மயிலம் இளமுருகு
மனிதர்களை மனிதர்களாகக் கருதும், நடத்தும் போக்கே ஜனநாயக முறையாகும். ஆனால், இன்று முற்றிலும் மதவாதத்தாலும் இனத்தின் பெயராலும் சமூகத்தைச் சீரழிக்கும் காட்சிகள் நடந்தேறிக்கொண்டு வருகிறது. ஆதிக்காலம் முதலே ஆட்சி செய்பவர்களையும் அநீதியை நிலைநாட்டுபவர்களையும் கேள்வி கேட்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இது வரலாறு. உலகின் மொழிகளில் உள்ள இலக்கியங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. ‘இந்தியாவில் RSSயை அறிந்துகொள்வோம்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பதிப்பாக பாரதி புத்தகாலயம் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நூலை சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதியுள்ளார். இவர் தில்லிப் பல்கலைக் கழகத்தில் சமூக அறிவியல் துறைத் தலைவராக (1973-2013 வரை) இருந்து ஓய்வு பெற்றவர். கட்டுரையாளர், வீதி நாடகவியலாளராகவும் விளங்குகிறார். இவர் ஆகச் சிறந்த நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ஆர்எஸ்எஸ் குறித்து, RSS-Marketing Fascism as Hindu Nationalism, Indian Freedom Movement and RSS, Hindu Nationalism and RSS, Savarkar unmasked என்ற புத்தகங்கள் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எண்ணற்ற புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
‘ஆர்எஸ்எஸ்-இன் ஆவணங்களிலிருந்தே ஆர்எஸ்எஸ்-ஐ அறிந்துகொள்வோம்’ என்னும் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் 14 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இந்தி மற்றும் உருது மொழிகளிலும் ஏற்கெனவே வெளியாகி இருக்கிறது. தற்போது ச.வீரமணி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் ‘தீக்கதிர்’ தில்லி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். சலபதிராவ்-ன் ஜவஹர்லால் நேரு, டபிள்யு.என்.குபேரின் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் வரலாறுகளையும், மோடி அரசாங்கம்-வகுப்புவாதத்தின் புதிய அலை, சீத்தாராம் யெச்சூரி-நாடாளுமன்ற உரைகள், டி.கே.ரங்கராஜன் – மாநிலங்களவை உரைகள்-கடிதங்கள் உள்ளிட்ட எண்ணற்ற புத்தகங்களை இவர் தமிழாக்கம் செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ், தன்னை ஒரு கலாச்சார ஸ்தாபனம் என்று கூறிக்கொண்டாலும், பா.ஜ.க. என்னும் அதன் ஓர் அங்கத்தின் மூலமாக இந்தியாவை மிகவும் இரக்கமின்றி ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஜனநாயகத்திற்கு எதிரான சமத்துவத்திற்கு எதிரான, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான, பாலின சமத்துவத்திற்கு எதிரான மற்றும் மதசார்பின்மைக்கு எதிரான ஓர் அமைப்பாகும். இயல்பாகவே தேசத்திற்கு விரோதமான, மனிதநேயத்திற்கு விரோதமான மற்றும் முழுமையாக சாதியக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஓர் அமைப்பானது, உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டை ஆண்டுகொண்டிருப்பது என்பது துயரார்ந்த விஷயமேயாகும் என்கிறார் நூலாசிரியர்.
