வ. சி. வளவன்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எனும் இந்தத் தொடர் மாதந்தோறும் வெவ்வேறு எழுத்தாளர்கள் அல்லது சென்னை குறித்த வரலாறு பற்றிய ஆர்வமுடையவர்கள் மற்றும் உள்ளூர் வரலாறு எழுதும் ஆசிரியர்கள் பண்பாட்டு ஊழியர்கள் என பங்களிக்கும் தொடராகும்.
சென்னை அல்லது அதன் பூர்வீகப் பெயரான மதராசப்பட்டினம் ,மதராஸ் குறித்த வரலாறு எழுதும் முயற்சிகள் 1865 களிலேயே தொடங்கி விட்டது.

1921 ல் அன்றைய சென்னை பிரசிடென்சி அரசாங்கம் மதராஸ் வரலாறு ஒன்றை அவர்கள் நடத்திய ஆய்வுகள் எட்கர்தஸ்டன் க்ளைன்பார்லோ போன்றோர் நடத்திய ஆய்வுகள் வழி மதராஸ் ஸ்டேட் அதன் மக்கள் அவர்களின் பண்பாடை அறிந்து கொள்ள மதராஸ் வரலாற்றை எழுதினார்கள்.
இந்த முயற்சி இன்றும் புனைவு அபுனைவு திரைப்படங்கள் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறாக வந்த புத்தகங்கள் ஆவணங்கள் ஆய்வுகள் திரைப்படங்கள் வாய்மொழி வரலாற்று தரவுகள் எது பற்றியும் வாசித்து அந்த வாசிப்பு பற்றி வாசிப்பின் வழியே திறந்து கொள்ளும் மெட்ராஸ் அல்லது சென்னை பற்றிய அவரவர் ஞாபகங்கள் தரவுகள் அனுபவங்களை இணைத்து எழுதும் தொடர் ஓட்ட முயற்சியே இந்த மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தொடர்.
ஒருங்கிணைப்பு: இரா.தெ.முத்து & சிராஜ்
வருவாய்த் துறையின் ஆவணங்களில் இன்றைக்கு மிக நீண்டும், விரிந்தும் இருக்கிறது மெட்ராஸ் எனும் சென்னை. தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று மூன்றாகப் பிரிந்து கிடக்கிறது மெட்ராஸ் எனும் சென்னை. எது எப்படியோ…உள்ளபடியே சென்னை என்றால் அது ‘வடசென்னை’ தான். ஆம், வடசென்னை மட்டும்தான். மத்திய சென்னைவாசிகள் அண்ணாநகர், கோடம்பாக்கம், அம்பத்தூர் என்ற ஏதோ ஒன்றின் அடையாளமாகவே இருக்கின்றனர்.
தென் சென்னைவாசிகளோ நாங்க மயிலாப்பூர், மந்தைவெளி, திருவான்மியூர், கோட்டூர்புரம், போட் ஹவுஸ் என்று ஏக பெருமிதத்தோடே பேசுகின்றனர்.ஆனால் அதுவே பெரம்பூர், அகரம், ஓட்டேரி, கொண்டித்தோப்பு, ராயபுரம், கல்மண்டபம், டோல்கேட், வியாசர்பாடி இன்னபிற பகுதி மக்கள் “நாங்க நார்த் மெட்ராஸ்’ என்றே கெத்தாகச் சொல்கின்றனர்.ஆக… சென்னை என்றால் அது வடசென்னை தான்; ஆம் வடசென்னை மட்டும்தான்.சென்னையின் பொறந்தநாளினை… அதன் வரலாற்றை அறியாமல்… அதனை உருவாக்கியவர்களைப் புறக்கணித்துவிட்டு… வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்துக்குள் ரகளைகளுடனும், பீட்ஸா கோக்குடனும் கொண்டாடுவது நமக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் நல்லதல்ல.
சென்னையின் வரலாற்றைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்து வந்துள்ளனர். இன்றும் பதிவு செய்து வருகின்றனர். என்னளவில் நான் வாசித்த சென்னையின் வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் இந்த நிலத்தை எங்கே, யாரிடம் இருந்து யார் வாங்கினார்கள். என்ன விலைக்கு கிரயம் போனது. பிறகு அங்கே என்ன செய்தார்கள். தொழில்கள் எப்படி வளர்ந்தது. நகரம் எப்படி நாளுக்கு நாள் நாகரிபேசியது.
எங்கிருந்தெல்லாமோ வந்து இந்த நகரின் அரவணைப்பில் அற்புதமான வாழ்வினை பெற்றவர்களைப் பதிவு செய்தது. இதனூடே மெட்ராஸ் எனும் இந்த நகரம் சென்னையாக பரிணாமம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர்கள், அதற்கு முன்பு இங்கு வாழ்ந்த பூர்வகுடிகள், அவர்களின் வாழ்வு, அவர்களின் உழைப்பு ஆகியவற்றை பதிவு செய்த ஆவணம் சொற்பமாகவே இருக்கிறது அல்லது இல்லாமலேயே இருக்கிறது. இது வருத்தத்திற்கு உரியது அல்ல. பெரிய அயோக்கியதனம்.
இப்படியான எண்ணத்தோடு இருந்த என் கைகளுக்கு வந்து சேர்ந்தது தோழர் நிவேதிதாலூயிஸ் எழுதிய ‘வடசென்னை – வரலாறும் வாழ்வியலும்’ எப்பொழுதும் போல நூலினை உடனே வாசித்து முடித்தேன்.சென்னையின் பொறந்தநாளினை கார்ப்பரேட் உலகமய தாக்கத்தின் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடிடும் சூழலில் ‘வடசென்னை’ நூல்வழி இந்த நகரை வாழ்த்துவதே சரி என எனக்குத் தோன்றியது.

