ஜெயபால் இரத்தினம்
கட்டபொம்மு கதைப்பாடல்: வாய்பாடும் அடிக்கருத்தும் / ஆசிரியர் முனைவர்
ஆ. திருநாகலிங்கம் / பக்கம்: 158 / விலை ரூ. 80/– / சகசானந்தா பதிப்பகம், 109, ஆறாவது குறுக்குத்தெரு, திருமகள்நகர், வேல்ராம்பட்டு, புதுச்சேரி – 605 004. அலைபேசி : 9486907860.
மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு மக்களின் மொழியிலேயே அவர்களுடன் உரையாடி, உயிர்ப்புடனும் மக்களுக்கு நெருக்கமாகவும் விளங்கும் நாட்டுப்புற இலக்கியங்களின் வேர்கள் மனித சமூகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளன.
இந்த வாய்மொழி இலக்கியங்கள் எளிய மக்களால் உருவாக்கப்படுபவை. தேவை ஏற்படும்போது உருவாக்கப்பட்டு தேவை இல்லாதபோது அவை மறைந்தும் போகும். தேவை ஏற்படும்போது அல்லது ஏதோ ஒரு நோக்கத்திற்காக மீண்டும் படைக்கப்படுவதும் உண்டு. நாட்டுப்புற இலக்கியங்கள் சமூக அறிவியலின் ஒரு பகுதியாகவே மதிப்பிடப் படுகின்றன.

எல்லோருக்கும் புரிகிற எளிமையான மொழியில் எளிய மனிதர்கள் தலைமுறைக்குத் தலைமுறை, காலத்திற்குக் காலம், தேசத்திற்குத் தேசம் தங்களுடைய பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பாடல்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாக்குப்பிடித்து நிற்கிற வலுவைப் பெற்றிருக்கின்றன. எளிய மனிதர்களின் படைப்புகள் என்ற அடிப்படையில், கதையும் கதைப்பாடலும், சமூகத்தின் உண்மையான, அசலான வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும், மக்கள் அவரவர் மொழியில் அவரவர்க்குரிய பாரம்பரியத்தில், ஈர்க்கத்தக்க புறநிலப்பாடல்களைத் தெளிவாகத் தனித்தன்மையுடன் படைக்கின்றனர். அவ்வாறு படைக்கப்பட்ட கதைகளும் பாடல்களும் பிற நாடுகளோடு கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது என்பது மறுக்கவியலாத உண்மை.
மொழிகள் பற்றிய பார்வைகளும் ஆய்வுகளும் கோட்பாடுகளும் ஒப்பீடுகளும் உலகலாவிய நிலையில் பரந்து விரிந்திருக்கின்றன. மக்கள் தாங்கள் சார்ந்த நிலவியல் சூழல், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், பல்வேறு நாடுகளில் அவர்கள் வாழ்ந்து வந்தாலும், அவர்களுக்கான நாட்டாரியல் இலக்கியங்களில் காணப்படும் அடிப்படைக் கூறுகள் பல ஒற்றுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேற்கத்திய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கலை, இலக்கியம், மொழி, சமூக அறிவியல் போன்ற புலங்களில் தொடர்சியான புதிய கண்டுபிடிப்புகள் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன.
அந்த வகையில், அமெரிக்காவின் ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப்ஸ் மில்மன் பாரி மற்றும் அவரது மாணவர் ஆல்பட் பேட்ஸ் லார்டு ஆகியோர் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் குறித்துத் தங்களது மிக நீண்ட ஆய்வுக்குப்பின் வாய்மொழி வாய்பாடுக் கோட்பாடு (Oral Formulaic Theory)’ என்னும் ஆய்வுக் கோட்பாடு ஒன்றை நிறுவினர். இக்கோட்பாடு உலக அளவில் நாட்டாரியல் இலக்கிய ஆய்வு வட்டத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் நீட்சியாகப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கிய ஆய்வாளர்கள் தங்களது வட்டாரம் மற்றும் மொழி சார்ந்த இலக்கியங்களை இக்கோட்பாட்டின் அடிப்படையிலும் ஆய்வு செய்யத் தொடங்கினர்.
