ஸ்ரீதர் மணியன்
அறிவியல் நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கவியலாத அங்கமாக விளங்குகிறது. நடைமுறை வாழ்வில் நாமறியாத வண்ணம் பல சாதனங்களாக நம்மோடு பிணைந்துள்ளதும் உண்மை. இத்தகைய அறிவியல் கூற்றுகளை, கூறுகளை நாம் வெகு இயல்பாகக் கடந்து செல்கிறோம். அறிவியல் கருத்தாக்கங்களை ஒதுக்கி மனித வாழ்வும், இனமும் உயிர் வாழ்தல் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அது நம்மோடு இணைந்து பயணிக்கிறது.

இச்சூழலில் அறிவியல் குறித்த நூல்களை எளிய முறையில் பலரும் வாசகர்களுக்கு அளித்துள்ளனர். இருப்பினும், முனைவர். பாலசுப்பிரமணியன் பாடப்புத்தகங்களில் கூறப்படாத, விவரிக்கப்படாத பல அறிவியல் தகவல்களை தனது நூலான ‘இயற்கையோடு இயைந்த அறிவியல்‘ எனும் புத்தகத்தினை உருவாக்கியுள்ளார்.
வாழ்வின் அனைத்துக் கூறுகளும் அறிவியலோடு இயைந்தது என்பதை இப்புத்தகத்தினை வாசிப்போர் உணரலாம். பாலசுப்பிரமணியன் வெறும் வறண்ட அறிவியல் தரவுகளை மாத்திரம் தனது கட்டுரைகளில் அளிக்க முற்படவில்லை. சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதராக, தார்மீகப் பொறுப்புணர்வு நிரம்பிய மனிதராக மழைப் பொழிவு, வெப்ப நிலை குறித்த கட்டுரைகளையும், சுழன்றும் ஏர்ப்பின்னது உலகு என்னும் கருத்தாக்கத்தை முன்னிறுத்தி தென்னை, பனை, எலுமிச்சை உள்ளிட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

உலகப் பொது மறையாகப் போற்றப்படும் திருக்குறள் மட்டுமல்லாது, சங்ககாலப் பாடல்கள் அவற்றோடு இயைந்த ஆன்மிகப் பாடல்கள் என மிகப் பரந்துபட்ட நூலாக இது மிளிர்வது குறிப்பிடப்பட வேண்டியதாகவும் வியப்புக்குரியதாகவும் உள்ளது.
வெந்நீரூற்றுகள் பகுதி அவை உருவாகும் முறை, முதன்முதலில் கண்டறிப்பட்ட காலம் எனg; பல செய்திகள் இதில் காணப்படுகின்றன. குறிப்பாக நமது பகுதிகளில் இருக்கும் பல்வகைப்பட்ட நீர்தேக்கிகளின் பெயர்களாக சற்றேறக்குறைய இருபது வகைகளைக் கூறுகிறார் நூலாசிரியர். கூடுதலாக சங்ககால இலக்கியமான பிங்கல நிகண்டிலிருந்தும் மேற்கோள்களைச் சேர்த்துள்ளார். நீலநிற எரிமலை, சிலாதோரணம் குறித்த கட்டுரையும் குறிப்பிடப்பட வேண்டியவை.
உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதியினைக் கொண்டுள்ள (ஏறத்தாழ 7,050,000 கதுர கி.மீ.) அமேசான் ஆறு குறித்த கட்டுரை நீரின் அளவு, அதன் துணை ஆறுகள், கடலில் கலக்கும் அதன் நீரின் விழுக்காடு வரையிலான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. இணைப்பாக அமேசான் காடுகள் பற்றியும் அதன் பரப்பு, பரவியுள்ள நாடுகளைக் குறித்தும் பாலசுப்பிரமணியன் நிறையத் தகவல்களைச் சேர்த்துள்ளார். 55,00,000 சதுர கி.மீ. பரப்பளவினைக்கொண்ட இக்காடுகள் புவிக்கோளத்தில் வெளியிடப்படும் கார்பனை விட பத்து மடங்கு அதிகமாக உறிஞ்சும் வலிமை பெற்றது என்ற தகவல் ஆசுவாசத்தினை அளிப்பதும் உண்மை. சுற்றுச்சூழுலியல் கருத்தாக்கமாக காடழிப்பு அதன் தாக்கங்கள் என இக்கட்டுரை விரிகிறது.
