கோ.கணேஷ்
உ.வே.சா. நூல்நிலையத்தில் காணக்கிடைத்த இந்நூல்; சாலிவாகன சகாப்தம் 1835இல் (கிபி.1913) ஆரணி ஜாகீர் காமக்கூர் தமிழ்ப்பண்டிதர் மு.சுந்தரமுதலியாரின் மாணவர்களில் ஒருவராகிய நா.பெருங்கடம்பனூர் கு. நடேச நாட்டாரால் இயற்றப்பட்டு வேலூர் சுந்தரவிநாயகர் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் முப்பது விருத்தப்பாக்களால் ஆன செய்யுள்களும் அவற்றிற்கான பொழிப்புரையும் உள்ளன. இவ் அச்சுப் பிரதியின் உருவாக்கத் தேவை குறித்தும் அது மேற்கிளப்பும் சமூக – பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும் பின்வருமாறு விரிவாகக் காணலாம்.
தமிழில் இருவேறு நிலைகளில் பிரதி (Text) உருவாக்கம் நடைபெற்றன. ஒன்று, தீவிர இலக்கிய ஆக்கங்கள், மற்றொன்று, வெகுசன ஆக்கமரபு. இவ்விரு ஆக்கமரபுகளிலும் கடவுள் வழிபாடு மற்றும் வேத வழிபட்ட சமஸ்கிருத மனுஸ்மிருதிகளைக் கொண்ட வைதீக (ஆத்திக) கருத்தாக்கம் ஒருபுறமும், பெரியாருக்கு முன்பான சென்னை லௌகீக சங்கம் போன்றவை முன்னெடுத்த நாத்திகக் கருத்தாக்கம் மற்றொருபுறமும் என இருஎதிர் கருத்தியல்களும் தமது சித்தாந்தப் பகிர்வுகளை அச்சு நூல்களின் ஊடாக முன்னிறுத்தின.

பெரும்பாலும் வைதீக மரபின் உச்சமாகவே தமிழ் இலக்கியங்கள் அச்சிடப்பட்டு வந்துள்ளன. இதனை ஆறுமுக நாவலரின் அச்சாக்கச் செயல்பாடுகளின் வழி புரிந்துகொள்ளலாம். சங்க இலக்கிய ஏட்டுப்பிரதிகள் அவரிடம் இருந்தும் அதில் திருமுருகாற்றுப்படையை (கி.பி. 1851) மட்டும் பதிப்பித்தார். தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து வடமொழி மரபின் ஊடாட்டம் இருந்துவந்துள்ளது. ஆசாரக்கோவை, ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் முதலான நூல்களின் வழியாகவும் பரிமேலழகரின் உரைகள், வைணவ உரைகள் எனப் பல்லேறு காலகட்டங்களிலும் தொடர்ந்து வந்துள்ளதைப் புரிந்துகொள்ள வேண்டும். சிற்றிலக்கிய வகைமைகளில் பரவலாக உள்வாக்கப்படுதலை நாம் அவதானிக்கலாம். நீதிமாலை என்ற பனுவலையும் இம்மரபின் நீட்சியாக நாம் காணவேண்டியுள்ளது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் தமிழ்ச்சமூகம் எத்தகைய பின்புலத்தில் பயணித்தது என்பதற்கான தரவாகவும் இப்பனுவலை கவனப்படுத்த முடியும். ஏனெனின் தமிழ்ச் சமூகம் இவ்விரு கருத்தாக்கங்களையும் ஏற்றும் விலக்கியும் வந்துள்ளன. எனவே நீதிமாலை என்ற பனுவலின் உருவாக்கம் சார்ந்தும் அது மேற்கிளப்பும் விடயங்கள் சார்ந்தும் மிக முக்கியமான பிரதியாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது.
இதனை, அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் போன்றோர், வெகுசனப் பிரதிகள் வழியாகக் கட்டமைத்த நாத்திகக் கருத்தாடல்களுக்கு எதிர்நிலையில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய வெகுசன ஆக்கமரபுகளை நாம் கவனப்படுத்தப்படாத தன்மையை அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் குறித்த கட்டுரையில் பேரா. வீ.அரசு அவர்கள் ‘தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட பலர் குறித்த பதிவுகள், அச்சு வடிவில் முடங்கிக் கிடக்கின்றன. இவற்றைத்தேடி எடுத்து மீண்டும் உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை நமக்குண்டு.’ (அறியப்படாத தமிழ் உலகம், ‘புத்தகம் பேசுது’ சிறப்பிதழ், 2011, பக்.34) எனக் குறிப்பிடுவதோடு ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும்.
நீதிமாலை என்ற பனுவலை சமஸ்கிருத மேலாதிக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்ட ‘தமிழ்’ வித்துவான்களின் இறக்குமதிப் பொருள்களில் ஒன்றாக; அதனை வாசிக்கும் எவர்க்கும் விளங்கும்.
