நேர்காணல்:
இளம் பாரதி
சந்திப்பு : பாவண்ணன்
இளம்பாரதி என்னும் புனைபெயரில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும்மேல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய பல மொழிகள் வழியாக எண்ணற்ற படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து அன்னைத் தமிழுக்கு வளம் சேர்த்துக்கொண்டிருப்பவர் ருத்ர. துளசிதாஸ். கோவில்பட்டியருகே அமைந்த இளைய அரசனேந்தல் எனும் சிற்றூரில் பிறந்தவர்.பள்ளிக்கல்வியைத் திருநெல்வேலியிலும், இள நிலைப் பட்டப் படிப்பை மதுரையிலும் நிறைவு செய்தவர். முதுகலைப் பட்டப்படிப்பை சிதம்பரம் அண்ணாமலை நகரில் முடித்தார். சிவகங்கை கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் புதுவையில் வசிக்கிறார்.

சாகித்ய அகாதெமி, நேஷனல் புக் டிரஸ்ட் போன்ற தேசிய நிறுவனங்களின் சார்பில் பல நூல்களை மொழிபெயர்த்த அனுபவம் உடையவர். தொடக்க காலத்தில் கவிதை, சிறுகதை, நாவல், அறிவியல் நூல்கள் போன்ற பலவகைப்பட்ட நூல்களை எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர். எனினும், அவரின் ஆளுமையை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழிபெயர்ப்பே ஆன பிறகு இன்று வரை அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தெலுங்கு மொழிப் புதுக்கவிதையுலகின் முக்கிய ஆளுமையான சி.நாராயண ரெட்டி என்பவரின் கவிதைகளை ‘அனல் காற்று’ எனும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் கொணர்ந்தவர். ஆந்திராவின் ஒரு மூலையில் எங்கோ ஒரு கிராமத்துக் குடும்ப வாழ்க்கையில் இந்திய விடுதலைப் போராட்டம் உருவாக்கிய சிதைவுகளையும், மனித உறவுகளின் விசித்திரத் தன்மையையும் முன்வைத்து ஒரு விவாதத்தை எழுப்பிய கௌசல்யா (தெலுங்கு மூலம்: ‘போலோப்ரகட சத்யநாராயணமூர்த்தி’) எனும் படைப்பே இவரின் முதல் மொழிபெயர்ப்பு நாவல். இளம்பாரதியின் மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியலில் தெலுங்கிலிருந்து பதினெட்டு நூல்களும், மலையாளத்திலிருந்து ஒன்பது நூல்களும், கன்னடத்திலிருந்து மூன்று நூல்களும், இந்தியிலிருந்து நான்கு நூல்களும் இடம்பெற்றுள்ளன. இன்னும் சில நூல்கள் வரவிருக்கின்றன.
‘மய்யழிக்கரையோரம்’ என்ற மலையாள நாவல் மொழிபெயர்ப்பு 1998–ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை இவர் பெறுவதற்குக் காரணமாக அமைந்தது. ‘கரையான்கள்’ எனும் மலையாள சிறுகதைத் தொகுதியின் மொழிபெயர்ப்புக்கு நல்லி-திசை எட்டும் மொழி பெயர்ப்புப் பரிசும், திருப்பூர்த் தமிழ்ச்சங்கப் பரிசும் வழங்கப் பெற்றன.
இளம்பாரதியின் இலக்கியப் பங்களிப்பைப்பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும்முகமாக ஓர் ஆவணப்படத்தைத் தயாரித்திருக்கிறார் வெங்கடசுப்புராய நாயகர். அவர் புதுவையில் வாழும் பிரெஞ்சு மொழிப்பேராசிரியரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். அதன் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் புதுவைக்குப் போயிருந்த பாவண்ணன் இளம்பாரதியிடம் விரிவாக உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் எழுத்து வடிவப்பதிவு இது:
இன்று நீங்கள் தமிழ்நாடறிந்த மொழிபெயர்ப்பாளர். தொடக்கத்தில் சிறுகதை, கவிதைகள் எழுதுவதிலிருந்துதான் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் முதல் சிறுகதையை எந்தப்பின்னணியில் எழுதீனீர்கள்?
அது 1950-ஆம் ஆண்டு. அன்று சரஸ்வதி பூஜை முடிந்து வீட்டினர் அனைவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். எங்கள் பெரியப்பா மகன் அப்பாசாமி என்னைவிடவும் சில வயதுகளே மூத்தவர். அவரும் நானும் படிப்பறையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எதிர்பாராமல் என் மனதில் ஒரு சிறுகதைக்கான கரு உதித்தது.அண்ணனை அப்படியே அருகே அமர வைத்து விட்டு ஒரே அமர்வில் அக்கருவைக் கதையாக எழுதி முடித்தேன். அண்ணன் அதைப் படித்தார். “ரொம்ப நல்லா இருக்குடா” என்று பாராட்டினார். இன்னொரு நாளில் அக்கதையை மறுபடி செழுமைப்படுத்தி ‘சந்திப்பு’ எனும் தலைப்புக்கொடுத்து, ‘தாஜ்மகால்’ என்ற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். 1951-ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் அந்த என் முதல் சிறுகதை பிரசுரமானது.
அந்தக் கதை உங்கள் அனுபவம் சார்ந்ததா அல்லது கற்பனையா?
கற்பனைதான்.
