ஆயிஷா. இரா. நடராசன்
காமிக் புத்தக உலகம்தான் இன்றைய சர்வதேச நூலகங்களின் ரத்த ஓட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. நூலகங்கள் மரித்து வருகின்றன. அவை புத்தகங்கள் உயிர்த்தெழும் கனவுப் பிரதேசங்களா அல்லது அச்சான காகிதக் குவியல்களின் மரணப் படுக்கையா என்பதை தீர்மானிக்கும் 21ம் நூற்றாண்டு வீட்டோ-பவர்- இறுதி முடிவு வாக்களிப்பு உரிமம் காமிக் புத்தக உலகின் கையில் ஒப்பளிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
குறிப்பு: காமிக் புத்தக உலகம் என்றால் அது குழந்தைகள் வாசிக்கும் உலகம் என்று ரொம்பக் கேனத்தனமாக நம்புகிறவர்கள் இதற்கு மேல் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம்.

வான் நியூமன், ஆலன்டுரிங், ஸ்டீவ் ஜாப்ஸ் இப்பெயர்களின் ஒற்றுமை என்ன? இவர்கள் யாவருமே மெசின் லர்னிங் எனும் செயற்கை நுண்ணறிவு உலகின் பிதாமகர்கள் என்று ஒப்புமை ஒரு புறம் இருக்கும் என்றால், மறுபுறம் இவர் யாவருமே சூப்பர் ஹீரோக்களான, வவ்வால் மனிதன் அறிமுகமான புதிதில் நம் சத்யஜித்ரே இந்தியாவின் வங்காளத்தில் காமிக் புத்தகப் பயணத்தை தொடங்கி வைக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஹாட்மெயில் கண்டுபிடிப்பாளர் சபீர்பாட்டியா ஐந்து வயதில்தான் எப்படி சிலந்தி மனிதன், சூப்பர் மேன் பையித்தியமாக இருந்தோம் என்பதை நினைவுகூர்கிறார்.
பிரபல நரம்பியல் நிபுணர் ஒரு வரை நான் அறிவேன். டாக்டர் நாவரசன் சார். முத்துக் காமிக்ஸ் வெறியர். நான் மந்திரவாதி மாண்ட்ரேக் முதல் ஹீ மேன் வரை அவரிடம் இரவல் வாங்குபவன். மாரிஸன் – கிராண்ட் மாரிஸன் பற்றி ஏதோ பக்கத்து வீட்டுக்காரன்போல நாங்கள் விவாதிப்பதை யாராவது பார்த்தால் நரம்பியல் நிபுணருக்கே ஏதோ மறை கழண்டதாக கருத வாய்ப்புண்டு.
அப்புறம் நம் மனோகர் சாரை பற்றி சொல்ல வேண்டும். புதுவைக்கார சித்த மருத்துவர் மருந்துக் கடை வைத்திருக்கும் வித்தகர். இவரிடம் உள்ள காமிக்ஸ் குவியலை வைத்து ஒரு காமிக்ஸ் அருங்காட்சியகமே வைக்கலாம். ஃபான்டோமா, வொண்டர் உமன் என்று பெண், சூப்பர் நாயகிகள் பற்றிய தொகுப்புகளையும் அவரிடம் வாங்கி நான் வாசித்துக் களிப்பது உண்டு. துப்பறியும் சாம்பு மாதிரி படக்கதை, நமது சிந்துபாத் மாதிரி தொடர் படக்கதைகள் ஒரு வகை.