சங்ககால அகநாநூற்றுப் பாடலான ‘வில் எறி பஞ்சியின் வெண்மழை’ எனத் துவங்கும் கட்டுரை மேகங்கள், அதன் தன்மைகள், உருவாகும் விதம் என விரிகிறது. ஏரோசாலின் விளக்கமும், மழைத்துளிகளின் வகை குறித்த அட்டவணையையும் இதில் காணலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இம்மரங்களின் எண்ணிக்கையினைக்கொண்டே ஒரு நாட்டின் செல்வத்தை மதிப்பிடுவர். இம்மரம் பற்றிய கட்டுரைக்கு மூன்று பகுதிகளை ஒதுக்கியுள்ள நூலாசிரியர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.
பனைமரத்தினை வெட்டுவோருக்கு தண்டனை என ஒரு கோவில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியினையும் காணலாம். பனைமரத்தின் பலன்கள் பற்றி பல செய்திகளை கட்டுரையாசிரியர் விவரித்துக் கூறுகிறார். உடலுக்கும், மனதிற்கும் உரமளிக்கும் ‘தெளிவு’ என்னும் பதநீர் பருகுவதை சட்டம் தடை செய்துள்ளது. மருந்தாகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு உரமேற்றி வலுவளிக்கும் பதநீரை மரத்திலிருந்து பெறுவதைத் தடுக்கும் சட்டம் யாருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது என ஆழ்ந்து யோசித்தால் அதன் அரசியல் புரியும்.
மதுவினை உற்பத்தி செய்து அதனைக் குறிப்பிட்ட காலம் விற்பனைக்கு அனுப்பாது பதப்படுத்தி அதன் வீரியம் குறைந்த பின்னரே விற்பனைக்கு அனுப்பவேண்டும். இருப்பினும் தரமற்ற மதுவினை உற்பத்தி செய்து விற்றுக் கொள்ளையடிக்கும் பெருநிறுவன முதலைகளைத் திருப்தி செய்ய உழைத்துக் களைத்து வீடு திரும்பும் பாட்டாளிகளின் வருவாயினை சுரண்டிச் சுவைக்கும் கூட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி ஆதரவு தரும் அரசியல்வாதிகளின் தந்திரமன்றி இது வேறெதுவாக இருந்திட இயலும்? இப்பகுதியில் கடந்த தலைமுறையினரின் ‘நுங்குவண்டி’யின் படம் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை சமகால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தியதற்காக பாலசுப்பிரமணியனுக்கு மற்றுமொரு நன்றி முப்பத்துநான்கு பனை வகைகளின் அட்டவணையையும் இப்பகுதியில் காணலாம்.
மேலும், ஆலமரம் – பேனியன் ட்ரீ – என்று பெயர் பெற்றதற்கான சுவையான பின்னணியினை ஆலமரம் குறித்த கட்டுரையில் காணலாம். இங்கும் சங்க இலக்கியப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார். கூடுதல் தரவுகளாக பெரிய அளவுள்ள ஆலமரங்கள் குறித்தும் செய்திகளைத் தருகிறார். பூத்ஜெலோக்கியா கட்டுரை காரமான தகவல்களைக் கொண்டுள்ளது. 50,000 ரகங்கள் உலகெங்கும் பயிரிடப்படுகின்றன. மிளகாயின் காரத்தன்மையினை அளக்கும் அளவீடுகள், அதற்கான முறை மற்றும் காரச்சுவைக்கான அட்டவணை என இப்பகுதி விரிவாக அலசுகிறது.
பல வண்ண மிளகாய்கள். நெய் மணம்கொண்ட, ஒயின் சுவை, இனிப்புச் சுவைகொண்ட மிளகாய்கள் குறித்த செய்தி வியப்பானதாக உள்ளது. பூத்ஜெலோக்கியா என்ற பெயருக்கான காரணமும் இப்பகுதியில் உண்டு. எலுமிச்சைப் பகுதி அதனை விளைவிக்கும் முறைகளைக் கூறுகிறது. உலகளவில் அதனை அதிகம் விளைவிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அதுவன்றி ‘லெமன் சிட்டி‘ என்ற சிறப்பினைக்கொண்ட நகரமாக நெல்லை மாவட்டத்தின் உடன்குடி திகழ்வதனையும் நூலாசிரியர் கூறியுள்ளார்.
