மயிலம் இளமுருகு
புனைவிலக்கியங்களில் ஒரு வடிவமாகிய சிறுகதைகளும் படிப்பவர் மனதில் உடனடியாக பாதிப்பை, சமூக அவலத்தை, இன்பத்தை, துன்பத்தை, விழிப்புணர்வை, விமர்சனத்தை, தன் உணர்வை, சமூகப் பார்வை எனப் பலவற்றை ஏற்படுத்தும். அந்த வகையில் அருள்மொழி அவர்கள் எழுதிய ‘டைரி’ என்ற இந்த சிறுகதை நூல் கவனிக்கத்தக்கது. இந்நூல் இவருடைய முதல் சிறுகதை நூலாகும். இந்நூலிற்கு வாழ்த்துரையை ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் அணிந்துரையை கவிஞர் சல்மா அவர்களும் எழுதிச் சிறப்பித்துள்ளனர்.
முன்னுரையில் இந்நூலாசிரியர் அருள்மொழி படைப்பின் துவக்கம் முதல் உதவிய தோழமையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவர் தற்போது மென்பொருள் துறையில் அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டு வருகின்றார். மிகச்சிறப்பான சமூக விடயங்களை இந்நூல் பேசுகின்றது. மிக எளிதில் புரியும் வகையிலான எழுத்துநடை அவருக்கு வலுச்சேர்த்து உள்ளது.

வட்டார வழக்குச் சொற்களும் தகுந்த இடத்தில் அடைமொழிகளும், பழமொழிகளும் எனக் கதைக்குத் தேவையானவை இயல்பாகவே அமைந்துள்ளன. கதைமாந்தர்களின் பெயர்களும் குறிப்பிடத்தக்கது. இவரது சிறுகதைகள் அதிகாரத்தைக் கேள்வி கேட்பதாக இருக்கிறது. இந்நூலில் 14 சிறுகதைகள் உள்ளன. இந்நூல் 208 பக்கங்கள் கொண்டதாக உள்ளது.
ஆசிரியர் கதை கூறும் முறை, கதை மாந்தர் பேசுகின்ற முறை என்ற வகையில் இந்த நூலில் உள்ள கதைகள் அமைந்துள்ளன. சமூகத்திற்குத் தகுந்த கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அன்பை வெளிப்படுத்தும் சில கதைகள், இயல்பை, நடப்பை, சாதியத்தை, பெண் விடுதலையைப் பேசும் கதைகள் என்று இந்நூல் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.
அம்மா, பெண் வாழ்க்கை, முரண், நம்பிக்கை, ஆணாதிக்கம், சாதியம் என்பன இந்தக் கதைகளில் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நூல் குறித்து தமிழ்ச்செல்வன் அவர்கள் ”சமீப காலத்தில் நான் வாசித்த சிறுகதைகளில் மிகுந்த நம்பிக்கை ஊட்டும் கதைகளாகத் தோழர் அருள்மொழியின் இக்கதைகளை நான் உணர்ந்தேன். இது அவரது முதல் தொகுப்பு என்பதற்கான அடையாளம் ஒரு கதையில்கூட இல்லை. ஒரு தேர்ந்த கையின் எழுத்தெனவே நாம் புரிந்து கொள்கிறோம். கொங்குப் பகுதியில் வட்டார வழக்குமொழியையும் பொதுத் தமிழையும் லாவகமாகக் கையாண்டு ஒவ்வொரு கதையையும் உயிர்ப்புள்ளதாகப் படைத்திருக்கிறார்” என்கிறார்.
ஆணாதிக்கத்துக்கும் சாதியத்துக்கும் எதிரான கலைப்பூர்வமான குரல் இத்தொகுப்பு. சொந்த சாதிக்குத் துரோகம் செய்தல் பற்றி கருத்துலகில் இன்று பரவலாகப் பேசி வருகிறோம். தன் சிறுகதைகளில் அதை அழுத்தமாகவும் கலாப்பூர்வமாகவும் செய்திருக்கிறார் அருள்மொழி. இக்கதைகள் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார்.