தென் தமிழகத்தில் வெகுவாகப் பயின்று வரும் நாட்டார் கதைகளில் ‘கட்டபொம்மு கதை’ யும் ஒன்று. இது, கதைப்பாடல், கூத்து, கும்மி என்று பல வடிவங்களில் மக்கள் மத்தியில் வலம் வரும் கதையாகும். முனைவர். ஆ. திருநாகலிங்கம், இந்தக் கதைப்பாடலை, ‘வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு’ அடிப்படையில் விரிவாக ஆய்வு செய்து, ‘கட்டபொம்மு கதைப்பாடல்: வாய்பாடும் அடிக்கருத்தும்’ என்னும் தலைப்பில் நூல் உருவாக்கம் செய்துள்ளார். இந்நூல் புதுவை சகசானந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியரைப்பற்றி : நூலாசிரியர் முனைவர் ஆ. திருநாகலிங்கம், நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் ஆழங்கால்பட்டவர்; இன்று நம்மிடையே வாழ்ந்துவரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள புலிக்குளம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவர். இளங்கலை பட்டப்படிப்பை மதுரை தியாகராயர் கல்லூரியிலும், முதுகலை பட்டப்படிப்பை மதுரை-காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்து நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் முனைவர் படிப்பையும் முடித்தவர். தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசர் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவிப் பேராசிரியராகவும் பின்னர், புதுவைப் பல்கலைக்கழகத்தில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இலக்கணம் மற்றும் நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஏராளமான இளமுனைவர் மற்றும் முனைவர்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் மேற்பார்வையாளராகவும் செயல்பட்டுள்ளார். நாட்டுப்புறவியல் தொடர்பாக இதுவரை பத்து நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரின் ‘புதுவை நாட்டுப்புறக்கதைகள்’ என்னும் நூல் தமிழக அரசின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு (2012) பரிசும் பாராட்டும் பெற்றுள்ளது. மற்றொரு நூலுக்கு தமிழ்நாடு அரசு நிதி நல்கை அளித்துள்ளது.
நாட்டுப்புறவியல் குறித்து தேசிய அளவிலான பல கருத்தரங்குகளையும் பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார். புதுவை பல்கலைக்கழகம் இவருக்கு இரண்டு முறை(2010-11,2918-18) ‘நல்லாசிரியர்’ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. புதுதில்லியில் உள்ள தலித் சாகித்திய அகாதெமி இவருக்கு ’டாக்டர் அம்பேத்கர் கல்வி விருது’ வழங்கி கௌரவித்துள்ளது. இவரது கல்வி மற்றும் நாட்டுப்புவியியல் பணிகளைப் பாராட்டி கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. புதுவை பல்கலைக் கழகத்தில் ரூபாய் மூன்று இலட்சம் முதலீட்டில் தனது பெற்றோர் பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியுள்ளார்.
