எஸ்.குமரேஸ்வரி
நமக்குப் பிடித்த செயல்கள் என்றுமே நமது மனதில் நிலைத்திருக்கும். அதேபோல நாம் படிக்கும் ஒரு சில புத்தகங்கள் நிச்சயம் நம் மனதில் நிற்கும். அப்படி எனது மனதில் நிற்கும் புத்தகமாக மோ.கணேசன் எழுதிய ‘வாலுவின் ஜாலி புதிர்கள்’ இடம் பிடித்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

’அது என்ன ஜாலியான புதிர்கள்?’ என்ற எண்ண ஓட்டத்தோடுதான் முதலில் இப்புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், வாசிக்க வாசிக்க மிகவும் வியப்பாக இருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளில் இதுவரை 15க்கும் மேற்பட்ட புதிர்ப் புத்தகங்களைப் படித்திருப்பேன். ஆனால் அவற்றில் உள்ள இரண்டு மூன்று புதிர்களைப் படிக்கும்போதே சலிப்புத் தட்டிவிடும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது எனக்கு எந்தவித சலிப்பும் தட்டவில்லை. அடுத்து என்ன புதிராக இருக்கும்? அடுத்து என்ன புதிராக இருக்கும் என்ற ஆர்வத்தை என்னுள் அது தூண்டிக் கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு விதவிதமான பிரிவுகளில் இருந்து, வித்தியாசமான வகையில் புதிர்கள் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
படித்து முடித்ததும் இப்புத்தகத்தால் நாம் இன்னும் நிறைய தெரிந்துகொண்டோம் என்ற மன நிறைவைத் தந்தது. இப்புத்தகத்தை எழுதிய மோ.கணேசன் என்னதான் படித்திருக்கிறார் என்று பார்த்தால் இதழியல், வரலாறு மட்டும்தான் படித்திருக்கிறார். ஆனால் அவர் மொழி, இலக்கியம், கணக்கு, அறிவியல், புவியியல், விலங்கியல், தேசியம், உலகம், பொது அறிவு, விளையாட்டு என பல்வேறு துறைகளில் இருந்து புதிர்களை வடிவமைத்திருக்கிறார். எப்படி இவரால் இத்தனை பாடப்பிரிவுகளில் இருந்தும் புதிர்களை வடிவமைக்க முடிந்தது? ஒரு புதிரை வடிவமைப்பதற்கு அவர் எத்தனை புத்தகங்களைப் படித்திருப்பார் என்று நினைத்து வியந்து போனேன். இதில் மொத்தம் 12 புதிர்த் தலைப்புகள். ஒவ்வொரு புதிர்த் தலைப்புகளுக்குள்ளும் 5 முதல் 7 வகையிலான விதவிதமான புதிர்கள்.