தற்போது நம் மண்ணில் வெளிவரும் சுப்பாண்டி வகையறா தனி. ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற கனவு நாயகர்களான வவ்வால் மனிதன், சிலந்தி மனிதன், வொண்டர் வுமன், கேப்டன் மார்வல் போன்றவை ஒவ்வொன்றின் பின்னேயும் ஆழமான ஓர் அரசியல் இருக்கிறது. எக்ஸ்- மனிதர்கள் எனும் தொடரை வழங்கிய லூயிஸ் சைமன்சன் குறிப்பிடுகிறார். இந்த காமிக்ஸ் சூப்பர் கதாநாயகர்கள் வழியேதான் உலகம் அணுகுண்டுகளை வென்று வீழ்த்தி ஒரு பாதுகாப்பான இடமானது.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் இன்றைய ரிமோட்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குழந்தைப் பருவத்தைக் கடந்த ஆபீஸ் போகும் குழந்தைகள் பென்-டென், அவதார், பிக்காச்சூ என்று பார்ப்பது கார்ப்பரேட் அமெரிக்க கலாச்சாரப் படையெடுப்பினை உணராத அப்பிராணிகள் என சான்றளிக்கிறேன். ஆனால் சிலந்தி மனிதனின் கதை தனி. அவனது பிறப்பிற்கு பின்னே இருக்கும் கொடூர ஆட்சி அதிகாரத்தின் கள்ளத்தலைமைக்குப் பெயர் அமெரிக்க- அதிபர் மெக்கார்த்தே- வாட்டிகான் கிறிஸ்துவ பிற்போக்கு மதவெறி வாதத்தின் உச்சபட்ச பிரதிநிதி. ஒரு நாடாளுமன்ற (செனட்டர்) உறுப்பினராக நாட்டை, நாட்டின் மதவாத சக்திகளை வெறித்தனமாகத் தூண்டுவிட்டு நூலகங்களை எரிப்போம் என்று அறைகூவல் விடுத்தவன். கம்யூனிச நூல்களை வீதியில் போட்டு கொளுத்துங்கள். அதன் சாயல் வீசும் எந்த எழுத்தையும் அமெரிக்கப் புண்ணிய பூமியிலிருந்து அகற்றிவிடுங்கள். இதுதான் மெக்கார்த்தேவின் ஒற்றை வரி அறைகூவல்.

இத்தனைக்கும் 1945கள் வரையும் அதைத் தொடர்ந்தும் யுத்த காலத்தில் அமெரிக்கா தங்களது ராணுவ ஆளுகைக்குக் கீழ் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான், கொரியா என எல்லா சமாதான கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான நூலகங்களை திறந்தது. அவற்றில் சர்வாதிகார ஹிட்லரும் முசோலினியும், தடை விதித்துக் கொலை செய்த எழுத்தாளர்கள் தத்துவார்த்த அறிஞர்களின் நூல்களை வாங்கி வைத்தார்கள். இவ்வாறான அயல் நூலக இயக்கத்திற்கு 1948 அமெரிக்க ஸ்மித் மண்ட் (Smith Munolt) சட்டம் நிரந்தர அங்கீகாரம் கொடுத்து ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கிடவும் வழிவகுத்தது.
எல்லாம் சோவியத் ரஷ்யா எனும் நாட்டின் வாசிப்பு மகா இயக்கம் உலக விடுதலையின் பிரமாண்ட அபாயமணியை ஒலிக்கும் வரைதான். அதிபர் ட்ரூமேன் 1951ல் நூலக இதழ் (Library Journal) என்பது அமெரிக்க கலாச்சார கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு உதவியாக களமிறங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அயல் நூலகங்களிலிருந்து கம்யூனிச ஆதரவு இடதுசாரிப் புத்தகங்களை நீக்கி விடுதல்-நூலகங்களை மேலும் அமெரிக்க மயமாக்குதலுக்கான சோவியத் எதிர்ப்பலையை உருவாக்கிட ஆலோசனைகள் வழங்கிட ஹெரால்டு கார்ப்பென்டர், ராபர்ட் க்ரோவெல் மற்றும் செஸ்டர்கெர் எனும் தீவிர மத அடிப்படைவாதிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
