ஜமாலன்
தமிழ்ச் சிறுகதைகளுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலக அளவில் வரக்கூடிய புதிய வகைமைகளை உள்வாங்கி உடனடியாக எழுதப்படுவது சிறுகதைகள்தான். அக்கால மாப்பசான் முதல் தற்கால ஹரகி முராகாமி வரை சிறுகதைகள்தான் உடனடியாக தமிழில் வருகிறது. அதைப் பின்பற்றி தமிழ்ச் சிறுகதைகளும் வளமான திசைநோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. தமிழ் நவீனத்துவத்தின் பண்புகளை ஓரளவு உள்வாங்கி எழுதப்பட்ட இலக்கிய வடிவமாக உள்ளது.

இந்திய ஒன்றியத்தின் காலனியக் காலத்தில் அறிமுகமான நவீனத்துவம் கொண்டுவந்த வடிவங்களான புதுக்கவிதை, நாவல், சிறுகதை ஆகியவற்றில் சிறுகதையின் வளர்ச்சி குறித்து தமிழில் அதிகம் கவனம் இல்லை. என்றாலும், தமிழில் உருவான இலக்கிய, வெகுசன பத்திரிகைகளில் சிறுகதை ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தது. காரணம், அது ஒரு சிறு நிகழ்வை, உணர்வை, அனுபவத்தை, யதார்த்த சூழலை படம் பிடித்துத் தரும் ஒரு வடிவம். அதோடுகூட வாசிப்பவர்க்கு அதிகம் சுமைதராத, நேரம் எடுக்காத ஒரு வடிவமும்.
சிறுகதை நாவல்போல ஒரு குறிப்பிட்டவர்களுக்கான கதையாக அமையாமல், அனைவருக்குமான அனுபவமாக மாறும் தன்மை கொண்டது. சிறுகதை எழுதுவது என்பது உடனடி உணர்வுத் தாக்கத்தை தரக்கூடிய வகையில் அமைய வேண்டும். நாவலைப்போல வசதிகள் அதில் இல்லை. கவிதை போல உடனடித் தன்மையும் அதில் இல்லை. அதற்கென பிரத்யேகமான உணர்வும், சிந்தனைத் தெறிப்பும் அவசியம்.
உலக இலக்கிய வகைமைகளில் ஒப்பிட்டுப் பேசக்கூடிய வகையில் பல சிறுகதைகள் தமிழில் உள்ளன. புதுமைப்பித்தன், மௌனி துவங்கி இன்று எழுதும் தமிழவன் (இவரது சிறுகதைகள் மிக முக்கியமானவை என்றாலும் பரவலாக கவனம் பெறாதவையாக உள்ளது. கோட்பாட்டுக் காய்ச்சல் உள்ள தமிழ் இலக்கியச் சூழலில்), எம்.டி. முத்துக்குமாராசாமி, பிரேம், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி, பாலசுப்ரமணியம் பொன்ராஜ், ராகவன், அண்டனூர் சுரா (இன்னும் பலர் சட்டென்று நினைவில் உள்ளது) வரை அதற்கான சான்றுகள். புபி, மௌனிக்குப் பிந்தைய இடைக்காலத் தலைமுறை சிறுகதைகளில் சட்டென்று நினைவிற்கு வரக்கூடியவர்கள் வண்ணதாசன், வண்ணநிலவன், பா. செயப்பிரகாசம், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், சா.தமிழ்ச்செல்வன், சாருநிவேதிதா. இவர்களில் இடதுசாரி மரபில் இன்றுவரை அழகியலுடன் எழுதக்கூடியவர் சா. தமிழ்ச்செல்வன். அவரது சமீபத்திய குறிப்பிடத்தகுந்த நூல் “முதல் ஐம்பது ஆண்டுகளில் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்.” இந்நூல், அதனை எழுதுவதற்கான அத்தனை தகுதியும் நிறைந்தவர் என்பதை அருமையாக வெளிப்படுத்தியுள்ளது.
தமிழ்ச் சிறுகதை வரலாறு துவக்க காலம், காலனியக் காலம், காலனிக்குப் பிந்தைய காலம்வரையில் எழுதப்பட்ட சிறுகதை ஆளுமைகளைக் குறித்தும், அவரது சிறப்புகள் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர்களுக்கான இடம் ஆகியவை இலக்கிய வரலாற்று நோக்கில் மட்டுமின்றி, அழகியல் சார்ந்த ஆய்வு நோக்கிலும் சா.தமிழ்ச்செல்வன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. ஒரு படைப்பாளியால் எழுதப்பட்டதால் சிறுகதையாளர்களின் நுட்பமான படைப்பாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அவ்வகையில் சிறுகதை படைப்பாளருக்கான கையேடாகவும் அமைந்துள்ளது. வாசித்து முடித்தபின் தமிழ்ச் சிறுகதைகளின் பல நுட்பங்களை அறியமுடிகிறது.சான்றாக, கந்தர்வன் குறித்து எழுதும்போது ஓர் இயக்கவாதியாக, கவிஞராக இருந்தவர் எப்படி சிறுகதையாளராக மாறினார் என்பதை சுட்டுகிறார். கந்தர்வன், தான் பார்த்த ஒரு நிகழ்வை சிறுகதையாக மாற்றுவதை, பதிவுசெய்ததை சுட்டிக்காட்டுகிறார்.