சிறுகதை ஆசிரியரே, தான் கதை எழுதுவதும் தன்னுடைய படைப்புகள் குறித்தும் பின்வருமாறு கூறியுள்ளார். “அவ்வப்போது கட்டுரைகளும் பதிவுகளும் எழுதினாலும் வாழ்வை அவதானிக்கும் அவகாசம் நெருக்குதல்கள் குறைவான சமயத்திலேயே கிடைக்கிறது. அவ்வாறு அசைபோட்டதின் விளைவே இந்தக் கதைகள். குட் ஓல்ட் டேஸ் எனப்படும் பழைய பொற்காலத்திற்குப் போய்விட விரும்பும் பெண்களை இங்கே மிகக் குறைவாகவே சந்தித்திருக்கிறேன். பொருளாதாரம் தேடி வெளிநாடுகளுக்கு வந்துவிட்ட பின்னர் திரும்ப கிராமத்துக்கே போய்விட வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலும் ஆண்களுக்கே வருகிறது. அதற்கு அவர்கள் சில நேரங்களில் பாத்திரங்கள் தேய்க்கவேண்டி இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
திருமணங்கள் பொது விதியாக இருக்கும் சமூகத்தில் நாமும் நமது பிள்ளைகளும் மட்டும் தூய காதலுக்குப் பிறந்தவர்களாகக் கற்பனை செய்து, பெருமை கொள்வது எவ்வளவு நகைப்புக்குரியது. அந்தப் பெருமையைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நமது குடும்பங்களில் என்ன நடக்கிறது என்பதைக் குறைந்தபட்ச நேர்மையுடன் அணுகுவோமானால் நாம் சற்றே பண்படக்கூடும் என்று சமூகத்தின்பால், தான் கொண்ட அக்கறையை இந்த எழுத்தாளரின் எண்ணங்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
தன்னை எழுதத் தூண்டியது எது என்பதைப் பின்வருமாறு ஆசிரியர் கூறுகின்றார்: “எழுதத் துவங்குவதற்கு முன்னமே மனதில் இடம் பிடித்தவற்றுள் மிக முக்கியமானவை அம்பையின் கதைகள். அப்போதிலிருந்து தோசை ஒரு குறியீடாகவே மாறிப் போய்விட்டதோ என்று தோன்றும். அவர் தலைமுறையிலிருந்து என் தலைமுறை வரை ஏன் அடுத்த தலைமுறைப் பெண்கள்கூட அடுப்படியில் வெந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.” எனத் தன்னுடைய முன்னத்தி ஏர்களை அருள்மொழி குறிப்பிட்டுள்ளார்.
சல்மா அவர்கள் இந்த நூல் குறித்துக் கூறும் போது, தனது கதைகளின் வழியே இத்தகைய சமூக நோய்மைகளை, அதன் குரூரத்தை வெளிப்படையாகப் பேசவும், விமர்சிக்கவும், மிகப்பெரிய மனதும், பரந்த சிந்தனையும் வேண்டும். குறிப்பாக துணிவு வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனையோடு சமூகத்தை விமர்சிக்க முயன்றிருக்கும் தோழமைக்கு முதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவரது கதைகள் அம்மாவின் உலகத்தை அதிகமாகப் பேசுகின்றது.
அதிகாரம் என்ற கதையில் மாணிக்கவாசகம் எவ்வாறு அதிகாரமிக்கவராக இருக்கின்றார் என்பதை இக்கதை வெளிப்படுத்துகின்றது. இவருக்குக் கட்டுப்பட்டே அந்த ஊர் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறும் என்பது இக்கதையில் சொல்லப்பட்டது. இவருக்குப் பதவி இல்லை என்றபோதும் அவர் சொல்வது தான் சட்டம் போன்று இருக்கின்ற சூழல் இக்கதையில் காட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் தெய்வநாயகி கவுன்சிலராக வெற்றி பெற்று பிறகு தலைவராக மாறுகின்றார். இவருடைய ஒவ்வொரு செயல்பாடும் மாணிக்கவாசகத்தைக் கேட்டே செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. சில சமயங்களில் தன்னை நொந்துகொள்கின்றார். தெய்வநாயகியின் பொதுநலம் மாணிக்கவாசகத்தின் செயல்பாடுகளையும் அவரது எண்ணங்களையும் இந்தக் கதையில் நாம் பார்க்கின்றோம்.
