மயிலம் இலமுருகு
இலக்கியப் படைப்பு என்பது அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை இருபாலினத்தவரால் படைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெண் படைப்பாளர்கள் அதிகமாக இருந்தனர். இடைக்காலத்தில் இப்போக்கானது குறைந்திருப்பதாக, கிடைத்த ஆவணங்கள் வழி அறிகின்றோம். திரும்பவும் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் பெண் படைப்பாளர்கள் வீர்யம் கொண்டு எழுதத் தொடங்கினர். இந்த வளர்ச்சிப் போக்கு இன்றும் தொடர்ந்து வருகிறது. இது வரவேற்கத்தக்கதாகும். இலக்கிய ஆக்கத்திலும் ஆய்வுப்பணியிலும் இத்தகு பணி செய்பவர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். அந்த வகையில் 2005 முதல் இலக்கியம் சார்ந்தும் ஆய்வு நிலையிலும் ஈடுபட்டு வருகிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் இரா. மோகனா. இவர் இதுவரை தனித்து ஏழு நூல்களையும் அவருடைய இணையரோடு இணைந்து ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்பாக்கங்களைக் குறித்து பேசுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

வகைப்பாடு:
இலக்கிய ஆக்கங்கள்
நிகண்டு ஆய்வுகள்
நூற்றொகை
சிறார் நூல்
இலக்கிய ஆக்கங்கள்
இவர் முதலில் எழுதிய நூல் ‘பயண இலக்கியம்’ என்ற நூலாகும். இந்நூலை இவர் 2006ஆம் ஆண்டில் எழுதியுள்ளார்.128 பக்கங்கள் கொண்டது. பயணம் குறித்து நூலாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார். ‘பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பயணமானது ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயரும் அனைத்துமே பயணம் என்ற நோக்கில் கொள்ளும்போது தாயின் கருவறையிலிருந்து பூமிதனில் வந்ததே ஒவ்வொரு மனிதனின் முதல் பயணமாகும்’ என்று சொல்கிறார். பயணம் சார்ந்த செய்திகளை அறிந்துகொள்ள இந்நூல் உதவி செய்கின்றது. இதன்வழி பயணம் பற்றிய சிறந்த கருத்துக்களை அறிய முடியும். பயண இலக்கியத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி போன்றவற்றை வரிசையாக ஆய்வாளர் கொடுத்துள்ளார்.
அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் என்றும் இந்தியாவில் கொல்கத்தா என்ற நகரத்தையும் குறிப்பிட்டு அங்கு பின்பற்றப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பொருளாதாரம் போன்றவற்றைப் பல்வேறு தலைப்புகளின் வழியாகச் சொல்லியுள்ளது அருமையாக உள்ளது. அப்பகுதி மக்கள் பின்பற்றும் உணவு, உடை, வழிபாடு போன்றவற்றைப் பற்றியும் மிகத் தெளிவாக ஆசிரியர் விளக்கியுள்ளார். இதிலுள்ள செய்திகள் நம்பகத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. அதற்கானச் சான்றாதாரங்களை நூலில் ஆங்காங்கே பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, சீனா, மலேசியா, ஜெர்மனி, ஜப்பான், கொல்கத்தா போன்ற நகரங்களில் வாழ்கின்ற மக்களின் பண்பாட்டையும் அது சார்ந்த தகவல்களையும் நூலாசிரியர் விளக்கிச் சென்றுள்ளார். சிறப்பு செய்திகள் என்ற தலைப்பில் 69 தகவல்களை நறுக்குத் தெரித்தாற்போன்று கொடுத்துள்ளது ஆகச்சிறப்பு. பரந்துபட்ட பயணம் சார்ந்த செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கும் அது சார்ந்த விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நூல் பெரும் உதவி செய்கின்றது. 541 நூல் விவரம் தாங்கிய பட்டியலையும் கொடுத்துள்ளது நன்று. இதனைப் படைத்த இரா. மோகனாவின் பணி பாராட்டப்பட வேண்டியது.