உங்கள் தந்தையார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குப்போன காந்தியவாதி என்பதை, ‘சர்வோதயம் மலர்கிறது’ இதழில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். அவரைப்பற்றி உங்கள் மனதில் பதிந்திருக்கும் சித்திரத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
எங்கள் தந்தையின் பெயர் ருத்ரப்ப சாமி.காந்திய சிந்தனையுள்ளவர். பி.ஏபி.டி. படித்தவர்.நல்ல ஆங்கிலப் புலமையும் உண்டு.காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டத்தின் வழியாகவே இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர். வாழ்நாள் முழுக்க கதர் ஆடைகளை மட்டுமே அணிந்திருந்தவர். சபர்மதி ஆசிரமத்தில் சில மாதங்கள் தங்கியி ருந்து சேவை செய்தவர். ஒரு முறை அப்பாவைக் கைது செய்து பெல்லாரி சிறையில் வைத்து விட்டார்கள். மூன்றாண்டு காலம் அவர் சிறைவாசம் அனுபவித்தார். வடநாட்டை சேர்ந்த பல தலைவர்களுடன் அப்பா நெருங்கிப் பழகியிருந்தார். அப்போது எங்கள் எல்லாருக்குமே இராட்டையில் நூல் நூற்கும் பயிற்சியுண்டு.
அப்பா எங்களோடு அதிகம் இருந்தவர் அல்லர். கூட்டங்கள், சிறைவாசம் என்று எங்களைப் பிரிந்திருந்த காலம்தான் அதிகம். அதனால் நானும், அம்மாவும் கோவில்பட்டியில் இருந்த காலத்தை விட திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டையில் தாத்தா வீட்டில்தான் காலங்கழித்தோம். எனக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் பெயர் பாஸ்கரன்; இன்னொருவர் ராஜு.
காலையில் எழுந்ததுமே நாங்கள் இராட்டையில் நூல் நூற்போம். அந்த சிட்டங்களை தாத்தா எடுத்துக்கொண்டுபோய் விற்று விட்டுப் பயணம் வாங்கி வருவார். அந்த வருமானத்தில்தான் அம்மா வீட்டுக்கான செலவுகளை நிர்வகித்தார். யாரையும் அண்டாமல், சுயமரியாதையுடன் வாழ இது எங்களுக்கு உதவியாக இருந்தது. எங்கள் இளமைக்காலத்தில் அப்பா எங்களுடன் இல்லாவிட்டாலும் எங்கள் கல்வியிலும் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் இருந்தார்.
பள்ளியில் தமிழுக்குப் பதில் என்னை சமஸ்கிருத மொழிப்பாடத்தை எடுத்துப் படிக்க வைத்தார். அவர் வட இந்திய நகரங்களுக்குப் போய் வந்தவர். அதனாலோ என்னவோ, சமஸ்கிருத ஈடுபாடு அவருக்கு அதிகம். நானும் அதையே படித்தேன். வகுப்பில் என்னுடன் சமஸ்கிருதம் படித்த மற்ற மாணவர்கள் பிராமணர்கள். நான் அதில் தனித்துத் தெரிந்தேன்.சமஸ்கிருத ஆசிரியருக்கும் என் மீது பாசம் அதிகமிருந்தது. அக்கறையுடன் அவர் எனக்குக் கற்பித்தார். அதனால், நானும் விரும்பி சமஸ்கிருதம் கற்றேன். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, இன்டர்மீடியட் என எல்லா நிலைகளிலும் சமஸ்கிருதத்தையே படித்தேன். அந்தப் படிப்பு, அம்மொழியில் எனக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது. தமிழ்மொழியை அனுபவப் போக்கில் கற்றுக்கொண்டேன்.
எழுத்தாளர் புதுமைப்பித்தனின் வகுப்புத்தோழர் உங்கள் தந்தை என்று ஒரு முறை சொன்னீர்கள். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு அவருடனான நட்பை எப்படிப் பேணி வந்தார்?
புதுமைப்பித்தனும், அப்பாவும் இந்துக்கல்லூரியில் இன்டர்மீடியட் பி.ஏ. வரை ஒன்றாகப் படித்தவர்கள். புதுமைப்பித்தனின் கதைகளையெல்லாம் அப்பா படித்துப் பாராட்டி இருக்கிறார். ஆனால், எதார்த்த வாழ்க்கையில் புதுமைப்பித்தனின் நடைமுறைப் போக்குகள் அப்பாவுக்கு உடன்பாடற்றவையாக இருந்தன. கதைகள் எழுதுகிறவர்கள் எல்லாருமே இப்படித்தான் குடும்பப் பொறுப்பிலிருந்து விலகிப்போய் விடுவார்களோ என்று எண்ணி அமைதியாக இருந்துவிட்டார். நானும் வளர்ந்து கதைகள் எழுதுவதைப் பார்த்த பின்பு நானும் அவர் வழியில் போய்விடுவேனோ என்று உள்ளூர சங்கடப்பட்டார். அவரால் என்னை முழுமையாக உற்சாகப்படுத்தவும் முடியவில்லை; தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. தத்தளித்துக்கொண்டிருந்தார்.
