ஒன்றிய அரசு தனது என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தீவிர காவிப் பிரச்சாரத்திற்காகப் புரட்டிப் போட்டு வருகிறது. மகாத்மா காந்தி கொலை செய்யப்படவில்லை என்பதில் இருந்து 2002 குஜராத் கலவரங்கள் நடக்கவே இல்லை என 3,000 இசுலாமியர் கொலைகளை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டது. வரும் சந்ததியினர் நம் நாட்டில் எதை அறிய வேண்டும் எப்படிப்பட்ட பிரஜைகளாக வளர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் கல்வியிலிருந்து சார்லஸ் டார்வினின் பரிணாமவியலை நீக்கி தனது சனாதனத்தை திணித்துள்ளது.
பா.ஜ.க.வினரின் காவித்திணிப்பு புதிதல்ல என்றாலும் தற்போது நடப்பது சனாதன-பிற்போக்கு சாதியத் திணிப்பாகவும் தீவிர இந்து ராஷ்டிர மதவெறித் திணிப்பாகவும் உள்ளது. 1961ல் இந்தியக் கல்வியின் புத்தகக் குழுமமான என்.சி.இ.ஆர்.டி. (NCERT) உருவாக்கப்பட்டபோது நாட்டின் ஒற்றுமை, தேசபக்தி, மத-நல்லிணக்கம், அறிவியல் வளர்ச்சி, பகுத்தறிவு போன்றவற்றை வரும் சந்ததிக்கு விதைப்பதை அதன் நோக்கமாக அறிவித்தார்கள். வரலாறு பாடப்புத்தகங்களை எழுதிட தேசிய அளவில் தாராசந்த், நீலகண்டசாஸ்திரி, முகம்மது ஹபீபு, ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளுக்கு ரொமீளா தப்பாரின், ‘முற்கால இந்தியா’, ‘நவீன இந்தியா’ போன்ற நூல்கள் நேரடியாக பாடத்தில் வைக்கப்பட்டன. சத்யேந்திரநாத்போஸ், மெக்னாக் சாகா, விக்ரம் சாராபாய் போன்றவர்களின் வழிகாட்டுதல்படி அறிவியல் பாடநூல்களை பேரா. யஷ்பால், ராஜாராமண்ணா போன்றோர் எழுத முடிந்தது.
2002 முதல் இரண்டே ஆண்டுகள் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் பாரதிய ஜனதா அரசு, வேதக்கணிதம், வேத அறிவியல் எனப்பாடங்களைத் திரித்தது. ஆர்.எஸ்.எஸ்.வாதிகளை பாடப் புத்தக கமிட்டியில் நுழைத்து அப்போதே பாபாசாகிப் அம்பேத்கரை கேவலப்படுத்தும் கேலிச் சித்திரங்களை குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் திணித்தவர்கள். 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு மோடி தலைமையில் காவிக் கல்விக் கொள்கையை வெளியிட்டார்கள். இந்திய வரைபடமே முதலில் அகண்ட பாரத வரைபடமாக பாகிஸ்தானையும், சீனாவையும்கூட உள்ளடக்கி பாடத்தில் வைத்து சர்வதேச கேலிக்கூத்தானார்கள்.
ஔரங்கசீப் பற்றிய பாடத்தை நீக்கி – முகலாயர்களை வரலாற்றில் இருந்தே ‘அழித்தார்கள்.’ மாபெரும் தேசத் தலைவர்கள், இசுலாமியர், தலித்துகள் என்றால் அவர்களுடைய பெயர்களை பாடப்புத்தகத்தில் இருந்தே நீக்கிவிடுவது நடக்கிறது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய பாடம் முற்றிலும் நீக்கப்பட்டது. அய்யங்காலி குறித்த தலித் விடுதலை எழுச்சி நீக்கப்பட்டது உட்பட பல்வேறு காவிக் கொடுமைகள். 1930ல் நேரு மூவர்ணக்கொடி ஏற்றி பூரண சுயராஜ்யத்தை ஜனவரி 26ல் பிரகடனப்படுத்தி அதற்காக ஏழாண்டு சிறை சென்றார். அதனால்தான் பிற்காலத்தில் இந்தியக் குடியரசு பிரகடன தினமாக ஜனவரி 26ஐ ஏற்றது என்கிற வரலாற்று உண்மையைக்கூட நீக்கிவிட்டார்கள்.
அறிவியல் எழுச்சியை முடக்கிட டார்வின் கொள்கையோடு வேதி அட்டவணையும் நீக்கப்பட்டுள்ளது. மனிதனை பிரம்மா வர்ணங்களாக தலையில் பிராமணன் முதல் காலில் சூத்திரன்வரை படைத்தான் என்பதையும் அக்னி குண்டம் வேத பலியிடுதல் என பார்ப்பனிய இந்துமத வெறியாட்டத்தை அடுத்த சந்ததிக்கு விதைக்கும் காவிக்கயமைத்தனத்தைக் கடுமையாக நாம் எதிர்க்கவேண்டும். மனிதநேயம், மதசார்பின்மை, சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை இவற்றைப் பேணிக்காத்து அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்செல்ல கல்வியில் காவிமயமாக்கலை எதிர்த்து களம் இறங்குவோம்.