைவின் தொடர்ச்சியாகிய ஜல்லிக்கட்டு’ பற்றிய மிக முக்கியமான தனது அவதானத்தை இக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார். ‘மிக நீண்ட தொன்ம மரபு ஒன்று அதன் பின் வந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் பல்வேறு அரசியல் பண்பாட்டுச் சூழல்களில் வழக்கொழிந்து போகாமல் தொடர்ந்து இயங்கி நவீன யுகத்திலும் தமிழ் மக்களின் கூட்டு உணர்வின் எழுச்சியின் குறியீடாகத் திகழ முடியும் என்பதுதான் ஜல்லிக்கட்டின் மிக முக்கியமான சிறப்பும் பண்பும் ஆகும்.’ (2022:104).
நன்றிக்கும் உதவிக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இவர் பதிவு செய்துள்ள இடத்தைக் குறிப்பிட்டேயாக வேண்டும். தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து/ முந்தி யிருப்பச் செயல் (குறள்.67) என்று வள்ளுவர், தந்தைக்கு ஏன் நன்றி என்ற சொல்லைப் பயன்படுத்தவேண்டும்? என்பதற்கு, பெற்றவர்தானே நன்றியுடன் இருக்க வேண்டும் (2022:125) என்கிறார்.
தமிழரின் எழுத்து வரலாற்றை நடுகல் பதிவுகள் மூலம் தொடங்குகிறார். காரணம் எழுத்து பற்றிய குறிப்புகள் அதனோடுதான் தொடர்பு கொண்டுள்ளன. தமிழி எழுத்துக்கள் பானை ஓடுகள், மோதிரங்கள் உள்ளிட்ட மட்பாண்டங்கள், பிற தொழில்களோடு தொடர்புடையனவாக இன்று நமக்குக் கிடைக்கின்றன. ‘கூர் உளி குயின்ற கோடு’ என்ற கட்டுரை தமிழர்களின் எழுத்துருவம்/ வரிவடிவம் குறித்த பிற பதிவுகளின் வழியே கல்விப் பின்புலத்தையும் எழுத்தறிவின் பரவலாக்கத்தையும் முன்னிறுத்தி ஆராயும் முயற்சியில் எழுதப்பட்டுள்ளது. தொய்யில், எழுத்தின மண்டபங்கள் முதலான பதிவுகளின் வழி அதனை எடுத்துரைக்கிறார். ஆவணமாக்கள், எழுதாக் கிளவிகள், குறியீட்டெழுத்துக்கள் இலக்கண நூல்களில் எழுத்துக்களின் தோற்றங்கள், எழுத்து வகைமைகள் (2022:46) குறித்த பதிவுகளின்வழி தமிழர்களின் தனித்த, மொழி/ எழுத்தறிவுச் சிந்தனைகளை எடுத்துரைக்கிறார்.
தாய்த் தெய்வ வழிபாடு பற்றிய கட்டுரை ‘ஓங்கு புகழ் கானமர் செல்வி’ கட்டுரை. சிந்துவெளிப் பண்பாடு தொடங்கி உலக அளவில் அதன் இருப்பினைப் பதிவுசெய்கிறார். ‘வைகனாசா ஆகமம்’, ‘விஷ்ணு புராணம்’ பாணா எழுதிய ‘ஹர்ஷ சரிதம்’ ஆகிய நூல்கள் குறிப்பிடும் விந்தியாவாசினி (விந்திய மலையில் காணப்பட்ட பழைமையான தாய்த்தெய்வம் விநிதியாவாசினி.) என்ற விந்தியத் தாய்த்தெய்வம் ஆரியருடையதல்ல.
‘மிகத் தொன்மையான காலத்திலேயே தாய்த்தெய்வ வழிபாடு அதற்கு முந்தையப் பண்பாட்டிலிருந்து ஆரிய வழிபாட்டில் சேர்கிறது’ (2022:165).‘சிந்துவெளி முதல் தமிழகம்வரை பல்வேறு இடங்களில் ஏழு என்பது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அனால்தான் நான் சங்க இலக்கியம் ஒரு மீள் நினைவினை எடுத்துரைக்கும் இலக்கியம் என்று குறிப்பிடுகிறேன்.’ (2022:167) முதலான மிகப்பெரிய தேடலையும் விரிவான ஆய்வுக்களங்களையும் வேண்டிநிற்கும் களங்களையும் தன்னுடைய ஆய்வில் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.