‘தமிழ் நூல்களில் நிலையாமை’ என்ற தலைப்பில் இவர் ஒரு நூலை எழுதியுள்ளார். இதில் இலக்கியங்கள் முதல் செவ்விலக்கியம் என்று சொல்லப்படுகின்ற 41 நூல்களுடன் சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற மூன்றையும் சேர்த்து 44 நூல்களை எடுத்துக்கொண்டு அதில் சொல்லப்பட்டுள்ள நிலையாமை செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளார். இதற்காக இவர் இருபத்தெட்டு நூல்களைப் படித்துள்ளார். நூல் கருப்பொருள் சார்ந்த அச்செய்திகளைக் குறிப்பிட்ட தலைப்புகளில் கொடுத்துள்ளார். இது குறித்தான தகவலை (நிலையாமை குறித்து செய்திகளை) நூலின் இறுதியில் பயன்பட்ட நூல்கள் என்ற தலைப்பிட்டு வழங்கியுள்ளார். அவர் நிலையாமையை நான்காகப் பிரித்துக் கொண்டு விளக்கியுள்ளார். அவை, 1. உலகம் நிலையாமை 2. இளமை நிலையாமை 3. செல்வம் நிலையாமை 4. யாக்கை நிலையாமை என்பனவாகும். நிலையாமை என்ற சொல்லுக்கான விளக்கத்தையும் நிகண்டு நூல்களில் சொல்லப்பட்டுள்ள தகவல்களையும் பதிவு செய்துள்ளார். அதற்கான சான்றாதார நூற்பாக்களையும் கொடுத்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு நூல்களில் சொல்லப்பட்டுள்ள நிலையாமை குறித்த செய்திகளைத் தொகுத்துத் தந்தது கவனிக்கத்தக்கது. நிலையாமை என்று சொல்கின்றபோது
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே‘
என்று வருகின்ற புறநானூறு 465 வது பாடலை எடுத்து விளக்கிச் சொன்னது சிறப்பு. இலக்கியங்களில் சொல்லப்பட்ட இளமையும் நிலையற்ற தன்மையுடையது எனப் பொருள்படும் கருத்துகளை மிக விரிவாக ஆங்காங்கே விளக்கியுள்ளார்.
தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய 243 வது புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.
‘நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்து மணற்கொண்ட கல்லா இளமை,
அளிதோ தானே! யாண்டு உண்டு கொல்லோ’
என வருகின்ற பாடலுக்கான விளக்கம் சிறப்பாக அமைத்துள்ளார். செல்வம் சகடக்கால்போல் வரும் என்று நாம் அறிந்துள்ளோம். அந்த வகையில் செல்வம் நிலையற்ற தன்மை உடையது என்ற பொருள்படியாக சங்க இலக்கியங்களில் வந்துள்ள செய்திகளை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார். அடுத்து யாக்கை நிலையாமை, மனித உடலானது நிலையற்ற தன்மை உடையது என்ற செய்தியைக் கவிஞர்கள் தனது நூலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். முடிவுடை மன்னனாக இருந்தாலும் இறக்கும்போது ஆட்சி புரிந்த நாடு அவருடன் செல்லாது என்பதை ‘அந்த ஆறு மண்டிலம் ஆயினும் தம்மொடு செல்லா’ என்ற புறநானூற்று 377ஆவது பாடலை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். இப்படி நிலையாமை குறித்த செய்திகளை நான்கு தலைப்புகளில் விளக்கியுள்ளது அருமை. அதோடு மட்டுமல்லாமல், அந்தந்த செய்தியைச் சொல்கின்ற பாடல்களைத் தனியாகத் தொகுத்து மூலப்பாடல்கள் என்றும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது நூலாக ‘இலக்கண இலக்கியம்’ என்ற நூலை ஆசிரியர் அவரது இணையருடன் எழுதியுள்ளார். இதில் 24 ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் தேசியக் கருத்தரங்கம், பன்னாட்டுக் கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை. இந்நூலில் இவர் எழுதியுள்ள 14 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நாட்டுப்புறவியல் சார்ந்தும், இலக்கணம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தவையாக இக்கட்டுரைகள் அமைகின்றன.
நான்காவது நூலாக ‘மொழிபெயர்ப்பியலும் எதிர்காலவியலும்’ என்ற நூல் அமைந்துள்ளது. பழைமைக்குப் பழைமையாகவும் புதுமைகளுக்கும் இடம்தரும் மொழியாகவும் நம்மொழி திகழ்கிறது. இம்மொழியில் உள்ள படைப்புகளை இரண்டாகப் பிரிக்கலாம். 1.புனைவு இலக்கியங்கள் 2.புனைவிலி இலக்கியங்கள். புனைவிலி இலக்கியத்தில் ஒரு பிரிவாக கட்டுரை உள்ளது. இந்நூலில் 11 தலைப்பிலானக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு கருத்துகளைப் பேசுவதாக இருக்கின்றன.
ஆசிரியர் ஐந்தாவது நூலாக ‘ஆசிரியர்களுக்கான ஆலோசனைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். பொருள் நிறைந்த சொற்களால் அவரவர் கண்ணோட்டத்திற்கேற்ப, சிந்திக்க வைப்பதாகவும் அறிவு ஊட்டுவதாகவும் எழுதப்படுபவை கட்டுரை இலக்கியங்களாகும். தேவநேயப் பாவாணரின் கட்டுரை வரைவியல் என்ற நூல் கட்டுரை வடிவமைப்புக்கு மட்டுமின்றி, கட்டுரை ஆய்விற்கும் வழிகாட்டியான நூலாகும். புனைவிலி இலக்கியத்தில் ஒரு பிரிவாக கட்டுரை உள்ளது. இந்நூலில் 14 தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆக இலக்கிய ஆக்கங்கள் குறித்து ஐந்து நூல்களை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகண்டு ஆய்வுகள்
நிகண்டு ஆய்வு நூல்களை ஆய்வுக்குட்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். ‘நிகண்டு ஆய்வு’ என்ற ஆய்வு நூலை 2009ஆம் ஆண்டு எழுதியுள்ளார். ‘சொற்பொருள் விளக்கம் சூட டாமணி நிகண்டு’ என்ற ஆய்வு நூலை 2017ஆம் ஆண்டு எழுதியுள்ளார். ‘சொற்பொருள் விளக்கம் திவாகர நிகண்டு’ என்ற ஆய்வு நூலையும் 2017ஆம் ஆண்டு எழுதியுள்ளார். நிகண்டு பாடல்களில் சொல்லப்பட்டுள்ள சொற்களைப் பிரித்து அவற்றில் உள்ள தலைச்சொல்லுக்கு என்ன பொருள் என்பதான விளக்கத்தினை நூலில் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, சொற்களுக்குப் பொருள் கூறும் பாடலைப் பிரித்து ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்றும் அதனை அகர வரிசையில் அடுக்கி விளக்கம் தந்துள்ளார். இந்நூல் இவருடைய ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக உள்ளது. ‘பொருட்டொகை நிகண்டு’ என்னும் நூலில் சொல்லப்பட்ட கருத்துகளைப் பட்டியலிட்டு விளக்கியுள்ளது சிறப்பு. நிகண்டு விளக்கம், நிகண்டுகளின் தோற்றம், வளர்ச்சி, பொருட்டொகை நிகண்டின் தேவை, காலச்சூழல், அதன் பயன் போன்றவற்றைத் தொகுத்துத் தந்தமை குறிப்பிடத்தக்கது. நூல் எழுந்ததின் பின்னணியும் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார். இவ்வாறு ஒவ்வொன்றையும் விளக்கியது அருமை.
இரண்டாவதாக ‘சொற்பொருள் விளக்கம் சூடாமணி நிகண்டு’ என்ற நூலை எழுதியுள்ளார். இதில் பதினோராயிரம் சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்நூலுக்கான விளக்கங்களைக் குறிப்பிட்டு அதன் பதிப்பு வரலாறு மற்றும் சிறப்புகள் போன்றவற்றையும் அறிமுகப் பகுதியில் விளக்கியுள்ளார். ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்றும் அதனை அகரவரிசையில் அமைத்தும் எழுதியுள்ளார். அந்தச் சொல்லுக்கான பொருள் எங்கு வருகின்றது என்று குறிக்க அடைப்புக்குறியில் நிகண்டு நூலில் வருகின்ற நூற்பா எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். முதலில் 10 தொகுதிகளில் வந்துள்ள சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. இறுதியில் 11ஆம் தொகுதிக்கான பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் 1,575 சொற்களுக்குமேல் விளக்கம் பெறுகின்றன. இறுதியில் தலைப்புச்சொல் அகராதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் என்று தெரிந்துகொள்ள அது எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிய பக்க எண் கொடுக்கப்பட்டுள்ளது.
