நேர்காணல்: சர்வதேச பதிப்பாளர்களுடன் ஆயிஷா இரா.நடராசன்
சென்னை சர்வதேச புத்தகத் திருவிழா ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற்றது. அதில் பங்குபெற சிறப்பு அழைப்பாளராக ‘புத்தகம் பேசுது’ இதழ் சார்பில் ஆயிஷா.இரா.நடராசன் அழைக்கப்பட்டிருந்தார். பல்வேறு அயல் இலக்கிய அறிஞர்கள், பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களை அவர் சந்தித்து திரட்டிய மூன்று முக்கிய நேர்காணல்களின் சுருக்கமான பதிவு இந்த இதழில் இடம் பெறுகிறது.
‘இடி அமீனின் சர்வாதிகாரத்தை முடித்து வைத்தது உகாண்டாவின் இலக்கிய இயக்கங்களே!’
– அகஸ்தீன் லூசிபா
(கஸ்ட்ரோ வாசிப்பு இயக்கம், உகாண்டா)
புத்தகம் பேசுகிறது: உகாண்டாவின் கம்பாலா மாநகரில் கஸ்ட்ரோ எனும் அனைவருக்குமான வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகிறீர்கள். அங்கே புத்தக வாசிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது?
அகஸ்தீன் லூசிபா: முதலில் காலனி ஆதிக்கத்திற்குக் கீழும், பிறகு இடிஅமீன் சர்வாதிகாரம் உட்பட பல அடக்குமுறைகளை சந்தித்தவர்கள் எம் மக்கள். சர்வதேச இலக்கிய இதழான ‘ரெட் ஃபேம்’ (‘Red Fame’) சமீபத்தில் உகாண்ட இலக்கியம் குறித்து ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. ரத்தம் சிதறிய இலக்கியக் காலம் என்று போராட்ட இலக்கியத்தைப் பற்றி தனிக் கட்டுரைகள் அதில் இடம் பெற்றன. உகாண்டாவின் சந்தைப் பொருளாதாரம் உலகமயமாகி – எதையும் சந்தையின் விற்பனைப் பண்டமாக்கும் பெரும் சர்வதேச சதியில் இன்று சிக்கி உள்ளது. சர்வதேசச் சந்தையின் வேலை வாய்ப்பை பெறும் கடும் போட்டி நிறைந்த ஒரு தனியார் கல்விச் சந்தை, தனியே எங்கள் நாட்டில் கொழுத்துக்கொண்டிருக்கிறது. இவற்றை ஈடுசெய்ய சாதாரண மக்கள் மத்தியில் புத்தக வாசிப்பை எடுத்துச்செல்வது சமூகப் பணியாளர்களின் கடமையாகிறது. எங்களது அமைப்பு இதனைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புத்தகம் பேசுகிறது; ஏனைய ஆப்பிரிக்க இலக்கியங்களோடு ஒப்பிடும்போது உகாண்டா இலக்கியங்கள் எந்தவிதத்தில் வேறுபடுகின்றன?
அகஸ்தீன் லூசிபா: ஆப்பிரிக்க எழுத்தாளர் வரிசை என்பது குறிப்பாக நைரோபியில் இருந்தும் இபதானில் இருந்தும் வெளிவந்த 1960களிலேயே எங்கள் (உகாண்டா) இலக்கியம் தனித்தே ஒலித்தது. இடி-அமீன் ஆட்சியைப் பிடித்த 1971ல் தொடங்கி 15 ஆண்டுகள் எமது இலக்கியம் முற்றிலும் முடக்கப்பட்டது. பலவகை உள்நாட்டு ஆயுதப் போர்களின் ஊடாக நாங்கள் மூன்று முதல் ஐந்து லட்சம் மக்களை இழந்தோம். எங்களது அவலம் தனித்துவமானது. எனவே எங்களது இலக்கியமும் அப்படியே.
புத்தகம் பேசுகிறது: தற்போது வாசிப்பை அங்கு எந்த அளவிற்குக் கொண்டுபோக முடிகிறது?
