நிகழ் அய்க்கண்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் உண்மைகளை; சாவர்க்கரைப் பற்றிய சரடுகளில் இருந்து உண்மைகளைப் பிரித்து மக்களுக்கு உரைக்க வேண்டும் என்கிற அகத்தூண்டுதலின் விளைவாக இந்துமகாசபை, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்திய அரசின் ஆவணக்காப்பகங்களிலுள்ள அசல் ஆவணங்கள், சாவர்க்கருடன் செல்லுலர் சிறையில் இருந்த புரட்சியாளர்களின் நினைவுக்குறிப்புகள் ஆகியவற்றினை அடிப்படையாகக்கொண்டு, தில்லிப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான சம்சுல் இஸ்லாமால், எழுதப்பட்டதுதான் இந்நூலாகும்.
வீர் சாவர்க்கர் குறித்து ஏதும் தெரியாமல் அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும் நபர்களுக்கும் அவர் குறித்து இந்நூலில் கூறப்படும் ஏழு சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடலாம்.
சாவர்க்கர் 1883ல் மகாராஷ்ட்ரா மாநில சித்பவன் பிராமண நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவராவார். 1904 மாஜினியின் இளம் இத்தாலி இயக்கத்தின் சாயலில், இளம் இந்தியா எனும் அமைப்பினை நிறுவுவதற்கு உதவினார். பிறகு சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். அங்கே, பிரிட்டிஷாருக்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அச்சமயத்தில், லண்டனிலிருந்த இந்தியா அலுவலகத்தில் ஓர் அதிகாரியைக் கொன்ற வழக்கில் சாவர்க்கர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறார். வரும் வழியில் கப்பலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ததன் காரணமாக அவர்மீது வெவ்வேறான இரு வழக்குகள் பதிவாகி, அவருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அந்தமானிலுள்ள செல்லுலர் சிறையில் 1911 ஜூலை 4 ந் தேதி அடைக்கப்பட்டார்.

அதன்பின்னர், சாவர்க்கர் 1911, 1913, 1914, 1918, மற்றும் 1920 என ஐந்துமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கருணை மனுக்கள் சமர்ப்பித்திருந்தபோதிலும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. ஆனாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவரை பயன்படுத்திக்கொள்ளத் துவங்கினர். அவரும் படிப்படியாக சிறை அதிகாரிகளுக்கு விசுவாசமானவராக மாறி, 1920 வாக்கில் சிறை நிர்வாகத்தின் எழுத்தராகவும் பின்னர் எண்ணெய் டிப்போவில் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். 1921 மே மாதத்தில் செல்லுலர் சிறையிலிருந்து இந்தியாவிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றினார்கள்.
கடைசியாக 1924 ஜனவரி 6 அன்று எரவாடா சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசாங்கமோ, சாவர்க்கரின் அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், அவரது மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை.

சாவர்க்கர், தனது அரசியலின் முதல் கட்டத்தில், 1857 சிப்பாய்க் கலகம் குறித்து எழுதியதிலும், 1907ல் அவர் இங்கிலாந்தில் இருந்த சமயத்திலும் முஸ்லிம்கள்மீது எவ்வித பகைமை உணர்வு கூடாது என்றும், தாய்நாட்டின் விடுதலைக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஒரு முன் நிபந்தனையாகும் என்றும் வலியுறுத்தி வந்தார். முகலாயர் வம்சத்தின் கடைசி முஸ்லிம் மன்னராக இருந்த பகதூர்ஷா சஃபாரைக்கூட, அந்நிய ஆட்சிக்கு எதிராகப் போராட வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்திய மாபெரும் வீரர்களில் ஒருவராக அடையாளப்படுத்துகிறார்.
இரண்டாவது கட்டத்தில், 1913 வாக்கில் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இணங்கத் தயாராகிவிட்டார். எரவாடா சிறையிலிருந்து வெளியேவந்ததும் ஓர் இந்து ராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான கொள்கைத் திட்டங்களை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டார். அந்நியர் ஆட்சிக்கு எதிராக இருந்த கோபங்களையெல்லாம் முற்றிலுமாக மறைத்து, அதற்குப் பதிலாக புண்ணிய பூமி, பித்ரு பூமி என்னும் நாசகரக் கொள்கைகளை முன்வைத்தார். ஒரே கடவுள், ஒரே நாடு, ஒரே லட்சியம், ஒரே இனம், ஒரே வாழ்க்கை, ஒரே மொழிதான் இலக்கு என்றார்.
