கறுப்பி சுமதி
யதார்தனின் “நகுலாத்தை” நாவலை முன்வைத்து – கறுப்பி சுமதி
மானுட நேயம் நோக்கிய வாழ்வை படைத்திட முயல்கையில்
எத்தனை தடைகள். கொடூரம் மிகுந்த விழிகள் தொடர,
வாழ்தலின் கசப்பு நெஞ்சை நெருடும்.
மனிதம் மறந்து சவமாய் கிடந்து வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை.
1991ஆம் ஆண்டு இயக்கமொன்றை சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணத்திலிருந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சமூக செயல்பாட்டாளரும் கவிஞருமான செல்வியின் கவிதை வரிகள் இவை. உலகம் என்பது அநேகமாக போர்களை மையப்படுத்தியதுதான் என்று சங்க இலக்கியப் புறத்திணைப் பாடல்கள் கூறுகின்றன. உள்நாட்டுப் போர் என்பது ஏதோவொரு அரசியல் அல்லது உரிமையை மையப்படுத்தி இரு குழுக்களுக்குள், அதாவது சாதி, மதம், மொழி, இன வேறுபாடுகளினால் ஏற்படுத்தப்படுவதொன்று.

வட அமெரிக்காவின் பூர்வீக்குடி மக்கள்மேல் ஐரோப்பியர்கள் மேற்கொண்ட வன்முறைகள் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. உணவு தேடுதலுக்காகவும், தற்பாதுகாப்பிற்காக மட்டுமே ஆயுதங்களை உபயோகித்து, இயற்கையையும், தமது மூத்தோரையும் தெய்வமாக வணங்கி, இயற்கையை காயப்படுத்த விரும்பாது பாதுகாத்துவரும் பூர்வீக குடிமக்கள்மேல் தமது அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு அவர்கள் நிலங்களையும், வாழ்க்கையையும் புடுங்கிப் போடுதல் கூட மன்னிக்கமுடியாத குற்றமாகும். நான் வேலை செய்வது கனேடிய பூர்வீகக்குடிகளின் தொண்டு நிறுவனம் ஒன்றில்.
இலங்கையின் உள்நாட்டுப் போரால் 1980 களிலிருந்து கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்கள், புகுந்தவுடன் நாம் செய்த முதல் காரியம், மூலைக்கு மூலை கோயில்களைக் கட்டினோம், ஈழத்தமிழரின் கலாச்சாரத்தில் இல்லாத, தமிழ்நாட்டு சினிமாவில் காட்சிப்படுத்தப்படும் அத்தனை சடங்குகளையும் எமதாக்கிப் பிரமாண்டமாக கொண்டாடத் தொடங்கினோம். அப்போது கூட கனேடிய பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரச் சடங்குகளை செயல்படுத்துவது தடை செய்யப்பட்டேயிருந்தது. அவர்களுக்கான உரிமைகள் 1995ஆம் ஆண்டில்தான் மீண்டும் வழங்கப்பட்டது. தமது சடங்குமுறைகளை எப்படிக் கொண்டாடுவதென்று தெரியாமல் அவர்கள் இன்றும் திணறிப்போய் நிற்கின்றார்கள்.
