நேர்காணல்: அருள்மொழி
கேள்விகள் : ச. தமிழ்ச்செல்வன்
உங்கள் ஊர் மற்றும் இளமைக்காலம், கல்வி பற்றிய கேள்வியில் துவக்கலாம்.
பிறந்து வளர்ந்தது கோவை மாவட்டம் நம்பியாம்பாளையம் கிராமம். (இப்போது திருப்பூர் மாவட்டத்தில் சேர்ந்துவிட்டது) பள்ளிப்படிப்பு சுண்டக்காம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளி, அவினாசி புனித தோமையர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, அன்னூர் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், இளநிலை பட்டப்படிப்பு கோவை அமிர்தா பொறியியல் கல்லூரியிலும், முதுநிலை சென்னை தொழில்நுட்பக் கல்லூரியிலும் படித்தேன்.பின்னர் சென்னை, பெங்களூரு என கல்வி நிலையங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றினேன். தற்போது அமெரிக்காவில் சியாட்டில் நகரில் வசித்து வருகிறேன்.

இலக்கிய வாசிப்பு, கதை எழுதுதல் என்கிற இடத்துக்கு எப்படி, எப்போது வந்தீர்கள்?
குறிப்பாக வாசிப்பு இப்போதுதான் ஆரம்பித்தது என்று காலவரையறை செய்ய முடியவில்லை. ஆனால் பாடப் புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களே படிக்கும் ஆர்வத்தை தூண்டின. இந்தப் புத்தகங்களைப் படிக்கும் நேரத்தில் பாடப் புத்தகங்களைப் படித்தால் நல்ல ரேங்க்காவது வாங்கலாம் என்கிற அறிவுரைகள் கிடைத்ததுண்டு. அதை அப்படியே கடைபிடித்தாலும் முதல் மதிப்பெண்கள் வாங்கியதில்லை. முட்டி மோதி முழுநேரம் படித்துத்தான் வெளியில் சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க முடிந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்திறன் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும்போது அதற்கான தேவை முடிந்துவிடுகிறது. ஆனால் அதுதான் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சம்பாத்தியத்தைக் கொடுத்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். குறிப்பாக அது பெண்களுக்கு மிகவும் முக்கியம். வாசிப்புப் பழக்கமும் சொந்தமாக எழுதும் ஆர்வமும் வந்ததற்கு எனக்குத் தமிழும் ஆங்கிலமும் சொல்லிக்கொடுத்த ஆசிரியைகள்தான் காரணம். மனப்பாடம் செய்து எழுதவேண்டிய கட்டுரையை, எனது நினைவாற்றல் குறைபாடு காரணமாக சொந்த மொழியில் எழுதியதை – அதில் வரிக்கு வரி தவறுகள் இருந்தாலும் பாராட்டி, வகுப்பில் எல்லாருக்கும் படித்துக் காட்டிய ஆங்கில ஆசிரியை வாய்த்தது ஒரு முக்கியக் காரணம்.
படிக்கத் துவங்கியது அனைவரையும்போல வார/மாத இதழ்கள்தான். தொடர்கதைகளை விட சிறுகதைகளே பிடித்திருந்தது. ஏனென்றால் அடுத்த புத்தகத்துக்காக காத்திருக்கத் தேவையில்லை. அங்கிருந்துதான் இலக்கியம் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அறிமுகம் கிடைத்தது. விடுமுறை நாட்களில் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தனில் ஆரம்பித்து அம்பை, ஆதவன், புதுமைப்பித்தன் என கிளாசிக் எழுத்தாளர்களை வாசித்தேன். அதன் பிறகு, மிகவும் தாமதமாகத்தான் பாமா, பெருமாள் முருகன், இமையம் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றித் தெரியவந்தது. அவ்வப்போது வாய்க்கும் நீண்ட பயணங்கள் எனக்குப் பிடிக்கும்.
புத்தகங்கள் வாசிக்க அந்தப் பயணங்கள் துணை செய்தன.அனைவரையும்போல புகழ்பெற்ற ஆளுமைகள் சிலாகித்துச் சொல்லும் புத்தகங்களில்தான் தொடங்கினேன். ஆனால் என்னதான் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக இருப்பினும், சிலருடைய கதைகள்தான் நம்மை விடாமல் பிடித்துக்கொள்கின்றன, ஆழ்மனதோடு பேசுகின்றன. அந்த வகையில் நீங்காத இடம் அம்பைக்கும் பாமாவுக்கும் கி. ராஜநாரணனுக்கும் பிரபஞ்சனுக்கும் இமையத்துக்கும் உண்டு.
