அ.மார்க்ஸ்
திருச்செல்வம் தேவதாஸ் எனும் முழுப் பெயர் உடைய நம் அன்புத் தோழர் தேவா தன் எழுவதாவது வயதில் இன்று நம்மிடமிருந்து இறுதி விடைபெற்றுவிட்டார். அவர் நினைவாக நமக்கு இன்று ‘குழந்தைப் போராளி’, ‘அனானிமா’, ‘நீண்ட காத்திருப்பு’, ‘என் பெயர் விக்டோரியா’, ‘கொள்ளை அரசியல் – பதினோராம் நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்’ எனும் மிக முக்கியமான பிறமொழிப் படைப்புகளை அவர் தமிழாக்கி நமக்கு விட்டுச் சென்றுள்ளார். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், எல்லாவற்றிற்கும் மேலான ஒரு மனித நேயர் என்கிற அடையாளங்களுடன் இன்று அவர் நம் மனதில் வாழ்கிறார்.

ஷோபா சக்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்ட, ‘அவர்கள் என் அம்மாவைப் பறித்துக்கொண்டு துப்பாக்கியைத் தந்தார்கள்’ (சைனா கெய்றெற்சியின் ‘குழந்தைப் போராளி’) எனும் படைப்பு தேவாவின் முக்கிய மொழியாக்கங்களில் ஒன்று. நமக்குத் தெரிந்து பழம் வரலாறுகளில்கூடச் சில புராண வரலாறுகள் தவிர, குழந்தைகளைப் பெரிய அளவில் போர்க்களத்திற்குப் பலி கொடுத்ததில்லை. ஆனால், இன்றைய போர்களில், அதுவும் தாயகத்தைக் காப்பாற்றுதல், தேசபக்தி, நாட்டு விடுதலை, புரட்சி என்றெல்லாம் பெயர்சூட்டி இன்று பச்சைக் குழந்தைகளைத் துப்பாக்கி ஏந்தச் சொல்லிப் பலி கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். போர்கள் பொதுவாகவே வரலாறு முழுவதும் பல்வேறு அநீதிகளுக்கும் இருப்பிடமாகவே இருந்து வந்துள்ளன, இருக்கின்றன, இருக்கவும் போகின்றன. ஆனால், இன்று அவற்றைச் சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டியிருக்கிறது. துரோகிப் பட்டத்தைச் சுமக்க நேரிடும் என்கிற அச்சம் நம்மை அதைக் கண்டிப்பதிலிருந்து தடுக்கிறது.
இப்படியான ஒரு சூழற் பின்னணியில்தான் இப்படி தேசத்தைக் காப்பாற்றுதல்’ எனும் பெயரில் எப்படி ஆப்ரிக்கக் குழந்தைகள் பலியிடப்பட்டனர் என்பதைச் சொல்லும் ஒரு முக்கியமான நூலான ‘சைனா கெய்றெற்சி’யின், ‘குழந்தைப் போராளி’ எனும் நூலை தேவா தமிழில் தந்தார். இவ்வாறு ஈழப் போராட்டத்திலும் இந்த அநீதிக்கு இடம் இருந்தது என்பதைச் சிந்திக்க வைத்த ஒரு அற்புதமான நூல்தான் தேவாவின் ‘குழந்தைப் போராளி’.
ஈழப்போராட்டத்திலும் இதுதான் நடந்தது என்பதை இப்படிச் சொல்லாமல் சொல்லியது இந்த நூல். ஏழு முதல் பத்து வயதுக் குழந்தைகளுக்குப் போர் குறித்தும், அதன் நியாயங்கள் மற்றும் கொடூரங்கள் குறித்தும் என்ன தெரியும்? போர் என்பது சங்க இலக்கியங்கள் புகழ் பாடுவதைப்போல அவை வீரத்தின் அடையாளம் மட்டுமல்ல; அவை கொடும் கொடுமைகளின் அடையாளமும்கூட. நம் மீதான வேறொரு அநீதியை முன்வைத்து நாம் நமது நீதி மறுப்புகள் எதையும் நியாயப்படுத்திவிட இயலாது.