மிகவும் மூத்த வயதினர் தமது சிறுவயதில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில சடங்குகளை ஞாபகத்தில் கொண்டுவந்து தம் இளையோருக்கு கற்றுக்கொடுக்க முனைந்து வருகின்றார்கள். எமது சமுதாயம், எமது சடங்குகள், எமது கலாச்சாரம் மட்டுமே முற்போக்கானது, சிறந்தது என்ற பெருமிதப்போக்குடன் ஒரு நாட்டின், ஒரு பிரதேசத்தின் கலாச்சாரம், பண்பாடுகளை அழிப்பதைப்போல் பிற்போக்குச் சிந்தனை எதுவுமில்லையென்பேன். 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 திகதி கனேடிய பிரதமர் ஸ்ரபன் காப்பர் அவர்கள் கனேடிய பூர்வீகக்குடி மக்களிடம் இந்திய குடியிருப்புப் பள்ளிகள் தீர்வு நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்றை நிறுவி அம்மக்களிடம் பொதுமன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
எமது நாட்டின் உள்நாட்டுப் போரால் புலம்பெயர்ந்து, ஐரோப்பியர்களால் பறிக்கப்பட்ட நிலத்தில் மிகமிக சௌகர்யமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதனை கூச்சத்துடன் ஒப்புக்கொண்டு கனேடிய பூர்வீகக் குடிகளை எனது மனதில் நிறுத்திக்கொள்கிறேன். இன்று என் கைகளில் இருப்பதோ இலங்கை பூர்வீகக்குடிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை முன்னிறுத்தி புனையப்பட்ட ஒரு புனைவாக்கம். இலங்கையில் கரையோரப் பகுதிக் கிராமங்களில் இன்றும் பழங்குடி மக்கள் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளென வேடர், புலிந்தர், இயக்கர் ஆதி சாதியினராக இருக்கலாம் எனவும், அவர்களின் வழியில் இன்று, வேடர், வேடா, வெள்ளாளர்கள் வாழ்வதாகவும் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நான் எனது நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தது 83 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில். ‘நகுலாத்தை’ எனும் இந்த அற்புத நாவலைப் படைத்த யதார்தன் எனும் பிரதீப் குணரட்னம் பிறந்ததோ 93ஆம் ஆண்டு. எனது நாட்டின் போராட்டத்தின் நேரடி அனுபவங்கள் எதுவும் எனக்கில்லை, 83ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவங்கள் தமிழ்ப் போராளிகளால் கொலை செய்யப்பட்டதும், அதன் பின்விளைவாக நாடு முழுவதும் சிங்கள பேரினவாத அரசின் துணையுடன் சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள்மேல் அவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை அறிந்து கொண்டது என்பதோடு எனது நாட்டின் போராட்டம் பற்றிய தொடர்பு எனக்கு அறுந்து போனது. ஆனால் ‘நகுலாத்தையைப்’ படைத்த யதார்தனின் பிறப்பே போராட்டத்தின் உச்சத்தில் நாடு அதிர்ந்துகொண்டிருக்கும் போது நிகழ்ந்திருக்கின்றது.
நான் படித்தும், செவிவழி மூலம் அறிந்து கொண்டவற்றை யதார்தன் நேரடியாகவே அனுபவித்திருக்கின்றார். இதன் இடைவெளியை புரிந்துகொண்ட தெளிவுடன் எனது ‘நகுலாத்தை’ நாவலின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அவளின் முகபாவங்களிலும், உடலசைவுளிலும் நிலம் உருவானது. கடல் புஜங்களுக்கு நடுவே விரிந்தது. காடு மடியில் முளைத்தது. காட்டுக்குமேலே பருவங்களை மாற்றும் வானமும், சூரியனும். கைகளின் விரல்களில் பறவைகள், காற்றில் சிறகுச் சுவடுகளை அழித்துக்கொண்டே பறந்தன. விலங்குகள் தரையில் நகக்குறிகள் கீற கடந்து போயின. வானின் கீழேயும், கடலுக்கு அப்பாலும் காட்டின் கரைகளிலும் வன்னி நிலமெங்கும் பரவியிருந்த இயக்கர் குடியும், அதன் உபகுடிகளையும், அதன் நிலபுலன்களும் மற்றும் தூரத்தூர இருந்த நாகர்குடிகளின் இடப்பெயர்வுகளும் கிழவியால் படைக்கப்பட்டவை.