நூல் கட்டமைப்பு: புதுவைப் பல்கலைக் கழக ஆங்கிலத்துறைப் பேராசியர்
முனைவர். த.மார்க்ஸ் அணிந்துரையுடன் அமைந்த இந்த நூல் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டு, ஒவ்வொரு இயலிலும் பத்திவாரியாக விரிவான ஆய்வு உரையாடலை முன்னெடுத்துச் சென்று, தெளிவான முடிவுரையுடனும், உரையாடல்களுக்கு வலு சேர்க்கும் குறிப்புகள் அடங்கிய பதினோரு பின்இணைப்புக்கள் மற்றும் ஆய்வுக்குப் பயன்பட்ட நூற்பட்டியல் ஆகியவற்றின் தொகுப்புடனும் நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நூலின் உள்ளடக்கம் குறித்து : முனைவர்.த. மார்க்ஸ் தனது நீண்ட அணிந்துரையில், நூலாசிரியரைப் பற்றியும், நாட்டார் இலக்கியங்களின் சிறப்புகள், பொதுவான ஆய்வுக்கருத்துகள், இந்தக் குறிப்பிட்ட வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டின் சிறப்புகள் மற்றும் அதன் தாக்கங்கள் ஆகியன குறித்தும், இப் பொருண்மை சார்ந்த மற்ற செய்திகளையும் விரிவாகப் பதிவு செய்து ஒரு சிறப்பான அறிமுகத்தை வழங்கியுள்ளார். இந்த முன்னெடுப்பு, ஆய்வுப்புலத்தில் உள்ளவர்களது ஆவலைத் தூண்டுவதாகவும், ஆய்வுப் புலத்திற்கு அப்பாற்பட்ட ஆர்வலர்கள் ஓர் அடிப்படைப் புரிதலுடன் உற்சாகமாக நூலுக்குள் நுழைய வசதியளிப்பதாகவும் அமைந்துள்ளது.
நூலாசிரியர் தனது முன்னுரையில், நாட்டாரியல் ஆய்வுக்கோட்பாடுகள் குறித்தும், வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டு உருவாக்கம் குறித்தும், அதன் அடிப்படையில் ஆய்வாளர் லார்டு, ஹோமரின் புகழ்பெற்ற காவியங்களான இலியட் மற்றும் ஒடிசி ஆகியவற்றினை ஆய்வு செய்து கண்டறிந்தவைகளைப் பற்றியும் ஆதாரங்களுடன் விவரிக்கிறார். மேலும், தமிழில் இக்கோட்பாட்டை, முதன்முதலில் க.கைலாசபதி சங்க இலக்கியப் பாடல்களுடனும், சரசுவதி வேணுகோபால் நாட்டுப்புறக் கதைகளிலும் பொருத்திக் காட்டியிருப்பதையும் விவரிக்கிறார்.

தமிழகத்தில் ஏராளமான நாட்டார் கதைப்பாடல்கள் உள்ளதாகக் குறிப்பிடும் நூலாசிரியர், மக்கள் மத்தியில் பல்வேறு வகையிலான வாய்மொழி வடிவங்களில் வழங்கப்பட்டு வருவதும், ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற முதல் சுதந்திரப் போராட்ட வீரனது கதை என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற கதைப்பாடலாக இருப்பதாலும், தான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்திலுள்ள புலிக்குளம் மற்றும் அக் கிராமத்தைச் சுற்றியுள்ள கோனேரியேந்தல், கீழ்க்கொடுமலூர், மேலக்கொடுமலூர், புதுக்குடி, செய்யாமங்கலம், நெடுங்குளம், அருங்குளம், வெங்காளூர், பெருமாகோயில் போன்ற ஊர்களில் நடைபெற்ற கட்டபொம்மு நாடகத்தையும் கூத்தையும், தனது சிறுவயது முதலே பார்த்தும் கேட்டும் வந்தவர் என்ற அடிப்படையிலும் ‘கட்டபொம்மு கதைப்பாடலை’ ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டு, ஆய்வுக்கு உட்படுத்தபட்ட பொருண்மை மற்றும் நூல் குறித்த அடிப்படைக் காரண காரியங்களை விளக்குகிறார்.
‘Formula’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகவே ‘வாய்பாடு’ என்ற சொல் கையாளப்படுவதாகவும், அதற்குத் தமிழில் குறியீடு, அட்டவணை, மரபுச்சொல், வழக்கம் ஆகிய நிலைகளில் பொருள் கூறப்படுகின்றன என்றும், இங்கு குறிப்பிடப்படும் மரபுச்சொல் என்பது தொன்று தொட்டு மக்களால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் வழக்காற்றுச் சொற்களைக் குறிப்பன எனவும், இத்தகைய சொற்கள் வாய்மொழிப் பாடகனால் சந்த அமைப்பில் சில மரபுகளுக்கு உட்பட்டு காவிய உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும்போது அவை வாய்பாடுகளாகின்றன என்றும் குறிப்பிட்டு, ‘வாய்பாடு’ என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறார்.