நாள்காட்டிகள் உருவான முறை குறித்த கட்டுரைகளில் தமிழாண்டின் துவக்க நாளென்பது தை மாத முதல் நாளோ, சித்திரை மாதத்தின் முதல் நாளோ அல்ல, மார்ச் மாதத்தின் 21ஆம் நாளே என ஒரு மாறுபட்ட தகவலை முன்வைக்கிறார் பாலசுப்பிரமணியன். உலகில் அனைத்து நாகரிகங்களிலும், நாடுகளிலும் ஆண்டிற்கு 12 மாதங்கள் என்னும் முறை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது,
27 நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள், அவற்றிற்கான வடமொழிப் பெயர்கள் குறித்த செய்திகள் சுவாரசியமளிப்பவை மட்டுமல்லாது, நூலாசிரியரின் ஆழ்ந்த புலமையினைப் புலப்படுத்துகிறது. மாதங்களைக் கணக்கிடும் பகுதியில் லத்தீன் மொழிச் சொல்லினையும், ரிக் வேதத்திலிருந்து ஒரு சொற்றொடரையும் பாலசுப்பிரமணியன் கூறுகிறார். சூரியன் வருடத்தின் இரண்டு நாள்களில் மட்டுமே மிகச்சரியாக கிழக்கில் உதிக்கிறது என்றும் பதிவிடுகிறார்.
நிறைவாக்கிட இரு அரியவகை விலங்குகள் குறித்தும் ஆசிரியர் பதிவிடுகிறார். பெரும்பாலான வைரஸ் கிருமிகள் ஏன் சீனநாட்டிலிருந்தே பரவுகின்றன என்பதைத் தக்க விளக்கங்களுடன் கூறியுள்ளார். நல்லங்கு என்னும் எறும்புண்ணி பற்றியும் பொருத்தமான படங்களுடன் கூறுகிறார். இதுகாறும் உலகில் தோன்றிய வைரஸ்கள், அதன் தாக்கங்கள் குறித்த தகவல்களையும் இப்பகுதியில் கூறுகிறார். இன்னும் பொதுவான கட்டுரைகளாக சூயஸ் கால்வாய் தோன்றிய வரலாற்றுக் குறிப்புகளுடன் அது இன்றுள்ள நிலையினை அடைய எவ்வித இடர்பாடுகளைச் சந்தித்து சமகாலத்தில் அதன் ஈட்டும் வருவாய், உலக வர்த்தகத்தில் அதன் தாக்கம், பங்கு குறித்தும் விளக்கிக் கூறுகிறார்.
இவ்வாறு ஒரு முழு அறிவியல் மட்டுல்லாது வரலாறு, சுற்றுச்சூழலியல் போன்ற பல செய்திகளைத் தக்க விளக்கங்களுடன் கூறுவது சிறப்பு. இந்நூலினை பள்ளி நூலகங்கள் சேர்த்து வைப்பதுடன் பரந்த அளவில் மாணாக்கர்களுக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கத் தூண்டுவது நல்லதொரு முயற்சியாக அமையும். மேலும், பள்ளிகளில் சிறப்பு நிகழ்வுகளாக தக்க ஆசிரியர்களைக்கொண்டு மாணாக்கர்களையும் சேர்த்து விளக்கமான விவாதங்களுக்கு உட்படுத்துவது மாறுதலான முயற்சியாகலாம்.
தோழர் பாலசுப்பிரமணியன் வானிலையாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். அறிவியல் அறிந்தோர் அனைவரும் நூல் எழுதிட இயலாது. அதற்கு ஆழ்ந்த அறிவும், அயராத ஆர்வமும் அவசியம். தானறிந்ததை யாவரும் அறிய வேண்டும் என்னும் வேட்கையும் தேவை. இவற்றை ஒருங்கே பெற்றுள்ள தோழர்.பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வரால் விருது பெற்றதே இதற்கு தக்கதொரு சான்று. அவரது இந்த இருபத்து மூன்று கட்டுரைகளின் வழியாக சிறார்களுக்கு மற்றும் வளரிளம் பருவ மாணாக்கர்களுக்காக மட்டுமல்லாது, கற்போரும், கற்பிப்போரும் மற்றும் அனைத்துத் தரப்பு வாசகர்களுக்காகவும் எளிய மொழியில் அளித்துள்ளார்.
சில கட்டுரைகள் மாறுபட்டதாகவும், சுவைமிக்கதாயும், சுவாரசியமிக்கதாகவும் அமையப் பெற்றுள்ளன. இத்தகைய கட்டுரைகள் இதுகாறும் அறியப்படாததாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனை பாரதி புத்தகாலயம் ‘புக்ஸ் பார் சில்ரன்‘ வரிசையில் பதிப்பித்துள்ளது கூடுதல் சிறப்பு.