து.பா.பரமேஸ்வரி
சமீபமாக இலக்கியத் தளத்தில் குறிப்பாக சிறுகதைக் களத்தில் தமது செந்நிற ரேகைகளை ஊன்றிப் பதித்து வருகிறார் எழுத்தாளர் மு.அராபத் உமர். இஸ்லாமிய சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பெண்ணினத்தின் துயரங்களை சமூகத்தின் முன்பு விவரிக்கவும் பெண்களுக்கெதிரான இஸ்லாமியரின் மதக்கட்டுப்பாடுகளை, பாலினப் பேதத்தை, தன் எழுத்தின் வழியே தமது குடிப்பெண்களுக்கான நீதியைக் கோருகிறார்.
மு.அராபத் உமர் அவர்களால் புனையப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பு இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளைச் சித்தரிக்கிறது ஏழு கதைகளைக் கொண்ட எழுத்தாளரின் முதற் சிறுகதைத் தொகுப்பு.

மதம் என்கின்ற கருதுகோளில் இஸ்லாமியப் பெண்கள் விரும்பியும் வழியின்றியும் இசைந்து வாழ்கின்றனர். தமது கடுமையான மதக்கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுக்க முனைவதில்லை. ஆசிரியர் அராபத் உமர் இந்த மதவாதத்தின் தீவிர இறுக்கத்தைத் தமது கதைகளில் களம் இறக்கியுள்ளார். அடிப்படையிலேயே இஸ்லாமியப் பெண்கள் இப்படியான நெறிகளை மனமுவந்து ஏற்கின்றனரா அல்லது கட்டாயத்தாலும் கட்டுப்படுத்தலாலும் வக்கற்ற நிலையில் அமைதி காத்து வருகின்றனரா என்கின்ற பல விடயங்களை ஆய்வுக்குட்படுத்துகிறார்.
‘இத்தா’ கதை இப்படியான பெண் அடக்குமுறையை மதச் சம்பிரதாய நெருக்குதலைத் தோலுரிக்கிறது. பெண்களுக்காக மட்டுமே உருவாக்கிய வலி மிகுந்த வன்மக்கடமைகளை இஸ்லாமியச் சட்டங்கள் மீதான தமது ஆதங்கத்தை எழுத்துக்களின் வழியே திரட்சியாக வெளிப்படுத்தியுள்ளார். கணவனை இழந்த பெண்ணின் மீது சாத்தப்படும் இந்தச் சடங்கு முறைகளால் உண்டாகும் கசப்பைக் காட்சிப்படுத்துகிறது கதை பிற மதங்களில் இப்படியான சடங்குகள் சில தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றன.
கதையில் கணவனை இழந்து பரிதவிக்கும் ரோஜாவின் துயர நிலையே கதைக்கான களம். இத்தாவின் பாடுகளில் ஓய்ந்துபோகும் ரோஜாவின் வலிகள் ஒவ்வொன்றையும் வலுவாகக் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். ஆண்களைவிட சுற்றியுள்ள புக்ககப் பெண் உறவுகள் கைம்பெண்ணிற்கு வழங்கி நிற்கும் மனரீதியான உளைச்சலையும் சடங்கு சார்ந்த அவஸ்தைகளையும் வாசகர்களுக்குக் கடத்தி சம்பிரதாயங்களின் வலிமிகுந்த வழமையை எடுத்துக்காட்டுகிறார் ஆசிரியர். அறியப்படாத பல வழக்குகளுக்கும் வழமைகளுக்குமான திறவுகோலாகக் கதை கனத்து நிற்கிறது.
“இத்தால இருக்குறவுக பேசுற சத்தோங்கூட வெளில கேக்கக் கூடாதுவே… தலைல போட்டுருக்க சேல எப்பவு எடுக்காம போட்டுருக்கணும். நாலு மாசோ முடிஞ்சி அவுக்கும் போது தலமுடி செடைபுடுச்சு போயிரும் சிலருக்கு. இத்தால இருக்குறதுன்னா சும்மாவா.”
