உலகை மாற்றிய பெரிய சக்தி புத்தகமும் புத்தக வாசிப்பும்தான் என்பதை உணர்ந்து தமிழகத்தில் உலக புத்தக தினத்தை பாரதி புத்தகாலயம் தோழமை அமைப்புகளோடு இணைந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாக வாசகர் எழுத்தாளர் சந்திப்பு புத்தகப் பகிர்வு, புத்தக வாசிப்பு, மராத்தான் என பல வகையாக நிகழ்வுகள் மூலம் கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினம் எழுத்துக் காப்புரிமை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பு 1995ல் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தக தினமாக அறிவித்தது. புத்தகப் பதிப்பு, வெளியீடு மற்றும் காப்புரிமை குறித்ததாக பொதுவில் இருந்தாலும் அருகி வரும் புத்தக வாசிப்பை அடுத்த சந்ததியினரிடையே பரவலாக எடுத்துச்செல்வதை பொது நோக்கமாகவும் வெளியிட்டார்கள். ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கே உரிய முறையில் மண்ணின் கலாச்சாரத்திற்குத் தகுந்தபடி இந்த நாளை அனுசரிப்பதை உலகம் பதிவு செய்துள்ளது.
புத்தக ஈஸ்டர் பண்டிகை என்றே அதை ஸ்பெயினிலும் சுவீடனிலும் அழைக்கிறார்கள். சிறப்புப் பதிப்புகளை வெளியிட்டு புத்தகக் கொடைகள் வழங்கும் சிறப்பு நாளாக அயர்லாந்தில், இங்கிலாந்தில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணம் வீதி புத்தகத் திருவிழா என்று ஆறு கிலோ மீட்டர் நீள வீதி புத்தகக் கடைகளை உருவாக்கி அசத்துகிறது. பெர்லினில் வாசிப்பு வாக்கிங் என்றும் துனிசியாவில் வீதிதோறும் வாசிப்பு என்றும் பின்லாந்தில் 1,000 புத்தகக் காட்சி தினம் என்றும் அதைக் கொண்டாடுகிறார்கள்.
போலந்து போன்ற மிகச் சிறிய நாட்டில்கூட ஐந்து நிமிட வாசிப்பு என மக்கள் கட்டாயமாக அன்று வாசிப்பதை உறுதி செய்கிறார்கள். சர்வதேச நூலகக் கூட்டமைப்பு உலக புத்தக தினத்தில் காப்புரிமை மாநாடுகளை நடத்துகிறது. உலகமே வாசிப்பை நோக்கி தனது கவனத்தைச் செலுத்தும் மாதமாகவே ஏப்ரல் மாதம் திகழ்வதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புத்தகமாவது வாங்கித் தரப்படுவதை இந்த உலக புத்தக தினத்தில் உறுதி செய்வோம்.
தமிழகமெங்கும் 100 இடங்களில் நடக்கும் உலக புத்தக தின சிறப்புக் கண்காட்சிகளில் ஒன்றுதிரள்வோம். புத்தக வாசிப்பை சமூகத்தின் அங்கமாக்கி புத்தெழுச்சி பெறுவோம். அனைவருக்கும் நன்றி!