அன்றைக்கு இங்கிருந்த பார்ப்பனியத் தலைமை, கோயில் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனச் சூழலை தன்வசம் வைத்திருந்தமை. அதன்மூலம் சமஸ்கிருதம் கற்றவர்களுக்கான முன்னுரிமை, பட்டங்கள் மீதான மோகம் எனத் தமிழகத்தில் இருந்த இடைநிலைச் சமூகங்கள் தங்களை மேட்டிமைப் படுத்திக்கொள்ளவும்; தங்களை வேதவிற்பன்னர்களாக மாற்றிக்கொள்ளவும் பல்வேறுநிலைகளில் முயற்சித்தன. அதன் ஒரு கூறாக இவ்வாறான வெகுசனப் பிரதி ஆக்கங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நீதிமாலையும் வைதீகப் பண்பாட்டுத் தாக்கமும்
நீதிமாலையில் கூறப்படும் நீதி யாருக்கானது? என்ற கேள்வி மிக முக்கியமானது. வெகுசனத்தளத்தில் உரைக்கப்படும் நீதிகள் சார்புத்தன்மை உடையதாகவே இருந்திருக்கிறன்றன. அவை அசமத்துவத்தையே போதிக்கின்றன. குறிப்பாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே உள்ளன. இந் நீதிமாலை நூலும் பெண்களுக்கு எதிரான கற்பிதங்களையே முன்வைக்கிறது. இதன் மூலம் அன்றைய சமூகப் பேசுபொருளாக, எத்தன்மையில் பெண் முன்நிறுத்தப்பட்டிருக்கிறாள் என்பது மிக முக்கியமான விடயம். மேலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களின் சமூகப் பண்பாட்டு விழுமியங்களை அவதானிக்க ஏதுவாக இப்பிரதியின் உள்ளடக்கம் அமைகிறது.
இந்நூல் மொத்தம் 30 விருத்தப்பாக்களைக் கொண்டது. இதில் உரைக்கப்படும் நீதியைப் பின்வருமாறு தொகுத்துப் புரிந்துகொள்ளலாம்.
• இந்நூலாசிரியர் நா.பெருங்கடம்பனூர்
கு.நடேசநாட்டார் வடமொழியில் பல நூல்களைக் கற்றுணர்ந்து இந் நீதிமாலையை இயற்றியுள்ளார். அதனை “ஆரணி டி.மு. கோர்ட் க்ளார்க்கும் கம்பராமாயணப் பிரசங்கியுமாகிய ம-ள-ள-ஸ்ரீ, தெள்ளூர் நாராயணையரவர்கள்” இயற்றிய அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தத்தில் “வடமொழியி லுரைநீதி நூற்றேர்ந்து தென்மொழிதேர் வாணர்” என்று குறிப்பிடுகிறார்.
• மேலும் இந்நூலாசிரியரின் போதகாசிரியரும் தமிழ்ப்பண்டிதருமாகிய ஆரணி ஜாகீர் காமக்கூர் ம-ள-ள-ஸ்ரீ, மு.சுந்தர முதலியாரவர்கள்” இயற்றிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறுகிறார்.
“வடமொழி தன்னுள் வயங்குநீ திகளைக்
குடமுனி தமிழிற் குலவிய முப்பது
விருத்தப் பாவாய்……”
வடமொழி நூல்களைக் கற்றுணர்தலும் அது சார்ந்த நீதிகளைத் தமிழுக்கு வழங்குவதன் மூலம் தமிழ் மக்களை ’தூய்மைவாதத்திற்குள்’ கொண்டுபோய் சேர்ப்பதற்கான ஆக்கமரபாக இப்பிரதி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நூற்பா செய்திகளை கூடுதல் கவனத்தோடு வாசிப்பது மேலும் எத்தகைய சமூகத்தை இப்பிரதியின் ஊடாகக் கட்டமைக்க விரும்பினர் என்பது புலப்படும் (இந்நூலின் நூற்பா முழுதும் இங்கு கொடுக்கப்படவில்லை, தேவையான இடங்களில் நூற்பாவும், மற்ற இடங்களில் அதன் சாரமும் கொடுக்கப்பட்டுள்ளன).
இந்நூலின் மூன்றாவது விருத்தத்தில் (பாடலில்) குலத்தொழில் செய்வதை மேன்மையாகக் கருத வேண்டும் என்றுரைக்கிறது. பூமியில் ஒருவன் தன் குலத்தொழிலைச் செய்து ஜீவிப்பது உத்தமம் என்றும்
நான்காவது விருத்தத்தில் – ‘உலகத்தில் புருஷர்களுக்குமேல் பெண்களுக்குச் சாப்பாடு இரண்டு பங்கு, அறிவு நான்கு பங்கு, வலி ஆறு பங்கு’; என்று கூறிவிட்டு இந்நூலாசிரியர், அற்பகுணமுடைய மூடர்கள் களித்துப் பேசும்படியான காம இச்சை எட்டுப் பங்கு என்று மேலாகிய வேதங்கள் கூறுகின்றன (அழுத்தம் எமது) என்று கூறுகிறார்.
‘மோக மூட்டும் பொன்வளருங் கொடியிடையார் பொருள்கடையிற் கடையாகும்’ – என ஆறாவது விருத்தத்தில் கூறுகிறார்.
வயது முதிர்ந்தவர்களுக்கு இளம்பருவமுள்ள பெண்சாதியே விஷமாகும் – என ஏழாவது பாடலிலும்
தன் வீட்டிற்கு வந்தவரை அமர வைத்துவிட்டு உணவு உண்பது “மேலான குணமுடைய பசுவினது மாமிசத்தை யுண்டது போலாம்” எனவும் (பா.எ.9)
‘பெருச்சாளி, தாசி(அடிமைக்காரி), கணக்கன், காற்று, ஈ, கிராமாதிகாரி, பிச்சைக்காரன் ஆகிய ஏழும் குடிகளை வருத்தும்’ என்கிறார். (பா.எ.11)
‘எவ்வன காலத்தில் கலியாணமில்லாமல் தனியே இருக்கும் பெண்ணும்…. பயனடையாது’ – (பா.எ.14)
வீட்டில் உள்ள செல்வத்தின் உண்மையின்மை அறியாமல் மனங்கோணும்படியாய்ப் பேசுவர்களைக் குறிக்கும் இப்பாடலில் ‘வாரணிகொ ளுயர்கொங்கை வாய்த்தமனைவியு’ – என்கிறது. (பா.எ.15)
‘சதா சண்டையிட்டுத் திரிபவள், வீட்டிலுள்ள பொருளை அபகரிப்பவள், புருஷன் உண்பதன்முன் உண்பவள், அன்னியர்க்கு உதவி செய்பவள், பரபுருஷரோடு பரிகாசம் பேசித் திரிபவள், அயலார் மனையிலே எந்நேரமும் தங்கியிருப்பவள், இப்பெண்கள் பத்துப் பிள்ளைகள் பெற்றவர்களாயிருப்பினும் வீட்டிலிருந்து நீக்கப்படுவார்கள்’ – (பா.எ.16) எனப் பெண் குறித்த இப்பதிவுகளை இன்றையச் சூழலில் உரையாடலுக்கு உட்படுத்துவதன் மூலம், இப்பனுவல் எத்தகைய பிற்போக்குக் கருத்தாடல்களை முன்வைக்கிறது என்பதை உணரலாம்.
‘தாசியின் சேர்க்கையால் மானம் போகும், வேசியின் புணர்ச்சியால் பொருள் அழிந்து பழிப்புண்டாகும், விதவையினுடைய புணர்ச்சியால் ஆயுள் குறைந்து அழகு கெடும்’ – (பா.எ.18)
‘துவாதசிக்கு மேலான விரதமும், காயத்ரியை விட வேறு மந்திரமும் இல்லை’ – (பா.எ.23).
“கொடிய விஷமுடைய பாம்புக்கு, எத்தனை பிரியமாகப் பால்வார்த்து வளர்த்தாலும், அது வளர்ப்பவனுக்கு நஞ்சைக் கொடுப்பதுபோல், புலையருக்கு என்ன நன்மையைச் செய்தபோதிலும் அவர்கள் தீமையாகிய காரியங்களைச் செய்வாரேயன்றி நன்மை புரியார்” – (பா.எ.25)
பத்தினி, புத்தகம், பொருள் இவைகளை, ஒருவர் கைக்குக் கொடுத்தால் பத்தினி, கற்பகன்று வருவாள்…” – (பா.எ.27).
இந்நூலின் 30 நூற்பாக்களில் பெரும்பகுதி பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மத்தையே விதைக்கின்றன. இதனைப் பின்வருமாறு தொகுத்துப் புரிந்துகொள்ளலாம்.
‘இந்து சனாதனத்தை’க் கட்டமைக்க, தொடர்ந்து ‘மனுஸ்மிருதி’ போன்ற பழைமைவாத, பிற்போக்குத்தனமான பிரதிகள் முன்நிறுத்தப்பட்டன. அதன் சாரத்தை பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களின் ஊடாக வெகுமக்களிடையே கொண்டுசேர்த்தனர். அதனைப் பற்றுக்கோடாகப் பிடித்து கொண்ட சில இடைநிலை சாதியினர்; அச்சு ஊடகத்தின் வருகையையும் கல்விக்கூடங்களையும் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
குறிப்பாக, நீதியை அல்லது ஒழுக்கத்தைப் போதிப்பதாகக் கூறிக்கொண்டு சனாதன தர்மத்தைக் கற்பித்து வந்தனர். இவ்வாறான போதனைகளுக்கு ஏற்ற வகையில் பிரதிகளை உருவாக்கிக் கொண்டனர். அவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதிகளின் நீட்சியாகத்தான் இந் நீதிமாலையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏராளமான பனுவல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பனுவலை வாசித்து மறுபொருள்கோடலுக்கு உட்படுத்துவதன் மூலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால தமிழ்ச் சமூகத்தின் கல்வி – வரலாறு – சமூக இயங்கியல் குறித்த புரிதலை நாம் பெறமுடியும்.