உண்மையில் இத்தா கணவனைப் பறிகொடுத்த பெண்களின் வாழ் நரகம் என்பதை இத்தாவின் வன்மபாரத்தை எதிர்கொண்ட ரோஜாவின் மனநிலையிலிருந்து அனைத்து இஸ்லாமிய கைம்பெண்களுக்காகவும் கண்ணீர் சிந்துகிறது.
இப்படியான வக்கிர மனநிலையில் இறுகிய இஸ்லாமியக் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் கணவனை இழந்த பெண்ணின் மனநிலை உணர்ந்து துணையாக நின்று மருமகள் பரக்கத்துக்குச் சமுதாயத்தை எதிர்கொள்ளும் துணிச்சலை விதைக்கிறாள் ‘பரக்கத்’ கதையின் மாமியார் ஜன்னத். கீழ்த்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கை என்பது அன்றாடக் கடத்தல். இவ்வாறான மதக்கோட்பாடுகளைத் தாண்டி யதார்த்த வாழ்வை நோக்கி நகர்ந்துசெல்லும் பொருளாதாரச் சார்புநிலை என்பதையே பரக்கத் கதை வலியுறுத்துகிறது.
பேசிய வரதட்சணையுடன் வராததால் சொந்தத் தகப்பனின; இறப்பிற்குக்கூட மருமகளைச் செல்ல வழிவிடாத ஆதிக்க அடக்குமுறையைக் கொண்ட புக்ககத்தாரும் கணவன் என்கிற கனத்தில் மனைவியின் அடிப்படை உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போட்டும். வரதட்சணைப் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கணவன்மார்களும், அசலில் மட்டுமல்ல நெருங்கிய உறவுகளிலும் உள்ளனர் என்பதையே ‘ஷஜ்தா’ கதை நமக்குச் சொல்கிறது. புக்ககத்தின் கடும் வினைகளில் நிதம் பரிதவிக்கும் பானுவின் கண்ணீர், கடைசி வரை அத்தாவின் முகத்தைக் காண முடியாது போன குற்ற உணர்வில் தவிர்த்திருந்த பானுவின் உளக்குமுறலைக் குமைகிறது ‘ஷஜ்தா.அத்தாவின் சந்தாக்குப் பெட்டி பானுவின் சாளரக் கம்பிகளைக் கடக்கப் போர்த்திய பச்சைத்துணி விலகி அவரின் முகம் பானுவிற்குத் தெரிந்து விடாதா என்கிற வாசக எதிர்ப்பார்ப்பை உடைக்கிறது கதையின் இறுதிக் காட்சி.
தந்தையின் இழப்பில் உருக்குலைந்த பானுவின் மனதைப் பேசிய தொகுப்பு மாமனாரின் இறப்பைக் கண்கூடாகக்கண்டு கலங்கிப்போன மருமகள் ஃபஹிமாவின் அல்லாட்டத்தையும் காட்சிப்படுத்தத் தவறவில்லை ‘வெம்மை’ கதை. மருத்துவராக இருந்தாலும் சொந்த வீட்டில் நிகழும் உறவு இழப்பை மனித மனம் இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தடுமாறும் என்பதே சித்த மருத்துவரான ஃபஹிமா மாமனாரின் இறுதிக் கணங்களில், கணவன் ரியாஸ் உடன் இல்லாததால் பதறுகிறாள். முதிர்ந்த பக்குவத்தைக்கொண்ட ரியாஸின் பதற்றமற்ற நிலை ஊரையும் உறவையும் ஆயாசப்படுத்துகிறது. தந்தை வாழும் காலங்களில் பிணக்கமாக இல்லாது சம்பாத்தியம் பின்னால் ஓடிய தமது ஆற்றாமையை நினைத்துத் தவிக்கும் இன்றைய தலைமுறையினரைப்போல, தந்தையின் இறப்பை நினைத்து வருந்துகிறான் ரியாஸ்.