படிப்பில் நான் பெரிய திறமைசாலியாக இல்லாமலிருந்ததும் ஒரு காரணம். கல்வித்துறையில் அவர் ஒரு பெரிய அதிகாரி. அவரின் பிள்ளையாயிருந்தும்கூட என்னால் அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. பள்ளி, கல்லூரி–இரண்டு இடங்களிலுமே சில சமயங்களில் நான் தேர்வுகளில் தோல்வியடைந்து, பின்தங்கி மீண்டும் தேர்வெழுதித்தான் முன்னேறுபவனாக இருந்தேன். அதையெல்லாம் நினைத்துத்தான் நானும் கதை, கவிதை என்று தொடங்கி வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வேனோ என்று வருத்தம் கொண்டிருந்தார். ஆனால், அப்பாவின் நண்பர்கள் சிலர் என் படைப்புகளைப் படித்து விட்டு அவரிடம் பாராட்டுகளைத் தெரிவிக்கத் தொடங்கியிருந்தனர். அதற்குப்பிறகே அவருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. புதுமைப்பித்தன் திருநெல்வேலியை விட்டுப்போன பிறகு அவருடனான தொடர்பு அறுந்து போனது.
சற்றே வடநாட்டுத் தொனியிலமைந்த துளசிதாஸ் எனும் பெயரை உங்களுக்கு உங்கள் தந்தை சூட்டியிருப்பதற்குக் காரணம் ஏதேனும் உண்டா?
நான் 02-07-1983 அன்று பிறந்தேன். அப்போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் திருசசி சிறையில் அப்பா வைக்கப்பட்டிருந்தார். பெரியசாமித்தூரனும் அங்கிருந்தார்.இருவரும் உரையாடத் தொடங்கி குடும்ப விவரங்களை ஒருவரோடோருவர் பகிர்ந்துகொள்கிற அளவிற்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.அப்போது தூரன் வன மலர் சங்கம் என்ற அமைப்பொன்றை நடத்திக்கொண்டிருந்தார்.அந்த அமைப்பைப்பற்றி தூரன், அப்பாவிடம் சொன்னார்.
சுதேசி இயக்கம், விடுதலைப் போராட்டம், தமிழ் இலக்கியம் தொடர்பான செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் தூரனும், அவரின் நண்பர்களும் சேர்ந்து கோவையில் அந்த அமைப்பை நடத்தி வந்தனர். ‘பித்தன்’ என்றொரு பத்திரிகையையும் அவர்கள் நடத்தி, வந்தனர். அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுடைய வீடுகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு சங்கத்தின் சார்பில் பெயர் சூட்டி மகிழ்வார்கள். அப்படி ஒரு பழக்கம். தூரன் அதை அப்பாவிடம் சொல்லியிருக்கிறார். அப்பாவும் அவரிடம், ”எங்க வீட்டுல எனக்கும்கூட ஒரு பையன் பொறந்திருக்கான். அவனுக்கு இன்னும் பேரு கூட வைக்கல. நா இங்க ஜெயிலுக்கு வந்துட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
தூரன் கொஞ்ச நேர யோசனைக்குப்பின், ‘துளசி’ என்ற மங்கலமான பெயரை வைக்கலாம் என்று சொன்னாராம். “நல்ல பெயர்தான்; ஆனா, பெண்குழந்தைக்குப் பேர் வைக்கிற மாதிரியல்லவா இருக்கு?” என்று அப்பா சொன்னாராம். “அதனால் என்ன? தாஸ்னு ஒரு சொல்லை அதோட சேர்த்துத்துட்டாப் போதுமே, பையனோட பேராயிடும். துளசிதாஸ்.எப்பிடியிருக்கு பேர்?” என்று தூரன் கேட்டிருக்கிறார். நாலைந்து முறை அந்தப் பெயரையே சொல்லிப் பார்த்த அப்பா, “நல்ல பேருதான், அதையே வெக்கலாம்” என்று ஒப்புக்கொண்டாராம். எனக்குத் துளசிதாஸ்னு பேரு வந்த கதை இதுதான்.
பள்ளிப் பருவத்தில் கோடைக்கால விடுமுறைக் காலங்களில் எல்லாரும் கல்விப் பயணங்கள் போகிற காலத்தில் காந்தி ஆசிரமங்களுக்கும், கல்வி மையங்களுக்கும் சென்று ஆடித்திரிந்து பொழுதுகளைக் கழித்த விதம் பற்றி என்னிடம் ஒரு முறை நீங்கள் குறிப்பிட்டது நினைவிருக்கிறது. அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
திருமங்கலத்துக்கு அருகே கல்லுப்பட்டியில் இன்னமும்கூட இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் ஆசிரமம் இருக்கிறது. சிதம்பரத்துக்கு அருகில் கீழமூங்கிலடி என்ற இடத்தில் விநாயகம் என்ற காந்தியவாதி இன்னோர் ஆசிரமத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்த இரு ஆசிரமங்களுடனும் அப்பாவுக்கு நல்ல தொடர்பிருந்தது. அதனால், பள்ளியில் கோடை விடுமுறை என்று அறிவித்து விட்டால் அண்ணனையும் என்னையும் அங்கே அழைத்துக்கொண்டுபோய் விட்டுவிடுவார்.வேறு பலரும் அப்பாவைப்போலவே அவரவர் பிள்ளைகளை அங்கே ஏதோ சுற்றுலாவுக்கு அழைத்து வருவதுபோல கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.
நாங்கள் அனைவரும் அங்கே சேர்ந்து விளையாடுவோம். தொண்டர்களுடன் இணைந்து தூய்மைப் பணிகள் செய்வோம். கிணற்றில் இருந்து நீர் எடுத்து வருவோம். தோட்ட வேலைகள், இராட்டையில் நூற்பது போன்ற வேலைகள் செய்வோம்.பிரார்த்தனைப் பாடல்கள் பாடுவோம்.