இந்து மதவாதத்தை நற்பண்புமிக்கது எனவும்; இந்துப் பிரிவினை வாதத்தினை இந்து தேசியவாதமென்றும் நியாயப்படுத்தினார். முஸ்லிம்களையும், கிறிஸ்துவர்களையும் மீளவும் இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யும் சுத்தி என்னும் இயக்கச் செயல்பாடுகளின் மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு அனைத்து மதத்தினரையும் அணி திரட்டும் முயற்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார். பிரிட்டிஷாருக்கு உதவி செய்வதன் மூலம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு துரோகமிழைத்தார்.
சுபாஷ் சந்திரபோஸுக்கு எதிராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து, மாதாந்திர ஓய்வூதியம் பெற்றார். நேபாள மன்னர் இந்தியாவை ஆளவேண்டும் எனக்கூறி, நாட்டைக் கடந்தும் விசுவாசம் கொண்டவராக திகழ்ந்தது மட்டுமல்லாது, மூவர்ணக்கொடியைவிட, இந்துக்களுக்கு ‘ஓம்’ மற்றும் ‘ஸ்வஸ்திக்’சின்னம் பொறித்த காவிக்கொடியை ஏற்கக்கோரினார். பிரிட்டிஷாரின் அடிவருடிகளாக இருந்த இந்திய இந்து மன்னர் சமஸ்தானங்களின் பாதுகாவலராக இருந்தார்.
இப்படிப்பட்ட சாவர்க்கருக்கு, 2002-03 காலகட்டத்தில் அவரின் வாரிசுகளால், நாடாளுமன்றத்தின் மத்தியக்கூடத்தில் அவரின் படம் திறந்துவைக்கப்படுகிறது. அந்தமான் போர்ட்பிளேர் விமான நிலையத்திற்கு வீர் சாவர்க்கர் பெயர் சூட்டப்படுகிறது. இவையாற்றையும்விட, அங்கிருக்கும் செல்லுலர் சிறையின் வெளிப்புறச்சுவரில் நிறுவப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியின்மீது சாவர்க்கர் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டு அரசால் திறந்துவைக்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை, வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவும், சுதந்திரத்திற்கு முந்தைய உண்மையான சாவர்க்கரின் நடவடிக்கைகளை அறிந்துகொள்வதற்காகவும் கொண்டு வரப்பட்டதே இந்நூலாகும்.
சாவர்க்கரைப் பற்றிய சரடு 1
சாவர்க்கர் ஒரு முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரர். சாவர்க்கர் ஓர் அபூர்வமான தைரியசாலி. அவர் எந்தக் காலத்திலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போனதில்லை. இந்திய விடுதலைக்காக நேர்மையாகவும், உளப்பூர்வமாகவும் செயல்பட்டார் என சாவர்க்கவாதிகள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையாதெனில், 1857 சிப்பாய்க் கலகத்தில் ஈடுபட்ட கலகக்காரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அந்தமான் செல்லுலர் சிறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர். அவர்களில் அலாமா ஃபாசில் ஹக், மெளலானா லியாகத் அலி, மீர் ஜாஃபர் அலி தானேஷ்வரி ஆகியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மகத்தான அறநெறிப் பண்பின் காராணமாகவும், நன்கு படித்தவர்களாகவும் இருந்ததால் சிறையிலேயே உழன்று இறந்ததுடன் தியாக மனப்பான்மையுடன் முழுத் தண்டனையையும் அனுபவித்திருக்கின்றனர். ஆனால் சாவர்க்கரோ செல்லுலர் சிறையிலிருந்து வெளியேறுவதைப் பற்றியே கவனமாய் இருந்திருக்கிறார்.