கட்டபொம்மு கதைப்பாடலில் காணப்பெறும் வாய்பாடுகளை அடைமொழி வாய்பாடுகள் மற்றும் அடியளவு வாய்பாடுகள் எனப் பகுத்து அவற்றின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்கிறார்.
பாடல்களில் அடங்கிய வாய்மொழித் தன்மைகளை பாரியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்து, அடைமொழிகளும் வரி வடிவங்களும் கதைப்பாடல் முழுவதும் நேரடி வடிவங்களாகவும், பதிலி வடிவங்களாகவும், மாற்று வடிவங்களாகவும், மீண்டும் மீண்டும் கூறியது கூறலாக வந்து வாய்பாடு ஆகும் முறையை நூலாசிரியர் சிறப்புற விளக்குகிறார். கட்டபொம்மு கதைப்பாடலில் இடம் பெற்றுள்ள தனிநிலை மற்றும் பொதுநிலை சார்ந்த அடைமொழிகள் குறித்தும், கட்டபொம்மன், ஊமைத்துரை, தானாபதிப்பிள்ளை வெளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்டவர்களின் சிறப்புக்களைப் பற்றிக் கூறும் பாடல்களில் இடம்பெற்றுள்ள தனிநிலை அடைமொழிகள் வாய்பாடுகளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் விரிவாக விவரிக்கிறார். கட்டபொம்மு கதைப்பாடல் முழுவதும் ‘கண்ணி’ என்ற இசைப்பாட்டு வடிவத்தில் அமைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
‘டிக்கருத்து(Theme)’ என்பது வாய்பாடு போலவே திரும்பத் திரும்ப வரக்கூடியது எனவும், ஆனால் வாய்பாடு யாப்பியல் தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஆனால், அடிக்கருத்து பாடுபொருள் நிலையில் முக்கியத்துவம் பெறக்கூடியவை எனவும் குறிப்பிடுகிறார். பாரி-லார்டுவின் வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டில் குறிப்பிடப்படும் அடிக்கருத்துகள் பற்றிய கோட்பாடுகள், மற்றொரு மேற்கத்திய ஆய்வாளரான ‘சி.எம்.பௌரா’ வின் ‘வீரநிலைக்காலம்’ என்ற நூலில் குறிப்பிடப்படும் அடிக்கருத்துக் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டபொம்மு கதைப்பாடலில் காணப்படும் அடிக்கருத்துகளை நூலாசிரியர் பொருத்திக் காட்டியுள்ளார்.
கொலுவிருத்தல், கொள்ளையடித்தல், கடிதத்தொடர்புகள், ஆலோசனைகள், பயணங்கள், வஞ்சினம், விருந்து மற்றும் உணவு முறைகள், போர்க்கள வர்ணனைகள், வீரம், வீரமரணம் ஆகிய அடிக்கருத்துகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
நிறைவு இயலான நான்காவது இயலில், முதல் மூன்று இயல்களிலும் விவாதிக்கப்பட்டவற்றின் பொதுமைச் செய்திகளைத் தொகுத்தளித்து, கட்டபொம்மு கதைப்பாடலின் வாய்ப்பாட்டமைப்பும், கருத்தமைப்பும், பாரி-லார்டுவின் வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் அத்தனைத் தளங்களிலும் பொருந்தி வருவதை அழுத்தமாகப் பதிவு செய்யும் நூலாசிரியர், அதன் மூலம் வாய்மொழி காவிய நெடும் பாடல்களின் கவிதை அமைப்புகளும் கருத்தமைப்புகளுமே ஏட்டிலயக்கியத்திற்கு அடிப்படை என்பதைத் தனது ஆய்வு உறுதிப்படுத்துவதாக முடிவுரைக்கிறார். தவிர இந்த ஆய்வின்வழி, கட்டபொம்மு கதைப்பாடலில் அமைந்துள்ள உலகக் காவிய மரபுகளை அறிந்துகொள்ள முடிந்தது என்ற தகவலையும் பதிவிடுகிறார். மேலும், வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டைத் தமிழிலுள்ள தமிழ்ச் சமுதாயத்திலுள்ள வாய்மொழி வழக்காறுகள், ஏட்டிலக்கிய வடிவங்கள் ஆகியவற்றில் பொருத்திக்காட்டி தமிழ்மொழியின் உலகப்பொதுமை சார்ந்த கவிதையாக்கக் கோட்பாடுகளையும் அடிக் கருத்துக்களையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்பது தமிழ் நலன் நாடுவோர் கடன் என்ற கருத்துடன் ஆய்வுரையை நிறைவு செய்துள்ளார்.