ஆசிரமத்திலிருந்த நூலகத்தில் செய்தித்தாள்களும், புத்தகங்களும் எடுத்து வந்து படிப்போம். அது மிகவும் மகிழ்வளிப்பதாக இருக்கும்.எங்களுக்குள் கதைகள் சொல்லிக்கொள்வோம். எங்களில் பலர் ரயிலையே பார்த்ததில்லை என்று சொல்வதுண்டு. கோவில்பட்டியில் எங்கள் தோட்டத்துக்கு முன்பாகத் தினமும் ரயில் போகும். அந்த அனுபவங்களுடன் என்னுடைய கற்பனையைக் கலந்து பல கதைகள் சொல்லுவேன்.
நாங்களே கூடிப்பேசி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை நாடகமாகப் போடுவோம். எங்களுக்குள் இருந்த படைப்பூக்கத்தைக் கூர்மைப்படுத்திக்கொள்ள அந்த ஆசிரமவாசம் மிக உதவியாயிருந்தது.தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரை அங்கு நான் பார்த்திருக்கிறேன். கல்லுப்பட்டி ஆசிரமத்திலிருந்த ஜே.சி.குமரப்பாவை எனக்குத் தெரியும். அவர் எல்லாக் குழந்தைகளோடும் விளையாடி சிரித்துப் பேசுவார். கதைகளும் சொல்வார். அந்த ஆசிரமவாச கால அனுபவங்கள் எங்களைப் பொருத்தவரையில் எங்களுக்குக் கிடைத்த இனிய அனுபவங்கள்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பால், இலக்கிய வாசிப்பின்மீது ஆர்வம் எப்படிப் பிறந்தது? எப்படி வளர்ந்தது? இளமையில் எந்த மாதிரியான நூல்களை விரும்பிப் படித்தீர்கள்?
என் பள்ளிப் பருவத்திலேயே புத்தகம் வாசிக்கிற பழக்கம் வந்துவிட்டது. ஆசிரமங்களுக்குப் போகையில், அங்கிருக்கும் நூலகங்களில் புத்தகங்களை எடுத்துப் படிப்போம். அந்தப் பழக்கத்தில் ஊருக்குத் திரும்பி வந்ததும் ஊரில் இருக்கும் கிளை நூலகங்களுக்குப் போய்ப் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கமும் தானாகவே வந்து விட்டது.
தினசரி இதழ், வார-மாதப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் தேடிப் படிப்பேன். ‘அம்புலிமாமா’, ‘கண்ணன்’ எல்லாம் எங்கள் நூலகத்தில் கிடைக்கும், அவற்றை ஒரு வரி விடாமல் ஆர்வத்துடன் படித்து விடுவேன்.திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பள்ளியில் படிக்கும்போது நானும் நண்பர்களும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினோம். அதுதான் என் இலக்கிய முயற்சியின் தொடக்கம்.
நானும் நண்பர்களும் ஆளாளுக்கு ஒரு கதை எழுதினோம். கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு வந்தபொழுது அந்த வாசிப்பு மேலும் சூடு பிடித்துவிட்டது. சிறுவர் இதழ், பெரியவர் பத்திரிகை என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பார்க்காமல் கைக்குக் கிடைக்கும் எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்துப் படித்தேன். ‘பிரசண்ட விகடன்’, ‘பூஞ்சோலை’, ‘டிங்டாங்’, ‘காவேரி’, ‘உமா’, ‘அமுத சுரபி’, ‘அமுதம்’, ‘வினோதன்’, ‘இமயம்’, ‘சிவாஜி சந்திரோதயம்’, ‘கலைவாணி’ என எண்ணற்ற பத்திரிகைகள் படிக்கக்கிடைத்தன. ‘சாக்லேட்’, ‘ரவி’, ‘கலைச்சுடர்’, ‘சந்திரிகா’ என்கிற பெயர்களில் கூட அப்போது இதழ்கள் வந்துகொண்டிருந்தன.
இலங்கையிலிருந்து வந்த, ‘வீரகேசரி’ பத்திரிகையைக்கூடத் தொடர்ந்து படித்து வந்தேன். புதியனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் வாசிக்க வைத்தது. வாசிப்பினால் உண்டான மனக்கிளர்வு எழுதத் தூண்டியது. எப்படியோ இவை இரண்டும் என்னை ஊக்கத்துடன் வைத்திருந்தன. நான் அவ்வப்போது எழுதும் கதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டேயிருந்தேன். சில பிரசுரமாகும்; சில திரும்பி வரும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் நான் தொடர்ந்து அவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தேன்.
கவிதையில் எப்படி ஆர்வம் பிறந்தது?
சிறுவர்களுக்கான பாடல்கள் சிலவற்றைத் தாளக்கட்டுடன் எழுதிப் பார்த்தேன். ஒரு பாட்டுப் பாடுவதற்கு இசைவாக இருந்தால் அது நல்ல பாட்டு என்பது என் எண்ணம். அப்படியான மொழியோட்டத்துடன் நான் பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது நாங்கள் இருந்தது வண்ணாரப்பேட்டையிலிருந்த எங்கள் தாத்தாவின் வீட்டில். அது சிறிய வீடு. எதிரில் மாமா வீடு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இன்டர்மீடியட் வகுப்புக்கு வந்தபோது நான் படிப்பதற்கு தாத்தா வீட்டில் இடம் போதவில்லை. மாமா வீட்டு மாடியில் கூரை வேய்ந்த ஓர் அறையில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டுப் படிக்க வசதியாக இருந்தது. அந்த அறையில் போய்ப் படித்து விட்டு அங்கேயே தங்கினேன். மேற்கூரையில் ஒரு குருவிக்கூடும், அதில் சில குருவிகளும் இருந்தன. அவற்றின் கூவல்கள் எனக்கு இனிமையாக இருந்தன.