ஓர் ஆசிரியராக மாணவர்களிடத்தில் பொது அறிவினை விதைப்பது எங்களின் தலையாய கடமையாகும். அதனை ‘உள்ளது உள்ளபடி படித்து ஒப்பித்துவிடு’ என்ற இயந்திரத்தனமாகத்தான் அவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறோம். அதைக் கடுமையாகச் சொல்லாமல், மிக எளிமையாக, மிகவும் விளையாட்டாக, மாணவர்களுக்குப் பிடித்த மாதிரி அவர்களிடத்தில் கொண்டு செல்லும்போது, அது அவர்களது மனதில் பசுமரத்தாணிபோல் என்றுமே நிலைகொண்டிருக்கும். அப்படியான வழிமுறைகளை எளிதாகச் சொல்லி இருக்கிறது இந்தப் புத்தகம். புருவங்களை உயர்த்த வைக்கும் புதிர்கள், கண்களை உற்றுநோக்கி கண்டுபிடிக்க வைக்கும் புதிர்கள், அடடா! என வியக்க வைக்கும் புதிர்கள், சிரிப்பை வரவழைக்கும் சில வேடிக்கைப் புதிர்கள் என அனைத்து வகையான புதிர்களும் ஒரே புத்தகத்தில்…

வேடிக்கையான குறிப்புகளைக் கொடுத்து விடைகளைக் கண்டுபிடி என்ற புதிர்கள் எல்லாம் என்னை சிரிக்க வைத்தது மட்டுமின்றி, சிந்திக்கவும் வைத்தது. அட… இப்படி எல்லாம்கூட சிந்திக்க முடியுமா என்று மாற்றுக்கோணத்தில் இப்புதிர்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது இப்புத்தகத்தின் தனிச்சிறப்பு. உலக நாடுகளைப் பற்றிய புதிர்களில் மெதுவாகப் பேசு என எச்சரிக்கப்படும் நாடு எது?, வழுக்கி விழும் ஆபத்துள்ள நாடு எது? என வேடிக்கையாகச் சொன்னாலும், அது எந்த நாடாக இருக்கும் என்று நம்மை தன்னிச்சையாகவே சிந்திக்க வைத்துவிடுகிறது. இப்படியாக உலக நாடுகளை விளையாட்டாகவே மனதில் பதிய வைத்துவிடுகிறது இந்தப் புத்தகம். ‘சாப்பிடத்தான் இதை வாங்குவோம். ஆனால் சாப்பிடமாட்டோம்’ என்பன போன்ற சுவராசியமான புதிர்கள் இப்புத்தகத்தில் நிறைய இருக்கின்றன.
கொடியும் நாடும் கண்டுபிடிப்பது? பழங்களுக்கான புதிர்கள், நமது தேசம் சார்ந்த புதிர்கள், தேசியத் தலைவர்கள் சார்ந்த புதிர்கள், கேள்விக்குறியிட்ட இடத்தில் இடம்பெறும் எண் எது? விடுபட்ட எண்களைக் கண்டுபிடி என்பன போன்ற கணக்குப் புதிர்கள், வரிசைப்படுத்து வார்த்தை கிடைக்கும், தொடங்கியதில் முடி, விடுகதைப் புதிர்கள் என அனைத்தையும் மாணவர்களுக்கு பகிரும் அறிவுப் பெட்டகம்தான் இந்த ‘வாலுவின் ஜாலிப் புதிர்கள்’. நாம் பயன்படுத்துகின்ற தவில், நாதஸ்வரம், பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை மரத்தில்தான் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுவாக அறிந்திருப்போம். ஆனால் இப்புத்தகத்திலோ அந்தக் கருவிகள் ஒவ்வொன்றும் எந்தெந்த மரத்தில் செய்யப்பட்டவை என்று நுணுக்கமான தகவல்களை புதிராகத் தந்திருக்கிறது. சங்கேத வார்த்தைகளும் உணவுப்பொருள்களும், ‘ழி’ என்று முடியும் தமிழ்ச்சொற்கள் குறித்த புதிர்கள், சாலைக் குறியீடுகள் எனப் பல துறைகளிலும் புதிர்களை அள்ளித் தந்திருக்கிறது. ஆனால் மிகவும் சுவாரசியமாகத் தந்திருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வகுப்பறையில் நிச்சயம் கொண்டு செல்லலாம். தினம் ஒரு புதிரைச் சொல்லலாம். இதன் மூலம் மாணவர்கள் நிறைய யோசிக்கக் கற்றுக்கொள்வார்கள். அது என்னவாக இருக்கும்? இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என்று அவர்களை இந்தப் புதிர்கள் யோசிக்கத் தூண்டும். இப்புத்தகத்தை அவர்களிடம் கொடுத்தால் நிச்சயம் யோசித்து பதில் தருவார்கள். அவர்களது பொது அறிவை பெருக்கிக்கொள்வார்கள். அவர்களிடம் உள்ள லாஜிக்கல், அனலிட்டிகல், ரீஸனபிள் திறன்களை இப்புத்தகம் வளர்த்துவிடும். ஆசிரியர்கள் இப்புத்தகத்தைப் படித்தாலே இதிலிருக்கும் தகவல்களை நிறைய மாணவர்களுக்கு எடுத்துச் செல்லலாம். இதை எல்லாம் மாணவர்களிடம் எடுத்துச் சென்றால் நாம் அவர்களிடம் அறிவான ஆசிரியர் என்று பெயர் எடுத்துவிடலாம்.