தனது ஆய்வுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாரி-லார்டு களப்பணி மேற்கொண்ட இடங்கள், அவர்கள் சந்தித்த பாடகர்கள், சேகரித்த கதைப்பாடல்கள், அவர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட இலியட் காவியத்தின் முதல் 25 வரிகள், ஒடிசி காவியத்தின் முதல் 25 வரிகள், பாக்தாத் பாடலின் 15 வரிகள்,க. கைலாசபதி ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘முல்லைப்பாட்டு’ பாடலின் முதல் 31 வரிகள், கொ. புஷ்பவள்ளி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ‘கம்பராமயணம்’ நூலின் யுத்தகாண்டப் பகுதியில் இடம் பெற்றுள்ள முதல் 31 வரிகள் ஆகியவற்றைக் கோர்வைப்படுத்தி பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார்.
நிறைவு: மேற்கத்திய ஆய்வாளர்களான பாரி-லார்டு நிறுவிய வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டை, தமிழகத்தில் வழங்கிவரும் கதைப்பாடல் ஒன்றுடன் பொருத்திக் காட்டியிருக்கும் முதல் ஆய்வு நூல் என்ற பெருமையை இந்நூல் பெற்றிருக்கிறது. பெருமுயற்சியுடன் மேற்கத்திய கதைப்பாடல்களில் வரக்கூடிய யாப்புக்களையும், சொற்றொடர்களையும், தமிழில் அமைந்த யாப்புகளையும் சொற்களையும் சொற்றொடர்களையும் கோர்வையாகக் கோர்த்து எடுத்துக்காட்டு களாகப் பயன்படுத்தி, எளிய மனிதனுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். நாட்டாரியல் பொருண்மை குறித்த நூலாசிரியரது பட்டறிவும், அனுபவங்களும் நூல் முழுவதும் பரவி நிற்கிறது.
கோட்பாட்டை வெறும் சட்டகமாகப் பயன்படுத்தித் தரவுகளைத் திணிக்காமல், ஆய்வுக்குரிய பாடல்களில் அமைந்த மண் சார்ந்த வலிமையான தரவுகளின் அடிப்படையில் கருத்துகளை விவரிக்கும் நூலாசிரியரின் எடுத்துரைப்பு முறை நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. எளியமுறையில் உரையாடல்களை அமைத்ததன் மூலம் துறை சாராத வாசிப்பாளர்களுக்கும், நுணுக்கமான பல அரிய கருத்துக்களையும் செய்திகளையும் பதிவு செய்திருப்பதின் மூலம் துறை சார்ந்த ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையிலும் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
இத்தகைய சிறந்த நூலைத் தமிழ் ஆய்வுலகிற்குக் கையளிப்புச் செய்துள்ளமைக்காக நூலாசிரியர் முனைவர் ஆ. திருநாகலிங்கம் பாராட்டிற்கு உரியவராகிறார். வளர்ந்துவரும் தமிழியற்புல மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நாட்டாரியல் குறித்த ஆர்வலர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். வகையில் அமைந்த ஆய்வு நூல் இது.