அவை கழிக்கும் கழிவுகளால் தரையே கறைகள் படிந்து ஒரே நாற்றமடிக்க ஆரம்பித்தது. ஒரு நாள் மேலே என் அறைக்கு வந்த அத்தை அந்த அலங் கோலத்தைக் பார்த்தார். நான் பள்ளிக்குப் போயிருந்த நேரத்தில் ஓர் ஆளை வரவழைத்து குருவிக் கூட்டைக் கலைத்து, அறையைத் தூய்மையாக்கிவிட்டார். மாலையில் வீடு திரும்பியவுடன் அறையில் நிலவிய அமைதி என்னைத் துன்புறுத்தியது. குருவிகளுக்கு நேர்ந்த துன்பம் என்னால் நேர்ந்தததுதானே என எண்ணி வேதனையடைந்தேன். என் வருத்தம் ஒரு கவிதையாயிற்று. ‘கூடு கட்டும் குருவிகளே, உமக்கு வேறு வீடு இல்லையோ பாரினிலே!’ என்று தொடங்கும் கவிதை அது.
அந்தக் கவிதையை மேஜை மீதிருந்த என் புத்தகமொன்றில் நடுவே வைத்திருந்தேன். ஒரு நாள் மாமா உறவுமுறைகொண்ட சங்குப்பட்டி சீனிவாசன் என்பவர் வீட்டுக்கு வந்திருந்தார். என் அறைக்கு வந்த அவர், அங்கு வைத்திருந்த என் குருவிக் கவிதையையும், தொலைந்த பேனா என்ற கட்டுரைக் கதையையும் எடுத்துப் படித்துப் பார்த்தார். அவை அவருக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டன. உடனே வீட்டில் இருந்தவர்கள் எல்லாரிடமும் செய்தியைக் கூறி, அவற்றைப் படித்துக்காட்டவும் செய்தார். எப்போதோ ஒரு முறை சென்னைக்கு அவர் போயிருந்த சமயம், என் அப்பாவிடம் அதைப்பற்றிப் பாராட்டும் தொனியில் பெருமையாகக் கூறவும் செய்தார். அப்பா என்னை அழைத்துக் கண்டிக்கவும் இல்லை; பாராட்டவுமில்லை. அப்படியே சுதந்திரமாக என்னை விட்டுவிட்டார். அது என்னை மேன்மேலும் இலக்கியத்தில் ஈடுபட வைத்தது. யாருக்கும் அந்த வயதில் கிடைக்காத சாதகமான சூழல் எனக்குக் கிடைத்தது. குடும்பத்தினரின் ஒத்துழைப்பு, நண்பர்கள் ஊக்கம், அங்கீகாரம் எல்லாமே கிடைத்தன.
வேதியியல் பட்டதாரியான நீங்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக ஒரு தமிழாசிரியரிடம் இலக்கணம் கற்றுக்கொண்டதாக ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. அதைப்பற்றி இப்போது சொல்ல முடியுமா?
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நான் பிஎஸ்ஸி படிக்கையில், உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார். என் கவிதைகளைப் படித்த அவர், அவை நன்றாக இருக்கின்றன என்றும், ஆனால், அவற்றில் யாப்பிலக்கணம் சரியாகப் பொருந்தி வரவில்லையே எனவும் குறிப்பிட்டார். நான் அதுவரை பள்ளிக் கல்வியில் எல்லா நிலைகளிலும் சமஸ்கிருத மொழியையே படித்து வந்திருந்த காரணத்தால் தமிழ் இலக்கணம் பற்றி எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. என் அப்பாவிடமும் அவர் இதைப்பற்றிக் கூறியதால் அப்பா, இலக்கணப் புலமைமிக்க தமிழாசிரியர் யார் என்று விசாரித்து அறிந்துகொண்டார். அ.கி. பரந்தாமனார் என்ற புலவரிடம் என்னை அழைத்துப்போய் அறிமுகம் செய்து, எனக்குத் தமிழ் இலக்கணம் கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.
வேதியியல் படிக்கும் எனக்கு எதற்குத் தமிழ் இலக்கணம் என்று கேட்டார் அ.கி.ப. அப்பா அவரிடம் என் கவிதைகளைக் காட்டினார். அவர் அவற்றைப் படித்துப் பார்த்தபின், புன்னகையுடன், “அப்படியானால், இலக்கணம் பயில வேண்டியது அவசியம்தான்” எனக்கூறிவிட்டு தமிழின் யாப்பிலக்கணம் முழுவதையும் கற்றுத்தந்தார். எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம் போன்ற கவிதையியல் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள பாரதிதாசனின் கவிதைகள், ‘அழகின் சிரிப்பு’ தொகுதி போன்றவற்றை மீண்டும் மீண்டும் படித்தேன்.
மாணவப்பருவத்தில் பாரதிதாசன் உங்கள் கவிதைகளைப் படித்துப் பாராட்டியதாகப் படித்திருக்கிறேன். அவருடைய அறிமுகம் எப்படிக் கிடைத்தது?