வகுப்பறையில், “இன்று ஒரு ஜிகே பார்ப்போம். அதன் பிறகு பாடத்திற்குப் போகலாம்” என்று சொல்லிவிட்டு, இப்புத்தகத்தில் இருந்து ஒரு புதிரைச் சொல்லி விடைகளைக் கண்டுபிடிக்க வைத்துவிட்டால். அவர்களுக்குப் பிடித்த ஆசிரியர்களாகவே மாறிவிடலாம். அப்படி மாறிவிட்டால் மாணவர்கள் நம் வசம் வந்துவிடுவார்கள். கல்வி கற்பித்தலும் நமக்கு எளிதாகிவிடும். இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமும் இந்தப் புதிர்களைக் கேட்டு விளையாடலாம். அவர்களது அறிவுத்திறனை விளையாட்டாகவே மேம்படுத்தலாம். இந்த ஜாலிப் புதிர்கள் பார்க்க எளிமையாக இருக்கலாம். ஆனால் இது உங்கள் மனதில் ஆழமாக ஊடுருவிச் செல்லும் என்பது நிச்சயம். இதிலுள்ள எந்தப் புதிரையும் மறக்க மாட்டீர்கள்.
இப்புத்தகத்திற்கு ஜாலி புதிர்கள் என்பதற்கு பதிலாக பொது அறிவுப்புதிர்கள் என்றே பெயர் வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு பொது அறிவுத்தகவல்களை பக்கத்துக்குப் பக்கம் இப்புத்தகம் கொண்டுள்ளது. மோ.கணேசன் என்ற பன்முகம் கொண்ட வித்தகரால் எழுதப்பட்ட இப்புத்தகம் செல்பேசிக்கு மாற்று என்று சொல்லலாம். மன அழுத்தத்தோடு இருக்கிறீர்கள் எனில் அத்தகைய நேரங்களில் இப்புத்தகத்தைப் புரட்டினால் உங்களுக்குள் மன எழுச்சியும், மன அமைதியும் ஏற்படும். இப்புத்தகத்தின் அணிந்துரையில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வீழிநாதன் சொன்னதுபோல, ‘வாலுவின் ஜாலி புதிர்கள்’ புத்தகத்தில் இருக்கும் புதிர்களைப் போல், நாம் நம் பாடப்புத்தகத்தில் கேள்விகளை வடிவமைத்தால் மாணவர்கள் மிகவும் உற்சாகமாக, மாற்று சிந்தனையைக் கொண்டு கல்வி பயில்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
112 பக்கங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாற்றி யோசிக்க வைக்கும், மாற்று சிந்தனைத் திறனை வளர்க்கும், அவுட் பாக்ஸ் திங்கிங் முறையை வளர்க்கும் இந்த வாலுவின் ஜாலி புதிர்கள் புத்தகத்திற்கு ஒரு சபாஷ் .அதனை அன்பு’டன்’ எழுதிய மோ.கணேசன் அவர்களுக்கு அடுத்த சபாஷ். அறிவு கண்களை விசாலமாக்க, மேலும் பல புத்தகங்கள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள். இப்புத்தகத்தை வெளியிட்ட புக் பார் சில்ட்ரனுக்கு பாராட்டுகள்.
(கட்டுரையாளர்: எஸ்.குமரேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர். விகே அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன்காளிபாளையம், திருப்பூர்.)