புதிதாக சிறுகதை எழுத எண்ணமுள்ளவர்கள் மட்டுமின்றி, இலக்கிய உரைநடை எழுத்தாளர்களுக்கும் அது ஒரு பாடமாக அமைகிறது. யதார்த்த நிகழ்வை, உணர்வை, அதன் தாக்கத்தை சிறுகதையாக மாற்றும் கலையையும் இந்நூலில் பல இடங்களில் விளக்கிச் செல்கிறார். வாசிப்பில் எந்த அலுப்பும், சோர்வும் தட்டாமல் செல்கிறது. சிறுகதை எப்பொழுதும் கச்சிதமானது. வார்த்தைகளை செலவு செய்யாத வகையில் அமைவதை பல சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள்வழி விளக்கிச் செல்கிறார். அதன் பல்வேறு வடிவ, உள்ளடக்க உத்திகைளையும் விளக்கிச் செல்கிறார். சான்றாக, மா. அரங்கநாதன் குறித்து எழுதும்போது அவரது வைதீக எதிர்ப்பு சைவச்சார்பினைச் சொல்லி அது கதைகளில் ஓர் உத்தியாக மாறுவதைச் சுட்டுகிறார். “சொல்ல முடியாத தன்மையைச் சொல்ல முயல்வதுதான்” என்பதை கூறும்போது கதைகள் குறித்த இவரது ஆழந்த வாசிப்பு வெளிப்படுகிறது.
பொதுவாக சிறுகதை இலக்கிய வரலாறு மறந்துவிட்ட பலரையும் இதில் அவர் அறிமுகம் செய்து அவர்களது சிறந்த கதைகளை சுட்டிக் காட்டுகிறார். சான்றாக, தொமு.சி விந்தன், கமலா விருத்தாசலம் வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் மட்டுமின்றி கலை முதல்வாதம் பேசும் கலை அடிப்படைவாதிகள் வசதியாக மறந்துவிடும் அல்லது கலை எதிர்ப்பாளர்களாக முன்வைக்கும் அண்ணா, கல்கி, ராஜாஜி போன்றவர்களின் கதைகளையும் அதற்கான விமர்சனத்துடன் முன்வைக்கிறார். எந்தக் கலைஞனும் ஒரு சிறந்த படைப்பை வாழ்நாளில் உருவாக்கிவிட முடியும். அப்படி அவர்களது சிறந்த படைப்பை ஒரு வரலாற்றாளன் அடையாளம் காண்பதே முக்கியம். அவ்வகையில் இந்நூல் அதனை சரியாகச் செய்துள்ளது.
வ.வே.சு. அய்யரின் முதல் கதை என்கிற கன்னி முயற்சி துவங்கி அ. மாதவையா, பாரதி என்கிற மூவரின் துவக்க முயற்சிகளில் அ.மாதவையா சுயசாதி (பிராமணர்) குறித்த விமர்சனங்களை முன்வைத்ததை சுட்டிக்காட்டுகிறார். அதன்பின் வந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் பு.பி. துவங்கி சி.சு. செல்லப்பா, நா. சிதம்பர சுப்ரமணியம் வரை அறிமுகம் செய்கிறார். திராவிட எழுத்தாளர்களின் சிறுகதை பங்களிப்புகள், ஆரம்பகால பெண் படைப்பாளிகள் அனுத்துமா துவங்கி அம்பை வரை நுட்பமாக அனைவரையும் குறித்து சிறப்பான படைப்பாளுமைக்கான தகவல்களைத் தருகிறார். முதல் ஐம்பது ஆண்டுகால சிறுகதை ஆசிரியர்களின் பங்களிப்பைத் தொகுத்துத் தருகிறது இந்நூல்.