ஏழிற்குன்றம் – கான் அமர் நன்னனை கான்அமர் செல்வியோடு ஓர் இடத்தில் தொடர்புபடுத்திப் பேசியுள்ளார் (2022:155). அகநானூற்றின் (அகம்.392) இந்தப் பாடலை இப்படிக்கூட வாசிக்க முடியுமா என்கிற வியப்பு மேலிடுகிறது. இந்தக் கட்டுரையில் சங்கப் பாடல்களை எவ்வாறு மற்ற பகுதிகளோடு தொடர்புபடுத்தி ஆய்வுசெய்வது என்று தனக்கேயுரித்தான அசலான ஆய்வுப் பார்வையை உருவாக்கிக் காட்டியிருப்பது உள்ளபடியே சிறப்பு. பொதுக்காரியங்கள், அரசியல் முதலியவற்றோடு தொடர்பில்லாதவர்களாகப் பெண்களைக் கட்டமைக்கும் பிற இந்தியப் பண்பாட்டு மரபுகளிலிருந்து வேறுபடும் தமிழ் மரபை ‘அரசு முறை செய்க’ கட்டுரையில் சுட்டிச் செல்கிறார் (2022:191).
கிழவன் என்ற சொல்லின் சங்க இலக்கிய வருகை பற்றிக் குறிப்பிடும் பகுதிகளில் ஆய்வாளர் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிழவன் என்ற சொல்லின் வரன்முறை குறித்த சங்கச் சொல்லடைவுகளின் தொகை இவரது குறிப்பிலிருந்து வேறுபடுகிறது. கிழக, கிழவர், கிழவரின், கிழவரை, கிழவன், கிழவனை எனச் சங்க இலக்கியத்தில் பரவலாக இச்சொல் இடம்பெற்றுள்ளது. இச்சொல்லின் வருகை பற்றி 5+3+12=20 என்றவாறு குறிக்கிறார். ஆனால் 28 இடங்களில் சங்கத் தொகைகளுள் இச்சொல் பயின்றுவந்துள்ளது (பார்க்க: A Word Index for Cankam Literature by Thomas Lehman and Thomas Malten, 1993).
ஆய்வாளர் சில இடங்களில் மின்காட்சித் திரைப்படங்கள் (Power Point images) பற்றிக் கட்டுரைக்குள் விளக்கவில்லை. படத்தின் வாசிப்புத் திறன் (Readability) அந்தப் பகுதியில் குறைவாக உள்ளதால் கருத்துத் தொடர்ச்சியின் இழையைப் பற்றுவது சற்று கடினமாக உள்ளது. சான்றாக, தமிழ் – ஆரிய பெருமைவாதத்தின் தொடர்ச்சியைப் பற்றி பேசும் பகுதியைச் சுட்டலாம் (2022:85). இணையவழியில் பேசப்பட்ட உரையின் எழுத்து வடிவம் என்பதால் இது நிகழ்ந்திருக்கலாம். இனி வரும் பதிப்புகளில் பதிப்பாளர் இதனைத் தவிர்ப்பது ஆய்வாளர்களுக்கு நலம் தரும்.
ஒரு தலைப்பினைச் சமகால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தித் தேர்ந்து, சங்க இலக்கியம் என்ற சட்டத்தில் அதனைப் பொருத்தி, பிற இலக்கியப் பதிவுகளையும்கொண்டு ஆய்வது இவரது ஆய்வு நெறி. ஓர் இனத்தின் பண்பாட்டு மரபு குறித்த ஆய்வு முழுமை பெற வேண்டுமானால் இலக்கியம் – அகழாய்வு முடிவுகள்/ அறிக்கைகள் – அதன் தற்கால நிலை ஆகியன தொடர்புபடுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை இவரது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. சிந்துவெளி ஆய்வில் சங்க இலக்கியத் தொல்லியல் பதிவுகளின் முக்கியத்துவத்தைக் கவனப்படுத்தும் இவரது ஆய்வுகள் தமிழ்ப் பண்பாட்டின் வேர்கள் பரவிய தடங்களை அறிந்து தமிழரை இந்திய – உலக அரங்கில் தலை நிமிர்த்தும்.