கம்யூனிச – எதிர்ப்பு நூல்களை நாம் எழுத வைப்பதோடு அவற்றை தீவிரமாக பிரச்சாரத்திற்கு இளைஞர்கள், தொழிலாளிகள் பெண்கள் இடையே எடுத்துச் செல்லும் பணியை நூலகங்களிடம் ஒப்படைக்கலாம். கம்யூனிச சோவியத் ஆதரவு இலக்கியங்களை நூலகங்கள் தவிர்ப்பதே அமெரிக்க ஜனநாயகத்திற்கு உகந்தது என்று அறிவித்தார்கள். ‘அமெரிக்கக் கனவை அடுத்த சந்ததி மதிக்கவில்லை. பாட்டாளிவர்க்கப் பிரதிநிதிகளாக உலக- சமத்துவ வெறியாளர்களாக அவர்கள் மாறிவருகிறார்கள். புத்தக வாசிப்பு என்பது பெருங்கவலை தரும் அம்சம்’ என்று கூறிய அமெரிக்க லைப்ரரி காங்கிரஸ் நூலகர் லூத்தர் இவான்ஸ் எந்தெந்தப் புத்தகங்களை தடை செய்யலாம் என்று பட்டியலும் வெளியிட்ட நிகழ்வு என்பது இன்றும் ஒரு ஜனநாயக விரோதக் கருப்புப் புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. சோவியத் வார, மாத இதழ்கள், இடதுசாரி நூல்கள்… அல்லது மதவாத எதிர்ப்பு நூல்கள் இவை சமூகக்கேடுகள் என்று அறிவித்தார்கள். நூலகங்களுக்கு மாற்றாக வேறு வடிவங்களை அடைவது சிறந்தது என்று பிரச்சாரம் செய்தார்கள்.
வாசிப்பை வீழ்த்துவோம் என்று பிரகடனம் செய்தார்கள். ஒவ்வொரு அமெரிக்க நூலகத்திலும் மூலை முடுக்குகளில் எல்லாம் மதுக்கடைகள், உணவுச் சாலைகள் ஏன் விபச்சார விடுதிகள், நீச்சல் குளங்கள், பிரமாண்ட சாகச விளையாட்டு- பவுலிங்- சீட்டாட்ட இளவுகள், சூதாட்டம், போதை புகைப்பான்கள் என கலாச்சார ‘யுத்தம்’ இளைஞர்களை விளைத்துப் போட்ட அதே சமயம் அற்புதமான அறிவார்ந்த புத்தகங்களைக் கொளுத்தும் புதிய பாதையை நோக்கி அமெரிக்க அடிப்படைவாதம் அடி எடுத்து வைத்தது. ஹைசனோவர் காலம் வரை அது தொடர்ந்தது.
அறிஞர் அமெரிக்க இடதுசாரி எழுத்தாளர், வெரா மிக்கெய்ல்ஸ் டீனி நூல்கள், வால்டர் டுராண்டியின் நூல்கள், லாங்ஸ்டனின் கவிதை நூல்கள், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் நூல்கள் இப்படித் தொடங்கி இடதுசாரி இலக்கியம் என அச்சம் கொள்ளப்பட்ட லியோடால்ஸ்டாய் முதல் ரஷ்ய சாயலில் பெயர் கொண்ட எல்லா எழுத்துக்களையும் கொளுத்தினார்கள்.
உலக நாடுகள் இது குறித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் சோவியத் எழுச்சி லத்தீன் அமெரிக்கா உட்பட பல்வேறு இடங்களில் தொற்றி பிரமாண்ட பேரணிகள், எழுச்சி மாநாடுகள் நடந்தபோதும் அமெரிக்க இளைஞர்கள். எந்த சலனத்திற்கும் ஆளாகவில்லை.
நூலகங்களையே அவர்கள் வெறுக்கத் தொடங்கினார்கள். கட்டு கட்டாகக் புகைக்கவும் பாட்டில் பாட்டிலாக இடிக்கவும் ஊர் சுற்றவுமான கலாச்சாரமாய் மாறிய வணிக -சமூகச் சந்தை… மாத வார இதழ்கள், இலக்கியப் படைப்புகள் இவற்றைப் புறந்தள்ளும் சீர்கேட்டுப் பாதையில் நகர்ந்தபோது அறிவியல் தொழில்நுட்பம்-வாசஸ்தலம் என எல்லாம் சந்தை மயம் ஆன நாட்களில் அமெரிக்காவை புத்தகங்கள் பக்கம் திரும்பவும் கொண்டு வருவதற்கு ஒரு புதிய சூப்பர் கதாநாயகனின் தேவை ஏற்பட்டது.