அகஸ்தீன் லூசிபா: ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலும், யுனெஸ்கோவும் இணைந்து 1990களில் உகாண்டாவின் புத்தக வெளியீட்டுத் துறையை மறுசீரமைப்பு செய்தன. பள்ளிதோறும் நூலகங்களை கட்டித்தந்திருக்கிறார்கள் உகாண்டா அரசு இ.எஸ்.ஐ.பி (Education strategic Investment Planning) எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உகாண்டாவில் பள்ளி நூலகங்களுக்குப் புத்தகம் வாங்குவதற்கு ஒரு விதியை அரசு அறிவித்துள்ளது. ஒரு மாணவருக்கு பத்து புத்தகங்கள் ஆண்டுதோறும் நூலகத்தில் வாங்கி வைக்கவேண்டும். உதாரணமாக உங்கள் பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்கள் 200 பேர் என்றால், குறைந்தபட்சம் 2,000 புத்தகங்கள் நூலகத்தில் ஒவ்வொரு வருடமும் சேர வேண்டும். இது குறைந்தபட்சம் அதிகமாக அவரவர் விருப்பப்படி வாங்கலாம். நாங்கள் பதிப்பாளர்கள் பெரும்பாலும் இதுபோன்ற அரசு சலுகைகளை நம்பித்தான் இருக்கிறோம்.
புத்தம் பேசுகிறது: உகாண்டாவின் தற்கால இலக்கிய அமைப்புகள் பற்றி சொல்லுங்கள்?
அகஸ்தீன் லூசிபா: எங்கள் நாடு எழுபது விதவிதமான மொழிகளைப்பேசும் தேசிய இனங்களின் கூட்டு. ஆங்கிலம்தான் தேசிய (இணைப்பு) மொழி. லுகாண்டா மொழி அதிகப் பயன்பாட்டில் இருப்பினும் கிட்டத்து நாடுகளான கென்யா, காங்கோ என்று ஸ்வாலி மொழியே பெரும்பான்மை கருப்பின மக்களின் மொழியாக உள்ளது. எனவே மொழிவாரியாக இலக்கிய அமைப்பு உண்டு. கடும்போட்டியும் உண்டு. பொது மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தாலும் ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு மொழி ஆதரவு அரசாக இருக்கிறது. சர்வதேச ஆப்பிரிக்க எழுத்தாளர் கூட்டமைப்பின் தலைமையகம் எங்கள் உகாண்டாவில்தான் உள்ளது. அது மாபெரும் அறிஞர் போன்னி ஓபேகா காலந்தொட்டே உள்ளது. தற்போது உகாண்டா பெண் எழுத்தாளர்கள் சங்கம் (FEMRITE) மிகப்பிரபலம். 1995ல் எழுத்தாளர் மேரி காரோரோ ஒகுரட் தோற்றுவித்தது. உகாண்டா சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் அரசு சாராத பெரிய எழுத்தாளர் அமைப்பு. கலப்பினச் சொல்லிக் கொண்டே போகலாம் ஒடுக்குமுறைக்கு எதிராக இடி-அமின் அரசை ஆட்டங்காண வைத்தது எங்கள் முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்தான்.
வாரம் இரண்டு முற்போக்கு எழுத்தாளர்களை ஆப்பிரிக்கா படைத்து வருகிறது.
பியூஸ்.பி. நக்ஸி
(தான்சானியா கல்விப் பதிப்பகம்)
புத்தகம் பேசுகிறது: உலகிலேயே பழைமையான நாடு என்று பெயர் பெற்ற ஊரில் இருந்து வருகிறீர்கள். தான்சானியாவில் பதிப்புத்துறை எப்படி இருக்கிறது?
பியூஸ்.பி.நக்ஸி: டார்வினின் பரிணாமவியலை ஆகச் சரியாக முடித்து வைத்த ஹோமோ எரக்டஸ், ஹோமோ, ஹோமோஃபேபர் போன்ற மனிதக் குரங்கிற்கும், மனிதனுக்குமான இடைநிலை உயிரி மாதிரிகள் கிடைத்த பூமி என்பதால் தான்சானியா மிகப் பழைய நாடு என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் நாங்கள் ஒரே நாடு அல்ல. பழைமை வாய்ந்த தான்கனிகா எனும் நாடும் புரட்சியின் மூலம் அராபியப் பேரரசு வீழ்த்தப்பட்ட சான்சி பார் (Zanzibar) நாடும் 1962ல் இணைக்கப்பட்டு சோசலிச டான்சானியா பிறந்தது. ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே கருப்பின அடிமை சந்தைகள் காலனித்துவம் என யாவும் அரங்கேறிய பூமி. 130 மொழிகள் பேசும் தனித்தனி தேசிய இனங்களையும் இரு தனி நாடுகளையும் ஆங்கிலேயர்கள் தங்களது சந்தை வசதிகளுக்காக ஒன்றாக வைத்திருந்தார்கள். இன்று நாங்கள்தான் சானிய மக்கள் 76 சதவிகித எழுத்தறிவு பெற்று பதிப்புத்துறையில் ஏனைய ஆப்பிரிக்க நாடுகளைவிட முன்னேறி இருக்கிறோம். சென்னை சர்வதேசப் புத்தக சந்தைக்கு வருமளவு எமது பதிப்புச் சூழல் அரசின் ஆதரவோடு இருக்கிறது. இது எனது அரசுமுறைப் பயணம்.
