முனைவர் இரா. மோகனா
பாரதத்தையும் இராமாயணத்தையும் அதன் பார்வையில் வைத்துப் பார்ப்பதிலிருந்து சிறிது வேறுபடுத்தி வேறு கோணத்தில் அணுகியுள்ளார் லட்சுமி பாலகிருஷ்ணன். அப்புரிதலுக்கு அடித்தளமிட்டது மகாஸ்வேதா தேவியின் கதை என்பதைத் தன் உரையில் நூலின் முதலில் தந்துள்ளார். ஆசிரியருக்குச் சிந்தனைத் தெளிவையும் பார்வையில் மாற்றத்தையும் தந்தது ஸ்வேதா தேவியின் கதை என்கிறார்.
கதையின் தலைவர்கள் இறைவனாகவே இருந்தாலும் நம் பார்வை எளியவர்களிடமே இருக்க வேண்டும் என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த எண்ணம் எழக் காரணமாய் இருந்த ஸ்வேதா தேவிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ‘மகாபாரதம் என்பதே குரு குலத்தவருக்குள் நடந்த போர் பற்றியது மட்டுமே என்பது பொதுப்புரிதல். குருகுலத்திற்கும் சுற்றியுள்ள சூழலுக்குமான போராட்டங்களை இக்கதையில் மையப்படுத்தியுள்ளேன்’ (பக்கம்-6) என்ற பதிவு அவருடைய என்னுரையில் இடம் பெற்றுள்ளது.

குருச்சேத்திரப் போருக்குப் பின்னும் பல போராட்டங்கள் நடந்தன என்றும் அவற்றில் குறிப்பிடத்தக்கது தட்சனுக்கும் ஜனமேஜனுக்குமான போராட்டம் என்பதைச் சொல்லியுள்ளார். அப்போராட்டத்தை முடித்து வைத்தவர் ஆஸ்திக முனிவர் என்றும் அவரைப் பெற்றெடுத்த மானசாவைப் பற்றியதுதான் இந்தக் கதை என்றும் கூறியுள்ளார்.
நவகிரக ஸ்தலங்களில் கேதுவுக்கு உரிய தலம் கீழப்பெரும்பள்ளம் என்ற ஊர் ஆகும். அந்த ஊரையும் அரவ அரசன் வாசுகிக்குமான தொடர்பு இந்த நாவலில் கதைக்களனாக ஆளப்பட்டுள்ளது. இந்நாவல் பாரதத்தின் கிளைக் கதையாக இருந்தாலும் நம் பக்கத்திற்கு இழுத்து வரும் நோக்கில் புகார் நகரைக் கதைக்களமாக எடுத்துக்கொண்டதாக ஆசிரியர் கூறியுள்ளார். இந்தக் கதையின் நாயகி மானசாவிற்கு ‘வில்வ பர்வதம்’ என்னும் இடத்தில் கோயில் உள்ளது என்றும் அக்கோயிலில் சித்தேஸ்வரியாக, விஸ்வ பூஜிதையாக, நாகினியாக மானசா கோயில் கொண்டுள்ள செய்தியைச் சிறப்பாக எடுத்துக்கூறியுள்ளார்.
வன அழிப்பு, காலம் காலமாக நாகரிகம் அடைந்ததாகச் சொல்லிக் கொள்வார்கள். இது வழக்கம்தான். அதில் சிக்கி அழிந்த வனவாசிகளின் வலிகள் எவ்வாறு தலைமுறைகள்தோறும் கைமாற்றப்பட்டு வஞ்சமாக மாறியது என்பதை உருக்கத்தோடு எடுத்துச் சொல்லியுள்ளார். பகைமை வேரூன்றி அனைத்தையும் வேரோடு சாய்த்த நேரத்தில் எஞ்சியதையாவது காப்பாற்ற வேண்டும், இனி வருகின்ற தலைமுறையினர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை மனதில்கொண்டு தன் மகன் மூலமாக அந்த வஞ்சத் தொடர்ச்சியை அறுத்து, அமைதியை நிலைநாட்டிய சிறப்பு இந்நாவலில் கூறப்பட்டுள்ளது.
ஓர் அன்னையால் மட்டுமே தன் குலப்பகைமை, குலத்தூய்மை போன்ற கருத்தாக்கங்கள் எவ்வளவு அர்த்தமற்றது என்பதைத் தன் குழந்தைக்குக் கூற முடியும். இந்நாவலிலும் மானசா, தான் பிறந்த குலத்தை மட்டுமல்ல, குருகுலத்தையும் வஞ்சம், பகைமை போன்ற அமிலங்களின் அரிப்பிலிருந்து மீட்டெடுத்துள்ளாள் என்ற செய்தி பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, தனது புகுந்த குலத்தில் தலைமுறைதோறும் தொடரும் அநீதி ஒன்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்தவளாக அவளைச் செதுக்கியுள்ளார் ஆசிரியர்.
