ச.சுப்பாராவ்
நான் ஒருவன்தான் ஒரு விஷயத்தில் சற்று கிறுக்கு என்று நினைத்திருக்கும்போது, உலகெங்கும் அதே விஷயத்தில் பல கிறுக்குகள் இருப்பதை அறிவது எவ்வளவு மகிழ்ச்சியாக, ஆறுதலாக இருக்கும் தெரியுமா? ஹெரால்ட் ராபிநோவிச்சின் A Passion for Books என்ற தொகுப்பைப் படித்தபோது எனக்கு அப்படித்தான் பெரிய ஆறுதலாக, ஆனந்தமாக இருந்தது. உலகெங்கும் உள்ள புத்தகக் காதலர்கள் – இல்லை, இல்லை – புத்தகக் கிறுக்குகள் பற்றிய அழகான தொகுப்பு. 372 பக்கங்கள் – 55 கட்டுரைகளில் விதவிதமான புத்தகக் கிறுக்குகள் பற்றி, புத்தக சேகரிப்பு, புத்தகம் கடன் தருதல், புத்தகம் அடுக்குதல் என அனைத்து வகையான புத்தகப்புழு பிரச்சனைகள் பற்றியும் அற்புதமாக எழுதியிருக்கிறார்கள்.

முன்னுரை எழுதியவர் இந்த மாதிரி கிறுக்குகளுக்கெல்லாம் தலைமைக் கிறுக்கரான ரே பிராட்பரி. ஆம், 451 ஃபாரன்ஹிட் எழுதியவர்தான். 451 ஃபாரன்ஹிட்டை, தான் எழுதியது பற்றியே ஒரு சுவையான தகவல் சொல்கிறார் அவர். அவர் அதை எழுதிய 1950களில் லாஸ்ஏஞ்சல்ஸின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் டைப் மெஷின்களை வாடகை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மெஷினுடன் இணைக்கப்பட்டிருக்கும் கருவியில் 10 சென்ட் போட்டால், அரை மணிநேரம் அடிக்கலாம். அரை மணிநேரம் முடிந்ததும் மெஷின் லாக் ஆகிவிடும். திரும்ப 10 சென்ட் போடவேண்டும். இப்படியாக அவர் 9 நாட்களில் அந்த நாவலை எழுதி முடித்தாராம்.
டைப் மெஷின் செலவு 9 டாலர் 8 சென்ட். சீத்தம்ம மாயம்மா, ஸ்ரீராமுடு மாகு தந்ட்ரி (சீதை என் தாய், ராமன் என் தந்தை) என்று தியாகராஜர் எழுதியதைப்போல், எமிலி டிக்கின்ஸன் என் தாய், எட்கர் ஆலன் போ என் தந்தை, ஹெச்.ஜி.வெல்ஸும். ஜுல்ஸ் வெர்னும் என் சித்தப்பாக்கள் என்று கவிதை எழுதியவரான ரே பிராட்பரியின் முன்னுரையோடு விதவிதமான புத்தகக் காதலர்கள் பற்றிச் சொல்கிறது இந்த நூல்.
இத்தனை புத்தகம் வாங்கி வைத்திருக்கிறீர்களே! எல்லாவற்றையும் படித்துவிட்டீர்களா? என்று இனி யார் உங்களிடம் கேட்டாலும், அனடோல் பிரான்ஸ் சொன்ன பதிலைச் சொல்லுங்கள். இப்படிக் கேட்ட நண்பர் வீட்டின் ஷோகேசில் விதவிதமான தேநீர்க் கோப்பைகள் இருந்தன. அனடோல் அவற்றைக் காட்டி, “நீங்கள் தினமும் இந்த எல்லா கோப்பைகளிலும் டீ ஊற்றிக் குடிப்பீர்களா?” என்றாராம். “அது போல்தான் என் அலமாரியில் உள்ள புத்தகங்களின் பயன்பாடும்” என்றாராம். இதே கேள்விக்கு தாமஸ் வென்ட்வொர்த் ஹக்கின்ஸன் என்ற புத்தக வெறியர், “உங்கள் டூல்பாக்ஸில் உள்ள அத்தனை டூல்ஸையும் நீங்கள் தினமும் பயன்படுத்துகிறீர்களா” என்று கேட்டிருக்கிறார்!