சமகாலப் பொருள்வாத மனப்பான்மையைப் புலப்படுத்துகிறது ‘வெம்மை’ கதை. ஈமான் என்கின்ற மனித மனத்தின் நம்பிக்கைக்கு வலிமை அதிகம். அது இறை சார்ந்த நம்பிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் நிஜத்தில் மனித மனத்தின் எண்ண அலைவரிசை இரட்டிப்பு மகிழ்வில் திளைக்கச் செய்யும் என்கின்ற நம்பிக்கை பலத்தின் பலனைப் பறைசாற்றும் கதையாகத் தொகுப்பில் ‘ஈமான்’ கதை. மனித உழைப்பின் பலனை நிரூபிக்கிறது..
தொகுப்பின் முத்திரை பதித்த கதைகளாக. ‘கியாமத்’ மற்றும் ‘நசீபு’. இரண்டும் ஆண்களின் ஆதிக்க மனோபாவத்தை பெண்களின் மீதான ஒடுக்குமுறையைத் துல்லியமாக விவரிக்கிறது.ஆண்களின் அகவைக் காழ்ப்புணர்ச்சி உளவியலைப் பேசுகிறது. இளவயது மனைவியின் மீது அதிலும் சர்வலட்சணமான மனைவியை சந்தேகம் என்கிற ஏவுகணையைத் தொடுக்கிறது புருஷலட்சணம்..அதற்குப் பலியான பல பெண்களைத்தான் நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.
‘கியாமத்’ கதை நாயகி ஆயிஷாவும் இவ்வாறாகவே கணவனின் சந்தேகப் பிறழ்விற்குக் காவு கொடுக்கப்பட்டாள். ஆயிஷாவின் மரணம் வாசகரின் சிந்தனைகளைப் பல கோணங்களில் தூண்டுகிறது.
.“நம்ம வீட்டுக்கு, வயலுக்கு வேலைக்கு வரவுங்கள்ல ஒண்ணு ரெண்டு பேர் சாப்பிடாம பசிக் கெறக்கத்துல வருவாங்க; அவங்க மொகத்தப் பார்த்து மனசு கேட்காம சில நேரம் சாப்பாடு போட்டுக் கொடுப்பேன். அதுக்குங்கூட சந்தேகப்பட்டு திட்டுவாங்க. இந்தச் சீரழிவு வேண்டாம்கா, சாவு வந்தா நிம்மதியா போயிருவே..”
ஆயிஷாவின் தற்கொலைக்கு முன்பான மரண வாக்குமூலம் சமூகத்தில் இப்படியான ஆளுமைவாதிகளின் போக்கற்ற தனத்தின் விளைச்சல்களை அடையாளங்காட்டுகிறது.
பெண்பிள்ளைகள் பிறந்தாலே பாரமாக, குடும்பமும் தூரமாக, சமூகம் கடத்தி விரட்டும் என்பதற்கு ஆயிஷாவின் வாழ்க்கை விளக்கியது போல ‘நசீபு’ கதையில் சுபைதா பூட்டியின் கணவன் தன்னைச் சார்ந்து வந்த மனைவியைப் பிள்ளை பெற்றெடுக்கும் சாதனமாகவும் கொத்தடிமை சாசனமாகவும் இறுதிவரை ஆண்களைச் சார்ந்தே வாழ்ந்து முடிக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனோபாவத்தில் அவர்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் அலட்சியப்படுதுகின்றனர் கணவன்மார்கள் என்பதை ‘நசீபு’ கதையின் நாயகி சுபைதா பூட்டியின் பேத்தியுடனான உரையாடலில் வெளிப்பட்ட ஏக்கங்கள் மனதைக் கீறிச் செல்கின்றன. “பொண்டாட்டினா அவகளுக்கு ஆக்கிப் போடறதுக்கும் துணியத் தொவக்கிறதுக்கும் படுக்கிறதுக்கும் மட்டுமா? சாகப் போகைல கூடவா எம்மேல பாசோ வரலன்னுதாவே எனக்கு வருத்தம்.”

இன்றைய இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்துவரும் பாரம்பரிய ஆதிக்க மேலாண்மையை வன்மையாகக் கதைகளில் விவரிக்கிறார் ஆசிரியர். கதையில் தாத்தா, அப்பா தொடர்ச்சியாக மகன் ரியாசும் இப்படியான பாரம்பரிய ஆதிக்க மனோபாவம் அடுத்த தலைமுறையிடமும் கடத்தப்பட்டு வருவதை ‘நசீபு’ கதையின் இறுதிக் காட்சி மறைமுகமாகச் சொல்லிச் செல்கிறது.