“தனக்கு நடக்கிற அநியாயங்களைத் தாங்கிக்கொள்ளும் பலர் அதன் மன இறுக்கத்தைப் பிறர் மீது காட்டுவர். இதுவே பல குடும்பங்களுக்குள் நடக்கும் பெரும்பாலான துயரங்களின் மூலமாக உள்ளது. ஒரு சிலர் மட்டுமே தனக்கு நடந்த அநீதி பிறருக்கு நடக்கக்கூடாது என்று நினைக்கின்றனர்”. அத்தகையதொரு நல்ல மனம் படைத்த கதாபாத்திரமாக மானசா இந்நாவலில் உலவுகிறார்.
இந்நாவலில் மானசாவின் பங்களிப்பு, வாசுகிக்கு நல்ல தங்கையாக, ஜரத்காருவிற்கு நல்ல மனைவியாக, ஆஸ்திகனுக்கு நல்ல தாயாக என எல்லா நிலைகளிலும் தன் கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் பெண்ணாக வலம் வருகிறார். இந்நாவல் புராணக் கதைகளோடு பின்னிப் பிணைந்துள்ளது. அஷ்ட நாகங்களில் முதன்மையானது வாசுகி என்ற குறிப்பு இந்நூலில் உள்ளது. காசியப மகரிஷிக்கும் கத்ரு அன்னைக்கும் பிறந்தவர் வாசுகி என்ற நிலையில் வாசுகி நாவலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல் இவ்விருவருக்கும் பிறந்த ‘ஆயிரம் பேரில் ஒரே பெண்மகவு மானசா’ என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
புத்திரப்பேறு, திருமணத் தடைகள் அகல நாகப்பிரதிஷ்டைகளுக்குப் பால் ஊற்றியும் மலர், சுடர் கொண்டு வணங்கும் மரபு இன்றும் வழக்கில் உள்ளதுதான். இந்நம்பிக்கை ஆதி காலத்தில் வேங்கட மலையில் இருந்து குமரி வரை விரிந்திருந்த நிலத்தவர் இடையே இருந்த செய்தியை இந்நாவலில் கோடிட்டுக் காட்டியுள்ளார். சான்றாக நீண்டகாலம் குழந்தைப்பேறு இல்லாது இருப்போர் கருநிலவு (அமாவாசை) நாளில் கல் மண்டபத்தில் தங்குவர். அவ்வாறு செல்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் ‘நாகன்’ என்றும் பெண்ணாக இருந்தால் ‘நாகம்மை’ என்றும் பெயரிடுவர். இத்தகைய குழந்தைகள் கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றில் குறைவற்றவர்களாக இருப்பர் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது என்பதையும் நாவலில் சொல்லியுள்ளார்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அதில் பாற்கடலிருந்து வந்த நஞ்சுடன் வாசுகியின் நஞ்சும் சேர்த்து சிவன் உட்கொண்டதால் குற்ற உணர்ச்சியால் வாசுகி சிவனை நினைத்துத் தவமிருந்து ஆசி பெற்றார் என்று கூறியுள்ளார் ஆசிரியர். நாகக் கன்னிகைகளுக்கு இற்செறிப்பு போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அவர்கள் விருப்பம் போல் நடமாடலாம். தனக்குரிய இணையைத் தானே தேர்வு செய்யலாம். தந்தை, தாய், கணவன் என்ற பொறுப்பைத் தவிர எந்தக் குழந்தையும் வளர்க்கத் தேவையில்லை. தாயின் மூத்த சகோதரனின் வழிகாட்டுதலில் குழந்தைகள் வளர்வர் என்று தாய்மாமனுக்கு உரிய பங்களிப்பு இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்குமேல் ஒரே கிராமத்தில் தங்காதவர்களுக்கு ‘யாயாவரர்’ என்று பெயர் இருப்பதாக எழுதியுள்ளார் ஆசிரியர். இக்குலத்தில் வந்தவர்தான் மானசாவின் கணவரான ஜரத்காரு முனிவர். மானசாவின் இயற்பெயர் ஜரத்காரு என்றும் கோடிட்டு கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் புலரியின் கிழக்கில் எழும் பொன்மொழி அருணன் உடையது என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.
