கமலாலயன்
லண்டன் நகரின் புறநகர்ப்பகுதியான மெய்டென் ஹெட் கிளை நூலகத்துக்கு கடந்த ஆண்டில் ஒரு நாள் போய், வழக்கம்போல் புத்தகங்களில் கவனம் செலுத்தித் தேடிக்கொண்டிருந்தேன். ‘Do the birds still sing in hell?’ என்றொரு புத்தகம் கண்களில் பட்டு கருத்தை ஈர்த்தது. ‘இன்னமும்கூடப் பறவைகள் நரகத்தில் இசைக்கின்றனவா?’ எனப் பொருள்படும் அந்த நூலில் ஒரு தன் வரலாற்றுக்கதை பதிவாகியுள்ளது. அதன் தலைப்பே கவித்துவம் வாய்ந்ததாகத் தோன்றியது. இதேபோல, ‘கானகத்தின் குரல்’ எனப் புகழ் பெற்ற ஜாக் லண்டனின் நாவலை நினைவூட்டும் ஒரு நூலும் கண்ணில் பட்டது.

‘கானகத்தின் குரல்’ நாவலை பெ.தூரனின் மொழிபெயர்ப்பில் பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருந்தேன். நூலகத்தில் அமர்ந்திருந்த அந்தத் தருணத்தில், சமீபத்தில் ஆதிவள்ளியப்பனின் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு நூலின் இரண்டு பகுதிகளும் என் நினைவில் நிழலாடின. ‘காட்டின் குரல் கேட்கிறதா?’ என்பதும், ‘இயற்கையைத் தேடும் கண்கள்’ என்பதுமே அவ்விரு பகுதிகள். இவற்றை எழுதி இருப்பவர் குமரன் சதாசிவம்.
இயற்கையியல், சூழலியல், வரலாற்றியல் ஆகியவற்றில் ஆர்வமிக்கவரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான சு.தியடோர் பாஸ்கரன், ‘இயற்கையைத் தேடும் கண்கள்’ நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். காட்டுயிரியலாளரும், சூழலியல் ஆய்வாளருமான ப.ஜெகநாதன், ‘காட்டின் குரல் கேட்கிறதா?’வுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
புறவுலகின்பால் நமக்கு நாட்டம் ஏற்படுவதென்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில், நாம் புறஉலகைப் பல வழிகளிலும் சார்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நாம் தனித்து வாழ்ந்துவிட முடியாது. ஆனால், இன்றைய நுகர்வுக் கலாச்சார மனநிலையில், பணத்தினால் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிட முடியும் என நம்புகிற ஒரு போக்கு மிகப்பரவலாக நிலவுகிறது.
இயற்கை நமக்குத் தந்திருக்கிற அருங்கொடைகள் ஏராளம். தூய்மையான உயிர்க்காற்று, இதமான சூரிய ஒளிக்கதிர்கள், நீர்வளம் தந்து நிலவளம் காக்கும் மழைப்பொழிவு-இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாயிருக்கிற காட்டுவளங்கள் இப்படியான கொடைகள் பற்றி எவ்விதமான தன்னுணர்வும் அற்றவர்களாக இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில்தான், ஜெகநாதன், குமரன் சதாசிவம் போன்ற இயற்கை – உயிரியல் ஆய்வாளர்கள் மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கி, மக்களுடைய கவனத்தினை இந்தப் பிரச்சனையின்பால் ஈர்ப்பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
‘இயற்கையைக் கூர்ந்து நோக்குவோம்’ என்ற தன் அணிந்துரையில், ஜெகநாதன் ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்: “பார்ப்பதற்கும், கூர்ந்து நோக்குவதற்கும் என்ன வேறுபாடு?” இந்தக் கேள்விக்கு நம்மில் எத்தனை பேரால் சரியான பதிலைக் கூற முடியுமென்பதை ஆராய்ந்தால்தான் தெரியும். சில எடுத்துக்காட்டுகளைக் கூறி, என்ன வேறுபாடு என்பதை விளக்குகிறார் ஜெகநாதன்.
இவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ள ஆதி வள்ளியப்பன், தனது இந்தப் பணிக்கான குறிக்கோளை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்: “தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகளுக்காக வெளியிட்டுவரும் ஆங்கில இதழ் ஆன, ‘ஜந்தர் மந்தர்’ பத்திரிகையில் ‘நேச்சர்ஸ் டயரி’ தொடர் மூலம் காட்டுயிர்களைப் பற்றியும், இயற்கை நிகழ்வுகளையும் அழகுற விவரித்திருந்தார், சென்னை இயற்கையியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த குமரன் சதாசிவம்.
இயற்கை, கானுயிர் அறிவியலை எளிமையாகவும், இனிமையாகவும் சுவாரசியமான விதத்தில் அவர் எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருந்தது; குறிப்பாக, அவரின் எழுத்தில் மெல்லிய நகைச்சுவையும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் அவருடைய கட்டுரைகளை அவ்வப்போது தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்துவந்தேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தமிழில் வெளியிட்டுவரும் துளிரில் அந்தக் கட்டுரைகள் வெளியாகி, வரவேற்பைப் பெற்றன.
இயற்கை, கானுயிர்கள் சார்ந்து நெடியதோர் இயற்கை மரபினைக்கொண்டுள்ள நமது தமிழ் மொழியில் நவீன அறிவியல் பின்னணியில் அவற்றை விளக்கும் புத்தகங்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. இயற்கை அறிவியல் என்பது எந்தக் காலத்திலும் தீர்ந்துவிடாத ஒரு புதையல். காட்டுயிர் சார்ந்த நூல்கள் வண்ணங்களில் வெளியாகவேண்டியது அவசியம். வெறும் அழகுக்காக மட்டுமன்றி, கானுயிர்களை, அவற்றின் பின்னணியை வண்ணத்தில் அறிவது வாசகர்களையும், குழந்தைகளையும் இயற்கை சார்ந்து மேலும் அறியத் தூண்டும். இந்த நோக்கில், குமரன் சதாசிவத்தின் இயற்கை சார்ந்த மேலும் பல கட்டுரைகளை மொழிபெயர்க்குமாறு பதிப்பாளர் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை ஊக்குவித்தார். அவற்றில், பறவைகள், பூச்சிகள், பாலூட்டிகள், கடல்வாழ் உயிரினங்கள், காட்டுநிகழ்வுகள் எனக் காட்டுயிர்களும், காடுகளின் ஆச்சரியங்களும் பதிவாகியிருக்கின்றன…” என்கிறார் ஆதி வள்ளியப்பன்.

இந்த நூல் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது: காட்டுயிர் உலகம், தாவரங்கள், நெடுங்கட்டுரைகள், பொது. இப்பகுதிகளில் மொத்தம்
24 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் சில தலைப்புகள்: ‘யானைகளின் மோப்பம்’, ‘கொத்தாத பாம்பு’, ‘தந்தம் கொண்ட நீர் மூழ்கிக் கப்பல்’, ‘எதற்கும் அஞ்சாத உயிரினங்கள்’, ‘காலம் சொல்லும் இயற்கை’, ‘பனைக்குக் கிளைகள் உண்டா?’, ‘கோயில் ஆமை’, ‘பருந்துகளின் விளையாட்டு’.
ஒவ்வொரு கட்டுரையின் முகப்பிலும் அதற்குத் தொடர்புடைய ஓர் உயிரினத்தின் முழுப்பக்க வண்ணப்படமும், மூன்று பக்கங்களில் அதைப் பற்றிய கட்டுரையுமாக அமைக்கப்பட்டுள்ளது. ‘அஞ்சாத பறவைகள் எங்கிருக்கும்?’, ‘அழகர் கோயிலின் பறவைச் செழிப்பு’, ‘சிறுத்தைகளை எதிர்கொள்ளல்’, காட்டுயிர்களை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும் – இவை நான்கும் சிந்தனைகளைக் கிளறும் நெடுங்கட்டுரைகள்.
