என்.சிவகுரு
இந்தப் புத்தகத்தின் தலைப்பே நம்பிக்கையை விதைக்கும் சொற்கள். பொதுவாக நேர்காணல்கள் தனி மனித சாகசத்தை, தனியாக எதிர்கொண்ட சவால்கள், தன்னின் அடையாளம் உலகுக்குத் தெரியப்படுத்த எடுத்த முயற்சிகள் என வட்டமடித்துக்கொண்டே இருக்கும். ஒரு சில விதிவிலக்குகள் நிச்சயமாக இருக்கும். ஆனாலும் சமகாலத்தில் நேர்காணல் நூல்களில் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது அவர்களின் நேர்காணலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டது. அது ஒரு விசாலமான மார்க்சிய உலகளாவிய புரிதலை உண்டாக்கியது. ஒரு நேர்காணல் நூல்போல் அல்லாமல், புது சித்தாந்த கதவுகளைத் திறக்கும் திறவுகோல் போல் இருந்தது.

அதே உணர்வை எனக்கு இந்த நேர்காணல் புத்தகம் அளித்தது.
மாறாது என்று எதுவுமில்லை.
சவாய் கரம்சாரி அந்தோலன் எனும் விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பை உருவாக்கிய ஒரு சமூகப் போராளியின் மகத்தான சமூக நீதிக்கான உரிமைப் போராட்டத்தின் சாட்சி.
நேர்காணல் செய்தவரோ திருமிகு பெருமாள் முருகன். 125 பக்கங்களே கொண்ட ஒரு சிறு புத்தகம். ஆனால், அந்தக் குறைவான பக்கங்களில் இந்த சமூகத்தின் இன்றும் நீடித்துக் கொண்டிருக்கும் ஓர் அவலத்தை, துயரத்தை, வலியை, வேதனையை தானும் தன்னோடு பயணிக்கும் போராளிகளும் எவ்வாறு இந்தக் கொடுமையை எதிர்கொண்டு கடக்கிறோம் என்பதை புரிதலோடு பகிர்கிறார். பொதுவாக நேர்காணல் நூல்களில் யாரை பேட்டி எடுக்கிறோமோ அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கும்வரை சுற்றிச் சுற்றி கேள்விகளைக் கேட்பார்கள்.
ஒரு நாகரிகமான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளராயிற்றே… கேள்விகள் மிக சுருக்கமாகவும், ஆழப் பொருள் பொதிந்ததாகவும் இருப்பதால், வாசிப்பு எளிதாக உள்ளது.
பெஜவாடா வில்சன் எனும் போராளி:
கையால் மலம் அள்ளுதல் எனும் இழி தொழிலில் ஈடுபடும் ( பிரதமர் நரேந்திர …..டி பாணியில் சொன்னால் புனிதத் தொழில்… முழுதுமாக பெயர் சொன்னால் வழக்கை சந்திக்க வேண்டும். ஆகவே, முழுப் பெயரை பதிவிடவில்லை) செய்வோரின், துன்பம் நிறைந்த வாழ்க்கையை மாற்றிட வேண்டும் என இளவயதிலேயே முடிவெடுத்து, அவர்களை ஒன்றுதிரட்டி, புதுப் புரிந்துணர்வைக் கொடுத்து, இந்த இழிதொழிலிலிருந்து விடுபட வைப்பதற்கான பெரும்பணியினை செய்துகொண்டிருக்கும் மகாசேசே விருது பெற்ற சாதனையாளர்.
இவர் எடுத்த பல்முனை முயற்சிகள், அரசுகளின் அலட்சியம், ஒரு சமூகத்தை மீண்டும் மீண்டும் சமூகப் படிநிலையில் கீழேயே வைத்திருப்பது, அதற்கென செய்யப்படும் சாகசங்கள் என விளக்கமாக கேள்விகளின் வழிநின்று சொல்கிறார். பதில்களில் தடுமாற்றம் இல்லை, ஒரு சிறு விலகலும் இல்லை. ஒவ்வொரு கேள்வியையும் திரு. பெருமாள் முருகன் அளந்துதான் கேட்கிறார். அதை மிக நுணுக்கமாக உள்வாங்கிக் கொண்டு நேர்த்தியான, பண்பட்ட பதிலைத் தருகிறார் தோழர் பெஜவாடா வில்சன்.
முதலில் வாசகனின் சிந்தனையில் ஒரு தெளிவான புரிதலை உண்டாக்குகிறார். அதாவது, நம்மில் சிலர் இன்னும் தட்டையான வாதங்களை வைக்கிறோம். அதாவது உலர் கழிவறைகள் (DRY LATRINES,) பயன்பாட்டிலேயே இல்லையே, எங்கே இருக்கிறது இவர்களின் பிரச்சனை…சும்மா வெட்டியாக ஒரு கூட்டம் தேவை இல்லாமல் கூச்சலை எழுப்புகிறது… செயல்படும் அரசுகளுக்கு அவப்பெயரை உருவாக்குவதே நோக்கம் போன்ற பேச்சுகளை தன்னுடைய நியாயமான கருத்துக்களால் தவிடு பொடியாக்குகிறார். அதேபோல ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மீது இந்த வன்கொடுமை திட்டமிட்டு திணிக்கப்படுகிறது என்பதை நுணுக்கமான, வலுவான ஆதாரங்களோடு நிராகரிக்க முடியாத அளவுக்கு பதில் அளிக்கிறார்.
ஓர் உதாரணம்… ஓரிடத்தில் கேள்விக்குப் பதில் அளிக்கும்போது உணவுத் தயாரிப்பு, விற்பனை, என்பதையெல்லாம் தொழிலாகக் கருதி தேவைக்கேற்ப புதிய உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், அந்த உணவை உண்டு வெளி வரும் மலத்தை அகற்றுவது தொழிலாகக் கருதாமல் அது பழங்காலத்தில் எப்படி இருந்ததோ அதை அப்படியே நீட்டிக்க வைப்பது என்ன நியாயம்? இந்தக் கேள்விக்கு யாருமே பதிலளிக்கவில்லை எனபதே உண்மை என்கிறார் தோழர் வில்சன்.
பாதிக்கப்பட்டவர்களின் முழு வாழ்வியலை அலசி ஆராய்ந்துள்ளார். கிட்டத்தட்ட
25 பக்கங்கள் இந்தியா முழுதும் இந்த இழி தொழிலில் ஈடுபடும் மக்களின் அன்றாட நடைமுறை, குடும்பச் சூழல், பொருளாதார சார்பு, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், குழந்தைகளின் படிப்பு, வளரும் சூழல், வறிய நிலையால் வாங்கப்படும் கடன்கள், அதற்காகக் கட்டப்படும் வட்டி, அதையொட்டி நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் புள்ளிவிவரங்களோடு, ,தரவுகளோடு பகிர்கிறார். என்னே ஒரு தீர்க்கம்… அதையுமே அழுத்தம் திருத்தமாக சொல்லும்போது எப்படி ஏற்காமல் இருக்க முடியும்?
நம்மோடு வாழும் சக மனிதனின் துன்ப துயரங்கள் நம்மிடத்தில் எந்த அசைவையும் ஏற்படுத்த முடியாமல் போவது எதனால் எனும் ஆழமான கேள்வியை நமக்கு (வாசகனுக்கு) வைக்கிறார். அந்தக் கேள்வி நம்மை முள்ளாய் தைக்கிறது.
இந்திய நீதிமன்றங்கள், அதனால் இயற்றப்பட்ட சட்டங்கள், இன்றளவில் அதன் பொருத்தப்பாடு என சகலத்தையும் ஒரு பத்து கேள்விகளுக்கான பதிலில் சொல்லி முடிக்கிறார். அந்தப் பக்கங்களைக் கடந்து போகும்போது இந்திய சட்ட திட்டங்கள் எவ்வளவு சார்புத் தன்மையோடு உள்ளது என்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தப் புத்தகத்தில் தலித் மக்களின் அரசியல், அவர்களை முன்வைத்து செய்யப்படும் அடையாள அரசியல் என எல்லாவற்றையும் பேசுகிறார் வில்சன். தற்போதைய அரசியல் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்கள், அதுவும் குறிப்பாக பிஜேபி ஆளும் மாநிலங்களின் நிலை என அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

மிகத் தேர்ந்த, சமூக அக்கறைகொண்ட, சுய விளம்பரம் செய்துகொள்ளாத, எந்த மக்களின் நலனுக்காக உழைக்கிறாரோ அவர்களின் நிலையை முழுவதுமாகப் புரிந்துகொண்டு, ஒன்றரக் கலந்து நின்று அம்மக்களின் சமூக மேன்மைக்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் ஒரு மகத்தான போராளியின் உண்மைப் பதிவுகள்.
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு நிச்சயமாக ஒரு குற்ற உணர்வு எழும். அது என்னவென்பதை வாசகர்களின் யோசனைக்கே விட்டுவிடுகிறேன். சமூக நீதிக்காக உழைக்கும் பல நல்ல உள்ளங்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு மிக முக்கியமான நூல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நம் நாட்டுப் பண்டையக் கலாச்சாரம், மாண்புகள் என சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கும் சூழலில் 21ஆம் நூற்றாண்டிலும் ஒரு இழி தொழில் இன்னும் நீடிக்கிறது என்பதும், அதற்காக ஒரு தனி மனிதன் பெரும் இயக்கத்தை உருவாக்கி அதை இன்றளவிலும் தொய்வின்றி எடுத்துச் செல்வதும் பெரும் வெற்றிப் பயணமே. அதைப் பாராட்டவும், துணை நிற்கவும், ஊக்கப்படுத்தவும், நம்மால் முடிந்த பணிகளை செய்யத் துவங்கினால் இந்தப் புத்தகத்தை வெறுமென படித்தோம் என நிற்காமல் அது நமக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என பொருள் படும்.