மு.பாலகிருஷ்ணன்
மயில் போட்ட கணக்கு 10 சிறார் கதைகளைக் கொண்டது. முதலில் மயில் போட்ட கணக்கைப் பார்த்து விடுவோம்…

புத்தகத்தின் தலைப்பைத் தேர்வு செய்யும் போது அதிக அக்கறையுடன் செயல்படுதல் எழுத்தாளரின் ஆளுமை.. அந்த வகையில் 10 கதைகள் இருந்தாலும்… ’மயில் போட்ட கணக்கு’ என்பதைத் தேர்வு செய்து முதல் பந்தில் சிக்சர் பறக்க விட்டிருக்கிறார் மோ. கணேசன்.
அடிமையாக்க நினைத்தால் அகப்படுவாய் என்பதைச் சொல்லும் இக்கதையில் நரிகளின் தந்திரங்களை அழகாக வெளிப்படுத்துகிறார்… ஒற்றைக்கண் நரி.. ஒரு கால் உடைந்த நரி… இரண்டும் அடிமை மயிலுக்கு…
அனைவரும் சமமானவர்களே… பொருளாதாரத்தில் குறைந்தவர்களாக இருக்கலாம், கல்வியில் குறைந்தவர்களாக இருக்கலாம், உடல்நிலையில் மற்றவர்களை விட மோசமானதாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் அனைவரும் சமம்மதானே யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்பதை இந்த மயில் போட்ட கணக்கு அற்புதமாக எடுத்துக் காட்டுகிறது… இங்கே மயில் அடிமையா? நரிகள் அடிமையா? என்ன நடந்தது யார் அடிமை ஆனார்கள் வாசியுங்களேன்.
‘மழையும் ஆடுகளும்’ என்ற இன்னொரு கதை… சிறுவர்களின் அன்பு பேரன்பு… அவர்களின் உலகில் பொறாமை… போட்டி… எதுவும் கிடையாது அன்பைத்தவிர…
ஆட்டுக்குட்டி நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்பட்டதாம் என்று சொல்லுவோமே… ஆனால் இங்கு கவலைப்படுவது .பெரியவர்கள் … அவர்களின் மத்தியில் ஆடுகள் நனையாமல் இருக்க ‘ஆட்டுக்கு கோட்’ தயாரித்த சிறுவனின் கதை இது… அருமையான கதை…
‘சண்டையா சமாதானமா’ என்றொரு கதை… விட்டுக்கொடுக்கும் பண்பும் விடாமல் காட்டும் அன்பும் ஆயிரங்காலத்துப் பயிரின் அஸ்திவாரங்கள் என்பேன் நான்…
அப்படி விட்டுக்கொடுத்து நரியும் கரடிகளும் மான்களும் குரங்குகளும் என அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாக இருப்பதை வலியுறுத்தும் கதை… இந்தக் கதையில் இவரிடம் ஒன்று சொல்லியாக வேண்டும்… இமயமலையில் பனி மூடாத மரம் ஒன்று இருக்கிறது… என்று அரிய தகவலை போகிற போக்கில் அசால்ட்டாக தருவது இவருக்கு கைவந்த கலை…
‘பாவம் கரையுமா’ என்று பகுத்தறிவு பேசும் பண்பான கதை… அழுக்கான குளத்தில் குளித்தால் பாவம் கரையாது. பாழும் நோய்கள் தான் வரும் என்று குழந்தைகளையே பேச வைத்திருக்கிறார்… சூப்பரான கதை…
அல்பினிச குறைபாட்டை ஆசிரியர் பிரதீபாவின் அக்கறையோடு நிறைசெய்து… பிரதமரிடம் விருது வாங்கும் சிறுமியின் கதைதான் ‘கேட்டால் கிடைக்கும்’ கதை… அதென்ன அல்பினிச குறைபாடு அழகாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர்… மெலனின் குறைபாட்டால் வரும் நோய்.. வெள்ளையாக இருப்பதே பேரழகு என்று நினைப்பவர்களுக்கான சாட்டையடியாய் அக்கதை அமைந்திருக்கிறது.
நம் நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப நாம் கருப்பாகத்தான் இருக்கணும் என்பதை கோடிட்டு காட்டுகிறார்.