புத்தகங்களைத் தேர்வு செய்தல், அவற்றை தமது நூலகத்தில் முறையாக சேர்த்தல் பற்றி ராப் காப்லன் என்றொரு புத்தகக் காதலர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். புத்தகத்தின் அட்டையை, உள் அட்டையை, அபுனைவு என்றால் பொருளடக்கத்தை கவனமாகப் படிப்பாராம். பிறகு முதல் கட்டுரையின் முதல் பத்தியை மிக மொதுவாகப் படிப்பாராம். பிடித்திருந்தது என்றால் ஓகே. வாங்கி விடுவார். முதல் பத்தி ஈர்க்கும் விதமாக இருந்தால் போதுமாம். பின்னர் ஏதேனும் கிழிந்திருக்கிறதா, பைண்டிங் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பில் போடத் தந்துவிடுவார். புத்தகக் காட்சிகளில் நானும் இவ்வாறு செய்வதுண்டு. கூடுதலாக, மேலே உள்ள புத்தகத்தைப் பார்த்துவிட்டு, பிடித்திருந்தால், அந்த அடுக்கில் உள்ள கடைசிப் புத்தகத்தை எடுப்பேன். ஏனெனில், மேலாக இருக்கும் புத்தகம் ஆளாளுக்குப் பார்த்து, கசங்கி, அழுக்காகி இருக்குமே!
காப்லன் தனது நூலகத்தில் புத்தகத்தைச் சேர்க்கும் சடங்குதான் அற்புதம். கணினியில் வாங்கிய புத்தகங்கள் பட்டியல் என்றொரு கோப்பு இருக்கும். அதில் இந்தப் புத்தகத்தின் விவரங்களை ஏற்றி விட்டு, அந்த வரிசை எண்ணை புத்தகத்தில் எழுதுவார். இந்த வரிசை எண் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும். பின்னர் அடுத்த டேட்டாபேஸ் ஒன்று இருக்கும். அதில் புத்தகப் பெயர், ஆசிரியர், பதிப்பாளர், பதிப்பு ஆண்டு, எதைப் பற்றிய நூல் – இதில் ஒவ்வொரு வகைமைக்கும் மூன்று உட்பிரிவுகள் இருக்கும்.
உதாரணமாக, வரலாறு – அமெரிக்கா – 20ம் நூற்றாண்டு என்பதுபோல். கெட்டி அட்டையா, பேப்பர் பேக்கா என்று வாங்கியது, புத்தகத்தில் எழுதியிருக்கும் வரிசை எண் என்று எல்லா விவரங்களையும் பதிவார். கடைசி விவரம் – படித்து முடித்த தேதிக்கானது. இதைப் படித்ததும் பதிவு செய்வார். இந்த விரிவான சடங்குகளுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல, “எந்தப் பயனும் இல்லை“ என்றாலும், தான் விடாமல் செய்து வருவதாகச் சொல்கிறார் அவர்.
புத்தகங்களை இரவல் தருவது பற்றி ப்ரோயார்ட் என்றொருவர் எழுதிய கட்டுரை அப்படியே என் அனுபவம்தான். நண்பர் என் புத்தகத்தை எடுத்துச்செல்லும்போது, எனது மகள் திருமணமான ஒருவனோடு ஓடிப் போவதைத் தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டு நிற்பதைப்போல் உணர்வேன் என்கிறார். தன் புத்தக அலமாரியில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தின் பக்கம் நண்பர் சற்று அதிக நேரம் நின்று அதைப் பார்த்தால், வேறு ஏதாவது கூறி அவரது கவனத்தை திசை திருப்பி அவரை அந்த இடத்திலிருந்து நகர்த்தி விடுவேன் என்கிறார். இதை நானும் பல காலமாகச் செய்து வருகிறேன்.

புத்தகம் ஒன்றை ஓசியில் தந்த மறுநிமிடத்திலிருந்து அதைத்தான் படிக்க வேண்டும், அதில்தான் ஒரு விஷயத்தை சரிபார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றுமாம். எந்தப் பொருளை கடன் தந்தாலும், கடன் வாங்கியவர், தந்தவருக்கு அடிமை. ஆனால், புத்தகம் கடன் தந்தவன் மட்டும் வாங்கியவனுக்கு அடிமை. அவன் கொண்டுவந்து தரும் வரை அவன் பின்னாலேயே சுற்ற வேண்டும்… இதில் நான் இப்போது மிகவும் தெளிவாகி விட்டேன். நான் எவர்க்கும் அடிமை இல்லை. எவரும் எனக்கு அடிமையும் இல்லை!