சரடு 2
சாவர்க்கர், பிரிட்டிஷ் ஆட்சியின்போது இரண்டு ஆயுள் தண்டனைகளை
(50 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டியிருந்தது என ஒருசிலரும், தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான காலங்களில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் அர்ப்பணிக்க வேண்டியிருந்தது என மற்றும் சிலரும் கூறிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், சாவர்க்கருக்கு இரண்டு ஆயுள்தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தபோதிலும், பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் மொத்தத்தில்
13 ஆண்டுகளுக்கும் குறைவாகவே சிறையில் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்.
சரடு 3
சிவாஜியைத் தீவிரமாக பின்பற்றுபவரான சாவர்க்கர், போராட்டத்தின்போதே உயிரிழக்க விரும்பினார். அதற்கு விடுதலைதான் ஒரேவழி என்றறிந்து, அதனை வேண்டி ஆங்கிலேயர்களுக்கு ஆறு கடிதங்களை எழுதினார் என சாவர்க்கவாதிகள் கூறுகிறார்கள். உண்மையில், 1913ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதிய கருணை மனுவின் உண்மையான உரையை நாம் படித்துப்பார்த்தால்,
(“அரசாங்கம் தனது பரந்த நல்லெண்ணம், கருணையினால் என்னை சிறையிலிருந்து விடுவிக்குமானால், அரசியல் சட்டப்படியான முன்னேற்றம், அந்த முன்னேற்றத்திகு முதன்மையான நிபந்தனையான அரசாங்கத்தின் மீதான விசுவாசம் ஆகியவற்றின் உறுதியான ஆதரவாளனாக இருப்பேன்.”) இத்தகையதொரு வாதத்தை முன்வைக்கும் இந்துத்வா முகாமின், சிறிதும் நாணமற்ற நேர்மை தவறும் போக்கை உணரமுடியும்.
சரடு 4
சாவர்க்கர் மற்றும் இந்துத்வாவின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியை எதிர்த்தனர். ஏனென்றால் அது காந்தி – நேருவால் வழிநடத்தப்பட்டது; காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் மதவெறிக்கு குறிப்பாக முஸ்லிம் லீக்கிடம் சரணடைந்துவிட்டது என்றனர். உண்மையில், சாவர்க்கவாதிகள் இவ்வாறு கூறுவது புரளியாகும். ஏனெனில், இந்தியாவை இரு தேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்கிற சித்தாந்தத்திற்கு தத்துவார்த்த அடிப்படையை தீவிரமான முறையில் அளித்ததே சாவர்க்கர்தான்.
சரடு 5
சாவர்க்கர் ஓர் ‘இந்துப் பகுத்தறிவுவாதி’; தீண்டாமைப் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்தவர்; அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட அழுத்தம் கொடுத்தார்; ஒரு நாத்திகவாதியாக இறந்தார்; என்றும்கூட கூறப்பட்டது. “அவருடைய கண்ணோட்டம் முற்றிலும் நவீனமனதும் மற்றும் மதச்சார்பின்மை கொண்டது” என்றும்கூட கூறுவதில் சாவர்க்கர்வாதிகள் விடாப்பிடியாக இருக்கிறார்கள். யதார்த்தத்தில், இந்துத்துவத்தின் தத்துவவாதியாகவும், அதன் வழிகாட்டியாகவும், ஆர்.எஸ்.எஸ். நபருமான சாவர்க்கர் “வேதங்களுக்குப் பின்னர் மனுஸ்மிருதி நம் இந்து தேசத்திற்காக மிகவும் வழிபடத்தக்க திருமறையாகும். இது புராண காலத்திலிருந்தே நம்முடைய கலாச்சார பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையின் அடிப்படையாக மாறியிருக்கிறது என்பது மட்டுமின்றி, பல நூற்றாண்டுகளாக நம் தேசத்தின் ஆன்மிக மற்றும் தெய்வீக மார்க்கத்திற்கான விதிகளை முறைப்படுத்தியிருக்கிறது என்கிறார்.”