இந்தப் புத்தகமானது, ஆர்.எஸ்.எஸ்.-இன் உண்மையான குணத்தை அதன் சொந்த ஆவணங்களிலிருந்தே மக்கள் முன் வைப்பதற்கான ஒரு முயற்சியேயாகும். இந்தப் புத்தகமானது ஆங்கிலம், இந்தி, உருது, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்போது தமிழில் மிகவும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான தோழர் ச.வீரமணி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவருகிறது (தோழர் ச.வீரமணி அவர்கள். தோழர் தஞ்சை ரமேசுடன் இணைந்து ஏற்கெனவே ‘முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்’ என்னும் நூலைத் தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.) ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது. இப்போது தமிழர் நாகரிகத்தின் உயரிய மாண்புகளை ஒழித்துக்கட்ட முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்தப் புத்தகம் வெளியாவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் என்று நூலின் முன்னுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி போன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கம் (1998-2004இல்) ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே ஆர்.எஸ். எஸ். இயக்கமானது ஜனநாயக மதச்சார்பற்ற அரசியலையும், சிறுபான்மையினரையும் ஒழித்துக்கட்டும் தங்கள் கடந்த கால நடவடிக்கைகளில் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கிவிட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவராக இருந்த சுதர்சன், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். துவங்கப்பட்ட 75ஆவது அமைப்பு தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சி தொடர்பாக நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தேசத்தில் வாழும் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் தங்கள் தேசப்பற்றை நிரூபித்திட வேண்டும் என்று கோரினார்.
1948இல் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்வதில் கைகோர்த்துக் கொண்டிருந்ததற்காகவும், பின்னர் 1992இல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததற்காகவும் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் என்று அதன் தலைவர்களுக்கு மீண்டும் நாம் நினைவுபடுத்த வேண்டுமா? மேலும் இந்தியா தனக்குள்ளாகவே முடமாகி, சண்டையிட்டுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. போன்ற இந்தியாவின் எதிரிகள் விரும்புகிறார்கள். பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை அவர்களைப் போன்றவர்களுக்கு உதவியது என்று ஆர்.எஸ். எஸ். தலைவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது அவசியமா? என்ற சரியான கேள்வியை இந்நூல் முன்வைக்கிறது .

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உண்மையான முகத்தையும் அதன் நோக்கங்களையும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் அதன் உண்மையான சொரூபத்தை மக்கள் நன்கறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தில் 11 கட்டுரைகள் உள்ளன. இவை அனைத்தும் வினாக்களும் விடைகளுமாக அமைந்துள்ளன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாசிசத்தையும் ஹிட்லரையும் வழிபடுகிறது என்பது உண்மையா?
முற்றிலும் உண்மை. ஹிட்லர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினருக்கு ஒரு மாபெரும் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. ஹிட்லரின் சர்வாதிகார நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டுதான் இந்துத்துவா கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதில் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள் தொடர்பாக பாசிஸ்ட் கண்ணோட்டத்தை, எம்.எஸ். கோல்வால்கர், தன்னுடைய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’ (Wé or Our Nationhood Defined) என்னும் நூலில் மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறார்.கோல்வால்கர் இந்தப் புத்தகத்தில், ஹிட்லரின் நாஜிக் கலாச்சார தேசியவாதத்தை வழிபட்டுக் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்: “ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாய்ப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்குச் சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. எனத் தகுந்த ஆதாரங்களை இந்நூலாசிரியர் விளக்கியிருப்பது கவனத்திற்குரியது.
ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருந்திருக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925இல் அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது.
மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் ‘பூரண ஸ்வராஜ்யம்’ அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப்பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்தச் சமயத்தில் தேசிய இயக்கத்தின் அடையாளமாக இருந்த மூவர்ணக் கொடிக்கு வணக்கம் செலுத்தி, சுதந்திர தினத்தைக் கொண்டாடிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால், இதனை நிராகரித்ததுடன், அனைத்து ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் காவிக் கொடியைத்தான் (Bhagwa Jhanda) வணங்கிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். -இன் தலைவராக இருந்த கே.பி. ஹெட்கேவார் அனைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வரையிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எந்தவொரு நிகழ்விலும் மூவர்ணக் கொடியோ அல்லது தேசியக் கொடியோ ஏற்றப்பட்டது இல்லை என்பதைக் கவனித்திட வேண்டும். முரளி மனோகர் ஜோஷி போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் காஷ்மீர், ஸ்ரீநகரில் லால்சவுக்கில் 1991இல் ஜனநாயகத்தின் மீதான தங்கள் பற்றுதலைக் காண்பிப்பதற்காக மூவர்ணக்கொடியை ஏற்றியிருக்கலாம். அதேபோன்றே இஸ்லாமியர்களின் மதராசாக்களில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக் கொண்டிருக்கலாம். இருப்பினும் ஆர்.எஸ்.எஸ் மூவர்ணக்கொடியைக் கண்டித்தும் கேவலப்படுத்தியும்தான் வந்திருக்கிறது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அறிக்கைகளிலிருந்து விளக்கம் தருகிறது இந்நூல்.