தேவாவின் படைப்புகளாக இன்று நம்மிடையே எஞ்சியுள்ள இந்த நூல்கள் எல்லாமே மொழியாக்கங்கள்தான். ராணுவம் என்பதும், போர் என்பதும் எப்போதுமே கொடூரமானவைதான். அவை அனைத்தும் நீதியை நிலைநாட்டுவது எனும் பெயரில் அநீதிகளை அவிழ்த்துவிட்டவைதான். வீரம், தியாகம், மொழிப்பற்று, தேசப்பற்று என எதைச் சொல்லியும் போர்களை நாம் நியாயப்படுத்திவிட இயலாது. போரில் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் மக்கள்தான். அதிலும் அடித்தள மக்கள்தான் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். பயன் அடைபவர்கள் அதிகாரங்களில் உள்ளவர்கள்தான்.
இப்படியான நிலையில் விடுதலைப் புலிகளிடம் சிறைப்பட்டு எட்டு ஆண்டுகள் அவர்களின் சிறைகளில் கைதியாக இருக்க நேர்ந்த ‘கொமொடொர் அஜித் போயகொட’ என்கிற இலங்கைக் கடற்படைக் கமாண்டரின் இந்த அவரது அனுபவம் குறித்த ‘நீண்ட காத்திருப்பு’ நூல் மிகவும் முக்கியமான ஒன்று.
தேவா இதனையும் தன் மொழியாக்கப் பணியில் தேர்வு செய்ததும் குறிப்பிடத்தக்க ஒன்று. அஜித்தும் ஒரு சிங்கள ராணுவ அதிகாரியாக இருந்து விடுதலைப் புலிகளிடம் சிறைப்பட்டவர்தான். அந்த எட்டாண்டுகாலச் சிறை வாழ்க்கை அவரிடம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை விளைவித்துள்ளதை இந்த அவரது சுய அனுபவப் பதிவின் ஊடாக நாம் புரிந்துகொள்கிறோம்.
போராளி, அவன் எத்தனை புரட்சிகரமானவனாக இருந்தபோதிலும் போர்க்களத்தில் கொடூரமானவனாகவே இருக்க முடியும் எனச் சற்றுமுன் சொன்ன நான் இப்போது அதற்கு மாறாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம். தனது எட்டாண்டுகாலச் சிறைவாசமோ, இல்லை விடுதலைப்புலிகள் இறுதிவரை அவரைக் கொல்லாமல் சிறை வைத்திருந்ததன் விளைவோ… எப்படியோ அவர் அன்று இப்படி மோதிக் கொண்டிருந்த இரு இனங்களுக்கும் இடையில் ஒரு காலத்தில் இருந்த நல்லுறவை நினைத்துப் பார்க்கிறார். காலாட்படை வாழ்வைக் காட்டிலும் கப்பற்படை வாழ்க்கை வேறுபடும் புள்ளிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே இப்போது உருவாகியுள்ள வெறுப்பைக் காட்டிலும் நட்பும் நல்லுறவும் மிக்க ஒரு காலத்தை நினைவுகூர்கிறார். வெற்றிகொண்ட பகுதிகளில் ராணுவங்கள் மேற்கொள்ளும் அநீதிகள் எவ்வாறு நிரந்தரப் பகைக்கும், வெறுப்புக்கும் காரணமாகி என்றென்றும் இருசாரருக்கும் தீங்காக அமையும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகவும் இது அமைகிறது.
சிறைச்சாலைக் கொடுமைகள் கொடூரமானவைதான். எனினும் விதிவிலக்குகள் இருக்கமுடியும். எல்லோரிடமும் இயல்பில் மனிதாபிமானம் குடியிருக்கும்; இன, மத, மொழி வெறிகள்தான் பேயாட்டம் ஆடி மக்களை இந்த அடையாளங்களின் ஊடாகப் பிரித்து நிறுத்துகிறது என்பதையெல்லாம் ஒரு கணம் நமக்குள் உணர்த்தும் ஒரு முக்கியமான நூல் இது. இதனைத் தேடி எடுத்து மொழிபெயர்த்துள்ளதற்காக நாம் தேவாவை எத்தனை பாராட்டினாலும் தகும். எல்லோரும் மனிதர்கள்தான். போர், இன, மத, மொழி வெறுப்புகள் ஆகியனவே நம்மை எதிர் எதிராய் நிறுத்தி வேடிக்கை பார்க்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