சரடு 6
“சாவர்க்கர், காந்தியிடம் பலரைப்போன்றே முரண்பட்டிருந்தார் என்றும் அவர் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து சந்தேகப்படும் ஆளாக மாறினார் என்றும், நீதிமன்றம் அவரை விடுதலை செய்துவிட்டது. ஆனாலும் அவர்மீதான இழிவுபடுத்தப்படும் நடவடிக்கைகள் இப்போதும் தொடர்கின்றன” என்றும் சாவர்க்கர்வாதிகளால் வாதிடப்படுகிறது. உண்மையாதெனில், காந்தி கொலை வழக்கில் சாவர்க்கரின் பங்களிப்பு தொடர்பாக அரசுத் தரப்பினால் விசாரிக்கப்பட முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தி கொலைவழக்கில் திகம்பர் பாட்கே என்கிற அப்ரூவரால் கொடுக்கப்பட்டுள்ள சாட்சியம், சாவர்க்கரைத் தெளிவாக குற்றத்துடன் பிணைத்திருக்கிறது. சாவர்க்கர் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு, அவருக்கு எதிராக சாட்சியம் எதுவும் இல்லை என்பதற்காக அல்ல, மாறாக, அப்ரூவரின் சாட்சியத்தை ஒத்துரைத்து எவரும் சாட்சியம் அளிக்காததே காரணமாகும். இதுதவிர, காந்தி கொலை செய்யப்பட்டதற்கு சாவர்க்கரே பொறுப்பு என்பது சர்தார் பட்டேலின் நிலைப்பாடாகும்.
சரடு 7
சாவர்க்கர் எழுதி 1923ல் வெளிவந்த ‘இந்துத்வா’ நூலானது இந்திய தேசிய இனத்திற்கு அறிவியல் பூர்வ அடிப்படையை அளிக்கிறது என்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்ஸின் கோல்வால்கர்கூட, சாவர்க்கரின் ‘இந்துத்துவா’, இந்து தேசியவாதம் குறித்த பாட நூலுக்கான தேவையை பூர்த்திசெய்த ஒரு அறிவியல்பூர்வமான நூல் என்கிறார். உண்மையில், இந்துத்துவா நூலை, இந்து தேசியவாதத்தை நியாயப்படுத்துவதற்கான, விலைமதிப்பில்லா பங்களிப்பாகப் போற்றிப் புகழ்ந்தாலும், இந்நூலானது திட்டமிடப்படாததாக, குழப்பம் மிகுந்ததாக, ஒத்திசைவற்றதாக, சலிப்பூட்டுவதாக, முன்னுக்குப்பின் முரணானதாக, கூறியதையே மீண்டும் கூறுவதாக இருக்கிறது. இந்நூலினை, இந்து தேசியவாதத்தின் பைபிள் என பிரச்சாரம் செய்யப்பட்டபோதிலும், அந்தக் கருப்பொருளுக்கு கால்வாசிக்கு குறைவாகவே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நூலானது, இந்துக்கள் மட்டுமே இந்தியாவை உரிமை கொண்டாட முடியும் என்கிறது; இந்துத்வாவின் அடிப்படைகள் இனவெறி, சாதி வெறி, உலக ஆதிக்கம் என கட்டமைக்கிறது; ஹிட்லர், முசோலினியைக் கொண்டாடுகிறது;
சாதியத்தின் காரணமாகவே இந்து இனத்தின் தூய்மை காக்கப்படுவதாகக் கூறுகிறது.
சுருக்கமாகக் கூறினால், சாவர்க்கரின் இந்துத்வா நூலின் அரசியல் இந்துயிசம். அது, இந்திய சமுதாயத்தின் மீதான உயர்சாதி ஆதிக்கத்தை தக்கவைக்க, இந்து பிரிவினைவாதத்திற்காக போர்க்குணத்துடன் வாதாடுகிறது. இந்து ஆதிக்கத்தை சர்வதேசத் தளத்திற்கும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. சாவர்க்கரின் சர்வாதிகாரக் கோட்பாடுகளினால் எச்சரிக்கையடைந்த சமகாலத்தவரான அம்பேத்கர் “இந்து ராஜ்யம் என்பது மெய்நிகழ்வானால், அது, ஐயத்திற்கிடமின்றி இந்த நாட்டிற்கு மாபெரும் பேராபத்தாக இருக்கும். அது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். அந்தவகையில், அது ஜனநாயகத்துடன் பொருந்தாதது ஆகும். என்ன விலை கொடுத்தேனும், இந்து ராஜ்யம் அமைவதை தடுக்கவேண்டும்” என்கிறார்.