காட்டுயிர்களைக் காணப்போகும் நம் ஒவ்வொருவருக்கும் அங்கே ஒரு வேங்கைப் புலியையோ, சிறுத்தையையோ பார்த்துவிட வேண்டுமென்ற விருப்பமிருக்கும். ஆனாலும், பெரும்பாலும் அது நிறைவேறுவதில்லை.
மான்கள், குரங்குகள், குள்ளநரிகள் என இப்படி வழக்கமான விலங்குகளை மட்டும் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புவோம். ஏன் இந்த ஏமாற்றம் என்பதை ஆராய்கிறது முதல் கட்டுரை. வேங்கைப்புலி, சிறுத்தை ஆகிய இரண்டும் உருமறைந்து இருப்பதற்கேற்ற இயற்கையான உடல் அமைப்புக் கொண்டவை என்று சொல்கிற ஆசிரியர், அவற்றிற்கு ஏற்ப இயற்கையான உடல் அமைப்பையும் கொண்டிருக்கின்றன என்கிறார். இந்த உருமறைக்கும் இயல்புதான் இரைகளைத் தேடி மிக அருகே சென்று வேட்டையாடுவதற்கு உதவுகிறது என விளக்குகிறார்.
யானைகளின் மோப்ப ஆற்றலை விளக்கும்போது, அவற்றின் சக யானைகளிடம் இருந்து பிரிந்து வழி தவறிப் போய்விட்டாலும்கூட, பிற யானைகளின் வாசனையை முகர்ந்தே மீண்டும் அவற்றுடன் போய்ச் சேர்ந்து கொள்கின்றன என்பது ஆச்சரியம் தரும் உண்மை. நாய்கள், மீன்களுக்கும் முறையே மோப்ப உணர்ச்சியும், பக்கவாட்டுத் திசையை உணரும் திறனும் இருப்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ஒவ்வோர் உயிரினமும் தனித்தன்மைகொண்ட புலனுணர்வுத் திறன்களால், சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. அப்படி ஓர் உயிரினத்துக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியை மற்றோர் உயிரினத்தால் உணர முடியாது’ என ஓர் உயிரியல் உண்மையைப் போகிற போக்கில் நம் மனதில் பதியவைக்கிறார் குமரன் சதாசிவம்.
‘கொத்தாத பாம்பு’ கட்டுரையிலும் இதேபோல சாரைப்பாம்பு, ஆடு, யானை, சுண்டெலி, எலி, அணில், பல்லி, பச்சோந்தி, பூச்சியுண்ணும் வௌவால், அந்திப்பூச்சி -போன்ற உயிரினங்கள், மனிதர்கள் மிக நெருக்கமாகப்போய் அவற்றைக் கையாள முயலும்போது எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்று பதிவு செய்திருக்கிறார்.
‘தந்தம் கொண்ட நீர்மூழ்கிக்கப்பல்’ கட்டுரையில் காட்டில் நமக்கு நேர் எதிரே காட்டுமாடு, காட்டுப்பன்றி போன்ற பெரிய உயிரினங்கள் வந்துவிட்டால், என்ன நேரும் என்பதைத் தன் சொந்த அனுபவத்திலிருந்தும், ’சீத்தல் வாக்’ நூலில் இயற்கையியலாளர் டேவிதார் எழுதியுள்ள நிகழ்விலிருந்தும் விவரிக்கிறார். பெரிய உயிரினங்களும்கூட நேருக்கு நேர் மனிதர்களை எதிர்கொள்ளும்போது அச்சத்தினால் பின்வாங்கிவிடவும் கூடும்; ஆனால், சின்னஞ்சிறு நச்சுப்பாம்பு தெரியாமல் நாம் அதை மிதித்துவிட்டால்கூட கொத்திவிடும். குளவிக்கூட்டில் இருக்கும் சிறு குளவிகள்கூட, நாம் அவற்றின் கூட்டைக் கலைக்க நேரும்போது மிக உக்கிரமான முறையில் எதிர்வினையாற்றும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘காலம் தோறும் நிகழும் மாறா இயற்கை’ என்ற தலைப்பில் மாதா மாதம் நிகழும் இயற்கை மாற்றங்களைப் பட்டியலிட்டுக் காட்டும் கட்டுரை மிக அழகான ஒரு படப்பிடிப்பு. சரக்கொன்றையின் உருமாற்றம் ஆசிரியரை மட்டும் அன்றி, நம்மையும் வியப்பில் ஆழ்த்திவிடும். அழகர் கோயில் மலைப்பகுதி ஓர் இயற்கைச் சொர்க்கம் என அறியும்போது, நாம் வியப்பின் உச்சியை எட்டிவிடுவோம். ‘நினைவின் ரீங்காரம்’ என்ற அதன் இறுதிப்பத்தியை வாசித்துப் பல நாள்கள் ஆனபின்பும் கடைசி வரிகள் திரும்பத் திரும்ப நினைவில், உணர்வுகளில் ரீங்கரித்துக்கொண்டேயிருக்கின்றன. அந்த வாசிப்பின் ரீங்காரத்தால், இந்த ஒட்டுமொத்த உலகமும் அழகாகத் தோன்றுவதை என்னால் உணர முடிந்தது. இதை வாசித்தபின், நீங்களும் இதை உணருவீர்கள்.