ஆர்.எஸ்.எஸ். கோருகிறபடி மனுஸ்மிருதி இந்திய அரசமைப்புச் சட்டமாக மாற்றப்பட்டால், சூத்திரர்கள் (தலித்துகள்) மற்றும் பெண்களின் நிலை என்னாகும்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவு கீழ்த்தரமாக ஆர்.எஸ்.எஸ். கருதிக்கொண்டிருக்கிறது என்பதற்கு, ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களால் புனிதப் புத்தகமாகக் கருதப்படும் கோல்வால்கரின் ‘சிந்தனைத் துளிகள்’ (‘Bunch of thoughts’) என்னும் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் பார்த்தோமானால் தெரிந்துகொள்ள முடியும். அவர் அதில் எழுதியிருப்பதாவது:
“நம்முடைய அரசமைப்புச் சட்டம் என்பது மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச் சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதம்பமாகும். இதில் நமக்குச் சொந்தமானவை என்று கூறக்கூடிய விதத்தில் எதுவும் இல்லை. நம்முடைய தேசியத் திட்டப்பணி (National mission) என்ன என்பது குறித்தோ அல்லது நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன (key note in life) என்பது குறித்தோ ஒரு வார்த்தையாவது இதில் இருக்கிறதா?” உண்மையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது சூத்திரர்களை (தலித்துகளை)யும், பெண்களையும் மிகவும் இழிவுபடுத்திடும் மனுஸ்மிருதி என்கிற மனுநீதியை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது.
நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா, ஆர்.எஸ்.எஸ். விரும்பும் விதத்தில் மனுஸ்மிருதியை அரசமைப்புச் சட்டமாகக் கொண்டு, ஓர் இந்து ராஷ்ட்ரமாக மாற்றப்பட்டால், இது சிறுபான்மையினரை மட்டும் முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக மட்டும் இருந்திடாது. இது, மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பதற்கு இணங்க, இந்துப் பெண்கள், சூத்திரர்கள் (தலித்துகள்) மற்றும் பழங்குடியினரின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளைப் பறிப்பதற்கும் இட்டுச்செல்லும். என்கின்ற நிலைப்பாட்டை பறைசாற்றுகின்றார் சம்சுல் இஸ்லாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போதாவது மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, சிறுபான்மையினர், இந்திய தேசத்திற்கு முழுமையாக விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அதே சமயத்தில் அது, இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துத் தந்துள்ள அரசமைப்புச் சட்டத்திற்கும் மற்றும் நாட்டின் பல்வேறு சட்டங்களுக்கும் விசுவாசமாக இல்லை என்பதும் முக்கியமான விஷயமாகும்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் ஊழியர் கூட்டங்களில் பின்பற்றப்படும் பிரார்த்தனைகளிலிருந்தும், உறுதிமொழிகளிலிருந்தும் உண்மையில் அவர்கள் இந்திய தேசியத்தை, இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறார்கள் என்பதைக் காண முடியும். எப்படி, முஸ்லிம் லீக், தேசியத்தை இஸ்லாமுடன் சமப்படுத்திப் பார்க்கிறதோ அதேபோன்றே ஆர்.எஸ்.எஸ்., இந்திய தேசியத்தை இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளின்படி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே அடிப்படைக் கட்டமைப்பாக விளங்கும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது இப்படியொரு பகைமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகையில் அதன்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செயல்படும் அதன் ஊழியர்கள், ஒன்றிய அரசிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி புரிகையில் கூட்டாட்சித் தத்துவத்தை எந்த அளவிற்கு அழித்து ஒழித்திடமுடியுமோ அந்த அளவிற்கு ஆட்சி செய்யவே முயற்சிக்கிறார்கள். இவர்கள் பல மாநிலங்களில் தற்போது ஆட்சிபுரிந்து வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
உண்மையில் மோடி அரசாங்கமானது உத்தர்காண்ட் மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்களைக் கலைப்பதற்காக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.