பஞ்சாயத்துப் பேசுவதாக மாணிக்கவாசகம் காட்டப்படுகின்றார். ஏனுங்க! என் புள்ள செத்துப் பொழச்சி வந்துருக்குது. சின்னப் பிரச்சனைன்னா என்ன அர்த்தம்? அதிலேயே தெரீலியா இவிய புள்ளைய வெச்சிருந்த லட்சண மயிறு.. பெண்ணின் தகப்பன் சற்று சூடாகவே கேட்டார். ஆகாத பேச்சு சத்தம்லாம் வேண்டா… கொஞ்சம் அமைதியா பேசுங்க.. என்றார் மாணிக்கவாசகம்.
சரிங்க. அமைதியாகவ பேசுறோம். எங்களுக்குப் புள்ள வேணும். திரும்பியும் அவியள நம்பி அனுப்புறதுக்கில்ல… அட்ஜஸ்ட் பண்ணி இருந்து பாரு சாமின்னு நாந்தான் சொன்னேன். அத ஏஞ் சொன்னோமுன்னு நா மறுகாத நாளில்ல. புள்ளையும் அங்க போகலன்னு சொல்லூறா. இவிங்க டைவர்ஸ் பத்திரத்தில கையெழுத்துப் போடமாட்டேன்னு சொல்லுறங்க. என இவ்வாறு பஞ்சாயத்து பேசுகின்ற அந்த விதத்தையும் இந்தப் பகுதி நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்தக் கதையில் மாணிக்கவாசகத்தின் மனைவியாக மயிலாம்பாள், ஆசிரியராக தெய்வநாயகி, மணியப்பன், பஞ்சாயத்து ராமண்ணா, எல்லம்மா என்று இடம் பெற்றுள்ளனர்.
அங்காளி பங்காளி என்ற கதையில் சாதியத்தால் பெண்கள் படும் பாடு தெளிவாகக் காட்டப்படுகிறது. ஆனால் துணைவன் இல்லாமல் இருக்கின்ற ஒரு பெண் எப்படி சமூகத்தில் பார்க்கப்படுகின்றார் என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. வேலுமணி என்ற இந்தக் கதாபாத்திரத்தின் வடிவம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்த காரணத்தாலும் மூடநம்பிக்கைகள் காரணமாகவும் தன்னுடைய பெண்குழந்தையின் ஒரு வருடப் படிப்பு வீணாகிவிட்டது என்ற வேலுமணியின் வருத்தம் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கப்பன் என்பவரின் செயல் நன்றாக இக்கதையில் விளக்கப்பட்டுள்ளது.
அங்கப்பனின் பாலியல் சீண்டலை வேலுமணி தன் பெரிய மச்சானிடம் சொல்லுகின்ற அந்த விதத்தை நாம் இக்கதையில் பார்க்கின்றோம். பெண் என்பவள் தெளிவு கொண்டவளாகவும் இருக்க வேண்டும் என்பதை இக்கதையில் சொல்லப்பட்டுள்ளது. பெண்ணைத் தீண்டுதல், போகப் பொருளாகப் பார்க்கின்ற விதமும் இக்கதையின் பேசுபொருளாக உள்ளது. அங்காளி பங்காளி என்ற வேஷத்தில் பெண்களைப் பாலியல் சீண்டல் செய்வது ஏன் என்று இக்கதை நம் முன்னே விவாதம் செய்கின்றது. இந்த எச்சக்கலைக்கி எல்லாம் பயந்து ஏதாச்சும் பண்ணி வெக்காத புள்ளயிருக்குது. அப்பனும் வரமாட்டான். சித்தப்பனும் வரமாட்டான்.. அங்காளி பங்காளி ஒரு தாயோளியும் வரமாட்டான். அது நல்லா நெனப்புல வெச்சுக்க எட்டி மயிரப் புடிக்கிறதுக்கு புள்ளைக்கிஞ் சேத்தி நீதேஞ் சொல்லிக் கொடுக்கோனும் என்றபடி காபியைக் குடிக்கத் தொடங்கினாள் கிழவி. இந்தக் கதையில் கிழவி என்பவள் நன்றாகத் தெளிந்த ஞானம் கொண்டவளாக இருக்கின்றாள். அவன் வேலுமணிக்கு அவ்வப்போது அறிவுரை கூறுகிறாள்.