வெறியாய் புத்தகங்கள் வாங்குவோர் பற்றிய ஒரு கட்டுரை திகைக்க வைக்கிறது. 18ம் நூற்றாண்டில், தாமஸ் ராலின்சன் என்பவர் தன் மாளிகை முழுக்க புத்தகங்களை வாங்கி நிரப்பி விட்டு, இரவு தெருவில் தூங்கினாராம். இவருக்கு அண்ணனான பாரீசின் எம்.போலார்ட் என்பவர் கண்மண் தெரியாமல் புத்தகங்களை வாங்கியதில் அவருடைய புத்தகச் சேகரிப்பு 600000 ஆகிவிட்டதாம். வீட்டின் இண்டுஇடுக்குகளில் எல்லாம் புத்தகங்களைத் திணித்து வைத்ததில் வீடு இடிந்து விழுந்ததாம். பிறகு வரிசையாக ஆறு பெரிய வீடுகள் கட்டி அதில் தம் புத்தகங்களைக் குடியேற்றினாராம்.
ரிச்சர்ட் ஹெபர் என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தக வெறியர். ஆனால், நல்ல மனிதர். எந்தப் புத்தகம் வாங்கினாலும் தனக்கு ஒன்று, ஓசியில் கொடுக்க இரண்டு என்று மூன்று பிரதிகள் வாங்கும் உத்தமர். இவர் முன்னர் சொன்ன ராப் காப்லன் போல் தேர்வு செய்வதெல்லாம் இல்லை. புத்தகக் கடைக்குப் போய், கடையில் உள்ளது முழுவதையும் பில் போட்டு வீட்டுக்கு அனுப்பு என்று சொல்லி விடுவார். அவர் மரணமடைந்தபோது தனது உயிலில் தனது புத்தகச் சேகரிப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. குறிப்பிடவும் முடியாது. காரணம், லண்டனில் இரண்டு மாளிகைகள், செஷையரில் ஒரு மாளிகை, பாரீஸ், பிரஸ்ஸல்ஸ், ஆண்ட்வெர்ப், கென்ட், பெர்லின் ஆகிய ஊர்களில் இருந்த மாளிகைகளில் இருந்த புத்தகங்கள் பற்றியெல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்றால் உயில், ‘பொன்னியின் செல்வன்’ போல் ஐந்து பாகங்கள் கொண்டதாக ஆகிவிடும்.
அச்சுப் புத்தகங்களின் வரவு பற்றிய கட்டுரையும் பிரமாதமானது. அது போலவே பைபிள்கள் அச்சானது பற்றிய கட்டுரையும். பைபிள் பிரசுரங்கள் பற்றிய ஆய்வாளரான பென் ஜாவின் தரும் தகவல்கள் வியப்பூட்டுகின்றன. பைபிள்தான் முதன்முதலில் அச்சிடப்பட்ட புத்தகம் என்பது நமக்குத் தெரியும். 1450 முதல் 1500 வரையில் 130 பதிப்புகள் பைபிளுக்கு வந்துள்ளன. 1466ல் ஜெர்மனிய மொழிபெயா்ப்பு வந்துவிட்டது. 1500 வாக்கில் ஹீப்ரூ மொழிபெயர்ப்பும் வந்துவிட்டது. கிங் ஜேம்ஸ் பைபிள்தான் ரோமன் அச்சில் அச்சான முதல் புத்தகம். இட்டாலிக்ஸை முதன்முதலில் பயன்படுத்தியதும், அத்தியாயங்களாக முதன் முதலாகப் பிரிக்கப்பட்ட புத்தகமும் இதுதானாம். 1480 வரை வாழும் எழுத்தாளரின் எந்த நூலும் அச்சாகவில்லை. எல்லாம் பழைய செவ்வியல் நூல்கள்தான் அச்சேறின.