காந்திஜி கொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது ஏன்?
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேச விரோத நடவடிக்கைகளுக்காகத்தான் அது 1948 பிப்ரவரி 4 அன்று தடை செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்வதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது:
‘ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர்கள் விரும்பத்தகாத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாட்டின் பல பாகங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உறுப்பினர்கள் தீ வைப்பு, கொள்ளை, கூட்டுக்கொள்ளை, கொலை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். சட்டவிரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் சேகரித்திருக்கிறார்கள்’ என இவ்வாறாக ஒவ்வொன்றிற்கும் சான்றுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
1948இல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலால் தடை செய்யப்பட்டது சம்பந்தமான அதிகாரபூர்வ ஆவணங்கள் இல்லையாம். காந்திஜி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பொறுப்பாக்கி அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அவ்வியக்கத்தைத் தடை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது சம்பந்தமாக எவ்விதமான ஆவணமும் உள்துறை அமைச்சகத்திடம் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் அரசியல் செயற்பாட்டாளர் பி.பி. கபூர் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வந்திருக்கிறது.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க. பரிவாரங்கள் தங்களுக்கு எதிரான ஆவணங்கள் எதுவும் அரசாங்கத்தின் அலுவலகங்களில் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்து அவற்றை அப்புறப்படுத்திவிட்டன என்பதும், வருங்காலங்களில் ஆராய்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் ஆவணங்களை ஆய்வு செய்தால் அவர்களுக்கு வரலாற்றில் தங்களின் இழிவான பங்களிப்பு குறித்து துப்பு எதுவும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது.”
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ்./பாஜக பரிவாரங்கள் இப்போது தாங்கள்தான் நாட்டில் மிகுந்த தேசப்பற்று மிகுந்தவர்கள் என்றும், தங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு இவ்வாறு கூறும் இவர்கள், 1947 ஆகஸ்டில் நாடு சுதந்திரம் பெறுவதற்குமுன், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக எப்போதாவது ஏதாவது போராட்டத்தை நடத்தியிருக்கிறார்களா என்று மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
காலனிய ஆட்சிக்கு எதிராக அவ்வாறு இவர்கள் ஏதாவது போராட்டம் நடத்தியிருந்தால், அத்தகைய போராட்டம் எதிலாவது எவராவது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அந்தத் தலைவரின் பெயரையாவது அல்லது ஊழியர்களின் பெயர்களையாவது இவர்களால் கூறமுடியுமா? இவ்வாறு இவர்கள் போராட முன்வரவில்லை என்பது மட்டுமல்ல; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட முன்வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
இந்துத்துவா ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இழிவுபடுத்திவிட்டு அவர்களிடத்தில் பிரிட்டிஷாருக்கு வெண்சாமரம் வீசியவர்களைத் தேசபக்தர்கள் என்பதுபோல் தூக்கிப்பிடிக்க முயலும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று தன் கருத்தை மிகத்தெளிவாக முன்வைத்துள்ளார் ஆசிரியர்.
பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், அஸ்பகுல்லா கான் போன்ற விடுதலைப் போராட்டத் தியாகிகளை ஆர்.எஸ்.எஸ். மதிக்கிறதா?
ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவர்தம் தோழர்கள் போன்ற புரட்சியாளர்களால் தலைமை தாங்கப்பட்ட விடுதலை இயக்கத்தை எப்போதாவது ஆதரித்துள்ளதா என்பதற்கு எவ்விதமான ஆவணச்சான்றும் கிடையாது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ்.. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக காந்திஜி போன்ற தலைவர்களாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தவாத மற்றும் மிதவாத இயக்கங்களைக்கூட வெறுத்த ஓர் இயக்கமாகும்.