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல ‘வாயாடித்தவளை’ கதையில் தன் குரலால் தண்டனைபெற்ற தவளையின் கதையை அருமையாக சொல்லிருக்கிறார்… பல நேரங்களில் பல இடங்களில் நாம் அனைத்தும் தெரிந்தும் பேசாமல் இருப்பதே நல்லது என்கிறார். ஆனால் வளவள என்று பேசினால் இப்படித்தான் ஆகும் என்பதை தவளையைக் கொண்டு பேசச்செய்திருக்கிறார்.
குழந்தைகள் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை ‘போராட்டம்’ கதை சொல்கிறது… அவர்கள் நினைத்தால் அணுவையும் அசைக்கலாம்.. அரசையும் அசைக்கலாம் என்பதான கதை… பெண் குழந்தைகள் என்றால் பொட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடக்க வேண்டுமா? போராட்டம் என்பது பெண்களுக்குப் பொருந்தாதா? லட்சோப லட்சம் லக்சயாக்கள் இருக்கிறார்கள். சுடரென பிரகாசிக்கும் சுடர்விழிகள் இருக்கிறார்கள். போராட்டம் என்பது பொங்கல் சாப்பிடுவது போல பெண்களுக்கு. போராடி வெற்றி பெற்ற சிறுமிகளின் கதை இது..

‘யார் கொடுத்தது’ கதையின் மூலம் சிறார் திருமணங்களுக்கு எதிராக வாளை வீசியிருக்கிறார்… யார் மூலமாமாகவாது புகார் கொடுத்து திருமணத்தைத் தடுப்பது நாமெல்லாம் பார்த்திருப்போம்.. அந்தக் குழந்தையே அதை செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை.. 1098 என்ற எண்ணை இப்படியும் அறிமுகம் செய்யலாம் என்பதற்கு உதாரணமான கதை…
‘வழிகாட்டி’ என்றொரு கதை… தாத்தா பாட்டிகள் இருக்கும் வீடுகள் சொர்க்கம். விடுமுறையின் போது தாத்தா வீட்டுக்கு செல்வதென்றால் அவ்வளவு பிரியப்படுவார்கள் குழந்தைகள்.. தாத்தாக்களுக்கும் பேரன் பிறக்கும் வரை என்னவோ மகன் மகன் என்று அடித்துக் கொண்டாலும் பேரனோ பேத்தியோ வந்து விட்டால் மகனிடம் வைத்திருக்கும் பாசத்தை அப்படியே பேரன்களிடம் பேத்திகளிடமும் மாற்றி விடுகிறார்கள்.
குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிகள் என்றால் கொள்ளைப்பிரியம், முதல் காரணம் திட்டு, அடி, ஏச்சு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இரண்டாவது அந்த காலத்துல என்று தாத்தா பாட்டிகள் ஆரம்பிக்கும் கதைகள்.. மூன்றாவது அம்மா அப்பா திட்டினால் அவர்களைத் திட்டும் ஒரே ஜீவன்கள் தாத்தா பாட்டிகளே… அந்த தாத்தாவின் மூலம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை அருமையாக அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர்.
‘குரங்கு குட்டியும் காட்டுப்பூனையும் ‘ என்றொரு கதை… பிறருக்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பாரே வள்ளுவர் அதேபோல் இந்தக்கதையைச் சொல்லி ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்’ என்று முடிக்கிறார்.
10 கதைகளும் அருமையான கதைகள்… ஒவ்வொன்றும் ஒரு ஆழமான கருத்தை நீதியை குழந்தைகளின் மனதில் பதியச் செய்யும். ஐந்தில் வளையாததது ஐம்பதிலும் வளையாது… ஆதலால் சிறுவயதிலேயே இப்படியான கதைகளை வாசிக்கும் குழந்தைகள் நிச்சயம் சமூகத்தில் சிறந்தவர்களாக வலம் வருவார்கள்… இந்த புத்தகத்தில் பெண் குழந்தைகள்தான் கதையின் நாயகிகளாக வலம் வருகிறார்கள். பெண் குழந்தைகளை போற்ற வேண்டும். சிறுவயதில் இருந்தே அவர்களிடத்தில் அனைத்து திறன்களும் பொதிந்து கிடக்கின்றன. அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடவோ, மட்டம் தட்டவோ கூடாது. ஆண்களைவிட மேலானவர்கள் பெண் குழந்தைகள் என்று இப்புத்தகத்தின் மூலம் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.
வாழ்த்துக்கள் மோ.கணேசன் சார்…இப்படியான சிறார் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிடும் பாரதி புத்தாகாலயத்தின் புக் பார் சில்ட்ரனிற்கு பேரன்புகளும் நன்றிகளும்..