இறுதியாக இயக்கர் குடியின் குலக்குறியான ஆதிப்பெண்ணை வணங்கி தன் பங்கிற்கு கதையை நிறுத்தினாள் நல்லம்மாள் என்று மிக அழகாகவும், பதிந்துள்ளார் கதையாசிரியர். இந்நாவலின் முக்கிய மூன்று அம்சங்களாக நான் பார்ப்பது, ஒன்று, நிலப்பரப்பு, இரண்டாவது, கதை மாந்தர்கள், மூன்றாவது, இந்நிலப்பரப்பும், மாந்தர்களும் அழிந்துபோனதுக்குக் காரணமான உள்நாட்டுப் போர். வன்னிக்காட்டுப் பிரதேசமான கீரிமேடு, நல்லாத்தை வளவுகள் என்பன இந்நாவலின் முக்கிய நிலப்பரப்பாகக் காணப்படுகின்றன. இக்காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த ஆச்சி என்று அப்பிரதேச மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட மூத்த பெண்ணும் அவளின் வம்சமும், குறிப்பாக பெண்களும் முக்கியக் கதைமாந்தர்களாக காணப்படுகின்றார்கள். இக்குடிகளின் வாழ்க்கையை நம்பிக்கையோடு நகர்த்திச் செல்ல பக்கபலமாகத் துணை நிற்கும் ஆத்தை என்று அழைக்கப்படும் நகுலாத்தை எனும் பெண் சிறு தெய்வம், அவளுக்கான வழிபாட்டு முறைகளை சொல்தல் என்பன கதையில் முக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேட்டை ஆடுதலை முதற்மைத் தொழிலாகக்கொண்டு, இயற்கையோடு ஒன்றி காட்டுவாழ்க்கை வாழும் ஆச்சி என்பவரின் வம்சம், சுற்றம், உறவுகள் போன்றோரின் வாழ்தலும், சமாந்தரமாக அதிகாரம், ஆயுதபலம் கொண்ட யுத்தம் என்பது, அந்த ஆயுதம் கையிலுள்ளது என்பதனால் மட்டுமே பலம் கொண்டு, தன்னை எதிர்ப்பவர்கள், கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் தனக்கேற்ப இசைய வைக்கும், இல்லையேல் அழிக்கும் என்பதையும் சொல்லி நாவலை நகர்த்திச் செல்கின்றார். கீரிமேட்டு வேட்டுவக் குடிகளுக்குள் நகர்புற நாகரிகம் மெல்லப் புகுந்துகொண்ட காலமது. வேட்டையாடுதில் முக்கியமாக துப்பாக்கி, வனவிலங்குப் பாதுகாப்பிற்காக இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தும் பொறி வைத்தல், வில்லம்புகொண்டு வேட்டையாடுதல் என்பன தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

தமது உணவு முறை, கலாச்சாரம், ஆத்தை வழிபாடு என்பனவற்றில் மாற்றத்தைப் பெரிதும் கொண்டுவராத இக்குடிமக்களின் இளம் சமுதாயம் கல்வி கற்க பாடசாலைக்குச் சென்ற காலமிது. “அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர், போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்” என்ற மாவோவின் அரசியல் மேற்கோள், ஈழப்போராட்டத்திற்கும் பொருந்தும். ஈழப்போராட்டத்தின் கறுப்புப் புள்ளியாக மக்களால் இன்றும் அடையாளப்படுத்தப்படும் சகோதர விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தடைசெய்யப்படுகின்றன என்று 1986ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அறிவித்தல் வெளிவந்த காலத்திலிருந்து, ஈழப்போராட்டத்தை அறிமுகப்படுத்தி வைக்கின்றார் கதைசொல்லி.
சக இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது ஆயுதங்களை கையளித்து, போராளிகள் சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. சரணடைந்தவர்களில் அநேகர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். “ஊரிப்பிட்டி முகாம், அவ்வூரில் பிரபல்யமாகவிருந்த ஈபி போராளிகளின் முக்கியமான தங்குமிடங்களில் ஒன்று. அதைத் தாக்கி அழித்துவிடுவதுதான் ஒட்டுமொத்த திட்டம். உளவு வேலையோ கைதோ கிடையாது. நேரடித் தாக்குதல் மட்டும்தான். ஈபி போராளிகள் அவிக்கும் மரவள்ளிக்கிழங்கும், அதோடு போடும் தேநீரும் சுவையாகவிருக்கும். நன்றாக இட்டிக்கட்டிப் பாடுவார்கள்” பக்கம் 71.
நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள் இன்று எதிரியாகி விட்டார்கள், அவர்களை அழித்தொழிக்குமாறு தலைமை கட்டளை இட்டுவிட்டால் அதற்கு மறுபேச்சு இல்லை. கட்டாய ஆட் சேர்ப்பிற்கு பயந்து மறைக்கப்பட்டிருக்கும் தாமரை, தனது தம்பியைப் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள் என்று தம்பியை விடுவித்துவிட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்கத்தில் இணைந்துகொள்கின்றாள், பின்னர் அவளே தலைமையின் கட்டளைக்கிணங்க கட்டாய ஆள் சேர்ப்பை நடாத்துகின்றாள். “மனிதம் மறந்து சவமாய் கிடந்து வாழ்தலில் எனக்கு பிரியமேயில்லை” இப்போராட்டம் எத்தனை எத்தனை இளையோரை அவர்களின் உறவுகளை மனிதம் இழந்து சவமாய் கிடத்தியிருக்க வைத்திருக்கின்றது என்பதில் ஐயமேயில்லை.