அவன்தான் சிலந்தி மனிதன். 1962ல் அவன் சட்டென்று தோன்றினான். அவனை அமெரிக்க – கலாச்சாரத்தின் அம்சமாக்கிட கச்சிதமாய் கொண்டு வந்து இறக்கிய மாமனிதன் பெயர் ஸ்டீவ் டிட்கோ. ஸ்டீபன்ஜான் டிட்கோ பென்சில்வேனியாகாரர். எழுத்தாளர், பென்சில் பட வித்தகர், வண்ண-மை வல்லுனர். ஆரம்பத்தில் அவரது குடும்பம் ஹங்கேரி தேசத்தில் ஸ்லோவாக்கியா பிராந்தியத்தில் வசித்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரின் குண்டுவெடிப்பில் முழுக்குடும்பமும் மரணித்த நிகழ்வில் தப்பி அமெரிக்கா வந்த இளைஞர் டிட்கோ. அமெரிக்காவிற்குள் நுழையும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அந்தக் காலத்தில் ஐ.க்யூ டெஸ்ட் உண்டு. டிட்கோவும் அதற்கு விதிவிலக்கல்ல. டிட்கோவின் தந்தை ஒரு தரமான – மர வேலைப்பாட்டு அறிஞராக ஸ்லோவாக்கியாவில் இருந்தவர். அவரது தந்தையின் மிக பிரமாண்ட போரார்வம் காமிக் ஸ்டிரிப் எனும் செய்தித்தாட்கள் வழியே டிட்கோவை தாக்கி இருக்க வேண்டும்.
கல்லூரிக் கல்வியை தொடருவதைவிட அமெரிக்காவின் பக்கம் கூட்டணிப் படைகளில் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக களம் இறங்கினார் டிட்கோ. ஆனால் ராணுவத்தினருக்காக ஒரு கையடக்க இதழ் ஒன்று வெளிவந்தபோது அதில் காமிக் பிரிவில் வரையும் நிபுணராக தேர்வானார் அவர். யுத்தம் முடிந்த பிறகு நியூயார்க் நகரில் வவ்வால் மனிதனைப் படைத்த ஜெர்ரி ராடரின்சனை சந்தித்து கடும் பயிற்சியில் இணைந்தார். ஓவியப் பயிற்சி – கூடவே நூலக வாழ்க்கை இதுவே அடுத்த பத்தாண்டுகளின் டிட்கோ. 1954ல் டிட்கோவின் காகிதக் காதல் (Paper Romance) காமிக் நூல் வெளிவந்தது. நூலகக் காதல்வாதியின் ஆறுபக்க மாத–காமிக்ஸ் என அது இன்றும் போற்றப்படுகிறது.
1950களின் நூலக எரிப்பு அரசியலின் நடுவில் டிட்கோ தனது வாழ்நாள் காமிக் சகாவான ஸ்டான்லீயை சந்திக்கிறார். ஸ்டான்லீயின் மார்வல் காமிக்ஸில் இணைந்து பணி செய்யத் தொடங்கினர். இடதுசாரி சிந்தனையும் வாசிப்புவெறியும் அறிவியில்பூர்வமான மத எதிர்ப்பு சிந்தனையாலும் யுத்தம் டிட்கோவை செதுக்கியிருந்தது என்பது வரலாற்றாளர்களின் கூற்று.
டிட்கோ காகித காதல் கொண்ட பிலெடல்ஃபியா நூலகத்தில் இருந்தே அமெரிக்காவின் மீது நாயகன் சிலந்தி மனிதன் உருவெடுத்தான். சிலந்தி மனிதனின் கதை மிக மிக சுவாரசியமான ஃபேன்டசி ஆகும். டிட்கோவின் சொந்த வாழ்க்கைக்கும் சிலந்தி மனிதனின் கதைக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை.