‘டைரி’ என்ற கதையில் பெண் சார்ந்த பதிவு இடம்பெற்றுள்ளது. கதைத்தலைவியின் அப்பா டைரி வாங்கித் தருகின்றார். அந்த டைரியில் தினமும் உன்னுடைய வாழ்க்கையில் நடப்பதை எழுது என்கிறார். சில நாட்கள், ஏன் சில மாதங்களும்கூட டைரியில் எதுவும் எழுதாமல் இருக்கின்றார். அந்தப் பெண் பின்பு தனக்கு நேர்ந்ததைப் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின் நிகழ்வை அப்படியே எழுதுகின்றார். மறுநாள் திரும்பவும் பள்ளி முடித்துவிட்டு வருகின்றபோது அந்த டைரியைத் தன்னுடைய அம்மா எடுத்துப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றார். ஆக பெண் எழுதிய டைரியை ஆண்கள் எடுத்துப் படிப்பதும் ஏன் பெண்களே கூட… ஏன் அம்மாகூட எடுத்துப் படிக்கின்றார் என்று பார்த்த அந்தப் பெண், திரும்பவும் டைரி எழுத மாட்டேன் என்று முடிவு செய்கின்றார்.
முதன்முதலில் அந்த டைரியில் அவர் எழுதுகின்ற முதல் பக்கத்தில் ‘அடுத்தவர் டைரியைப் படிப்பது அநாகரிகம்’ என்று எழுதி வைக்கின்றார். இருந்தாலும்கூட தன் அம்மா படித்துவிட்டதை நினைத்து தனக்குச் சுதந்திரம் இல்லை என்பதனை நினைத்து வருந்துகின்றார். தனது பள்ளியில் நடைபெற்ற சில விஷயங்களை அந்த டைரியில் பதிவு செய்திருந்தார். குறிப்பாக ராணி சிஸ்டர் இறந்து விட்டார் அதனால் பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டது. அந்த நிகழ்ச்சியை டைரியில் அந்தப் பெண் எழுதி வைத்திருந்தார். அதை பெண் விடுதலை சார்ந்த கேள்வியாக இந்தக் கதையில் தெளிவாகக் கேட்கப்பட்டுள்ளது.
இக்கதையில் பெண், தாத்தா, அப்பா, கணக்கு டீச்சர் உமா மகேஸ்வரி, ஷீலா, அத்தை, சென்னம்மா தமிழ் டீச்சர், விளையாட்டு டீச்சர், ராணி சிஸ்டர், சுதா அக்கா என்ற கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இக்கதையில் சமயம் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. தேவாலயத்திற்குப் போகும்போது செருப்பு அணிந்துகொண்டு செல்கின்றோம். மேலும் இறந்தவர்களை ஆலயத்தின் உள்ளே வைக்கின்ற சூழல் இருக்கின்றது. ஆனால் இந்துக் கோயில்களில் இறந்தவர் என்றால் கோயில் அடைக்கின்ற சூழலும் செருப்பு வெளியே விடுகின்ற சூழலும் ஏனென்று கேள்வி கேட்பதாக இப்பகுதி அமைந்துள்ளது.
‘தியாகம்’ என்ற கதையில் பெண் குறித்த செயலும் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பெண் விரோதச் செயல்களையும் ஒடுக்கு முறையைச் சொல்வதாகவும் ‘காட்ட வித்து கள்ளு குடிச்சவன்’ என்ற கதை விளக்குகின்றது. அம்மாவின் வாழ்க்கையைப் பேசுவதாகப் ‘பந்தம்’ என்ற கதை அமைந்துள்ளது. பெண் விடுதலை குறித்துப் பேசுவதாக ‘பிள்ளைக்கறி’ என்ற கதையும் எழுதப்பட்டுள்ளது.
பெண்கள் விடுதி என்ற கதையில் பெண் விடுதியில் நடக்கும் காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்துகின்றார் ஆசிரியர். கல்லூரி விடுதியில் வார்டன், உதவி வார்டன் மற்றும் நான்கு உள்ளிருப்பு வார்டன் என்று கதை நகர்கின்றது. பெண்கள் விடுதிக்கு என்று 35க்கும் மேற்பட்ட விதிகள் சொல்லப்பட்டுள்ளன. ஆண்கள் விடுதியில் விதிகள் பல இருந்தாலும் அவை கடைபிடிக்கப்படுவது என்பது குறைவு. ஆனால் பெண்கள் என்று பார்க்கின்றபோது அனைத்தையும் கடைப்பிடித்தாக வேண்டிய சூழல் இருக்கின்றது. இதனைக் கேள்வி கேட்பதாக இந்தக் கதை அமைந்துள்ளது. உள்ளிருப்பு வார்டனாக விஜயலட்சுமி, விஜயசாந்தி என்பவரின் செயல்பாடுகள் இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது. பத்மாவதி மற்றும் அவரது தோழி கார்த்திகா, சண்முகப்பிரியா, அஞ்சுகம் என்ற இவர்களின் செயல்பாடுகள் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
ஸ்டெப்பி மேடம், கருணாம்பாள் என்ற உள்ளிருப்பு வார்டன்கள் எழுப்புகின்ற சிக்கல்களையும் அதற்கு விஜயலட்சுமி எவ்வாறு பெண்கள் செய்த செயல்களுக்கு வாதிடுகின்றார் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் விடுதியில் பத்மாவதி தொடங்கி அவரது தோழிகள் சிலர் மதுபானம் அருந்துகின்றனர். இது வார்டனுக்குத் தெரிந்துவிடுகின்றது. பிறகு அடுத்த நாள் தலைமை வார்டன் தலைமையில் விசாரணை நடக்கின்றது. அப்போது பெண்கள் அனைவரும் வருந்துகின்றனர். தன்னுடைய அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகின்றனர். ஆனால் வார்டன் விடாப்பிடியாக இருக்கின்றார். அப்போது இதுவரை எதிரி என்று பார்த்த வார்டன் விஜயலட்சுமியை அந்தப் பெண்கள் அவர் செய்கின்ற செயலைப் பார்த்து வியந்து போகின்றனர்.
ஆண்கள் தினமும் குடிக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு விசாரணை இல்லை. பெண்கள் ஏதோ ஒரு நாள் இப்படி செய்துவிட்டார்கள். அவர்களை ஒருமுறை மன்னித்து விடுவதுதான் நல்லது. எனவே இவர்களை மன்னித்து விடுமாறு வார்டன் விஜயலட்சுமி கேட்கின்றார். நன்றாக யோசித்த தலைமை வார்டன் விஜயலட்சுமி சொல்வதில் காரணம் இருக்கிறது என்று உணர்ந்து, பிறகு இது கடைசி முறையாக இருக்கட்டும் என்று கூறி இந்தப் பெண்களை விசாரணையிலிருந்து விடுவிக்கின்றார். ஆக, இவருடைய கதைகள் பெண்கள் சார்ந்த கதைகளாகவும் சமூகம் சார்ந்த கதைகளாகவும் இருக்கின்றன. நூலின் அட்டைப்படமே பல்வேறு கருத்துகளைப் பேசுவதாக அமைகின்றது. பல்வேறு கதைகளில் சொல்லப்பட்ட கருத்துகளை இந்த அட்டைப்படம் மிகத் தெளிவாக விளக்குகின்றது. பெண் சார்ந்த விடயமாகட்டும் சமயம் சார்ந்த விடயமாகட்டும் படிப்பு சார்ந்த விடயமாகட்டும் தாய்மை என ஒவ்வொன்றையும் விளக்குவதாக அமைந்துள்ளது.
டைரி உண்மையிலேயே படிப்பதற்கு ஏற்ற நூல் என்று பரிந்துரைக்கிறேன். இன்னும் இவர் சமூகம் சார்ந்து நிறையக் கதைகளை எழுத வேண்டும். எழுதுவார் என்று நம்புவோம். மிகச் சிறப்பாக கதைகளை எழுதிய ஆசிரியருக்கும் மிகச் சிறந்த முறையில் பதிப்பித்த புக்ஸ் பார் சில்ரன் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
