கோபி
பிப்ரவரி 21. உலக வரலாற்றில் இதொரு பொன்னாள். உலகின் போக்கினையே மாற்றிய மனித சமூகத்தை சற்றேனும் முன் நகர்த்திட உதவிய, உதவி வரும் ஈடு இணையில்லா கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நாள். 175 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் விடுதலைக்கான போராட்டங்களுக்கு உத்வேகம் தரக்கூடிய மிகச் சிறந்த கருவியாக இருந்து வருகிறது அக்கம்யூனிஸ்ட் அறிக்கை. உலகின் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் ஏன் அதிகம் வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்றாகவும் இந்நூல் இருந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் இடதுசாரி பிரசுரங்களை, நூற்களை வெளியிடக்கூடிய பிரசுர நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தினத்தை வெகு விமரிசையாக வாசிப்புத் திருவிழாவாக கொண்டாடிட முடிவு செய்தன. சோசலிச தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வியலை அமைத்திட உதவும் கலாச்சார நிகழ்வாக மார்க்சிய செவ்வியல் நூற்களை நாட்டின் அநேகப் பகுதிகளில் வாசிப்பது. ஆம் பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாளும்கூட. இந்தியாவில் இடதுசாரி பதிப்பகங்களிடையே உருவான இத்திட்டத்திற்கு உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பு கிடைத்திட பிப்ரவரி 21 சிவப்பு புத்தக வாசிப்பு என்பது உலகளாவிய கலாச்சாரப் பெருநிகழ்வாக உருவாக்கம் பெற்றது.
சிவப்பு புத்தக தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட 21 பிப்ரவரி 2020 உலகெங்கிலும் குழுவாக சிவப்புப் புத்தகங்களை வாசிப்பது என்பது துவங்கியது. குறிப்பாக கம்யூனிஸ்ட் அறிக்கையே கியூபா தொடங்கி தென் கொரியா, வியட்நாம், மக்கள் சீனா, இந்தியா என உலகின் மூலைகள் எங்கும் வாசிக்கப்பட்ட பெரு நிகழ்வாக இருந்தது. தமிழகத்திலும் பத்தாயிரம் இடங்களில் வாசிப்பு என திட்டமிடப்பட்டு சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம், புதுச்சேரி உட்பட பெண்கள் குழுவிலும், ஆட்டோ தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சங்கங்கள் என பரவலான வாசிப்பு என்பது நடந்தது
ஒரு பக்கம் வாசிப்பு என்பது நடந்தபோதிலும், மறு பக்கம் உலகெங்கும் உள்ள இடதுசாரி பதிப்பகங்கள் பெருகி வரும் பாசிச தாக்குதல்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிட பிரசுரங்களை கூட்டாக வெளியிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. இது உலகளாவிய கருத்துப் பிரச்சாரக் கூட்டையும் உண்டாக்கியது.
கொரானா கால நெருக்கடியிலும் தளராது இரு வருடங்களும் மக்கள் சீனம் உள்ளிட்டு, கியூபா, ஜெர்மனி, எனப் பல நாடுகளில் ஆன்லைன் வாசிப்பு என்பதாக பிப்ரவரி 21 சிவப்பு புத்தக வாசிப்பு கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் பாரதி புத்தகாலயம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மார்க்சிய கிளாசிக் நூலினை மறுவெளியீடு செய்து வாசிப்பு தினத்தை கொண்டாடி வருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள பாரதி புத்தகாலயத்தின் கிளைகளின் இத்தினத்திற்கான செயல்பாடுகள் மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவர்கள் மட்டுமல்லாது, தோழமை தொழிற்சங்கங்களின் பங்கு என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வருடமும் அவ்வாறே ‘மதத்தைப் பற்றி’ என்பதான நூல் வாசிப்பிற்கு எடுக்கப்பட்டு தமிழகத்தின் சுமார் 4000 இடங்களுக்கு மேலாக வாசிப்பு என்பது நடைபெற்றது.

கேரளத்தின் கன்னூர் மாவட்டத்தில் ஒரு வார கால கொண்டாட்டமாகவும் இது நடைபெற்றது. தெலங்கானாவில் பகத்சிங்கின் நூல், ஆந்திராவில் மஹாபிரஸ்தானம், கொல்கத்தாவில் வீதிகளில் வாசிப்பு என்பதாக இவ்வருடம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்வருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் பரவலான வாசிப்பு என்பதே. புதுச்சேரியின் சுமைதூக்கும் நடைபாதை தொழிலாளர்கள் தொட்டு புதுதில்லியின் ஜாமியா, ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள், கர்நாடகாவின் வீட்டு வேலை செய்யும் பெண்கள் குழுக்கள் என மிகப் பரவலான வாசிப்பு என்பது பிப்ரவரி 21 அன்று நடந்தேறியது. புதுதில்லியின் லெப்ட்வார்டு நிறுவனத்தில் சப்தார் ஹஷ்மியின் ஜனனம் நாடகக்குழு நாடகங்களையும் நடத்தியது.
சிவப்பு புத்தக தினக் கொண்டாட்டங்கள் இம்முறை உலகின் புதிய பகுதிகளிலும் நடைபெற்றது மிகவும் சிறப்பான விஷயமாகும். ஆம், 2020ல் நேபாளம், கியூபா, இந்தியா என்பதாக ஆரம்பித்த இந்நிகழ்வு இவ்வருடம் மலேசியா மற்றும் மெக்சிகோவிலும், ஆப்ப்ரிக்க நாடுகள் சிலவற்றிலும் பொது வாசிப்பு என்பதாக வளர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இதுதான் இத்தினத்தின் இலக்கு – உலகெங்கும் முற்போக்கு மற்றும் சோசலிசக் கருத்தாக்கங்களைப் பரவலாக்குவது. விரைவில் இந்த இலக்கு 10 மில்லியன் மக்கள் வாசிப்பு என்பதாக விரிவடையும் என்பதே இடதுசாரி பதிப்பங்களின் எதிர்பார்ப்பு.