இது சொல் குறித்த பொருள் தேடுபவர்களுக்கு உதவியாக அமையும்.இதைப் போன்று ‘சொற்பொருள் விளக்கம் திவாகர நிகண்டு’ என்று நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலைச் சூடாமணி நிகண்டை போன்றே அமைத்துள்ளனர். திவாகர நிகண்டின் வரலாறு, அதன் பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு சொல்லுக்கும் என்ன பொருள் என்றும் அதனை அகரவரிசையில் அமைத்தும் எழுதியுள்ளார். அந்தச் சொல்லுக்கான பொருள் எங்கு வருகின்றது என்று குறிக்க அடைப்புக்குறியில் நிகண்டு நூலில் வருகின்ற நூற்பா எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் தலைப்பு பெயர் அகராதி கொடுத்துள்ளார். ஆக நிகண்டு குறித்து, மூன்று நூல்களை இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றொகை
நூற்றொகை ஆய்வில் ஆசிரியர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். முதலில் ‘மொழிபெயர்ப்பு நூற்றொகை, தொகுதி-2’ என்ற நூலாகும். மொழிபெயர்ப்பின் அறிமுகம் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு குறித்த தகவல்களை மிக விரிவாக ஆய்வாளர் விளக்கியுள்ளார். இதனுள் நூல்களின் பட்டியலும் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு எப்படி செய்யப்படுகிறது என்ற தகவலும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ‘72 மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள்’ வந்துள்ளன என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு நூல்களைக் கொடுக்கும்போது ஆண்டு அடிப்படையில் அதனுள்ளும் அகரவரிசையில் கொடுத்துள்ளார். இந்நூல் குறிப்பிட்ட தலைப்பில் எழுந்த நூல்களின் பட்டியலை மிக விரிவாக எடுத்துரைக்கின்றது.
தமிழில் மொழிபெயர்ப்புக்கலை குறித்த வரலாற்றை அறிந்துகொள்ள இந்நூல் துணை செய்யும். இந்நூல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. பிற பகுதியில் இருந்து தமிழுக்கு வந்தவை. 2. தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றவை. 3.மூல நூலாசிரியர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் தொகுத்தளித்த அகரவரிசை என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அந்த அடிப்படையில் நூல் விவரங்களை 37 தலைப்புகளில் தொடர் எண்ணிக்கை கொடுத்து கொடுத்துள்ளார். நூல் குறித்த விவரங்களையும் விரிவாக தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆய்வாளர். பிறகு ஆண்டு அறியப்படாத நூல்களையும் தனியாக கொடுத்துள்ளார். நூல்களின் பெயர்களைக் கொடுத்து தனக்குக் கிடைத்த நூல்களையும் அதன் விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழிலிருந்து பிறமொழிக்குச் சென்ற நூல்களின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். 1980 முதல் 2005 வரை தமிழில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைக் கொடுத்து எழுதப்பட்டதே ‘தொகுதி 2’ என்ற நூலாகும். இதில் பிற பகுதியில் இருந்து தமிழுக்கு வந்த 2,342 நூல்களின் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் சென்ற 87 நூல்களின் விவரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணி கவனிக்கத்தக்கது.
அடுத்து மூன்றாவது தொகுதியில் 2006 முதல் 2013 வரை வந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களின் விவரங்களை, மேற்கண்ட நூல் அமைப்பு முறையிலேயே தலைப்பிட்டு சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். அதன் அடிப்படையில் 771 நூல்கள் இக்கால கட்டத்தில் வந்துள்ளதாக ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். இந்த எண்ணிக்கையும்கூட தனக்குக் கிடைத்த நூல்களின் விவரம்தானே தவிர இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது நூலாக ‘சிற்றிலக்கிய நூற்றொகை’ என்ற நூலானது அமைகின்றது. சிற்றிலக்கியம் என்றால் என்ன? அது குறித்த விளக்கங்களை முதலில் ஆய்வாளர் சொல்லியுள்ளார். பிறகு சிற்றிலக்கியங்கள் 96 வகை இலக்கியங்களில் 14 வகை இலக்கிய வகையினை மட்டுமே தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதாகவும் விவரித்துள்ளார். 14 இலக்கியங்கள் குறித்த அறிமுகப் பகுதியை முதலில் கொடுத்துள்ளார். அந்தாதி, அம்மானை, உலா, கலம்பகம், குறவஞ்சி, கோவை, சதகம், திருப்பள்ளியெழுச்சி, தூது, பரணி, பள்ளு, பிள்ளைத்தமிழ், மடல், மாலை என்ற இலக்கியத்தின் அறிமுகத்தையும் இலக்கணத்தயும் ஆய்வாளர் பதிவு செய்துள்ளார். இதுவரை இவ்வகையில் வெளிவந்துள்ள நூல்கள் பற்றியும் நூலாசிரியர் பற்றியும் கொடுத்து அவர்களையும் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பை எளிமையாக்கியுள்ளமை சிறப்பு.