நல்ல மனைவி தன் கணவனுக்கும் நல்ல சீடன் தன் குருவுக்கும் பணிவிடை செய்ய வேண்டிய முறை பற்றிக் கூறும்போது ‘சுவேத காசீயம்’ போல் இருக்க வேண்டும் என்று கூறி, அதற்கு அழகான பொருள் விளக்கத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சுவ என்றால் நாய், ஏத என்றால் மான், காக என்றால் காகம். நாய் போன்ற விழிப்பும், மான் போன்ற மருட்சியும் காக்கை போன்ற குறிப்புணர்தலும்கொண்டு சேவை புரிவது ஸ்வேதகாசீயம் என்கிறார்.
ஜரத்காரு மானசாவை மணக்கப் போடும் கட்டுப்பாடுகள், ஜரத்காருவின் மனநிலை போன்றவற்றையும் நாவலில் குறிப்பிடும் அதேவேளையில், தான் ஒரு ஆண், பெண் பாலாகிய நீ நினைவுறுத்தித்தான் நான் என் கடமைகளைச் செய்ய வேண்டுமா? அந்த அளவிற்கு ஆணவம் உடையவளா நீ? என்று கோபமுடன் பேசி மானசாவை உதறிவிட்டு வெளியேறுகிறார் ஜரத்காரு. மானசா எவ்வளவு கூறியும் அவர் கேட்கவில்லை.
முனிவர் சென்றவுடன் தனித்திருந்த தங்கையைக் காணச் சென்ற அண்ணன் வாசுகி, அவளைத் தன் இல்லத்திற்கு வரும்படி அழைக்கிறார். மானசாவோ நான் வருகிறேன். ஆனால் இதுவரை நான் வசித்த இந்த வீட்டை எரித்து விடுங்கள் என்று கூறினாள். பின்பு அண்ணனான வாசுகியின் வீட்டிற்குச் சென்றாள். சிறிது நாட்களில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஆஸ்திகன் எனத் தன் கணவனான ஜரத்காரு கூறிய பெயரை இட்டு மகிழ்ந்தாள்
தினமும் இரவு கதை கூறி மகனைத் தூங்க வைக்கும் பணி மானசாவிற்கு உரியது. ஒருநாள் துருவ நட்சத்திரத்தின் கதையைக் கூறினாள். சுநீதியின் மகன் துருவன். இவன் தந்தையின் அரவணைப்பு இன்றி வளர்ந்தான் என்று தாய் கூறுவதைக் கேட்ட ஆஸ்திகன் அவனுக்காக இரங்கினான். மீதமுள்ள கதையைக் கேட்டு முடிப்பதற்குள் குழந்தைக்கு உரிய பாங்காகிய உறக்கத்தை மேற்கொண்டான். நாககுலத்தில் நடந்த பேரழிவில் வெந்து கருகிய உயிர்களுக்கு நிறைவு அளிப்பதற்காக நோன்பு நோற்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திகனுக்கு குலக்கதையைக் கூறுவதற்காகவே நோன்பிற்கு அழைத்து வந்திருந்தாள் மானசா. நாவலின் இடையிடையே மகாபாரதத்தில் பார்த்தனுக்குக் கிருஷ்ணர் சுபத்திரையை மணம் முடித்த செய்தி, நாகர்குலத் தலைவனோடு துரியோதனன் கொண்டிருந்த நட்பு, துரியோதனனின் மனைவி பானுமதி, துரியோதனனை வசியம் செய்ய நினைத்து அது தவறுதலாகச் சென்று நாக வடிவினான தட்சகனிடம் சென்ற செய்தியும் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
தாண்டவ வனத்தை அழித்து நீங்கள் விரும்பும் சிறந்த நகரை அமைக்கலாம் என்று அர்ஜுனனிடம் கிருஷ்ணன் கூற… முதலில் மறுத்தவன் பின்பு வனத்தை அழிக்க ஒத்துக் கொண்டான். நாகர்களோடு போரிட்டு முதலில் யானைகளை அழித்து, அதன் பின்பு அங்கும் இங்கும் ஓடிய நாகர்களையும் அழித்தனர். இறுதியாக அந்த அழகிய பசுமையான காடு முழுவதையும் தீயிட்டுக் கொளுத்தினர். அக்காட்டைவிட்டு பறந்தோடித் தப்பிக்க முயன்ற பறவைகளைக்கூட அம்பு எய்து கொன்றனர். ஓடை நீரில் மூழ்கி தப்பிக்க நினைத்த முதியவர்களும் அனலின் வெம்மை தாங்க முடியாது கருகினர். தாண்டவ வன முற்றுகையில் அனைத்தும் எரிந்த நிலையிலும் தட்சகனின் மைந்தனான அஸ்வசேனன் மட்டும் காப்பாற்றப்பட்டான். மொத்தமாய் 21 நாட்கள் நின்று எரிந்தது தாண்டவ வனம்.
தேவர் உலகத் தலைவனின் காவலில் இருந்த தாண்டவ வனத்தை வென்று அழித்ததால் இளைய பாண்டவனாகிய அர்ஜுனனின் வில் ‘காண்டீபம்’ என்ற பெயர் பெற்றது. இந்நிகழ்வு நாக குலத்தவருக்கு வாட்டி வதைக்கும் நினைவுகளாக, ஆறாத வடுவாக மாறியது. குருகுலத்தின் மீதான தங்கள் வஞ்சத்தை கூர் தீட்டிக்கொள்ள சிறந்த வாய்ப்பாக இவர்களுடைய குலச் சடங்குகள், குலப்பாடல்கள் அமைந்தன என்ற செய்தி இந்நாவலில் உள்ளது. ஆஸ்திகனுக்குக் குருகுலக் கல்வி வழங்கப்பட்டது.
கல்விக்காகப் பிரிந்த ஆஸ்திகனை எண்ணி நாளும் நினைவில் மூழ்கினாள் மானசா. அதைக்கண்டு வாசுகி சமாதானப்படுத்த முயல்வதும் மானசா தன் கணவனுக்கும் ஆஸ்திகனின் குலக்கல்வியில் பங்கு உண்டு. ஆனால் அனைத்தையும் என் தலையில் சுமத்திவிட்டுச் சென்று விட்டார். பொறுப்புகளில் இருந்து நழுவுவதன் பெயர் துறவு அல்ல. பற்றற்ற நிலையிலும் பொறுப்புகளைக் கையாள்வதே துறவு. ஒவ்வொரு முறையும் ஆஸ்திகன் தந்தையைப் பற்றிக் கேட்கும்போது நான் அடையும் துயர் உங்களுக்குத் தெரியாது என்று தன் நிலையை எடுத்துரைப்பதாக மானசாவைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
ஆசிரியரின் பெண் குறித்த பார்வை, ‘இவர்கள் எல்லோருக்கும் பெண் என்பவள் கற்பகத்தருவாக இருக்க வேண்டும். கேட்டதை எல்லாம் தரவேண்டும். அலுத்துக்கொள்ளவோ சலித்துக்கொள்ளவோ கூடாது. எத்தனையோ முறை தந்தையைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டு ஆஸ்திகன் அழுது அரற்றி இருப்பான். அப்போதெல்லாம் அவனைத் தேற்ற நாம் என்ன பாடுபட்டு இருப்போம் என்று கூறுவதிலிருந்து அறியலாம்.’ மேலும் தன் மகனும் தந்தையைப்போலவே சிந்திப்பானா? என்று பயப்படுவதாகவும் பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.
12 ஆண்டுகள் குருகுலக் கல்வி பயின்று திரும்பிய ஆஸ்திகனை அன்புடன் ஆரத்தி எடுத்து வரவேற்க அவன் அன்னை, மாமன் காலில் விழுந்து வணங்கினான். சிறிது நேரம் கழித்து உண்டான். ஆஸ்திகனின் தோற்றம் குறித்து நாவலில் அழகாக வர்ணித்துள்ளார் ஆசிரியர். ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பதை எடுத்துரைக்கும் முகமாக குரு பக்தியில் தலைச் சிறந்த உதங்கர் பற்றிய செய்தி நாவலில் வந்துள்ளது. இத்தகு சிறந்த உதங்கரின் வன்மமே நாகர்குலத்திற்கு ஆபத்தை வரவழைத்தது. ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு காரணங்கள் உண்டு என்று தன் மகனிடம் கூறினாள் மானசா. ஜனமேஜய அரசன் சர்வசத்திர வேள்வி செய்வதும் அவ்வேள்வியசைச் செய்யத் தூண்டி விடுபவர் உதங்கர் என்ற செய்தியும் நாவலில் உள்ளது. இந்த யாகத்தால் நாககுலம் முழுவதும் அழியும்.
அந்த அழிவை நீ தடுக்க வேண்டும். வஞ்சத்தைத் தலைமுறைதோறும் கைமாற்றுவதைப் போன்ற மூடத்தனம் வேறு இல்லை. முன்னோர்களின் பகைக்காக மனிதர்கள் அழிவது இனியும் தொடரக்கூடாது. ஆதலால் குருகுல அரசனான ஜனமேஜயனின் மனதில் உள்ள பகை என்னும் நஞ்சை நீதான் இதமான வார்த்தைகளால் அழிக்க வேண்டும் என்கிறார். மேலும் ஆஸ்திகனின் பிறப்பின் உண்மை நாவலின் 23வது பகுதியில் கூறப்பட்டுள்ளது.