தியாகிகள் மேற்கொண்ட இயக்கங்களைக் கண்டித்து ‘சிந்தனைத் துளிகள்’ புத்தகத்தில் எழுதியிருக்கும் வரிகள் நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு ஹெட்கேவார் இளைஞர்களை பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்களின் பாதையைக் கைவிட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கு உதவியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம், தான் ஓர் அரசியல் சார்பற்ற இயக்கம் என்று சொல்லிக்கொண்டே தேசிய அரசியலில் எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது?
ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக-கலாச்சார அமைப்பு என்றும் அதற்கும் அரசியலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் அடிக்கடி கூறப்படுவதை நாம் கேட்டிருக்கிறோம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரபூர்வ இதழான ‘ஆர்கனைசர்’, தன்னுடைய 2000 பிப்ரவரி இதழின் தலையங்கத்தில் இதுதொடர்பாகக் கூறியிருந்ததாவது:
“ஆர்.எஸ்.எஸ். ஓர் அரசியல் கட்சி அல்ல. அது தேர்தலில் பங்கேற்பதில்லை. அதன் நிர்வாகிகள் எவரும் எந்தவொரு அரசியல் கட்சியிலும் நிர்வாகிகளாக மாறமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.க்குத் தேர்தல் சின்னம் கிடையாது. அதன் தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ எப்போதும் அரசியல் பதவிகளைத் தேட முயற்சிக்க மாட்டார்கள். அது அனைத்து தேசிய நடவடிக்கைகளையும் ஊக்குவித்திட முயலும் ஒரு சமூகக் கலாச்சார அமைப்பாகும்.”
ஆனால், அரசியல் சம்பந்தமாக ஹெட்கேவாரும், கோல்வால்கரும் கூறியிருப்பவைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது இதனை ஏற்றுக்கொள்வது சிரமம் என்பதை உணர முடியும். இரு தரப்பினரும் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் மத்தியில் கலகம் விளைவிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.” என்பதின் மூலமாக ஆர்.எஸ்.எஸ். இன் செயல்பாட்டை ஆசிரியர் தன் ஆய்வின் மூலமாக சமூகத்திற்கு எடுத்துக்கூறுகிறார்.
பசுவும் ஆர்.எஸ்.எஸ்.-ஸும்: கட்டவிழ்த்துவிடும் பொய்களுக்கு முடிவே இல்லை
மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்துத்துவவாதிகள் ‘அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்’, ‘புனித ஜிகாத்’ (‘love jihaad’), ‘தாய்வீட்டுக்குத் திரும்புங்கள்’ (‘ghar wapsi’) என்று முழக்கமிட்டு வந்தவர்கள் இப்போது, பசுவின் மீது சவாரி செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ‘புனிதமான பசுக்களைப் பாதுகாக்கிறோம்’ என்ற பெயரில் முஸ்லிம்களையும், தலித்துகளையும் கொலை செய்வது, ஊனப்படுத்துவது, கொள்ளையடிப்பது என்று கொலைபாதகச் செயல்களை ஏராளமாகச் செய்திருக்கிறார்கள்.
மதவெறித் தீயை உருவாக்க முடியவில்லை என்றால், காரணத்தை மாற்றி வேறு காரணத்தைக் கண்டுபிடித்திட வேண்டும். ‘ராமர் கோவிலைக் கட்டுவோம்’, ‘முஸ்லிம்களாகவும் கிறித்தவர்களாகவும் மாறியவர்களை மீளவும் தாய் மதத்திற்குக் கொண்டுவருவோம்’, ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’), என்று குரல் எழுப்பி வந்தவர்கள் இப்போது மக்களைப் பிளவுபடுத்திட பசுவைக் கையில் எடுத்திருக்கிறார்கள். பசுப் பிரச்சனையே இந்தியாவில் இப்போதுள்ள ஒரே பிரச்சனை என்பதுபோல் அவர்கள் கைகளில் எடுத்திருப்பதன்மூலம் வறுமை, வேலையின்மை. தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடியினர், விவசாயிகள். உழைக்கும் வர்க்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட முயற்சிக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். எப்படி பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு நிறுவனங்களுக்கு உதவுகிறது?
இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை அடிபணியச் செய்வதற்கான முயற்சிகளில் பாகிஸ்தானின் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமே கிடையாது. இதேபோன்றே அமெரிக்க உளவு ஸ்தாபனமான சிஐஏ, ரஷ்யாவின் உளவு ஸ்தாபனமான கே.ஜி.பி. மற்றும் இஸ்ரேல் உளவு ஸ்தாபனமான மொசாட் போன்றவைகளும்கூட இந்தியா ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்று விரும்பும் என்பதற்கும் உத்தரவாதம் ஏதும் கிடையாது.
எனினும் இந்தியாவை வலுவிலக்கச் செய்வதற்கான சூழ்ச்சிகளை அதிக அளவில் மேற்கொண்டுவரும் ஐ.எஸ்.ஐ. தொடர்பாக விசாரணைகளை ஆழமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
”நாம் ஒரு பழைய தேசத்தைச் சேர்ந்தவர்கள், பழைய தேசத்தவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி நம்மை நாம் நிர்வகித்துக்கொள்வோம், நம் நாட்டில் வாழ்வதற்கு முன்வரும் அந்நிய இனத்தினரையும் அந்த விதத்திலேயே கையாளுவோம்.”
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்.-ஸின் கூற்றின்படி இஸ்லாமையும், கிறித்தவத்தையும் பின்பற்றுபவர்கள் இந்தியாவுக்கு ‘உள்ளார்ந்த அச்சுறுத்தல்கள்’ (‘Internal Threats’) ஆவர். ஏனெனில், இவர்கள் ‘அந்நிய’ மதங்களைச் (‘foreign’ religions) சேர்ந்தவர்கள். அதே சமயத்தில், சீக்கியமதம் (Sikhism), புத்த மதம் (Buddhism) மற்றும் சமண மதம் (Jainism) போன்ற நாட்டின் பூர்விக மதங்கள் (‘native’ religions) கூட சுயேச்சையான மதங்களுக்கான அந்தஸ்தை அளிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ். இந்த மதங்களை இந்து மதத்தின் அங்கங்களாகவே கருதுகிறது.
நாடு பிரிவினை அடைவதற்கு முன்பே முஸ்லிம் லீகைப் போன்றே ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இரண்டு தேசக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்தது
இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் குறித்து இவ்விரு இயக்கங்களுமே தனித்தனி குணாம்சங்களையும், பிரத்யேகத் தன்மைகளையும் பெற்றிருக்கின்றன. உண்மையில், முஸ்லிம் லீக் கூறுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே வி.டி.சாவர்க்கர் இந்தியாவில் இரண்டு தேசக் கொள்கையை முன்மொழிந்தவராவார்.
ஆர்.எஸ்.எஸ்.-ஸின் நிறுவனரான ஹெட்கேவார், இந்து மகா சபையைச் சேர்ந்த வி.டி.சாவர்க்கரை, தன்னைச் செதுக்கியவர் என்றும், தன்னுடைய தத்துவஞானி மற்றும் வழிகாட்டி என்றும் கருதினார். சாவர்க்கரின் சரிதையை அதிகாரபூர்வமாக எழுதியுள்ள தனஞ்செய் கீர், இவ்விருவருக்கும் இடையே இருந்த பிணைப்பு நூலில் தரப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் குறித்து தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவி செய்யும். வினா-விடை அமைப்பில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர் ச. வீரமணி அவர்கள் இப்புத்தகத்தை மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளார்.
சமூகப்பொறுப்புள்ள இப்பணியில் நூலை எழுதிய சம்சுல் இஸ்லாம் அவர்களுக்கும் சிறப்பாக மொழிபெயர்த்த ச.வீரமணி அவர்களுக்கும் நூலை நன்கு பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.