ஒருதலைப்பட்சமாக, அதாவது கலை, மக்கள், வியாபார நோக்கு, சோதனை முயற்சிகள் என அரசியல் வழியான பக்கப் பார்வைகள் ஏதுமின்றி, ஒரு வரலாற்று உணர்வுடன் தொகுக்கப்பட்டுள்ளது. சிறுகதையாசிரியர், படைப்பாளி, விமர்சகர், இயக்கவாதி என்ற அடிப்படையில்தான் சார்ந்த அரசியல் நோக்கில் இல்லாமல், இந்நூல் பாரபட்சமற்ற முறையில் பெரும்பாலான சிறுகதை ஆசிரியர்களின் போக்குகளையும், தேவையான இடங்களில் அவர்களின் முக்கியமான கதைகளையும், அவர்களது சிறு வரலாற்றுக் குறிப்புகளையும் இணைத்துத் தருகிறது. அவர்கள் குறித்து வந்த பிறரின் ஆய்வுகள், கருத்துகளும் ஆங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சா. தமிழ்ச்செல்வனின் விரிந்த வாசிப்பையும், கடுமையான உழைப்பையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. தனிநபராக இதனை அவர் நிழ்த்தியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்று மாணவர்களுக்கு இது ஒரு புதையல்.
ஆரம்ப காலத்தில் நவீனத்துவ அறிமுகமாக உருவான சிறுகதையாளர்கள், அதன்பின் மாரக்சிய இடதுசாரி சிந்தனை கொண்ட சிறுகதையாளர்கள், திராவிடப் பிரச்சார சிறுகதையாளர்கள், கலைமுதல்வாத வடிவரீதியாக முயன்ற சிறுகதையாளர்கள், பெண் சிறுகதையாளர்கள் என வகைப்படுத்தாமல், காலக்கணக்கில் இந்த அறிமுகத்தை அமைத்துள்ளார். தற்கால எழுத்தாளர்கள் குறித்து எழுபதுகளின் எழுச்சி என்ற பகுதியில் அறிமுகம் செய்து அதன்பின் தனித்தனியாக எழுதியுள்ளார். வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், பூமணி, வண்ணதாசன், இன்குலாப் (பரவலாக இவரின் சிறுகதைகள் அறிமுகமற்று உள்ளது, எனது இன்குலாப் குறித்த நூலில் இவரது சிறுகதைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன தனி அத்தியாயமாக), பிரபஞ்சன், லிங்கன் (இவர் குறித்தும் பரவலான அறிமுகம் இல்லை. நானே இதில்தான் இவரைப்பற்றி வாசிக்கிறேன்), சா. கந்தசாமி,
மு. சுயம்புலிங்கம், நாஞ்சில் நாடன், அம்பை, தஞ்சை பிரகாஷ், கி.ரா.கந்தர்வன் ஆகியோருடன் இந்த அறிமுகம் முடிவடைகிறது.
ஒவ்வொரு எழுத்தாளரின் புகைப்படங்கள் தலைப்புடன் தரப்பட்டுள்ளது. ஆனால், பக்.346ல் வௌியாகியுள்ள ஜெயகாந்தன் படம் வழக்கமான பாகவதக் கிராப்புடன், செல்பிரேம் கறுப்புக் கண்ணாடி ஜெயகாந்தனை பழகிய கண்களுக்கு ஏதோ தவறான புகைப்படத்தை அச்சிட்டதைப் போல உள்ளது.ஒவ்வொரு கதையாசிரியர் குறித்த அடையாளமாக அவர்களது கதைகளின் போக்குகளைக் குறிப்பது சிறப்பாக உள்ளது. அ.மாதவையா சீர்திருத்தக் கதைகள், பாரதி உபதேசக் கதைகள், கு.ப.ரா. கச்சித நடைக் கதைகள், அண்ணா போன்றவர்கள் பிரச்சாரக்கதை இப்படி. கந்தர்வன் குறித்து அவரே கூறும் இந்த உருவகமே இந்நூலுாக்கான உருவகமாகக் கொள்ளலாம். அதாவது, ஒவ்வொரு கதையாசிரியரையும் விதந்தோதாமல் அவர்களது கதைகைளின் கதவை திறந்து வைத்துள்ளார். வாசிப்பாளன் உள்ளே நுழைந்து பார்த்து கொள்ள வேண்டியதுதான்.
பு.பி. தான் முதன்முதலில் தொழிற்சங்கம் பற்றி எழுதியவர், கு.ப.ரா. கண் தெரியாத காலத்தில் எழுதிய கதை, தமிழில் முதல் நாவல் எழுதிய பெண் வை.மு. கோதைநாயகி அம்மாள் (115 நாவல்கள் எழுதியுள்ளாராம்), பு.பி. மனைவியை கதை எழுத வற்புறுத்தி கமலா விருத்தாசலம் எழுதிய கதை, ஒரே ஒரு சிறுகதை எழுதி வரலாற்றில் இடம்பிடித்த மூவலூர் இராமாமிர்த அம்மையார், நா. பிச்சமூர்த்தி கூவம் நதிக்கரையில் குடியிருந்தது, அவரை கா.ந.சு. போன்றவர்கள் தேவையற்ற முறையில் பெரிய வேதாந்தியாக சித்தரித்தது எனப் பல நுட்பமான விவரங்கள் இதில் கூறப்பட்டுள்ளது. நூலின் முன்னுரையில் கூறும் ஆறு முக்கியப் போக்குகளை இந்நூலில் கச்சிதமாக விளக்கியுள்ளார்.
