ச.சுப்பாராவ்
ஒருவன் ஒரு பெண் மீது காதலில் விழுவதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணம் இருப்பது போலவே, புத்தகங்கள் மீது காதலில் விழுவதற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். ஆரோன் லான்ஸ்கியின் புத்தகக் காதலுக்குக் காரணம் அழிந்து போன ஒரு மொழியின் மீதான காதல். அந்தக் காதலுக்காக அவர் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.
அழிந்து போன தனது மொழியில் வந்திருந்த புத்தகங்களை உலகெங்கும் தேடித் தேடிச் சேகரித்தார். அப்படி அவர் சேகரித்தது ஏதோ நூறு அல்லது ஆயிரம் அல்லது பத்தாயிரம் புத்தகங்கள் அல்ல. பத்து லட்சம் புத்தகங்கள்! அந்த மொழி யூதர்களின் பழைமையான மொழியான இட்டிஷ். அந்தப் புத்தகச் சேகரிப்புப் பயணத்தின் கதை – ஒரு விதத்தில் அவரது சொந்தக் கதையை Outwitting History என்று அருமையாகப் பதிவு செய்தும் வைத்திருக்கிறார். புத்தகங்களைச் சேகரித்தது மட்டுமின்றி, அந்தப் பத்து லட்சம் புத்தகங்களையும் ஸ்கேன் செய்தும் வைத்துவிட்டார். அந்தப் புத்தகக் காதலனின் அசாதாரணக் கதைதான் இக்கட்டுரை.

பொதுவாகவே யூதர்கள் புத்தகக் காதலர்கள். பல்லாயிரம் வருடங்களாக அவர்கள் வாழ்ந்த இடங்கள் அனைத்திலும் இருந்து விரட்டப்பட்டுக்கொண்டே இருந்தவர்கள். வரலாறு நெடுக புலம்பெயர்ந்து கொண்டே இருந்த இனமாகவே யூத இனம் இருந்தது. எனவே, இயல்பாகவே, தங்களது பாரம்பரியத்தின், நினைவின் பெட்டகமாக, அடையாளமாக அவர்கள் புத்தகங்களை சென்ற இடங்களுக்கெல்லாம் சுமந்து கொண்டே சென்றார்கள். சென்ற இடங்களில் தாம் பார்த்தவற்றை தம் மொழியில் எழுதினார்கள். சென்ற இடங்களில் தாம் ரசித்த இலக்கியங்களைத் தம் மொழியில் மொழிபெயர்த்து வைத்தார்கள்.
நாம் பொதுவாக நினைப்பதுபோல, யூதர்களின் மொழி ஹீப்ரூ மட்டுமல்ல, இட்டிஷ் என்றொரு மொழியும் இருந்தது. ஒரு நீண்ட வரலாறு கொண்ட இனம் என்பதால் யூத சமூகம் பலவிதங்களிலும் நம் இந்திய சமூகம் போன்றே இருந்தது. இங்கு எவ்வாறு சமஸ்கிருதம் மேட்டுக்குடியினரின் மொழியாக, மத சடங்குகளின் மொழியாகவும், பிராக்ருதம் வெகுமக்களின் புழங்குமொழியாகவும் இருந்ததோ அது போலத்தான் அங்கும்.
ஹீப்ரூ மதச் சடங்குகளின் மேட்டுக்குடிகளின் மொழி. இட்டிஷ் சாதாரண ஜனங்களின் மொழி. ஹீப்ரூ மொழியை அனைவராலும் படிக்கவோ, பேசவோ முடியாது. எல்லாம் இட்டிஷ்தான். காலப்போக்கில், யூதர்கள் உலகெங்கும் பரவி குடியேறிய பிறகு, இருபதாம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இட்டிஷ், ஹீப்ரூ இரண்டுமே அழிய ஆரம்பித்தன. யூதர்கள் தாம் குடியேறிய நாட்டின் மொழியைத்தான் பேசினார்கள். அதில்தான் எழுதினார்கள். தம் மொழிகளை மறந்தார்கள். எனினும், மதச் சடங்குகளுக்குத் தேவைப்பட்டதால், ஹீப்ரூ சற்று உயிரோடு இருந்தது. இட்டிஷ் சுத்தமாக அழிந்தது.
இந்த நிலையில்தான் 1970களில் அமெரிக்க யூதரான ஆரோன் லான்ஸ்கி என்ற கல்லூரி மாணவருக்கு இட்டிஷ் மொழி கற்கும் ஆசை வந்தது.
மிகவும் சிரமப்பட்டுத் தேடி, மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மத்தியகால பிரெஞ்சு மொழிப் பேராசிரியரான ஜுல்ஸ் என்பவர் இட்டிஷ் மொழி கற்றுத் தருகிறார் என்பதைக் கண்டுபிடித்து அவரிடம் போய்ச் சேர்ந்தார். இவரோடு சேர்ந்து மேலும் 20 மாணவர்கள் ஆர்வமாக வந்தார்கள். இட்டிஷ் மொழிக்கு தனி எழுத்துகள் கிடையாது. ஹீப்ரூ எழுத்துகள் தான் என்பதால் (சொற்களிலும் சுமார் 20 சதம் ஹீப்ரூ சொற்கள்) ஹீப்ரூ அறிந்தவர்கள் இட்டிஷை அர்த்தம் தெரியாதபோதும் வாசிக்க முடியும். எனவே, பேரா.ஜுல்ஸ் புத்தகங்களை வாசிக்க வைத்து இட்டிஷை கற்றுத் தர ஆரம்பித்தார். ஓராண்டு காலத்தில் அவரிடம் இருந்த 10 – 20 புத்தகங்களைப் படித்து மொழியை அறிந்து கொண்டுவிட்டார்கள். மேற்கொண்டு படிக்க புத்தகங்களைத் தேடினால் எங்கும் கிடைக்கவில்லை. மொழியை ஆழமாகக் கற்க இட்டிஷ் புத்தகங்களைத் தேடி அலைய ஆரம்பித்தபோதுதான் அங்கொன்றும், இங்கொன்றுமாக மிகவும் சேதமடைந்த புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்தன.
ஹீப்ரூ புத்தகங்கள் விற்கும் பழைய புத்தகக் கடைகளில் விசாரிக்கும்போது, ஏராளமான இட்டிஷ் புத்தகங்கள் அழிந்துபோன தகவல்கள் கிடைத்தன. லான்ஸ்கியும், அவரது நண்பர்களும் இட்டிஷ் புத்தகங்களை இப்போது காப்பாற்றாவிட்டால், இப்போது கிடைப்பவையும்கூட அழிந்து போய்விடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்தார்கள். கிடைத்த சில புத்தகங்கள் உண்மையாகவே அருமையாக இருந்தன. ஹீப்ரூ முழுக்க முழுக்க ஒரு மதம் சார்ந்த மொழி. இட்டிஷ் அவ்வாறின்றி கதை, கவிதை, நாவல்.மொழிபெயர்ப்பு என மதச்சார்பற்றதாக இருந்தது. என்ன இருந்தாலும், வெகுமக்கள் புழங்கிய மொழியல்லவா? கிடைத்த புத்தகங்களின் இலக்கியத் தரமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.
விடுமுறை நாட்களில் யூதா்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று லான்ஸ்கியும், அவரது நண்பர்களும் “உங்க வீட்ல பழைய இட்டிஷ் புத்தகம் இருக்கா?“ என்று கேட்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வந்தார்கள். அந்த நிலையில்தான் லான்ஸ்கிக்கு பெர்கலியில் இருந்த ஜுடா மேகஸ் அருங்காட்சியகத்தில் வேலை கிடைத்தது. அங்கு இருந்த நூலகத்தில் ஹீப்ரூ, இட்டிஷ் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. சம்பளம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு டாலர்தான் தர முடியும் என்றார்கள். லான்ஸ்கிக்கு கட்டுப்படியாகாத சம்பளம். ஆனாலும் கேட்டுப் பார்ப்போம் என்று, இங்குள்ள இட்டிஷ் புத்தகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் இருந்தால் அவற்றை நான் எடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டார்.
இட்டிஷ் புத்தகங்களை வரிசைப்படுத்து, எந்தெந்த புத்தகங்களுக்கு எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் இருக்கிறதோ, அதில் ஒரு பிரதியை எடுத்துக் கொள் என்றது நிர்வாகம். இப்படி தினமும் ஏதேனும் இரண்டு புத்தகம் சம்பளமாகக் கிடைத்து வந்தது. அருங்காட்சிய வேலை காரணமாக லான்ஸ்கிக்கு நிறைய யூதக் குடும்பங்களின் தொடர்புகள் கிடைத்தது. எல்லா வீடுகளிலும் யாரோ ஒரு தாத்தா ஏராளமான இட்டிஷ் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். லான்ஸ்கியும், அவரது நண்பர்களும் அவற்றை தூக்கிக்கொண்டு வந்தார்கள். சேகரிப்பு வைக்க இடமில்லாத அளவிற்கு அதிகரித்தது. எங்கெங்கிருந்தோ யூதர்கள் தம் சேகரிப்புகளை இவரிடம் தந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இட்டிஷ் புத்தகச் சேகரிப்பிற்காக பொதுவான ஓர் அமைப்பை உருவாக்கினார் லான்ஸ்கி. அதில் ஏராளமான தன்னார்வ உறுப்பினர்கள் சேர்ந்தார்கள். அவர்கள் தத்தமது ஊர்களில் தினமும் தேடித் திரிந்து புத்தகங்களைச் சேகரிப்பார்கள். பெரிய லாரியளவு புத்தகங்கள் சேர்ந்ததும் லான்ஸ்கிக்கு தகவல் தர இவர் போய் அவற்றை எடுத்து வருவார்.
அடுத்த கட்டமாக இடிந்து போன ஒரு பழைய தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்தார் லான்ஸ்கி. அதன் உரிமையாளர் ஒரு யூதர். எனவே ஆண்டுக்கு ஒரு டாலர் தந்தால் போதும் என்றார். மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாடகை அதிகரிக்கப்பட மாட்டாது என்ற ஷரத்தையும் சேர்த்தார். இப்போது ஒவ்வொரு ஊரிலிருந்தும் மாதாமாதம் சுமார் 4 டன் எடைக்குப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றைக்கொண்டுவர 45 அடி நீள ட்ரெய்லர் லாரி தேவைப்பட்டது. அப்படிக் கிடைத்தவை உண்மையாகவே மிக அற்புதமான புத்தகங்களாக இருந்தன. 18, 19 மற்றும் 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த இட்டிஷ் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமின்றி, இட்டிஷ் மொழிபெயர்ப்பில் உலக இலக்கியங்கள் அனைத்துமே கிடைத்தன.
ஒரு லாரியில் வந்தவற்றில் சீன பின்லாந்து நாடோடிக் கதைகளின் இட்டிஷ் மொழிபெயர்ப்பு இருந்தது. மற்றொரு நாள் இட்டிஷ் மொழியில் பகவத் கீதை கிடைத்தது. மற்றொரு பொக்கிஷத்தில் ஜாக் லண்டனின் கால் ஆஃப் தி வைல்ட், ஆஸ்கர் வைல்டின் பிரின்ஸ் அன்ட் பாப்பர். இன்னும் ஒவ்வொரு கட்டிலும் தாகூர், ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கின்ஸன், எமிலி ஜோலா, டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், மாப்பஸான், தாமஸ் மன் என்று விதம் விதமாக மொழிபெயர்ப்புகள். இட்டிஷ் மொழியில் ஷேக்ஸ்பியர் மிகவும் பிரபலமானவராக இருந்தார். எல்லா லாரிகளிலும் ஷேக்ஸ்பியர் மொழிபெயர்ப்புகள் வந்தன. அதிலும் குறிப்பாக கிங் லியர் அதிகமாக வந்தது. லான்ஸ்கியின் தொண்டர் படை உலகெங்கும் பரவியது.
எங்கெங்கெல்லாம் யூதர்கள் குடியேறினார்களோ, அங்கெங்கெல்லாம் ஒரு பெரிய கோஷ்டி இட்டிஷ் புத்தக வேட்டையில் இறங்கியது. பால்ஸாக், அப்டன் சிங்க்ளர், மார்க்ஸின் மூலதனம், கார்லைல், எமர்ஸன் என்று மொழிபெயர்ப்புகளாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து கொண்டே இருந்தன. ஒருமுறை போலந்தின் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இட்டிஷ் மொழிபெயர்ப்புகூட வந்தது! 5,000 யூதர்கள் மட்டுமே வாழும் ஜிம்பாப்வேயில் அண்டர் த ஆப்பிரிக்கன் சன், ஜெருசலேம் ஆஃப் ஆப்பிரிக்கா என்ற நூற்றுக்கணக்கான இட்டிஷ் புத்தகங்கள்!
புத்தக வேட்டையில் எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சிகள் எல்லாம் கிடைக்கும். பிலாடில்ஃபியாவில் பெரும் பணக்கார யூதர் ஒருவர் தம் இட்டிஷ் சேகரிப்புகளை எடுத்துச் செல்ல அழைத்திருந்தார். அவர் வீட்டிலிருந்து ஒரு லாரி நிறைய புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தார்கள். லான்ஸ்கியை வழியனுப்ப வந்த பெரியவர், “நீங்க இட்டிஷ் மொழியில இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க. என்னோட பையனுக்கு நம்ம மொழிமேல கொஞ்சம்கூட ஆர்வம் இல்ல. என்னமோ, இங்கிலீஷ் கதை எழுதறான்.” என்றார். லான்ஸ்கி, “உங்க பையன் பேரு?” என்றார். “லியான் யூரிஸ்,” என்றார் அவர். இரண்டாம் உலகப் போரின்போது லட்சக்கணக்கான யூதர்கள் புலம் பெயர்ந்ததை ஆயிரம் பக்கத்திற்கு ‘எக்ஸோடஸ்’ என்ற நாவலாக எழுதிய அதே லியான் யூரிஸ்.
இயல்பாகவே இத்தனை பெரிய அளவில் புத்தகச் சேகரிப்பு செய்ய அதிக நிதியும் தேவைப்பட்டது. லான்ஸ்கி யூத அமைப்புகளின் மூலம் நிதி திரட்டினார். நம் ஊரில் 51, 101, 501, 1001 என்று தருவதுபோல் யூதர்கள் 18 அல்லது அதன் மடங்குகளில் நன்கொடை தருவது வழக்கமாம். இது போன்ற நிதி சேகரிப்பால் அன்றாட நிர்வாகச் செலவுகளை எப்படியோ சமாளித்தார்கள். 1991ல் யுனெஸ்கோ இட்டிஷ் மொழியை அழிந்துவரும் மொழி என்று அறிவித்து, அதற்காக கருத்தரங்கங்கள் நடத்தி, சில உதவிகளைச் செய்தது. ஒரு நன்னாளில் லான்ஸ்கிக்கு மெக் ஆர்தர் அறக்கட்டளையின் விருது கிடைத்தது. அதை மிக இளம்வயதில் வாங்கியவர் லான்ஸ்கி ஒருவர் மட்டுமே. விருதுத் தொகையான 250000 டாலரை ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து தவணையாகப் பிரித்துத் தந்தார்கள். அதற்குப் பிறகுதான் லான்ஸ்கி ஓரளவு நன்றாக உடுத்த ஆரம்பித்தார். நல்ல சாப்பாடு சாப்பிட்டார் என்று சொல்லலாம்.
சீ கேட் என்ற ஊரில் சாம் என்ற பெரியவர் (வயது 85) ஊரின் விளக்குக் கம்பங்களில் எல்லாம் ”உங்கள் வீட்டில் உள்ள பழைய இட்டிஷ் புத்தகங்களை எங்களுக்கு இனாமாகத் தந்து உதவுவீர்” என்று தனது தொடர்பு எண்ணைத் தந்து கையில் நோட்டீஸ் எழுதி தொங்கவிட்டார். அவர் மட்டுமே ஆயிரக்கணக்கான புத்தகங்களைச் சேகரித்துத் தந்தார். இப்படி வெறி கொண்ட வேங்கைகளாக தொண்டர்கள் பணியாற்றியதன் விளைவாக, சராசரியாக தினமும் 400 புத்தகங்கள் கிடைத்தன. ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் சேர்ந்தன. ஒரே புத்தகத்தின் பல பிரதிகள் கிடைத்தன. இவற்றை விற்க ஆரம்பித்தார்கள். இட்டிஷ் மொழி படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு என்பதால் விற்பதும் சிரமம்தான். உலகம் முழுக்க சுமார் 4,000 பேர் மட்மே இந்தப் புத்தகங்களை வாங்கினார்கள். 26 நாடுகளில் பரவியிருந்த சுமார் 500 பல்கலைக்கழகங்கள் தமது நூலகங்களுக்காக வாங்கின.
மற்ற மொழி இலக்கியங்களைப்போல் அல்லாது, இட்டிஷ் இலக்கியம் ஒரு முற்றுப் பெற்ற இலக்கியம். 70, 80களில் இட்டிஷ் மொழி எழுத, படிக்கத் தெரிந்த தலைமுறை ‘எனக்குப் பிறகு இதை யார் படிக்கப் போகிறார்கள்?‘ என்ற நினைப்போடு லான்ஸ்கிக்குத் தனது சேகரிப்பைத் தந்தது. இப்போது, இட்டிஷ் தெரியாத ஒரு தலைமுறை ‘இது என்ன என்றே தெரியவில்லை. உங்களுக்குப் பயன்படுமா என்று பாருங்கள்‘ என்று தந்தது. கண்முன் தனது மொழி அழிந்துபோவதைப் பார்த்துக்கொண்டிருந்தார் லான்ஸ்கி. ஆனாலும், என்றேனும் ஒரு நாள், யாரேனும் ஒருவர், ‘70களில் தானும், சில நண்பர்களும் இட்டிஷ் படிக்க ஆர்வம் கொண்டதுபோல் இட்டிஷைப் படிக்க நினைக்கக் கூடும். அந்த நேரத்தில் இட்டிஷ் மொழியில் ஒரு புத்தகம்கூட இல்லாமல் எல்லாம் அழிந்து போய்விடலாம். அப்படியான நிலை வரக்கூடாது என்று தொடர்ந்து சேகரித்தார். இப்போது பத்து லட்சம் புத்தகங்கள் சேர்ந்துவிட்டன.
எல்லாம் 50 வருடம் முதல் 200 வருடம், 300 வருடப் பழைமையானவை. எனவே அவற்றை ஸ்கேன் செய்து மின்னூலாக்க வேண்டிய அவசரத் தேவையும் இருந்தது. அதற்கும் கோடி கோடியாய் பணம் தேவைப்பட்டது. மீண்டும் எல்லோருக்கும கடிதம் எழுதினார். முன்பு 18 டாலர் தந்தவர்கள் இப்போது ஆயிரக்கணக்கில் தந்தார்கள். 360 டாலர் தந்தால், சேகரிப்பில் நீங்கள் விரும்பும் புத்தகத்தை தத்து எடுத்துக் கொள்ளலாம். புத்தகத்தில் இதை ஸ்கேன் செய்ய நன்கொடை தந்தவர் என உங்கள் பெயர் சேர்க்கப்படும் என்றார் லான்ஸ்கி. அதற்கு நல்ல பலன் இருந்தது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 250000 டாலர் தந்தார். மற்றொரு அறக்கட்டளை பத்து லட்சம் டாலர் தந்தது. கிரெஸ் அறக்கட்டளை ஆறு லட்சம் டாலர் தந்தது. இரவு, பகலாக நான்கு வருடங்களில் பத்து லட்சம் புத்தகங்களையும் ஸ்கேன் செய்தார்கள். புதுக் கட்டிடம் ஒன்று சொந்தமாகக் கட்டி, பழைய புத்தகங்கள் பத்திரமாக வைக்கப்பட்டன. லான்ஸ்கி இட்டிஷ் மொழியில் அச்சில் வந்த அனைத்துப் புத்தகங்களையும் சேகரித்து, ஸ்கேனும் செய்துவிட்டார்!
யூதர்கள் புத்தகங்களை மனிதர்களாக மதித்தவர்கள். கிழிந்த புத்தகத்தை எடைக்குப் போடாமல், இறந்த மனிதனைப் புதைப்பது போல் புதைப்பவர்கள். தெரியாமல் புத்தகத்தை மிதித்துவிட்டால், நாம் கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல், அவர்கள் முத்தமிட்டு அதனிடம் மன்னிப்புக் கேட்பார்கள். அப்படியான புத்தகக் காதலால் யூதர்கள் புலம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் கூடவே சென்ற அத்தனை புத்தகங்களும் லான்ஸ்கியின் முயற்சியால் இன்று ஒரே கூரையில் ஒன்றாக இருக்கின்றன!