உங்கள் முதல் கதை பற்றி..
முதலில் எழுதிய கதை “டைரி”. முதலில் பதிப்பிக்கப்பட்ட கதை “பந்தம்”. இந்த இரு கதைகளும் “டைரி” தொகுப்பில் உள்ளது.ஆரம்பத்தில் கட்டுரைகளும் புனைவல்லாத விஷயங்களும் எழுதினேன். சில ஆண்டுகள் முகநூலில் எழுதினேன். கட்டுரைகள் எண்ணங்களை வெளிப்படுத்த நல்ல வடிவமாக இருந்தாலும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைப் பேச, குடும்ப, சமூக உறவுகளைப் பேச புனைவே விசாலமாக இருக்கிறது. தொடர்ந்து புனைவு எழுதுவேன் என நம்புகிறேன்.
கொங்குவட்டாரத்தின் கற்பிதங்களை அனாயசமாக உங்கள் கதைகளில் உடைத்துக்கொண்டு போகிறீர்கள். இக்கதைகளுக்கு எப்படியான எதிர்வினைகள் வந்தன?
இந்தக் கற்பிதங்கள் நம்முடைய முழு சமூகத்துக்குமானது. ஒவ்வொரு வட்டாரத்தின் சமூக, பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப வடிவம் கொண்டுள்ளது. இந்தப் பகுதியிலிருந்து இதுகுறித்த எழுத்து குறைவாக இருப்பதாலே நான் வந்து உடைத்ததுபோலத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் பெரும்பாலானோர் மனதிலிருக்கும் கேள்விகள்தான். இயல்பு வாழ்க்கையில் ஒரு பெண் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் கிடைத்துவிடுமா என்ன? கேளாத செவிகள் கேட்கட்டும் என ஏதாவது செய்யத்தானே வேண்டியிருக்கிறது?
எதிர்வினைகள் இதுவரை ஆக்கப்பூர்வமாகவும் ஊக்கமளிக்கும் வகையில் நேர்மறையாகவும் தான் வந்துள்ளன. இக்கதைகள் என்ன உணர்வுகளைச் சொல்லவேண்டுமென்று எழுதப்பட்டதோ அதே உணர்வில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. சில இடங்களில் ஸ்டீரியோ டைப் செய்வதுபோல சில பாத்திரப் படைப்புகள் இருப்பதாக கேள்விகள் வந்தன. அதுபற்றி யோசிக்கும்போது, நம்மிடம் இருப்பதைத்தானே எழுதமுடியும் என்பதுதான் எனக்குப் பதிலாகக் கிடைத்தது. கதைகளில்கூட நாம் விரும்பும் தீர்வை நோக்கி நகரவியலாமல் இருப்பதுதானே நம் நிலையாக இருக்கிறது?
எனது கதாநாயகிகளும் நாயகர்களும் புரட்சிகரமாக இருக்கவேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால் நாம் அப்படி இல்லையே? என்ன செய்வது?
பெருமளவில் எதிர்மறையாகவோ, கடும் விமர்சனங்களையோ நான் இதுவரை எதிர்கொள்ளவில்லை. “கதையெல்லாம் எழுத நேரம் இருக்கிறதா?” என்பது போன்ற கேள்விகள் சில வந்தன. அதற்கு “கதை எழுதுமளவுக்கு வெட்டியா இருக்கியா?”ன்னு அர்த்தம். ”இது நேரம் இருந்தால் பொழுதைப் போக்குவதற்காக எழுதுவதல்ல, நேரம் ஒதுக்கி எழுதுவது” என்று அவ்வளவு எளிதில் அவர்களுக்குப் புரியவைத்துவிட முடியுமா என்ன?
சொந்த சமூகத்தை கடுமையாக விமர்சிக்கும் மனநிலை அல்லது பார்வை எப்படி வந்து சேர்ந்தது?
“நாட்டுக்கு சேவை செய்யுறதுக்கு முன்னால வீட்டைப் பார்க்கணும்” என்று கிடைக்கும் அறிவுரைகளின்படி சரியாகத்தான் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. நமது வீடுகளை உற்றுநோக்கியதில் கிடைத்தவை தான் இந்தக் கதைகள்.