மதுரை பாரதி புத்தக நிலையம் என்ற புத்தகக் கடையை சுவாமிநாதன் என்பவர் நடத்தி வந்தார். அவரைப் பார்ப்பதற்குப் பாரதிதாசன் வந்திருந்தார். அவரிடம் என்னைக்காட்டி, “இவர் வேதியியல் மாணவர். ஆனால், நல்ல தமிழில் கவிதைகள் எழுதுகிறார்” என அறிமுகம் செய்து வைத்தார். என் கவிதைகளைப் படித்துப் பார்த்த பாரதிதாசன், “உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; விட்டுவிடாதீர்கள்” என்று வாழ்த்தினார். அதன்பிறகு பாரதிதாசன் எப்போது மதுரைக்கு வந்தாலும் என்னை சுவாமிநாதனின் வீட்டிற்கு வரும்படி அழைத்து, நீண்ட நேரம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். என் கவிதைகளைப் பாராட்டிக் கைப்பட ஒரு வாழத்துப்பாவையும் எழுதித் தந்திருந்தார்.
தமிழ், ஆங்கிலம் தவிர தெலுங்கு, கன்னடம் உள்பட பிற மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்து மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறீர்கள். இந்த மொழியார்வம் எப்படி ஏற்பட்டது?
வேதியியலில் பிஎஸ்ஸி படித்து முடித்ததும், வாடிப்பட்டியில் சமூகக் கல்வி அமைப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். அந்தப் பணியில் சேருபவர்களுக்குப் பயிற்சியளிப்பது வழக்கம். அதற்காக ஹைதராபாத்தில் ஹிமயத் சாகர் என்ற இடத்தில் இருந்த ஒன்றியப் பயிற்சி நிலையத்திற்குப் போனேன். அங்கு பிற மாநிலங்களிலிருந்து வேறு வேறு மாநில மொழிகள் பேசும் பயிற்சியாளர்கள் வருவார்கள்.
என் வீட்டு மொழி தெலுங்கு. கல்லூரியில் அறிந்த மொழியாக ஆங்கிலம் இருந்தது. எனவே, நான் மற்றவர்களிடம் இந்த இரு மொழிகளிலும் உரையாடுவது வழக்கம். இந்த உரையாடல்களின் விளைவாக முதலில் தெலுங்கு மொழியை அங்கேயே கற்றுக்கொண்டேன். பிறகு, மதுரைக்கு வந்ததும் தொடர்ந்து என் சுயமுயற்சியால் பல மொழிகளையும் கற்றுக்கொண்டு, மொழி பெயர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டேன். நான் மொழிகளைக் கற்றுக்கொண்டதும், மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டதும் இரண்டுமே நீண்ட கால, சுய முயற்சியால் நிறைவேறிய பயணங்கள்.
ஹைதராபாத்தில் பயிற்சிக்காகத் தங்கிய காலத்தில் தெலுங்கு மொழிப் பத்திரிகையான, ‘யுவ’ என்ற இதழில் என் மனதைக் கவர்ந்த பல கதைகளைப் படிக்க முடிந்தது. அவை என் மனதில் மொழிபெயர்க்கும் ஆர்வத்தைத் தந்தன.ஒரு முறை நான் படித்த ஒரு சிறந்த கதையைத் தமிழிலிருந்து தெலுங்குக்கு மொழிபெயர்த்து, ‘யுவ’ இதழுக்கு அனுப்பினேன். அது உடனே பிரசுரமாயிற்று. பிறகு சில வாரங்களில் தெலுங்கிலிருந்து ஒரு கதையைத் தமிழுக்கு மொழிபெயர்த்து அதை ‘மஞ்சரி’ இதழுக்கு அனுப்பினேன். அதுவும் வெளியானது. அதன் பிறகு மிகுந்த தன்னம்பிக்கையுடன் பல கதைகளை மொழிபெயர்த்து அனுப்பினேன். அவையனைத்துமே பிரசுரமாயின.
உங்கள் கல்லூரி நாள்களில் நீங்கள் எழுதிய ‘கீதா’ எனும் நாவல் இப்போது மறுபதிப்பாக வந்திருக்கிறது. நல்ல கதையோட்டமுள்ள நாவல் அது. காண்டேகரின் செல்வாக்கை அந்த நாவலில் காண முடிகிறது. அந்த நாவல் எழுதிய அனுபவம் பற்றி?
ரதி மோகன் என்கிற ராமசாமியின் பதிப்பகம்தான் ரதி பதிப்பகம். அதை நடத்தியவர் என் நண்பராகிவிட்டதற்குக் காரணம் ‘கீதா’ நாவல்தான். அப்போது சினிமாப் பாட்டுப்புத்தகங்களையே அவர் வெளியீட்டு வந்தார். “அவற்றை மட்டுமே வெளியிடுவதை விட, நல்ல எழுத்தாளர்களிடம் கேட்டு வாங்கி நாவல்களை வெளியிடலாமே?” என்று நான் ஆலோசனை சொன்னேன். நானே பிற எழுத்தாளர்களிடம் தொடர்புகொண்டு படைப்புகளை அனுப்புமாறு வேண்டினேன். எல்லார்வியும், கோமதி ஸ்வாமிநாதனும் தமது நூல்களை அனுப்பினார்கள். மற்றவர்களோ, அவரவர் பதிப்பகத்தாரின் கட்டுப்பாட்டைக் காரணமாகக் கூறி மறுத்தார்கள். அப்போதுதான் ராமசாமி என்னையே நாவல் எழுதுங்கள் எனத் தூண்டினார். என்ன எழுதுவதெனத் திகைத்த சமயத்தில் தற்செயலாக நேர்ந்த ஊட்டி மலைப்பயணமும், காண்டேகரின் நாவல்களின் தாக்கமும் சேர்ந்து ‘கீதா’ நாவலை மனதில் உருவாக்கிக்கொள்ள உதவின. பத்துப் பதினைந்து நாள்களில் எழுதி முடித்தேன். ரதி பதிப்பகம் அதை வெளியிட்டது.