தட்சகனைப் பழிவாங்க ஜனமேஜயன் நடத்திய வேள்வியைக் கைவிடுவதற்காக ஆஸ்திகன் செல்வத்தின் இயல்பு என்ன? அதைச் சேமிக்கும் வழி என்ன? என்று கேட்ட உதங்கரின் கேள்விக்குப் பதில் தந்தார். பதில் அளித்ததால் தனக்கு ஒரு வரம் தர வேண்டும் என்பதையும் ஆஸ்திகன் முன்பே கூறியிருந்தான். தற்போது வென்றதால் தட்சகனைக் காப்பாற்றுங்கள் என்று கேட்டான். பின்பு நிகழ்ந்ததைக் கூறினான். அர்ஜுனனைப் பழிவாங்கவே தட்சகன் தங்கள் தந்தையைக் கொன்றார். அதற்காக நீங்கள் பழிவாங்க இவரைத் தண்டித்தால் வன்மம் தொடரும்.
பெருந்தன்மையாகத் தட்சகனை மன்னியுங்கள். அதனால் குருகுலத்திற்கும் நாக குலத்திற்குமான பகை அழியும் என்று கூறியதோடு நான் மானசாவின் மகன் என்றும் கூற, ஆஸ்திகளின் உரை கேட்டு உறைந்த ஜனமேஜயன் தட்சகனை மன்னித்தார். உடனே நாககுல அரசனான தட்சகன் மனித உருவில் இருந்து ஆஸ்திகனை மார்புறத் தழுவினார். நம் குலத்தையே காத்தாய். இந்த வெற்றியை உலகமே கொண்டாட வேண்டும் என்று சொல்லி இந்த இனியநாள் ‘நாகபஞ்சமி’ தினமாகக் கொண்டாடப்படட்டும் என்று வரம் கொடுத்தார். வெற்றிக் களிப்பில் வேணுவனம் திரும்பினர். ஆஸ்திகனைப் பாசத்துடன் வரவேற்ற மானசா அவனுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்ய ஆஸ்திகனோ மறுத்தான். உடனே இரண்டு வாய்ப்புகள் தருவதாக மகனிடம் கூறி அவனை மணமகன் ஆக்கினாள். இறுதியில் தவம் இயற்றதான் செல்லப் போவதாகக் கூறி, இல்லத்திலிருந்து சென்ற மானசாவைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் துணைவியுடன் சித்தேஸ்வரியாக, நாகபகினியாக கோயில் கொண்டிருப்பதை ஆஸ்திகன்கண்டு உள்ளம் பூரித்தான் என்பதாக நாவலை முடித்துள்ளார் ஆசிரியர்.
வானபிரஷ்தம் செல்வதானால்கூடக் கணவனோடு சேர்ந்துதான் மனைவியும் கானகம் செல்ல வேண்டும் என்ற செய்தியை நான் ஏற்க மாட்டேன். அங்கு சென்றும் பதி சேவை செய்வதுதான் பெண்ணுக்கு வீடுபேறு என்ற கருத்து எனக்கு முரண்பட்டது. இம்முடிவு இன்று எடுத்தது இல்லை. நான் நம் முனிவருடன் வாழ்ந்த இல்லம் தீப்பற்றி எரியும்போது எடுத்துவிட்டேன் என்று தீர்க்கமாக தன் கருத்தை எடுத்துரைப்பவளாக மானசாவைப் படைத்து பெண்ணியப் பார்வையை நாவலில் மிளிரச் செய்துள்ளார் ஆசிரியர்.
மென்பொருள் துறையில் பணிபுரிந்து, சிறந்த கல்வி ஆசிரியராகவும் மனநல ஆலோசகராகவும் தன் முத்திரையைப் பதித்தவராகிய லட்சுமி பாலகிருஷ்ணன், ஆனந்தவள்ளி என்ற வரலாற்றுப் புதினத்திற்காகச் சிறந்த விருதைப் பெற்றுள்ளார். இத்தகு சிறந்த ஆசிரியரின் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். இத்தகு அரிய புராணக்கிளைக்கதையோடு நூலை 126 பக்கங்களில் நன்கு பதிப்பித்த பாரதி புத்தகாலயத்திற்கும் வாழ்த்துகளும் நன்றியும்.