நாம் பிறக்கும்போதே நம்மை வடிவமைக்கும் பல விஷயங்கள் கேட்காமலே வந்து ஒட்டிக்கொள்கின்றன. பெயர், பாலினம், சாதி என. அவை தரும் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்கிறோம், உழைக்காமல் ஓசியில் கிடைத்தவற்றை கடவுள் அருளாகவும் குலப்பெருமையாகவும், தனக்குத் தகுதியிருப்பதாலேயே அது வந்து சேர்ந்ததாகவும் நினைத்து அவ்வப்போது அதைச் சொரிந்தும் விட்டுக்கொள்கிறோம். நான் அப்படியெல்லாம் இல்லை என்று நிறுவிக்கொள்வதில் மட்டும் கவனமாய் இருக்கிறோம்.
என்னுடைய கதைகளில் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றும் செவ்வாய்க் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். நம்முடன் இருப்பவர்கள். நம்மிடம் சாதி இருக்கிறது, ஆனால் அது சவுகரியமாக இருக்கும்வரை எதுவும் செய்யாமலிருக்கிறோமே? உணர்வு பரவாயில்லை, வெறி இருக்கக்கூடாது என்பதெல்லாம் போங்காட்டம். சாதி எவ்வளவு இறுக்கமாய் இருக்கிறதோ அவ்வளவு இறுக்கமாய் ஆணதிக்கமும் இருக்கிறது. ஆண்கள்தான் கொடுமைக்காரர்கள், பெண்களெல்லாம் பாவமா? அதுவும் கிடையாது, ஆணாதிக்கத்தையும் சாதியையும் கடுமையாக நிலைநிறுத்துவதில் பெண்களுக்கும் இணையான பங்கு இருக்கிறது.
தந்தையிடம் மகளுக்குக் கிடைக்கும் சுதந்திரம் மனைவிக்கு ஏன் கிடைப்பதில்லை? ஏனென்றால் அவள் தலைமை அடிமை. மகளைக் கண்காணித்து வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதை பெண் சரியாக செய்தால் ஆண் சும்மாயிருந்தால் போதும். பெண்தான் ஆணை முதலாளியாகவும் பெண்ணைத் தொழிலாளியாகவும் வளர்க்கிறாள். இதையெல்லாம் சரியாகச் செய்யும் பெண்ணுக்கு அதற்கான லாபங்களையும் ஆணாதிக்கம் கொடுக்கத்தான் செய்கிறது. சமயங்களில் “பெண்ணுக்குப் பெண்தான் எதிரி” என்று கையாளைப் பலியிட்டு முதலாளிகள் தப்பித்துக்கொள்ளலாம். நமக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தின் லட்சணம் அவர்களின் விருப்பத்துக்கு ஆகாத காரியத்தைச் செய்யும்போதுதான் தெரியும். இவையெல்லாம் ஒருவருக்கும் தெரியாதா என்ன? தெரியும்தான். பலருக்கு எழுத வாய்க்கவில்லை, எனக்கு வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான்.
நாம் எல்லோரும் சாதியால் வடிவமைக்கப்பட்டவர்கள்தானே? எவ்வளவு நாள்தான் சாதியற்றவர்கள்போல பாவனை செய்வது? எவ்வளவு நாள்தான் அரசியல்வாதிகளை மட்டும் தூற்றிக்கொண்டு நாம் புனிதமானவர்கள்போல நடிக்கப்போகிறோம்? எத்தனை நாள் அன்பின் வடிவம் அம்மா, தன் குழந்தைகளுக்காகவே வாழ்பவள் என்று பொய் சொல்லப்போகிறோம்?
குலப்பெருமை பேசும் எல்லா சாதிகளுமே அவரவர் வீட்டுப் பெண்களிடம் கேட்டுப் பார்க்கட்டும், யார் அவர்களிடம் முதல்முதலில் அத்துமீறியது என்று? உங்கள் சாதிக்காரர்கள் தானே? அவர்களை என்ன செய்தீர்கள்? நோய் புரையோடிப்போயிருக்கிறது. புண்ணை அறுக்கத்தான் வேண்டும். யாருக்கும் நோகாமல் எப்படி அறுப்பது?