இதுவரை வெளிவந்துள்ள நூல்களை அகரவரிசையில் தருவதாக சிற்றிலக்கிய நூற்றொகை நூல் அமைகின்றது. ஆய்விற்கு எடுத்துக்கொண்ட 14 வகை இலக்கியங்களில் வெளிவந்துள்ள நூல் விவரச் செய்திகளை அகரவரிசையிலும் ஆண்டு அடிப்படையிலும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். அந்த வகையில் இதுவரை ஆய்வாளருக்குக் கிடைத்துள்ள நூல் எண்ணிக்கை 1,732 என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இந்நூல் உரிய கவனத்திற்குரியது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் கமலாலயன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட பதினான்கு சிற்றிலக்கியப் பெயர்களை வரிசைப்படுத்தி, அவற்றுக்கான இலக்கண விளக்கங்களை இரத்தினச் சுருக்கமாக முன்பகுதியில் தொகுத்துள்ளார். ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஆண்டுவாரியாக வெளியான நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள், அச்சிட்ட பதிப்பகங்கள், வெளியிடப்பட்ட ஆண்டு என முழு விவரங்களையும் சீரிய முறையில் தொகுத்துள்ளமை பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறார் நூல்
குழந்தைகள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் சாலையில் பயணிக்கின்ற விதிமுறைகள் குறித்து ‘பத்திரமாய்ப் போங்க’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூலைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது. இளந்தளிர் இலக்கியத் திட்டம் என்ற வகையில் அமைந்த இந்நூலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 6.1.2023 அன்று வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறு பன்னிரண்டு நூல்களை தமிழ் உலகுக்குக் கொடுத்த முனைவர் இரா. மோகனா என்பவரின் ஆய்வுப்பணியும் இலக்கியப்பணியும் கவனிக்கத்தக்கது. இவரது பணி மேலும் வளர வாழ்த்துகள். இன்னும் இலக்கியம் சார்ந்து அதிகமான புத்தகங்களை எழுதுவார் என்று நம்புகிறேன்.
துணைநூற் பட்டியல்
பயண இலக்கியம், முனைவர் இரா. மோகனா, டிசம்பர்- 2006, மெய்யப்பன், சிதம்பரம், 128
இலக்கிய இலக்கணம், – முனைவர் இரா. மோகனா, டிசம்பர் – 2008, மெய்யப்பன், சிதம்பரம், 214 (இணையருடன் சேர்ந்து எழுதியது).
நிகண்டு ஆய்வு, முனைவர் இரா. மோகனா, நவம்பர்- 2009, 204 மெய்யப்பன், சிதம்பரம், இணையருடன் சேர்ந்து எழுதியது.
தமிழ் நூல்களில் நிலையாமை, – முனைவர் இரா. மோகனா, செப்- 2010, மெய்யப்பன், சிதம்பரம், 112.
மொழிபெயர்ப்பு நூற்றொகை (1980- 2005) தொகுதி- 2, – முனைவர் இரா. மோகனா, பிப்ரவரி 2014, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, 336.
மொழிபெயர்ப்பு நூற்றொகை (2006- 2013) தொகுதி- 3, – முனைவர் இரா. மோகனா, பிப்ரவரி 2014, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, 72.
சொற்பொருள் விளக்கம் – சூடாமணி நிகண்டு, – முனைவர் இரா. மோகனா, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 288 (இணையருடன் சேர்ந்து எழுதியது.
சொற்பொருள் விளக்கம் -திவாகரம் நிகண்டு, முனைவர் இரா. மோகனா, டிசம்பர்- 2016, மெய்யப்பன், சிதம்பரம், 184 (இணையருடன் சேர்ந்து எழுதியது.
சிற்றிலக்கிய நூற்றொகை, முனைவர் இரா. மோகனா, செப்டம்பர் 2017, மெய்யப்பன், சிதம்பரம், 160 (இணையருடன் சேர்ந்து எழுதியது.
மொழிபெயர்ப்பியலும் எதிர்காலவியலும் முனைவர் இரா. மோகனா, அமேசான் கிண்டில், 10.5.2020, பக்கம்-97
ஆசிரியர்களுக்கான ஆலோசனைகள், முனைவர் இரா. மோகனா, அமேசான் கிண்டில். 13.5.2021, பக்கம்-144
‘பத்திரமாய்ப் போங்க’, முனைவர் இரா. மோகனா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 2023, பக்கம் 12