அந்தச் சிறுவன் பெயர் பீட்டர் பார்க்கர். ஒரு விமான விபத்தில் தன் பெற்றோரை இழந்து அனாதை சிறுவர் விடுதியில் சேர்க்கப்பட்டு பிறகு அத்தை மே மற்றும் மாமா பென் ஆகியோரால் தத்தெடுக்கப்படுகிறான். எட்டாம் வகுப்பு படிக்கும்போது உள்ளூர் நூலகத்தின் மீது காதல் கொள்கிறான். அறிவியல் புத்தகங்களின் மீது அவனுக்கு பித்து பிடிக்கிறது. அறிவியல் கண்காட்சிகள் எங்கு நடந்தாலும் விடமாட்டான் பீட்டர் பார்க்கர். ஓர் அறிவியல் கண்காட்சியில் – காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் “சிவப்பு” சிலந்தித்தேளிடம் கடி வாங்குகிறான். சிவப்பு நிறத்தில் கழுத்தில் காயம். காயம் ஆறும் வரை வலி. பிறகு சிவப்பு சிலந்தியின் சக்தி அவனுக்குள் வந்து விடுகிறது. சுவரில் ஒட்டிக்கொள்ளவும் மேற்கூரையில் தலை கீழாக நடக்கவும் முடிகிறது.
தன்னிடம் உள்ள அறிவியல் உபகரணங்கள் மூலம் தனக்கு கட்டிடம் விட்டு கட்டிடம் தாவும் பிற உந்து சக்திகளை உருவாக்கிக் கொள்கிறான். சிலந்தி மனிதனாக உருவெடுத்து சிவப்பு நிற சிலந்தி ஆடையை, தானே தேர்வு செய்கிறான்.இந்த ஒட்டுமொத்த உருவாக்கத்தின் தனிச் சிறப்பு சிவப்பு நிறத்தின் குறியீட்டால் மிளிர்வதை நாம் காணலாம். சிவப்பு சிலந்தி கொட்டிய பிறகு பீட்டர் பார்க்கர் உலகை வேறுவிதமாக பார்க்கிறான். ஏழை பாழைகளை உழைப்பாளிகளின் பக்கம் நிற்கிறான். படிக்க வசதியற்ற குழந்தைகளுக்கு நூலகத்திற்குப் போக பறந்து பறந்து உதவுவான். ஏமாற்றும் பேர்வழிகள், பண வெறியர்கள், ஊழல் அரசியல்வாதிகள், திருடர்கள், போதை வியாபாரிகளைப் பந்தாடுவான். அவன் அடிக்கடி உச்சரிக்கும் வசனம் ஒன்று உண்டு. அதீத சக்தி… அதீத ஆற்றல் என்பது அதிகப் பொறுப்புடன் கூடியது. மற்றபடி அவனும் ஓர் ஏழை.
தனது அத்தை வீட்டின் வாடகை பாக்கிக்காக விரட்டப்படும் அவலத்தில் அவன் வாழ்க்கை சிலந்தி மனிதனின் வரவால் 1960களில் அமெரிக்கா மீண்டும் புத்தகக் கடைகளை நோக்கி படை எடுத்தது. காமிக்ஸ் மூலம் வாரா வாரம் அவனுக்காகக் காத்திருந்த இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் ஏராளம். சிலந்தி மனிதன் இடம் பெற்ற நூலகங்களை மொய்த்தெடுத்த மாணவர் கூட்டம்… அமெரிக்க நூலக இயக்கத்திற்குப் புத்துயிர்ப்பு வழங்கியதோடு… நியூயார்க் பொது நூலகம் – சிலந்தி மனிதனின் படம் கொண்ட வாசகர் அடையாள அட்டையை அறிமுகம் செய்தபோது பல லட்சம் வாசகர்களை அவர்களால் உருவாக்க முடிந்தது என்பது வரலாறு.
தொலைக்காட்சித் தொடராக, திரைப்படமாகவெல்லாம் உலகை அடைந்த சிலந்தி மனிதன் எந்த சிவப்பு நுழைந்து விடக்கூடாது என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நூலகங்களை மூடியதோ அதே சிவப்பு அடையாளத்தோடே அதை இன்னும் பல லட்சம் நூலகங்களாக திறக்கவும் வைத்தது என்பதே உண்மை.