கான்ஸ்டான்டின் லாஸ்காரிஸ் என்ற கிரேக்க அகதி ஒருவர் 1480ல் கிரேக்க அகராதி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டார். அதுதான் வாழும் படைப்பாளி ஒருவர் எழுதி அச்சான முதல் புத்தகம். அதே போல் 1550 வரை புத்தகப் பதிப்பு, விற்பனை என்றெல்லாம் எந்த முறையான ஏற்பாடும் கிடையாது. அறிஞர்கள் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ப அச்சடித்துத் தருவதாகத்தான் இருந்தது.இந்த நூலில் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரை புத்தகங்களில் மட்டுமே இடம் பெற்ற புத்தகங்கள் என்ற கட்டுரை. சில அற்புதமான படைப்பாளிகள் தமது படைப்புகளில் ஒரு புத்தகத்தை அடிக்கடி குறிப்பிட்டு, அதிலிருந்து மேற்கோள்கள் எல்லாம் காட்டி பிரமிக்க வைப்பார்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு புத்தகம் வெளியாகியே இருக்காது.
படைப்பாளி, தான் கற்பனை செய்த படைப்பிற்குள் மற்றொரு படைப்பை வேறு சிருஷ்டி செய்து வைத்து விடுகிறான். ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் அவரது உதவியாளர் வாட்ஸன் எழுதிய ‘The Curious Experience of Patterson Family On The Island Of Uffa’ என்ற புத்தகம் பற்றி பல இடங்களில் சொல்லப்படும். பி.ஜி.வுட்ஹவுஸ் கதைகளில் The Memoirs Of The Hon. Galahand Threepwood என்ற கற்பனை சுயசரிதை பற்றி பல இடங்களில் வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, எனது ஆசான் இர்விங் வாலஸ் ஜே.ஜே.ஜாட்வே என்ற எழுத்தாளர் எழுதிய, ‘The Seven Minutes’ என்ற நாவலை அமெரிக்க அரசு தடை செய்வதாகவும், அதை எதிர்த்து வழக்காடி பதிப்பாளர் ஜெயிப்பதாகவும் 700 பக்கத்திற்கு பெரிய நாவலே எழுதியிருக்கிறார். அந்த நாவலில் இந்தக் கற்பனை நாவலிலிருந்து மேற்கோள் காட்டப்படும் ஏராளமான பத்திகள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் வேறு நடக்கும். பத்திரிகைத் தணிக்கை, சுதந்திரம் பற்றிய அற்புதமான நாவல் இது. இப்படிப்பட்ட நாவல்களின் பட்டியலாக இந்தக் கட்டுரை இருக்கிறது.
புத்தகக் காதல் தொடர்பான சொற்கள் பற்றிய ஒரு கட்டுரை படித்தால் நீங்கள் bibliobule, biblioclast, bibliognoste, biblioklept, bibliolater, bibliolestes, bibliomancer, bibliomane, bibliomaniac, bibliophage, bibliophile, bibliophobe, bibliopole, biblioriptosm bibliosopher, bibliotaphe என்ற பலவகைகளில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று அறியலாம். இன்னும் வாழ்நாளில் நாம் படித்தே ஆகவேண்டிய 100 புத்தகங்கள், அமெரிக்காவை மாற்றிய 10 முக்கியமான புத்தகங்கள், படுக்கையில் படுத்தபடியே படிப்பது. பழைய புத்தகங்களின் தனிக் கவர்ச்சி, புத்தகங்களை அடுக்கி வைப்பது, புத்தகங்களின் அட்டைகள், நார்மன் மெய்லர், சாமர்செட் மாம் போன்றோரின் விருப்பத்திற்குரிய புத்தகங்களின் பட்டியல், நூலகங்கள், மனப்பாடம் செய்ய வேண்டிய 15 புத்தகங்கள், என்று ஏராளமான தலைப்புகளில் எத்தனை எத்தனையோ தகவல்கள்.
முடிப்பதற்குமுன் முன்னுரையில் ரே பிராட்பரி கூறும் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். எகிப்தியர்கள் மரணமடையும் போது, மேலுலகப் பயணத்திற்குத் துணையாக மரணமடைந்தவரின் செல்லப்பூனையை மம்மியாக்கி உடன் புதைப்பார்களாம். அது போல் எனக்குத் துணையாக ஷேக்ஸ்பியரும், ஈட்ஸ்ஸும் போப்பும் வர வேண்டும் என்கிறார் பிராட்பரி.
வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் என்பது எனது எல்ஐசி நிறுவனம் மட்டும் அல்ல, புத்தகங்களும்தான் என்று அறியும்போது, மனதில் இனம் புரியா மகிழ்ச்சி.