என்ன இருந்தாலும் ராணுவம் ராணுவம்தான்; மனிதர்கள் அப்பாவிகள்தான். அந்த வகையில் அவர் சிங்கள, தமிழ் ராணுவம் ஆகியவற்றை அணுகும் முறையும் நம்மிடையே நல்லுணர்வையும் மனித நேயத்தையும் முளைவிடச் செய்வதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மனமும் உடலும் எத்தகைய சங்கடங்களுடனும், துன்பங்களுடனும் விரைவில் அனுசரித்துப் போய்விடும் என்பதும் இதனூடாக வெளிப்படுகின்றன. இந்த நூலுக்கு ஒரு அருமையான விமர்சனத்தைப் பதிந்துள்ள நண்பர் சங்கர்ராம சுப்பிரமணியன், “(ஒருவரின்) உண்மையான வீரம் அவர் அனுசரிக்கும் சத்திய உணர்வு, தார்மீகம் ஆகியவற்றைக்கொண்டு மதிப்பிடப்பட வேண்டும்”– எனக் கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
தேவாவால் மொழியாக்கப்பட்டுள்ள இன்னொரு நூல் விஜயசூரியாவின் ‘அம்பரய’. ஓர் எளிய இளம் மீனவனின் வாழ்வைச் சித்தரிக்கும் அழகிய நாவல் இது. பெற்றோரை இழந்த பதின் பருவ இளைஞன் ஒருவனின் கனவுகளையும் அவன் சந்திக்கும் எதார்த்தங்களையும் சொல்லும் இன்னொரு அழகிய படைப்பு இது. பெற்றோர் இல்லை. ஆனால், திருமணம் ஆகாத இரு சகோதரிகள், வயதான பாட்டி இவர்களைச் சுமக்க நேர்ந்த ஓர் அப்பாவி இளஞனின் இந்த வரலாறு நமது இரக்கம் சார்ந்த நல்லுறவை மீட்டுகிறது.. அவன் ஒரு மீனவன்.
மழை பெய்தால் நனையாமல் இருக்க முடியாத ஒரு சார்ப்பு ஒன்றில் வாழும் அக் குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் தொழிலாளி ‘அம்பரய’ என எல்லோராலும் அழைக்கப்படும் அந்த இளைஞன் மட்டுமே. மீனவனான அவனுக்கு ஒரு நல்ல மீன்பிடி வலைகூடக் கிடையாது. அவ்வப்போது கிழியும் அந்த வலையை அவன் பாட்டிதான் தைத்துக் கொடுப்பாள். ஆனாலும் அவனுக்கு ஒரு மழை பெய்தால் ஒழுகாத நல்ல வீடு கட்ட வேண்டும், தங்கைகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்விக்க வேண்டும் எனும் கனவுகள் உண்டு. வருமானம் போதாத நிலையில் ஒருமுறை சாராயம் கடத்தும் வேலையில் ஈடுபட்டபோது பிடிபட்டு சிறையிலும் கிடக்க நேர்கிறது. இருந்தாலும் ஒரு மழை பெய்தால் ஒழுகாத நல்ல வீடு, தன் அன்புச் சகோதரிகளுக்குத் திருமணம் இந்தக் கனவுதான் அவனுக்கு.
ஒரு சிறைக் காவலர் அவனிடம் இதை எல்லாம் எப்படிச் செய்யப்போகிறாய் எனக் கேட்பதும், அதற்கு அவன் நம்பிக்கையோடு பதில் அளிப்பதையும் படித்தபோது இப்படியான பதிவுகளை வாசிக்கும்போது எளிதில் கண்ணீர் விடும் எனக்கு அப்போதும் கண்களில் நீர் கசிந்தது. கருணை உள்ளவர்கள் எங்கும் உள்ளார்கள்தானே. ஓர் இரக்கமுள்ள அதிகாரியின் பரிந்துரையால் அவனுக்கு ஒரு துண்டு நிலம் கிடைக்கிறது. கடின உழைப்பின் ஊடாக ஒழுகாத வீடு ஒன்றை அவனால் கட்டவும் முடிகிறது. அவனது பாட்டி முந்திய அவனது வீட்டைக் காட்டிலும் ஈர்ப்புடையதாக ஆக்குகிறாள். இந்தப் படைப்பு குறித்த ஏ.காயத்ரியின் சுருக்கமான விமர்சனம் ஒன்றை இணையத்தில் காணலாம்.

பெர்லின் போரின்போது ஒரு பெண்ணின் நாட்குறிப்புப் பதிவுகளாக வெளிவந்த ஒரு பெண்ணின் பதிவான ‘அனோனிமா’ (முகம் மறைத்தவள் எனப் பொருள்) எனும் உண்மைப் பதிவு சற்றுப் பெரிய முக்கிய நூல். அதை மீண்டும் ஒருமுறை முழுமையாகப் படித்து விரிவாக எழுத வேண்டும்..