புத்தகம் பேசுகிறது: சிறப்பு தான்சானியா கல்விப் பதிப்பகம் குறித்து சொல்லுங்கள்.
பியூஸ்.பி. நக்ஸி: இது முழுக்க முழுக்க ஆங்கில மொழி நூல்களைப் பதிப்பிக்கும் அமைப்புதான். சானியக் கல்லூரி மாணவர்களை உலக அரங்கிற்கு அறிமுகம் செய்வதே இதன் நோக்கம். ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடுவதுதான். கல்லூரி பல்கலைக்கழக கல்வியைத் தொடர ஊக்கப்படுத்துவது அப்படி வருபவர்களை ஆய்வுத்துறை நோக்கி கவர்ந்திட மிகத் திடமான பதிப்புச் சூழல் சமூகத்தின் தேவையாகும் ஆங்கிலம் இன்று சர்வதேச மொழி எனும் அந்தஸ்தைப் பெற்று இருப்பதை குறிப்பிடத் தேவையில்லை. உங்களோடான உரையாடலையும்கூட அதுவே சாத்தியமாக்குகிறது. எனவே சர்வதேசப் பிரஜை என்பவர் ஏறக்குறைய ஆங்கிலம் பேசும் எழுதும் ஒருவராகவே இருப்பது என் அனுபவம்.
ஆங்கிலத்தில் ஆய்வு நூல்கள் உட்பட கல்விசார்ந்த பல நூல்களை ஆண்டுதோறும் நாங்கள் வெளியிட்டு வருகிறோம். இணையத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடவும், சர்வதேச ஆய்விதழ்களில் இடம் பெறவும் நாங்கள் தான்சானிய மாணவர்கள், ஆய்வாளர்கள் பேராசிரியர்களுக்கு ஒரு பாலமாக இருக்கிறோம். கடந்த இரண்டாண்டுகளாக தான்சானிய அரசு எங்களுக்கு பள்ளிக்கு இறுதி ஆண்டு பாடநூல்களைத் தயாரித்துத் தர அனுமதித்து ஒருவர் குழுவின் மூலம் அதையும் செவ்வனே செய்து வருகிறோம்.
புத்தகம் பேசுகிறது: சர்வதேச கண்டுபிடிப்பாளர் தரவரிசை (Global invention index) ஆய்வுத்திறன் மேம்பாட்டுத் தர வரிசை (Research Capablity index) என்று பலவற்றில் இந்தியாவைவிட மேம்பட்ட இடத்தில் தான்சானியா இருக்கிறது. இதற்கு ஏதாவது பிரத்யேக காரணம் உள்ளதா?
பியூஸ்.பி.நக்ஸி: அதற்கான விதைகள் 1967ல் அருஷா பிரகடனத்தின் மூலம் தூவப்பட்டன. அப்போதைய தான்சானியா ஆட்சியாளர் நைரேரே நாட்டை இடதுசாரி சோஷலிச நாடாக பிரகடனம் செய்து கல்வி, கட்டமைப்பு போன்றவற்றில் சோவியத் மற்றும் சீனாவுடன் பல ஒப்பந்தங்கள் செய்தார். 197 இடி அமீன் உகாண்டாவில் இருந்து தான்சானியாமீது படை எடுத்து வந்து படுதோல்வியை சந்தித்தது வரலாறு. அப்போது லட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்ததோடு எங்கள் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஆனால் நைரேரேவின் திடமான அடிப்படைகளை பின்வந்த ஜனநாயக அரசுகள் கைவிடாமல் அந்த அஸ்திவாரத்தில் இருந்து சிறப்பாக நாட்டை ஓரளவிற்கு கல்வி மற்றும் கட்டுமானத் துறைகளில் முன்னேற்றின. யுனெஸ்கோவின் நூறு பாரம்பரிய இடங்களை அவை ஆதிமனிதர் வாழிடங்கள் பராமரிக்கும் திட்டமும், உலக வங்கியின் கடனும் அதிகம் ஊழலற்ற முறையில் பயன்படுத்தப்பட்டதும் அந்தக் கால இடதுசாரி சிந்தனையோட்டம் இன்னமும் உயிர்ப்போடு இருப்பதால் மட்டும்தான்.
புத்தகம் பேசுகிறது: தான்சானியாவின் எழுத்தாளர் அபுதுல் ரஸாக் குர்னாஹ் 2022ஆம் ஆண்டுக்கான (இலக்கியத்திற்கான) நோபல் பரிசு பெற்றார். உங்கள் நாட்டின் இலக்கியம் பற்றி சொல்லுங்கள்.
பியூஸ்.பி. நக்ஸி: குர்னாஹ் தான் சானியாவில் பிறந்தவர். ஆனால், ஒரு பிரித்தானியப் பிரஜை ஸ்வாஹிலி மொழியின் வாய்வழி இலக்கியமாக எங்கள் வரலாறு தொடங்குகிறது. பெனியா மொஹாந்த்தோ, ஷாபன் ராபர்ட் போன்ற ஆங்கில மொழிப் படைப்பாளிகள். அனிசெட்டி கிட்டேரஸா போன்ற ஸ்வாஹிலிய மொழிப் படைப்பாளிகள் என ஓர் ஆயிரம் எழுத்தாளர்களை நாம் அடையாளம் காட்ட முடியும். மத்தியாஸ் சியாம் பவா, ஃபாதிடாங்கா போன்ற கவிஞர்கள் விம்போ எனும் தான் சானியா பிராந்தியக் கவிதைப் பாணியில் பிரபலமானவர்கள் இன்று தான்சானியா மட்டுமல்ல, ஆப்பிரிக்க இலக்கியம் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. உண்மையில் வாரம் இரண்டு முற்போக்கு எழுத்துப் படைப்பாளிகளை ஆப்பிரிக்க கண்டம் படைத்து வருகிறது.பெண்ணியப் படைப்பாளிகளுக்கு உலகளாவிய அமைப்பின் தேவையை உணர்ந்திருக்கிறோம்.
ஜூடித் ரோஸன்ஸ்விக் (பிரெஞ்சு மொழிப் பதிப்பாளர்)
புத்தகம் பேசுகிறது: எங்கள் தமிழ்மொழி குறித்து தெரியுமா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஜூடித் ரோஸன்ஸ்விக்: பிரான்ஸ் நாட்டில் கலிமாற்கு நகரிலும் பாரிசிலும் தமிழ் இலக்கிய அமைப்புகள் உள்ளன. பாரிஸ் தமிழ்ச் சமூகம் ஒரு பகுதியில் தமிழ்ப் பள்ளியை நடத்தி வருகிறது. இன்று இந்தியாவில் இருந்தும் இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் எங்கள் நாட்டில் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டின் இலக்கிய இதழ்கள் உட்பட பல படைப்புகள் இங்கு வெளிவந்த மறுநாளே அங்கே கிடைக்கும். தமிழின் இணைய செயல்பாடுகள் நவீன இலக்கிய வீச்சு பெரும் வியப்பிற்குரிய ஒன்று.
புத்தகம் பேசுகிறது: தற்போதைய பிரெஞ்சு இலக்கியக் களம் எப்படி உள்ளது… உங்களது இறந்தகால எழுச்சிப் படைப்பாக்கத்திலிருந்து இன்றைய பிரெஞ்சு இலக்கிய உலகம் துண்டாடப்பட்டுவிட்டதாக நான்சி ஹஸ்டன் போன்ற நவீனவாதிகள் விமர்சிக்கிறார்களே?
ஜூடித் ரோஸன்ஸ்விக்: இன்று பல நிஹிலியவாதிகள் உள்ளனர். பின் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாக நாங்கள் அதை ஏற்கிறோம். உலக யுத்தங்களின் காலத்தைவிட உலகமயம் அதிகப் பதட்டத்தை கொண்டுவந்துள்ளதை யாருமே மறுக்க முடியாது. சந்தை மயமாக்கலும் சர்வதேச அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசியலும் மேலும் தொடரும் சந்தைப் பொருளாதார வேலையின்மை போன்ற பிணிகளும் அவநம்பிக்கைகளாக மேலும் அந்நியமாதலுக்குத் தள்ளி உள்ளன. இமானுவேல் வஸாலிலிஸ் அலெக்ஸாகிஸ், என்னும் ஒரு வரிசை சுய கதையாடல் என ஆட்டோபிக்சன் – நோக்கி தற்காலப் பிரெஞ்சு இலக்கியத்தை எடுத்துச் சென்றார்கள். தன் வாழ்க்கை அனுபவப் பதிவுகளை அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணியில் மறுவாசிப்பு செய்யும் போக்கு 1980களில் செரீஜ் டவுப்ரோவஸ்கி மூலம் வந்தது.