ஏதும் அறியாத பெண்பிள்ளைகளையும் இஸ்லாமிய மதாதிக்கக் கோட்பாடு இறுதிச்சடங்குகளின் வழமைச் சட்டகத்திற்குள் சம்பிரதாயத் திணிப்புகளைச் சுமத்தி உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையும் தொகுப்பின் கதைகள் அம்பலப்படுத்துகின்றன. தாயின் இறப்பிற்குப்பின் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக மதச்சடங்கான பிரேதம் சுத்தம் செய்யும் வழமையில் தாயின் மல துவாரத்தையும் பிறப்புறுப்பையும் பெண் குழந்தைகளைக்கொண்டு சுத்தம் செய்ய நிர்பந்திக்கின்றது மதச் சட்டதிட்டம் என்கிற அவல நிலை மனதைக் கனக்கச் செய்கிறது.
புரையோடிக் கிடக்கும் சம்பிரதாயப் புதைகுழிகள், மதம்சார்ந்த பாலின பாரபட்சங்கள், குறிப்பாக இஸ்லாமியத் தம்பதி இடையேயான பாலின பேதமையை கதைகளில் எடுத்தியம்பியுள்ளார் ஆசிரியர். ஆண்கள் அனைத்து சட்ட திட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், விதிமீறல்களும் விலக்கல்களும் தளர்வுகளும் ஆண்களுக்கான மதச்சலுகைகள் என்பதையே இத்தொகுப்பு புலப்படுத்துகிறது
“ஏம்மா வீட்டுக்காரு எறந்துட்டா பொண்ணுங்க வெள்ளச் சேல கட்டணும் அப்போதா கபூர்ல வெளிச்சம் கிடைக்கும்னு ராதிமா சொன்னாங்க. அது மாதிரி மனைவி இறந்துட்டா கணவன் வெள்ளை ட்ரெஸ் போடுவாங்கலாம்மா..? ஏம்மா இந்த சட்டம், ஹதீஸ் இத எழுதுனது எல்லாம் ஆம்பளைங்கலாம்மா..?”
இத்தா கதையில் ரோஜாவின் மகள் ஜெனியின் ஆதங்கம் ஒவ்வோர் இஸ்லாமியப் பெண்ணின் பல நூற்றாண்டுகளாகப் புதையுண்ட ஆழ்மனதின் குமுறல்.
தொகுப்பில் ஊடாடும் கதைகள் பலதரப்பட்ட மனித உளவியல் சிக்கல்களை அலசுகிறது. ‘கியாமத்’ கதையில் படித்த முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண் பாத்திரமான பாத்திமா பாத்திரம் இஸ்லாமிய சமூகத்தின் மதப் பிற்போக்குத்தனத்தை அலட்சியப்படுத்துகிறது. கதையில் ஓர் இடத்தில், அக்கம் பக்கத்துப் பெண்களின் தாம்பத்தியம் தொடர்பான கேலிப் பேச்சில் பாத்திமா தவறாக நினைத்து விடுவாளோ என அல்லாடுகிறாள் ஆயிஷா. அப்போது பாத்திமாவின் யதார்த்தமான அணுகுமுறை மனித உளவியலை அலசுகிறது.
“இந்த மாதிரியான விசயத்த பேச ஆர்வமா இருக்காங்கன்னா. ஏதோ மிஸ் பண்றாங்கன்னு அர்த்தம். அது அவுங்களோட வாழ்க்கைல எதுவா வேணா இருக்கலாம். அதனால அதப் பேசுனா ஒரு மன ஆறுதல் அவங்களுக்கு..”