1977 டிசம்பர் 23 அதிகாலை 5.40 மணிக்கு அம்மாவின் வயிற்றைக் கிழித்து என்னை இந்தப் பிரபஞ்சத்திற்கு மருத்துவர்கள் கொண்டு வந்த இடம் நார்த் மெட்ராஸ் RSRM மருத்துவமனை. முதல் ஐந்து வயது வரை பெரம்பூர், அகரம், சால்ட் கோட்டர்ஸ் என வடசென்னைக்கு உள்ளேயே வட்ட மடித்துவிட்டு மத்திய சென்னைக்கு வந்து சேர்ந்த அகதி நான். ஆனால் நினைவு தெரிந்த நாள் துவங்கி மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளிலேயே பெரும்பாலான காலம் கடந்திட தொழில்வாழ்வு வடசென்னை நோக்கி இழுத்துச் சென்றது.
இடைப்பட்ட 20வது ஆண்டுகளில் வடசென்னை குறித்து எனக்குக் கிடைத்த கற்பிதங்கள், பொதுப்புத்தி அபிப்ராயங்கள் வடசென்னையை ஓர் ஆசுயையோடே பார்க்க வைத்தது. என் இந்த எண்ணத்தை மாற்றியதன் பங்கு அப்பா பேராசிரியர் பெரியார்தாசன், முத்துப்பாண்டியன் பழனிசாமிக்கும் இருக்கிறது. அந்தப் பிரதேசத்து மக்களின் அன்பை அருகே இருந்து உணர்ந்த பல தருணங்களில் என் ஆசுயைகளுக்கு என்னிடமே நான் மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். ஆனால் ‘வடசென்னை’ நூலினை வாசித்த தருணங்களில் நான் குற்ற உணர்ச்சிக்கு நகர்ந்திருக்கிறேன். ரத்தமும், சதையுமான அரிதாரமற்ற மக்களைக் குறித்து இந்த நகரின் இன்னொரு பகுதி எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது அதனை அடுத்த தலைமுறைக்கு எப்படிக் கடத்துகிறது என்பதை அறிகையில் வரும் கோபம் அளவுகளுக்குள் அடங்காது.
இந்தநூல் இந்த நகரத்தின் (தெளிவோடுதான் வடசென்னையைப் பகுதி என்று எழுதாமல் நகரம் என எழுதுகிறேன்)வரலாற்றை சில வரலாற்று நினைவகங்களோடு தொடர்புபடுத்தி பயண நூலாய் நம்மோடு உரையாடுகிறது. அதுவல்ல இதன் சிறப்பு. அந்தப் பயணத்தை நமக்குச் சொல்பவர்கள் அந்தப் பகுதியின் எளிய மனிதர்கள். பூ விற்கும் அக்கா துவங்கி, மார்க்கெட்டில் வேலை பார்க்கும் அம்மா, ஆட்டோகார அண்ணா என வடசென்னைவாசிகள்தான் நமக்கான கைடுகள்.
ராயபுரம் இரயில் நிலையம், ரயில்வே அச்சகம், கல்மண்டபம் சந்தை, அங்காளப் பரமேஸ்வரி கோயில்,ராபின்சன் பூங்கா, RSRM மருத்துவமனை, ரெய்னி மருத்துவமனை, காசிமேடு கல்லறை ஆகியவை என் நெஞ்சுக்கு நெருக்கமான பகுதிகள். அதிலும் RSRM மருத்துவமனை கூடுதல் சிறப்பைப் பெற்றது. அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை இன்னும் அப்படியே என் பால்ய காலத்துப் பயத்தை தக்கவைத்திருக்கிறது.
இந்த நூலின் வாசிப்புக்குப் பிறகு குறிப்பிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு இன்னொருமுறை வரலாற்றை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவற்றில் உச்சமே ‘மனைவிக்காக கல்லறை கல்வெட்டில் எழுதப்பட்ட கவின்மிகு வாசகங்கள்.’ இதை எல்லாம் பார்க்காமல்தான் இன்னும் சிறந்த காதல் கணவனாக ஷாஜகானையே சொல்லிக் கொண்டு சுற்றித் திரிகிறோம். அங்காளப் பரமேஸ்வரி கோயில் கல் மண்டபத்தின் அருகில் இருந்தே நான் கல்மண்டபத்தை விசாரித்ததும் அது இங்க இல்ல, அங்க இருக்கு என சிலர் வழி சொன்னதும் இன்னும் நினைவில் இருக்கிறது.
வரலாற்றை தேடி அலைந்து நம் கைகளுக்கு கொன்டு வந்து தந்திருக்கிறார் தோழர் நிவேதிதா லூயிஸ். அதனை வாசிப்பதும், வரலாற்றுத் தடங்களைப் பாதுகாப்பதும் அடுத்த தலைமுறையிடம் கவனமாக கையளிப்பதும் அவசியம். அதற்கான துவக்கமாக முதலில் நாம் வாசிப்போம். அறிவோம். இல்லை எனில் அடுத்த தசாப்தத்திற்குள் சென்னைக்கு வந்த ஆங்கிலேயப் படையை பின்னங்கால் பிடரப் பிடர ஓடவிட்டவர் ‘வீர சாவர்கர் & கோ’ என நம்ம ஊட்டுப் புள்ளைங்க உரக்கப் படிக்கும் வரலாற்றை விழிப்போடு இருப்போம்.