ஈழப்போராட்டத்தை முன் வைத்து முக்கியமாக சகோதர இயக்கங்களை அழித்தல் என்பதை முன்வைத்து வெளிவந்த முக்கியமான படைப்பு கோவிந்தன் எழுதிய ‘புதியதோர் உலகம்’. அப்படைப்பில் கோவிந்தன் “தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட போராட்டம், அந்தத் திணிப்பை செய்துகொண்டிருப்பவர்கள் தென்னிலங்கை சிங்களவாதிகளே. அவர்களே இன்று இலங்கையின் உடைமை வர்க்கமாக, முழு மக்களையும் சுரண்டும் வர்க்கமாக இருக்கின்றார்கள். இவர்கள் எப்போதும் தமிழ் மக்கள் மீதான வன்முறையை கைவிடப்போவதில்லை, அதே நேரம் நாம் சிங்கள பேரினவாத அரசிற்கு மட்டும் எதிராகப் போராடினால் போதாது, தமிழீழ விடுதலை அமைப்பிலும் புதிதாக நுழைந்து வரும் அராஜகத்துக்கு எதிராகவும் போராட வேண்டும் என்கிறார். பக்கம் 243. இதன் காரணமாக கோவிந்தன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தான் கொல்லப்படுவேன் என்ற அச்சத்தில் தலைமறைவாக வாழ்கின்றார்.
1991ஆம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி விடுதலைப்புலிகளால் கைது செய்யப்படுகின்றார். அதன் பின்னர் கோவிந்தனும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். ஈழப்போரின் பல பரிமாணங்களை ஷோபாசக்தி, சயந்தன், சாத்திரி, விமல்குழந்தைவேல், நோயல் நடேசன் போன்றோரும் மேலும் பலராலும் தொடர்ந்துகொண்டிருக்கும் எழுத்து வரிசையில் தற்போது யதார்த்தனும் இணைந்து கொண்டிருக்கின்றார். இவரின் எழுத்தில் நான் முக்கியமாகக் காண்பது, இரத்தம், சதை, வன்முறை போன்றவற்றைக் காட்சிப்படுத்தாது யுத்தகால அவலங்களை தனது எழுத்தின் முதிர்ச்சி மூலம் வாசகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். இதுவரையில் கட்டாய ஆள்சேர்ப்பு பற்றிய விளக்கமான புனைவு எதையும் நான் படித்ததில்லை.
தமக்கான உரிமைகள் இருதரப்பினராலும் அதாவது, இலங்கை அரசு, மற்றும் விடுதலைப்புலிகள் இரு பக்கத்தினராலும் மறுக்கப்படுகின்றன என்பதனான எந்தப் புரிதலுமின்றி தம் நிலம் அதனைச் சுற்றிய வாழ்க்கை முறை, காடும், நீரும் வனவிலங்குகளும் ஆத்தையும் போதுமென்று வாழ்கின்றார்கள் இம்மக்கள். இவர்கள் தெய்வமென்று நம்பியிருந்த நிலத்திற்குள் விடுதலைப்புலிகள் முதலில் புகுந்துகொள்கின்றார்கள், தம்மைத் தவிர வேறு ஒருவரிடமும் ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கக் கூடாது என்று வேட்டைக்காக பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்த துப்பாக்கிகள் பறிக்கப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் காட்டிற்குள் புழங்குகிறார்கள் என்று அறிந்து கொண்ட இராணுவம் காட்டைத் தாக்கத் தொடங்குகிறது. இயற்கையை மட்டுமேயறிந்த நிலம் அதிர்வு காணத்தொடங்குகிறது. தொடர்ந்து இக்குழு மக்களை பலவந்தமாக இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்க்கை எப்படி புடுங்கியெறியப்பட்டது என்பதை மிக நுணுக்கமாக எவரும் கேள்வி கேட்க முடியாத படி விளக்கியுள்ளார் யதார்தன். தமது நம்பிக்கைகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் தடங்கல்களே தம் நிலத்திற்கும், வாழ்விற்கும் சாபமாக எழுகின்றது என்று அப்பாவித்தனமாக நம்புகின்றார்கள், ஆத்தை கோவித்துக் கொண்டுவிட்டாள். அவளைக் குளிர்ச்சிப் படுத்தினால், இராணுவமும், இயக்கமும் தம்மேல் பிரயோகிக்கும் அத்துமீறல்களைத் தடுத்துவிடலாம் என்றும் நம்புகின்றார்கள்.
கீரிமேட்டு மக்களின் சடங்குமுறைகளில், நம்பிக்கைகளில் பல மூடநம்பிக்கைகள் இருப்பதாக எமக்குப் படலாம், இயற்கையை பூசித்துப் பாதுகாத்துவரும் ஒரு சமூகம், தமது உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே ஆயுதத்தைக் கையிலெடுக்கும் ஒரு சமூகத்தை எப்படி நாம் பிற்போக்கான, முன்னேறாத சமூகமாகக் கொள்ளமுடியும்? போராட்டத்தில் தாம் விரும்பி இணையும் பிள்ளைகளையும், பிடித்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகளையும் எப்படியாவது பணம் கொடுத்தேனும் அவர்களை வெளியே எடுத்து வெளிநாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்கும் பெற்றோரே எந்த மானுடநேயமுமற்றவர்களாக கண்மூடித்தனமாக விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர்களாக இருக்கின்றார்கள்.
“நகுலாத்தை” நாவலில் முக்கியப் பெண் பாத்திரங்கள். தோழிகளான தாமரை, வரோனிக்கானின் உறவு, வரோனிக்காவின் தாயார் நிர்மலா, புலேந்திரனின் உறவு, துரிதம், காங்கேசன் உறவு, தமயந்தியின் வாழ்க்கைத் தெரிவு, என்பன இலங்கையில் நான் வாழ்ந்த சூழலில், (இன்று சிறது மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்) அங்கீகரிக்கப்படாதவை, பேசப்படாதவை, கேவலமாகப் பார்க்கப்பட்டவை.
யதார்தன் ஆழமாக இவ்வுறவு முறையை ஆராயாமல் விட்டிருப்பது இந்நாவலை இவற்றை நோக்கி அவர் புனைய முனையவில்லை என்பதனால் ஆக இருக்கலாம். இருப்பினும் எந்த நூற்றாண்டு, எந்தப் பிரதேச மக்களாக இருப்பினும் இவையெல்லாம் மானுடம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து கொண்டுதானிருக்கின்றது. உயிரைக் காக்க ஓடிக்கொண்டிருக்கும் இயக்கத்திலிருந்து தப்பித்து வந்த சாரங்கனின் பாலியல் வக்கிர குணம், தான் தப்பித்துக்கொள்வதற்காக சக போராளி தாமரையின் அன்பான குடும்பத்தை ஏமாற்றி உபயோகித்துக்கொண்ட நெய்தல் எனும் பெண் போராளியின் துரோகம், கிளி எனும் பெண் போராளி சாமி வந்து ஆடுவது போன்ற காட்சிப்படுத்தல்கள் விடுதலைப்புலி இயக்கத்தை தூய்மையான ஒன்றாக கொண்டாடிக் கொண்டிருப்பவர்களை சிறிதேனும் சிந்திக்க வைத்தால் நன்று. அவமானப்படுத்தப்பட்டவள்.
‘என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே
சிவரமணி 1990:
தற்கொலைக்கு ஒரு வருடம்முன் எழுதிய கவிதையின் கடைசி வரிகள் இவை.
இலங்கைக் காடுகளின் பசுமையையும், வேடுவ சமூகத்தின் சடங்குகள், சம்பிரதாயங்களையும், வேட்டை என்பது எப்படி இடம்பெறுகின்றது என்பதின் முழுமையான விவரணையையும் “நகுலாத்தை” நாவலின் வாசிப்பினூடு எனக்களித்த யதார்தனுக்கும் இச்சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த பாரதி புத்தகாலயம் சிராஜுதீன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சைதை கிளைக்கும் எனது நன்றிகள்.