தேவாவை முதன்முதலில் நான் சுவிட்சர்லாந்தில்தான் சந்தித்தேன். நான் தங்கி இருந்த தோழரின் வீட்டிற்கு அவர் வந்து என்னைச் சந்தித்த நாள் தொடங்கி எனக்கு ஒரு முப்பது ஆண்டுகளாக அவர் பழக்கம். ஈழப்போரை ஒட்டி இவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்ந்த பலர்களில் ஒருவராக இருந்தபோதும் இறுதியில் அந்த ஐரோப்பிய நாட்டுச் சுகங்களைக் காட்டிலும் சொந்த ஊரில் வாழ்வதே அவருக்குப் பிடித்திருந்தது. ஒருமுறை நானும் என் மனைவியும் இலங்கையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தோம். ஈழப் போர் முடிந்த தருணம் அது. முள்ளிவாய்க்கால் முதலான பல இடங்களுக்கும் எங்களை அவர் அழைத்துச்சென்ற நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
அடுத்த சில ஆண்டுகளில் நான் இன்னொருமுறை இலங்கை சென்றபோது அவர் ‘கொள்ளை அரசியல் – பதினோராம் நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்’ எனும் ஜார்ஜ் ஸ்பென்சரின் (George W Spencer) சோழர் காலம் குறித்த முக்கிய விரிவான வரலாற்றுக் கட்டுரையை மொழிபெயர்த்திருந்தார்.
“தமிழ் வெகுசன வரலாற்றுணர்வு என்பது தமிழ் இனவுணர்வின் தோற்றத்தோடு உருவான வரலாற்று நாவலாசிரியர்களால் தமிழ்ப் பெருமிதங்களையும் வெற்றிகளையும் மையப்படுத்திப் பெரும்பாலும் கட்டியெழுப்பப்பட்டது. இதனடிப்படையில் பிற்காலச் சோழப் பேரரசானது கேள்விக்கிடமற்ற பெருமித வரலாற்றுக் காலமாக தமிழ் மனத்தில் படியவைக்கப்பட்டுள்ளது. அப் பேரரசால் வீழ்த்தப்பட்ட நாடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு அப்பேரரசு எவ்வாறாக இருந்தது என்பது பற்றிய அக்கறையை அது புறமொதுக்கிக்கொண்டது.
தமிழ் வெகுசன மனதில் பெருமிதத்தின் காலமாக மாற்றப்பட்டுள்ள பிற்காலச் சோழப் பேரரசர்களின் வெற்றிப்புகழ் மாலைகளுக்கு அப்பால் சோழ அரசர்களின் படையெடுப்புகளுக்கு உள்ளான சிங்களத் தீவான ஈழத்தின் பதிவுகளிலிருந்து அக்காலத்தின் வரலாற்றை ஆராய்கிற” – நூல் இது என இந்தத் தன் மொழியாக்கம் குறித்து தேவாவின் முன்னுரை நமக்கு இக் கட்டுரையை அறிமுகப்படுத்துகிறது.
தமிழர்களின் மகத்தான சாதனை என இன்று ராஜராஜ சோழன் முதலானோரின் ‘பெருமைகள்’ பேசப்படும் நிலையில் அந்தப் போர்கள் எப்படி இன்னொருபக்கம் பெரும் கொள்ளைகளாகவும் கொடூரங்களாகவும் இருந்தன என்பதைச் சொல்லும் ஒரு மிக முக்கிய ஆய்வு அது. இன்று ராஜராஜ சோழனின் புகழ் பாடும் அபத்தங்கள் திரைப்படங்களாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு நம் சிந்தனைகளை மழுங்கடிக்கின்றன என்பதைத் தோலுரிக்கும் மிகச் சிறந்த விரிவான கட்டுரை அது.
இரண்டாண்டுகளுக்குமுன் தேவா நோய்வாய்ப்பட்டபின் அவரை நான் சந்திக்க இயலவில்லை. அவரது இரு மூத்திரக் காய்களும் செயலற்றுப்போன தகவலை நண்பர்கள் அறிவித்திருந்தனர். வரும் மே மாதம் இலங்கையில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் என நான் திட்டமிட்டிருந்த தருணத்தில் அவர் இறந்த செய்தி வந்தது. என்றென்றும் மனதில் நிற்கும் இனிய நண்பர். பெரிய அளவில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலாத ஒரு மனித நேயர். மொழியாக்கங்களுக்கு என அவர் தேர்வு செய்துள்ள இந்த நூல்களே அவரின் இந்தப் பண்பிற்குச் சான்றுகளாக அமைகின்றன.
மனம் கசியும் அஞ்சலிகள்.