தெலுங்கு மொழிக் கவிதைகளின் தொகுப்பான, ‘அனல்காற்று’ ஒரு முக்கியமான மொழியாக்கப்படைப்பு. கவிதைகளை மொழிபெயர்ப்பது சிரமம் என்று சொல்வார்கள். அதை ஏன் தேர்வு செய்தீர்கள்?
வசனக் கவிதை மரபைத் தெலுங்கு மொழியில் உருவாக்கிய சிறந்த கவிஞர் என்று நாராயண ரெட்டி அவர்களைக் கூறுவார்கள். அவரின் கவிதைகள் மிக எளிய சொற்களுடன் இருந்தாலும் ஆழமான பொருள் நிறைந்தவையாக இருந்தன. அவர் எனக்கு மிகப்பிடித்த கவிஞராக ஆகிவிட்டார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிதைத் தொகுதி அது. ‘மானவுடு’ என்ற அந்தத் தொகுதியை மொழிபெயர்க்க அனுமதிகோரி நாராயண ரெட்டிக்குக் கடிதம் எழுதினேன். அவரும் உடனே மறுமொழி எழுதினார். உடனே அவற்றை மொழிபெயர்த்தேன். மீரா அவர்கள் படித்துப் பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார். அன்னம் பதிப்பகம் மூலம் அவரே அதை வெளியிடவும் செய்தார். நல்ல வரவேற்பைப் பெற்ற தொகுதி அது.
மலையாள மொழி நாவலான ‘மய்யழிக்கரையோரம்’ என்ற படைப்பை மொழி பெயர்த்ததன் மூலம் சாகித்ய அகாதெமி விருது உங்களுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற சிறப்பைத் தேடித்தந்தது. அதை எப்படி மொழி பெயர்க்கத் தேர்வு செய்தீர்கள்?
சிவகங்கைக் கல்லூரியில் நான் பணி செய்து கொண்டிருந்த நேரம் அது. சிறந்த நாவல்களை மொழிபெயர்த்து அனுப்புமாறு சாகித்ய அகாதெமி சில மொழிபெயர்ப்பாளர்களுக்கு நேரடியாகக் கடிதங்களை அனுப்பியிருந்தது. எனக்கும் அந்தக் கடிதம் வந்தது. ‘மய்யழிப்புழையுட தீரங்களில்’ என்ற அந்த நாவலை நான் மொழிபெயர்த்துத் தரவேண்டுமென்று அகாதெமியே ஒதுக்கீடு செய்து அனுப்பிய கடிதம் அது. அன்றே என் பணி ஓய்வு உத்தரவும் கிடைத்தது. எனவே, நான் ஓய்வாக இருந்து அந்த நாவலை மொழி பெயர்த்து முடித்தேன். இந்த மொழிபெயர்ப்புதான் என்னை ஒரு மொழிபெயர்ப்பாளனாகத் தமிழில் நிலைநிறுத்திக்கொள்ள உதவிய புத்தகம்.
நண்பர்களும், பிற எழுத்தாளர்களும் உங்களின் இந்த முயற்சிகளைப்பற்றி என்ன விதமான எண்ணங்களைக் கொண்டிருந்தனர் ?
நா.பார்த்தசாரதி, பெ.தூரன். அழ. வள்ளியப்பா, அன்னம் மீரா போன்ற பலரும் என்னைப்பற்றி உயர்ந்த கருத்துக் கொண்டிருந்தனர். என் ஒவ்வொரு படைப்பையும் பாராட்டி வெவ்வேறு நண்பர்கள் நேரிலும், கடிதங்களிலும் தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் உந்துசக்தியாக அமைந்திருந்தன. குழந்தைகள் களைக்களஞ்சியப் பணிக்காக நான் பெ. தூரன்-அழ.வள்ளியப்பா ஆகியோருடன் இணைந்து செயலாற்றவேண்டுமென இருவருமே விரும்பினார்கள். அப்போது சிவகங்கைக் கல்லூரியில் ஆசிரியர்களின் போராட்டமொன்று நடைபெற்றதால், நான் அந்த நிலையில் வெளியேறிப்போக விரும்பாமல் போராட்டக்களத்திலேயே இருந்துவிட்டேன்.
சிவகங்கை, வேலூர், மதுரை சிறைகளில் நாங்கள் அடைபட்டிருந்த காலம் அது. அந்த அருமையான தமிழ்ப்பணியில் நான் இணைய முடியாமற்போன வருத்தம் இன்னமும் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது.இன்னொரு சமயத்தில், பெ. தூரன் என்னை, ‘குமரி மலர்’ அலுவலகத்துக்கு வந்து சந்திக்குமாறு தகவல் அனுப்பியிருந்தார். நான் அங்கு போன பொழுது மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான, த.நா.குமாரசாமி உட்காரந்திருந்தார். நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டபோது, “ஓ, தெலுங்கிலிருந்து மொழிபெயர்ப்பவர் நீங்கள்தானா?” என்று உற்சாகமாகக் கூறியபடி என் கைகளைப் பற்றிக்குலுக்கினார். அப்போது தற்செயலாகப் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன் அங்கிருந்தார். அன்று தூரனால் வர முடியாமற் போகவே, நான் அங்கிருந்து மவுண்ட் ரோடிலிருந்த ‘தீபம்’ அலுவலகத்துக்குப் போனேன். அப்போது நான் அண்ணாமலைப் பல்கலையில் முதுகலைப் படிப்பில் இருந்தேன்.