தூரதேசத்தில் இருந்து எழுதுவது ஒரு சுதந்திரத்தைக் கொடுக்கிறதா?
ஆம். வெளிநட்டில் இருப்பது ஒருவகையான சுதந்திரத்தைத் தருகிறதுதான். சில வேலைகளை அதிகமாகச் செய்ய நேர்ந்தாலும், நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவிட முடிகிறது. யாரும் வீடேறி வந்து குடும்பத்தில் எப்படி கவனம் செலுத்த வேண்டும், ஏன் தினமும் சமைத்து சாப்பிடவேண்டும் என்பது பற்றி வகுப்பெடுக்க மாட்டார்கள். எங்காவது வெளியே போனால் “கணவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்?” என்கிற கேள்வியை இங்கு யாரும் கேட்பதில்லை. ஆனால் மூன்று வார விடுப்பில் இந்தியா வரும்போது தினம் ஒருமுறையாவது அந்தக் கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது அந்தச் சமூகத்தில் என்னுடைய இடம் எது என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
இதுபோன்ற ஒன்றுக்கும் உதவாத கேள்விகளுடன் சண்டையிடத் தேவையில்லாத காரணத்தால் நேரமும் ஓய்வும் கிடைக்கிறது. அதேபோல இங்கே பெரும்பாலான ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதால், தனக்குத்தானே குளித்துக்கொள்வது, சாப்பிட்டுக்கொள்வது தவிர வேறு எந்த வேலையும் ‘பழக்கமில்லாத’ நமது ஆண்கள், ஒருகட்டத்தில் அதைப் பழகிக்கொண்டு செய்கிறர்கள். குடும்ப உறவுகளும் மேம்படுகிறது. அதனால் எந்நேரமும் வீட்டை தலையில் சுமந்துகொண்டு அலைய வேண்டியதில்லை. வேலையும் அப்படித்தான். முழு நேரத்தையும் அது சுரண்டிக்கொள்வதில்லை. கொஞ்சம் நமக்கும் மிச்சமிருக்கும். அதனால்தான் இப்போதேனும் எழுத.
ஓர் இந்தியப் பெண் இங்கே வாழ்வதற்கும் அமெரிக்காவில் வாழ்வதற்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா?
ஆம். நிறைய வேறுபாடுகள் உள்ளன. உணவு, உடை, வேறுபாடுகள் தவிர, இங்குள்ள சமூகப் பண்பாடு நமது பெண்களுக்கு ஒரு ஆசுவாசத்தைத் தருகிறது. குறிப்பாக குடும்பமும் சமூகமும் உங்களைக் கண்காணித்துக்கொண்டே இருக்காது. நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்தைச் செய்யவோ, விருப்பமில்லாத விஷயங்களைச் செய்யாமலிருக்கவோ – பலரின் சம்மதத்தை யாசிக்க வேண்டியதில்லை. அழுத்தம் குறைவாக இருப்பதால் உங்களுக்கான வெளி கிடைக்கிறது. அதனால் நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கான நேரம் கிடைக்கிறது. அதற்கான உழைப்பைச் செலுத்தினால் மட்டும் போதுமானது. மூட்டையை சுமந்துகொண்டு நடப்பதற்கும் அதை இறக்கிவைத்துவிட்டு நடப்பதற்குமான வேறுபாடு அது. நம்ம ஊர்ல மூட்டை இருக்கிறதென்று சொன்னால், அது மூட்டையே இல்லை, அதனால் நீ தூக்கவே இல்லை என்று நிறுவிவிட்டுச் செல்வார்கள் நம் நலம்விரும்பிகள்.
அமெரிக்கா ஓர் உலக ஏகாதிபத்தியமாக இருக்கும்போதே அங்கு சிவில் சமூகம் ஆரோக்கியமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே அது எப்படி?
