முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் பாலின – இடைவெளி அதிகரிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. நமது அரசியல் சாசனத்திற்கே மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கும் வேளையில், சனாதன தர்மமே இன்று தேவை என்று பேசும் கவர்னர்கள் பெண்ணடிமை வெறி கொண்ட ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி முகத்திரை கிழிந்து நிற்கிறார்கள். சட்டப்பூர்வமான எந்த நிர்பந்தமும் இவர்களுக்கு இல்லை.
இன்று பாலின இடைவெளி அபாயகரமான நிலையை தொட்டு நிற்கிறது. இன்று நம் நாட்டில் முழு இந்தியாவையும் கருத்தில் கொண்டால் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு வெறும் 19.8 சதவிகிதமாக சுருங்கிவிட்டது. வீட்டினிலே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் ஆட்சி பீடமே ஏறியதால் உலகிலேயே ஆகக்குறைவான பெண் தொழிலாளர் பங்கெடுப்பு சதவிகிதமாக நாம் குறைந்துவிட்டோம். சமீபத்தில் நவம்பரில் வெளிவந்த ஜிஇ&அவ்தார் GE & AVtar அறிக்கையின் படி தொழில்துறையில் பெண் வேலை வாய்ப்பு தற்போது 12 சதவிகிதமாக சுருங்கிவிட்டது.
கற்றல் கணக்கீட்டில் உயர்கல்விக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கையும் சதவிகித அடிப்படையில் குறைந்துவிட்டது. வீட்டுவேலைகளை செய்வதற்கே பெண் எனும் மனோபாவத்தில் அரசு தனது அலுவலக தலைமைப் பீடங்களுக்கு 18 சதவிகிதம் பெண் தலைமை என்று வெட்கக்கேடான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் வன்கொடுமைகள், குழந்தை திருமணங்கள், குடும்ப வன்முறை என்று அன்றாட வாழ்வி்ல் பெண் எதிர்கொள்ளும் சவால்கள் இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. அதிகமாகியும் உள்ளது. பாலின முற்போக்குப் பார்வை கொண்ட கேரள அரசு மாதிரியான அமைப்பு – பெண் சமத்துவ சிந்தனையில் நாட்டிற்கே வழிகாட்டி. மாதவிடாய் விடுப்பு வழங்கும் சட்ட முன்னெடுப்புகளைக் கொண்டுவரும் வரவேற்கத்தக்க விஷயங்களைப் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டின் அரசும் திராவிட மாடல் என்று உயர் கல்வியில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என்று உற்சாகமாக களம் இறங்கி இருக்கிறது. அதனால் தந்தைப் பெரியார், காரல் மார்க்ஸ் எல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டிய சித்தாந்தமாக அவர்களை பதற வைக்கிறது. பெண் விடுதலையின் ஆரம்ப விதைகள் பள்ளிக்கு அவர்களை வரவழைப்பதில் தொடங்குகிறது.
சமத்துவ பாலின சமநிலையின் உச்சகட்ட இன்றைய போராட்டம் பழைமைவாத சனாதன தடைகளை உடைத்து நம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் சம- பங்காளிகளாக பெண் இணைவதில் இருக்கிறது. பாலின முற்போக்குப் பார்வையை கல்வியில் விதைக்க வேண்டும். வேலை இடத்தில் சக- தோழமையுடன் பெண் மதிப்பாக நடத்தப்பட வேண்டும். நெகிழ்வான பணி நேரம், சம வருவாய், பேறுகால விடுப்பு உள்ளிட்ட பயன்கள் அனைத்தும் மகளிரையும் சென்றடைய நாம் போராட வேண்டும். வாழ்க சர்வதேச மகளிர் தினம்.