அங்கு நா.பா. என்னிடம் சொன்னது இன்று வரை எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.அவர் தன் மேஜை மீது குவிந்து கிடந்த சிறுகதைப் பிரதிகளைக் காட்டி, “இந்த மாதிரிக் கதைகளை எழுதுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், நல்ல படைப்புகளைப் பிற மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கத்தான் ஆள்களே இல்லை. நீங்கள் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்துங்கள். இன்றைய நிலையில் அது காலத்தின் தேவை” என்ற அவரின் வார்த்தைகள் அசரீரி வாக்கைப்போல் எனக்கு வழிகாட்டின.மீராதான் எனக்கு இளம்பாரதி என்ற புனைபெயரைத் தேர்வு செய்வதில் வழிகாட்டியவர். இப்படி நான் அப்போது யாரைப் பார்த்தாலும் அவர்கள் சொன்னது என்னைத் தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடுமாறு சொல்லும் விதத்திலேயே இருந்தது. எனவே, இன்று வரை நான் மொழிபெயர்ப்புகளைத் தொடர்கிறேன்.
நீங்கள் ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஆண்டன் செகாவின் கதைகளைப் படித்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்த தொகுப்பு. ஆங்கிலவழி மொழிபெயர்ப்புகளை ஏன் அதன்பிறகு செய்யாமல் தவிர்த்துவிட்டீர்கள்?
பாரதி பதிப்பகம் என்ற ஒரு பதிப்பகம், விற்பனை நிலையம் ஆகியவற்றை என் நண்பர் ஒருவர் மதுரையில் தொடங்கினார். அவர் வேண்டுகோளுக்கிணங்க, ஆண்டன் செகாவின் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தேன். பின், அவ்வாறு செய்வதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதற்கு ஏராளமான மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால், பிற மாநில மொழிகளில் இருந்து தமிழில் மொழிபெயர்க்க அந்தந்த மொழி தெரிந்தவர்களே தேவைப்படுகிறார்கள். இப்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிற மொழிகளில் இருந்து நான் செய்யும் மொழிபெயர்ப்புகளை வேறொருவர் செய்ய முடியாது.
மாவட்டக் கல்வி அதிகாரியாக இருந்த உங்கள் துணைவியார் உங்கள் இலக்கிய ஆர்வங்கள் பற்றி என்ன கருதினார்? அவருக்கும் இலக்கிய ஈடுபாடு இருந்ததா?
என் மனைவிக்கு இலக்கியம் சார்ந்த எந்தப் பெரிய ஆர்வமும் இல்லை. அதனால், என் படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் படிப்பதற்குப் ஆர்வங்காட்டியதில்லை. அதே சமயத்தில் என் ஈடுபாடுகளைப் பற்றி ஒரு நாளும் குறைபடப் பேசவோ, குறுக்கிடவோ இல்லை.
புதுவை வாசம் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறதா? இங்குள்ள நண்பர்களின் தொடர்பு உங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறதா?
புதுவைக்கு வந்த புதிதில் கி.ராஜ நாராயணனுக்கு அடுத்தபடியாக எனக்குத் தெரிந்த ஒரே நண்பர் அரிமதி தென்னகன் மட்டுமே. அவரிடமிருந்து எனக்குப் புதுவை வாழ் எழுத்தாளர்கள் அனைவரைப்பற்றியும் தகவல்கள் அடங்கிய ஒரு கையேடு கிடைத்தது. ஒரு புதையலைப்போல அதை நான் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன். முதலில் பிரபஞ்சனைப் பார்க்கப் போனேன். அவர் அந்த முகவரியில் இல்லை. பி.ராஜ்ஜா என்பவரைப் பார்த்துப் பேச முடிந்தது. அவர் மூலம் சுப்புராய நாயகர், க.பஞ்சாங்கம், ரஜனி, குறிஞ்சிவேலன் உள்ளிட்ட நிறைய நண்பர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைத்தன.
ராஜ்ஜா மூலம் ஒரிய மொழி எழுத்தாளரான மனோஜ்தாஸ் என்பாரின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சிறுகதைகள் அடங்கிய ஆங்கில நூல் ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். அந்தக் கதைகளில் இருபதுக்கும் மேல் மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். இன்னும் சில கதைகள் மட்டுமே உள்ளன. அவை புத்தக வடிவம் பெறுமுன் அவர் மறைந்துவிட்டார். அவருடைய, ‘அமுதக்கனி’ எனும் நாவலை மொழிபெயர்த்திருந்தேன். அது அவர் உயிருடன் இருந்தபோதே நூல் வடிவமும் பெற்றுவிட்டது. அந்தப் புத்தக்கத்தை நானே கொண்டுபோய் அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அதில் அவருக்கு மிகுந்த மன நிறைவு.
சில சந்தர்ப்பங்களை நான் தவற விட்டிருக்கிறேன். அதில் எனக்கு வருத்தமும், குற்ற உணர்வும் உண்டு. மனோஜ்தாஸின் மேற்சொன்ன கதைகளை உரிய காலத்தில் மொழிபெயர்த்து முடித்துப் புத்தக வடிவில் அவர் உயிருடன் இருக்கும்போதே அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும். முடியாமற்போன வருத்தம், குற்ற உணர்வு எனக்கு இன்னமும் இருக்கிறது. (முழுமையான நேர்காணல் www.bookday.in யில்)