அதற்கேயான குறைபாடுகள் இருப்பினும் சிவில் சமூகம் இங்கு ஒப்பீட்டளவில் பண்பட்டுத்தான் இருக்கிறது. உதாரணமாக குடும்ப உறவுகள். நமது பொதுப் புத்தியில் வெளிநாட்டவருக்கு குடும்ப விழுமியங்கள் குறைவு என்கிற எண்ணம் உண்டு. அதற்கு அதிகளவில் விவாகரத்து நடைபெறுவதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். உதாரணமாக வார இறுதிகளை குடும்பத்துடன் செலவிடும் பெற்றோர்தான் அதிகம். குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு ஆண்கள் கூடி ஊர் சுற்றும் கலாச்சாரம் கிடையாது. ஊர் சுற்றுவது தன் குடும்பத்துடனே சுற்றுகிறார்கள். குழந்தை வளர்ப்பிலும் வீட்டுவேலைகளிலும் இருவரின் பங்கும் இருக்கும். குடும்ப வன்முறையைச் சகித்துக்கொண்டு இருக்கும்படி அறிவுரை கூற மாட்டார்கள். அவர்களின் ஜனநாயகமும் குடியுரிமையும் தாமதமாக வந்தாலும் ஒரு சமூகமாக முன்னேறியிருக்கிறார்கள்.
அடிமை முறை இருந்தது என ஒப்புக்கொண்டு அதை சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் களைய முற்படுகிறார்கள். இனப் பாகுபாடு, குடும்ப வன்முறை சட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடிகிறது. சமீபத்தில் நடந்த “Black Lives Matter” மற்றும் காவல் துறையின் வன்முறையால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவில் வெள்ளையர்களையும் காண முடிந்தது. பார்ட்டிகள், கேம்ப்பிங், கிறிஸ்துமஸ், ஹாலோவீன் போன்ற கொண்டாட்ட இடங்களில் தென்படுமளவுக்கு எண்ணிக்கையில் இத்தகைய போராட்டங்களில் ஆசியர்கள் தென்படுவதில்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அமைப்புரீதியான ஒடுக்குமுறைகளை ஒரு சமூகமாக எதிர்க்கத்தான் வேண்டும் என்கிற அளவிலான சமூகப் பண்பாட்டைக் காண முடிகிறது. பள்ளிக் குழந்தைகள் பாடப்புத்தகம் தவிர, வெளியிலும் அதிகளவில் படிக்கிறார்கள். பொது நூலகங்கள் அதிகம். குழந்தைகள் மீதான வன்முறைகள் மீது ஒரு சமூகமாக அதிக கவனம் செலுத்துகிறார்கள். பூரணமாய்ப் பண்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் சமூக நோய்மையைக் குறைக்கவேண்டும், ஒரு நாகரிக சமூகமாக இருக்கவேண்டும் என்கிற எத்தனம் இருக்கிறது. அது ஆரோக்கியமான சமூகம்தானே?
அமெரிக்கப் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக இருக்கிறார்களா?
பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறைந்த நாடுதான் இதுவும். அவற்றில் பெரும்பான்மை அமைப்புரீதியானவை. உதாரணமாக ஆண்-பெண் சம்பள இடைவெளி இன்னும் இருக்கிறது. ஆனால் அதையே காரணமாக வைத்து குடும்பமும் சமூகமும் பெண்ணைப் பூட்டி வைப்பதில்லை. முன்னேற்றத்துக்கான தடைகள் ஒப்பீட்டளவில் குறைவு. அவர்கள் படிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். பெண்களுக்கான படிப்பும் வேலையும் இதுதான் என்கிற கருத்தில் இருந்து ஒரு சமூகமாக அவர்கள் நகர்ந்துவிட்டார்கள். பள்ளிப்பருவம் முடியும்போது தனது வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசிக்க முற்படுகிறார்கள். அதற்கான பொருளாதாரத்தைப் பகுதி நேர வேலை பார்த்து சம்பாதிக்கிறார்கள். ஆணுக்கு இணையான சம்பளத்தை போராடிப் பெற்றிருக்கிறார்கள்.
பெருநிறுவனங்கள் கூட “Diversity & Inclusion” என்கிற முறையில் சரியான இடப் பங்கீட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைத்திருக்கிறார்கள். முக்கியமாக – தன்னுடைய துணையை, தானே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுடன் சில காலம் வாழ்ந்து பார்த்து இவர்களுடன் மிச்ச வாழ்வைக் கழிக்க முடியுமா என்கிற முடிவை எடுக்கிறார்கள். அது தவறு என்றுணர்ந்தால், அதை ஒப்புக்கொண்டு வெளியேறவும் செய்கிறார்கள். இதுபோல ஏதேனும் ஒன்றையாவது நாம் ஒரு சமூகமாகச் செய்கிறோம் என சொல்லிக்கொள்ள முடியுமா? கலாச்சாரத்தைப் பெண்ணின் கருப்பை வாயில் வைத்து காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் தானே?
அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் சாதி இருக்கிறதா?
இந்தியவாழ் இந்தியர்களைவிட அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவிலாவது கல்வி, சமூக அறிவு பெற்றவர்கள் மத்தியில் சாதியை வெளிப்படையாகத் தூக்கிப்பிடிப்பது இழிவு என்கிற உணர்வு இருக்கிறது (மறைமுகமாக வேறு பெயர்களில் கடைபிடித்தாலும்). அந்த உணர்வுகூட இங்கிருக்கும் இந்தியர்களிடம் குறைவாகவே இருக்கிறது. ஏனென்றால் 50களில் இங்கு வந்து குடியமர்ந்த இந்தியர்கள் அந்தக் காலகட்டத்தின் ‘சாதிதான் கலாச்சாரம்’ என்கிற எண்ணப்பாட்டிலேயே உறைந்துவிட்டார்கள். புதிதாக வருபவர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.
சாதி சார்ந்த குழுக்கள் இங்கே அதிகம். இரண்டாம் தலைமுறை இந்தியர்கள்கூட சாதிக்குள்ளேதான் திருமணம் செய்கிறார்கள். போன தலைமுறையில் துறந்த சாதிப்பெயரை இந்தத் தலைமுறையில் சேர்த்துக்கொள்கிறார்கள் (குடும்பப் பெயர் என்று அதற்கு சப்பைக்கட்டு வேற கட்டுவார்கள்) சாதி அடுக்குவாரியாக எண்ணிக்கையில் இங்கே தலைகீழாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் சாதி அனுகூலம் மிக அதிகளவில் கிடைக்கப்பெற்றவர்களே இங்கு வருமளவுக்கு கல்வியும், பெருநிறுவன வேலை வாய்ப்பும் பெற முடிகிறது. அவர்கள்தான் பணி விசாவிலோ, வணிகம் சார்ந்தோ அமெரிக்காவர முடிகிறது.மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இனவெறி பற்றிய புரிதல் இருக்குமளவுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை என்பதாலும் சாதிப் பாகுபாட்டைக் குற்றமாக்கும் சட்டங்கள் இல்லை என்பதாலும், அதைக் கலாச்சாரம் என்கிற பெயரில் கூச்சமில்லாமல் கடைபிடிக்க முடிகிறது.
சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் குறிப்பிடத்தக்க நூல் பற்றி…..
தற்போது “ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்” என்கிற ஒரு மொழிபெயர்ப்பு புத்தகதை படித்துக் கொண்டிருக்கிறேன். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்து அன்றைய அமெரிக்காவின் நிஜ முகத்தை தோலுரித்துக் காட்டிய ஹேரியட்ஜேக்கப்சின் “Incidents in the Life of a Slave Girl” என்கிற தன் வரலாற்றுப் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. இதில் பெயர்களை மாற்றி சம்பவங்களை ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையாக கொண்டுசெல்கிறார் ஆசிரியர். ஏனென்றால் இப்புத்தகம் முதல்முதலில் வெளிவந்தபோது நிஜப் பெயர்கள் வெளிப்பட்டுவிட்டால் அதிலே சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்கிற நிலையே இருந்தது.
நமது நாட்டில் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்த பண்ணை அடிமை முறைக்கும், அமெரிக்காவின் அடிமை முறைக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்டோர் எப்போதும் தங்கள் போராட்டங்களில், பல தடைகள் வந்தபோதிலும் விடுதலை நோக்கி நகர்வதில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கின்றனர்.
இந்தியாவில் சாதிரீதியான சுரண்டலுக்கு உள்ளாகிவரும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வு பலவிதங்களில் அமெரிக்காவில் இனவெறிக்கு உள்ளாக்கப்பட்ட கறுப்பினத்தவரின் வாழ்வை ஒத்தது. சில சமயங்களில் நிஜம் புனைவைவிட திருப்பங்கள் நிறைந்ததாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தப் புத்தகம் (மொழிபெயர்ப்பாளர்கள்: கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கரசுப்பிரமணியன்,
மு சுதந்திரமுத்து, காலச்சுவடு வெளியீடு.