மற்றொரு உளவியல் சிக்கலைப் பேசுகிறது தொகுப்பின் கதையொன்று. நிறங்கள் மனித மனத்தைப் பெரிதும் பாதிக்கும் தன்மை கொண்டவை. கருப்பு, வெள்ளை, பச்சை போன்ற அடர்த்தியான நிறங்கள் சமூகம் உண்டு பண்ணிய உளவியல் தடுமாற்றத்தில் சிக்கித் தவிக்கும் என்பதைத் தன் தாயை இத்தா சடங்குகளில் கண்ட ஜெனியின் மனப்பிறழ்வைக் கொண்டு விவரிக்கிறார் ஆசிரியர்.
“அம்மா… இந்த வெள்ள சேலச் வேணாம்மா! இதக் கழட்டுங்க. இது வேணா. என்னால இந்தச் சேலைல உங்களப் பாக்க முடியலம்மா… அத்தாவையும் இப்படித்தான் பொத்தி வச்சுருந்தாங்க. அப்றோ தூக்கிட்டு போயிட்டாங்க. இப்போ அத்தா நம்ம வீட்ல இல்லம்மா. நீங்களு ஏ வெள்ள போட்ருக்கீங்க? எனக்குப் பயமா இருக்கும்மா இது வேணாம்மா… அம்மா! பெட்சீட்ட மட்டுமாச்சு மாத்துங்கம்மா…”
என்று தாயை கட்டிக்கொண்டு அழும் பிள்ளையின் கண்ணீர் ரோஜாவை மட்டுமல்ல, வாசக மனத்தையும் திடுக்கிடச் செய்கிறது.
நம்மைப் பாதிப்பிற்குட்படுத்தும் தாக்கங்களும் சலனங்களும் தீவிர ஆசைகளும் இயல்பிற்கெதிரான விழைகளும் அன்றாடங்களின் கடத்தல்களே. தீவிரத்தை நோக்கிப் பயணிக்கும் ஏதொன்றும் விரைந்து தளர்ந்திடும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தைப் போதிக்கிறது தொகுப்பின் கதைகள். வாசகரைப் பல இடங்களில் கதிகலங்கச் செய்தும் வாழ்வின் மீதான நம்பிக்கையை சில கதைகள் துளிர்க்கச் செய்தும் இரு வேறு மனநிலைகளையும் ஒருமித்து வழங்குகிறது.
கதைகளில் காட்சிப்படுத்தும் இடங்கள் பூச்செடிகள் கொண்ட பசுமை மிகுந்த வாழிடங்களைக் கற்பனைக்குள்ளாக்கியுள்ளது வாசக மனத்திற்கு இதமளிக்கிறது. கதைகளில் வட்டார வழக்குமொழியாக தேனி மாவட்ட மண் வாசனை மணக்கிறது. ஆங்காங்கே நிலம் சார்ந்த அமைப்புகளும் சுற்றுவட்டாரப் பரப்புகளையும் கதைகளின் தேவைக்கேற்றார் போல விரிகிறது. ஒவ்வொரு கதையிலும் பாத்திர ஊடாடல்கள் சராசரியின் இயல்பில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமூகம் சார்ந்த நூலாதலால் அதிகமாக வாசித்திராத பல இஸ்லாமிய வழக்குமொழிப் பயன்பாட்டுச் சொற்கள் வாசகருக்கு அறிமுகமாகின்றன. குறிப்பிடும்படியாக ஒவ்வொரு இஸ்லாமிய வழமைச் சொல்லொன்றுக்குமான விளக்கங்கள் அடைப்புக் குறிகளில் பதிவிடப்பட்டுள்ளன. வாசிக்கவும் கற்கவும், பிற மத வழமைகளை அறியவும் இந்நூல் ஒரு முழுமையான இஸ்லாமியர்களின் கருவூலமாகத் திகழ்கிறது.
இந்நூல் வழியாக இஸ்லாமிய சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும். பிற மதப் பெண்கள்போல இந்தப் பெண்களும் மதவாதச் சக்தியிலிருந்து விடுவித்துக்கொண்டு துணிச்சலாக தமக்கான சமூக அங்கீகாரத்திற்ககாவும் பாலின சமத்துவத்திற்காகவும் போராட வேண்டும். இஸ்லாமியச் சமூகவெளியில் நசீபு ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தும்.