புத்தகம் பேசுகிறது: இன்று பிரெஞ்சு இலக்கியத்தை ஆகச் சிறப்பான முறையில் எடுத்துச் செல்பவர்கள் பிரான்சுக்கு வெளியே வாழ்பவர்கள்தான் என சொல்கிறார்களே?
ஜூடித் ரோஸன்ஸ்விக்: பிரான்ஸின் முன்னாள் காலனித்துவ நாடுகளின் பிரெஞ்சு மொழிபேசும் புதிய தலைமுறை அதை சாதித்து வருகிறது. தாஹர்ஜெலான் மொராக்கோவைச் சேர்ந்தவர். பிரெஞ்சு எழுத்துலகில் அவர் இன்று சிறந்த படைப்புகளைத் தருபவர். அதேபோல, லெபனானின் அமீன்மாலோவ், துனிசியாவின் மெஹதி பெல்ஹஜ், அல்ஜீரியாவின் அஸியாட்ரஜ்பர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதீத தற்கால இலக்கியம் Extreme contemparain) எனும் ஓர் இலக்கிய இயக்கமே நடந்து வருகிறது. இந்தப் பத்தாண்டு கால இலக்கியப் போக்கு கார்ப்பரேட் எண்ணெய் திணிப்புகளுக்கு எதிரான மஞ்சள் எழுச்சி போன்ற இளைஞர்களின் போராட்டங்களால் எழுச்சி பெற்ற இலக்கியப் போக்கு , பிரான்ஸிஸ் பான் போன்றவர்கள் தொழில்துறைக்கும் சமூகத்திற்குமான கடும் முரண்களைப் பதிவு செய்கிறார்கள். பல மர்மக் கொலை, கெ்ாள்ளை கதையாடல்களும் கிராபிக் நாவல்களும் இன்றைய இணைய ஆக்கிரமிப்புகளை அடித்தளமாகக் கொண்டவை. மாதத்திற்கு எங்களுக்கு அச்சிடத் தேர்வு செய்யுமாறு ஒரு எண்ணூறு நூல்கள் வருகின்றன. பிரான்சில் எழுதுபவர்கள் அதிகம் அவற்றைத் தேர்வு செய்வது பெரிய சவாலான விசயமாக உள்ளது.
புத்தகம் பேசுகிறது: எவ்வளவு பிரதிகள் அச்சிடுகிறீர்கள்? வாசகர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?
ஜூடித் ரோஸன்ஸ்விக்: அது படைப்பையும் படைப்பாளியையும் பொறுத்தது. குறைந்த பட்சம் 5,000 பிரதிகள் என்பது ஒருவரையறை, ஆனால் இன்று அதற்கு இணையாக – டிஜிட்டல் பதிப்புகள் இணையவழி வாசிப்பு என்பது பிரான்ஸின் புதிய அலை. வாசிப்பு ஆப்களின் ஊடாக எங்கள் வெளியீடுகள் அதிகம் பயணிக்கின்றன.
புத்தகம் பேசுகிறது: பிரான்சில் இன்று உலகிலேயே அதிகப் பெண் எழுத்தாளர்கள் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜூடித்ரோஸன்ஸ்விக்: சைமன் போலிவாரின் இரண்டாம் பெண்ணிய அலைக்குப் பிறகு மூன்றாம் அலை பெண்ணியம் பிரான்சில் 2000ம் ஆண்டில் தொடங்குகிறது. பின் காலனித்துவ பெண்ணியத்திற்கு அது புதிய வடிவத்தைக் கொடுத்தது. இசுலாமிய அடிப்படைவாதம் உலகை அச்சுறுத்திய ஆண்டுகளில் வலதுசாரி பெண்ணியம் பிரான்ஸை ஆக்கிரமிக்க முயன்றது. புலம் பெயர்ந்த பெண்ணிய பிற்போக்கு வாதத்தை இடதுசாரிப் பெண்ணியம் சில்வி டிஸாட், எல்ஸாடோரின் எதினே பாலிபார் போன்றவர்களின் தலைமையில் மேற்கத்தியப் பெண்ணியத்தைவிட மாறுபட்ட ஆனால் தீவிரப் பெண்ணியமாக உணரப்பட்ட ஓர் இயக்கத்தின் மூலம் முறியடித்தனர்.
பாலியல் சமத்துவம் என்பது இன்றைய பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கிய அம்சம். முதன் முதலில் பிரெஞ்சு தேச அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சோசலிசவாதியான பெண் விடுதலை செயல் தலைவர் செகோலின் ராயல் சொல்வதுபோல பெண்ணியப் படைப்பாளிகளுக்கான உலகளாவிய பொது அமைப்பு ஒன்றின் தேவை இப்போது உணரப்பட்டுள்ளது.