“இந்தக் காலகட்டத்தில் கதை எழுதிய ஆண்களில் வ.வே.சு. அய்யர் முதல் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி வரை எல்லோருமே (நான்கைந்து பேரைத் தவிர) பார்ப்பன வகுப்பில் பிறந்தவர்கள்தான். அதுபோல பெண்களின் சிறுகதை முன்னோடிகள் எல்லோருமே அந்த வகுப்பில் பிறந்தவர்களே. கல்வி அறிவும், ஆதரவான குடும்பச் சூழலும், அதற்கான நேரமும் அவர்களுக்கே வாய்த்ததால் இது நிகழ்ந்திருக்க வேண்டும்” (பக்.312) என்று குறிப்பிடும் சா. தமிழ்ச்செல்வனின் கருத்து முக்கியமானது. தமிழ் இலக்கியச் சூழலில் இது ஒரு மறுக்க முடியாத உண்மை என்பதுடன், இலக்கியத்தினை ஆதிக்கம் செய்த ஒரு கலைஇலக்கியப் புலமாக அது அமைந்திருந்தது. தமிழ் அழகியலில், இலக்கியத்தில் ஒரு மேட்டிமை பண்பாட்டை உருவாக்கியதில் அவர்களின் கலை இலக்கியங்களுக்கு முக்கியப் பணி உண்டு. அதிலிருந்து விலகிய ஓர் எழுச்சியே எழுபதுகளில் நிகழ்ந்த இடதுசாரி இலக்கிய வருகை. அவ்வகையில் சிறுகதையில் மணிக்கொடிக்கு உள்ள வரலாற்று முக்கியத்துவம் தாமரைக்கும் உண்டு என்பதை ஓரிடத்தில் மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறார். அதற்காக, தனது இடதுசாரி சார்புநிலையில் நிற்காமல் சிறுகதையில் அவர்களின் பங்களிப்பை அழுத்தமாகவும், காத்திரமாகவும் எடுத்துக் காட்டியுள்ளார்.
பு.பி.க்குப் பிறகு (அவர் தன்னை இடதுசாரியாகக் கூறவில்லை என்றாலும்) உருவான தொமு.சி., விந்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், பூமணி, பா.செ., பிரபஞ்சன், இன்குலாப், கந்தர்வன் என்ற ஓர் இடதுசாரி மரபு உருவாகியுள்ளதை இந்நூல் முன்வைக்கிறது. தமிழ்ச் சிறுகதை மரபு பு.பி. மற்றும் மௌனி சார்ந்து உருவானதாக இதனை அடையாளப்படுத்தினால், பு.பியின் மரபு புறப்பரப்பு சார்ந்தும், மௌனி மரபு அகப்பரப்பு சார்ந்தும் அமைவதை இந்நூல் வாசிப்பு வெளிப்படுத்துவதாக உள்ளது.
இந்நூலில் இரண்டு தலைமுறை சார்ந்த சிறுகதையாளர்கள் 52 பேர் குறித்து விரிவான ஆய்வை செய்துள்ளார். புதிய வாசகர்களுக்கு தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முதல் ஐம்பது ஆண்டுகளை காய்தல், உவத்தல் இன்றி சரியான பொருளில் அறிமுகப்படுத்தி உள்ளார். அவர்களது சிறந்த சிறுகதைகளையும், தேவையான இடங்களில் விமர்சனமும் என திறனாய்வுச் சிந்தனையுடன் அணுகுகிறார். அத்தோடு வரலாற்றுக் குறிப்புகளையும், அவர்கள் கால நிகழ்வுகளுடன் விளக்குகிறார். இவை தொடர்ந்து இணையத்தில் நிகழ்த்தப்பட்ட பொழிவுகள் என்பதால் வாசிப்பவருக்கு எடுத்துரைக்கும் உரையாடல் தன்மையில் எளிமையான மொழியில் அமைந்துள்ளது. தேவையான இடங்களில் மற்றவர்கள் அச்சிறுகதை ஆசிரியர்கள் குறித்த கருத்துக்களையும் சுட்டியுள்ளார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணமாகவும், புதிய வாசகர்களுக்கு எளிமையானதும், அருமையானதுமான அறிமுகமாக அமைந்துள்ளது. ஆய்வாளர்களுக்கு ஒரு ‘ரெப்பரன்ஸாக’வும் பயன்படும். தேடல் உள்ளவர்களுக்கு யாரை வாசிக்கலாம் என்ற தேர்வை தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. இலக்கிய வாசகனுக்கு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது. புதிய எழுத்தாளர்களுக்கு சிறுகதை நுணுக்கங்களை அறிமுகப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது