இரா.தெ.முத்து
‘மதராசப்பட்டினம் நிலத்தின் கதைகள்,’ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான ஆதம்பாக்கம் கல்வெட்டுகளில் இருப்பதைக் காணலாம். இந்தக் கல்வெட்டில் திருவொற்றியூர் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. அன்றைய நில வரிகள் மதராசப்பட்டினம் அன்று பல நாடுகளாக இருந்த செய்திகள் கொண்டதாக இருக்கின்றன.எழுமூர் நாடு, புழல் கோட்டம் என நிர்வாகம் செய்வதற்கான நாடுகளாக இருந்து ஒவ்வொன்றுக்குமான சிறு சிறு அரசர்கள் அரையர்கள் இருந்தனர் என்பதை கல்வெட்டுகள் ஆவணங்கள்வழி அறிகிறோம்.

நவீன காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே மெட்ராஸ் குறித்த இங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய அவர்களின் செயல்பாடுகள் குறித்த பதிவுகளை சிங்காரவேலர், சக்கரை செட்டியார், மகாகவி பாரதி, ரெட்டைமலை சீனிவாசன் எழுத்துகளில் வாசிக்கலாம். தொடர்ந்து வந்த புதுமைப்பித்தன், தமிழ்ஒளி, விந்தன், ஜெயகாந்தன் என அவர்களின் படைப்பிலக்கியங்களில் மெட்ராஸின் எளிய மக்கள் குறித்தவைகளை உணரலாம்.
சென்னை பற்றிய நூல்கள் இங்கு வாழ்ந்த மக்கள் பற்றிய தரவுகள்கொண்ட நூல்கள், கட்டிட அமைப்புகள், நீர்நிலைகள், கலைகள் பற்றிய நூல்கள் என வந்து கொண்டே இருக்கின்றன.
‘உறங்காநகரம் சென்னையின் இரவு வாழ்க்கை’ எனும் நூல், சென்னையின் இரவு குறித்த இந்த இரவுகளில் மனிதர்கள் எப்படியாக இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் எனப் பேசும் அழகான நூல். வெ.நீலகண்டன் பத்தாண்டுகளுக்கு முன்பு, ‘குங்குமம்’ வார இதழில் எழுதியவைகளை சந்தியா பதிப்பகம் 2010ல் பதிப்பித்திருக்கிறது.
வெ.நீலகண்டன் இன்று, ‘ஆனந்த விகடன்’ இதழின் துணையாசிரியராகப் பணியாற்றுகிறார்.
‘ராத்திரி, பகலெல்லாம் ஒலகத்துக்குத்தான்; உழைக்கிறதுக்கு இல்ல தம்பி!’ என சென்னை தி நகரின் ரங்கநாதன் தெருவை அண்டுவதற்கு ஆள் இல்லாத பழைய காலத்திலிருந்து பார்த்துவரும் முருகேசன் இன்றைய பரபரப்பான ரங்கநாதன் தெருவைப் பார்த்து மலைப்பதைப் பதிந்திருக்கிறார் வெ.நீலகண்டன்.
இன்று சென்னைப் பெருநகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக மாறிப்போன ஜவஹர்லால் சாலை எனும் நூறடிச் சாலை கோயம்பேடு பகுதிகள் போன்றவை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சாலை வசதிகள் அவ்வளவாக இல்லாத, போதுமான மின்விளக்குகளும் இல்லாத பகுதிகளாக இருந்தன என்பதை இந்தக் கட்டுரை எழுத்தாளர் இரா.தெ.முத்து அறிந்திருப்பதை இங்கு இடைச்செருகலாக சொல்லிக்கொள்கிறார்.

இருபத்தேழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த உறங்காநகரம் நூலின் ஓர் அத்தியாயம் ‘மீனுக்குள் கடல’ எனும் காரியார்த்தமான பொருள் பொதிந்த தலைப்பில் மீனவர்களின் கதையைக் காட்சிப்படுத்துகிறது.
சென்னையின் வங்கக்கடல் சார்ந்த கிழக்குக் கடற்கரைச் சாலை பழைய மவுண்ட்ரோடு எனும் அண்ணாசாலைக்கு நிகரான சாலை. நவீன சென்னை மாநகரத்தின் எந்த அடையாளங்களும் ஆர்ப்பாட்டங்களும் இல்லாத 44 மீனவக் குப்பங்கள், பரபரப்பான வங்கக்கடற்கரைச் சாலை எனும் காமராஜர் சாலைக்கு இடதுபுறமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதை இந்த அத்தியாயத்தில் சொல்கிறார் நீலகண்டன். அருகிலிருந்த கடல் தூரமாகிப் போய் மாப்பு எனும் மீனின் கடல் நகர்வுகள் பார்த்து தொழில் செய்த காலம் மாறிப் போனதை , பிடித்துவரும் மீன்களை சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்ளும் மீனவர்களின் சமத்துவப் பண்பாட்டையும் இதன்வழி அறியலாம்.
‘அழுக்கு வாழ்க்கை’ எனும் தலைப்பு இன்றைய, ‘விட்னஸ்’ திரைப்படம் பேசிய தூய்மைப்பணியாளர்களைப் பேசும் அத்தியாயம். சென்னையின் அருகருமாமை இடங்களில் நடுஇரவில் பணியாற்றும் இந்தப் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி, அவரவர் கொண்டுவரும் உணவை கதம்பச்சோறாக்கி கலந்து சாப்பிடும் தோழமைப் பண்பை உள்ளடக்கி இவர்களின் பல சிரமங்களைப் பேசுகிறது.
டாக்டர்களுக்கு இருபத்துநான்கு மணி நேர டியூட்டி; நர்ஸ்களுக்கு மாதத்தில் எட்டு நாள்கள் இரவு டியூட்டி, இரவுப் பணி முடித்து வீட்டிற்குப் போகும் மருத்துவர்கள், நர்ஸ்கள் நார்மலாக சில மணி, நேரங்கள் ஆகும் அவர்களின் உளவியல் எனப் பொதுவாக அறிந்த மருத்துவ உலகத்தை நெருக்கமாக உணர்த்துகிறது, ‘அபயக்குரல்களும் நிசப்தமும்’ தலைப்பிட்ட சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவப் பணியாளர்களின் அனுபவங்கள் பற்றிய இந்த அத்தியாயம்.
பகலில் அறிந்த சென்னை, பளீரென்று அழகாக, படபடப்பாக, பரபரப்பாக இயங்கும் சென்னை இவ்விதமாக இயங்க இன்னொரு இரவு வாழ்வும் இரவுகளும் அது சார்ந்து இயங்குபவர்களும் அவசியப்படுகிறது.இந்த இரவுகளின் அனுபவங்கள் இனிமையானது அல்ல; நெருக்கடிகளால், துயர்களால் நிரம்பியது என்பதை உணர்த்துகிறது வெ.நீலகண்டனின் ‘உறங்காநகரம் சென்னையின் இரவு வாழ்க்கை’ நூல்.