‘காட்டுயிர்களை யாரிடமிருந்து பாதுகாக்க வேண்டும்?’ என்ற இறுதிக் கட்டுரை மிக ஆழமான சிந்தனைகளின் தொகுப்பு. “புவியில் உயிரினங்கள் தோன்றிய வரலாற்றை ஓர் ஆண்டாகச் சுருக்கினால், நாகரிகமடைந்த மனித இனத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே. அப்படிப் பார்த்தால், புதிதாக இந்த உலகத்துக்கு வந்த ஓர் இனம், ஒட்டுமொத்தமாக உலகை ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் மனித மதிப்பீடுகளின்படி பார்த்தாலும்கூடச் சரியில்லை. இவற்றைத் தாண்டி இயற்கையையும் காட்டுயிர்களையும் நேரில் கண்டு உணர்ந்தவர்கள், ஆர்வங்கொண்டவர்கள் அவற்றின்மீது கொண்டிருக்கிற பிணைப்பு வலுவானது. அப்படிப்பட்டவர்களாக நாம் ஒவ்வொருவரும் மாறிட வேண்டும்” என்கிறார் குமரன் சதாசிவம்.
இந்த நூலின் எல்லாக் கட்டுரைகளிலும் ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது: எந்த ஓர் உயிரினத்தை, விஷயத்தைப்பற்றி எழுதினாலும் அதன் இயல்பான உயிரியல்-உடலியல் அம்சங்களுள் ஏதேனும் ஒன்றிரண்டை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு, அவற்றை விளக்குவதற்கு ஏதேனும் ஓர் அனுபவப்பதிவின் வழி அல்லது நிகழ்வினை விளக்குவதன்வழி மனிதர்களின் பொதுப்புத்தியில் அந்த உயிரின இயல்புகளைப் பற்றிய நம்பிக்கைகளைக் கூறி இறுதியில் அவை உண்மையில் என்னவாக இருக்கமுடியும் என்பதையும் நிறுவுகிறார். தான் அறிந்த எல்லாச் செய்திகளையும் ஒரே கட்டுரையில் கொட்டிவிட வேண்டும் என அவர் முயலவேயில்லை. இது மிகவும் முக்கியமான ஒன்று.
இவ்வாறான நூல்கள் தமிழிலே இல்லையே என்னும் மனக்குறை நீங்கும் விதத்தில் வந்துள்ள நூலின் மேற்கண்ட இரு பகுதிகளையும் படித்ததுமே பெரும் மனநிறைவு உண்டானது. பயில் பதிப்பகம் இந்த நூலின் தொகுதிகளை சிறப்பாக வெளியிட்டுள்ளது. பதிப்பகத்தாருக்கும் நம் மனம் கனிந்த பாராட்டுகள். காட்டின் குரலைக் கேட்டதும், இயற்கையைத் தேடி அலைகின்ற கண்களுக்கு நல்விருந்து இது!
