து.பா.பரமேஸ்வரி
அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகள், நமட்டுச் சிரிப்பு, ஏளனப் பார்வை, நையாண்டி மொழி என மூன்றாம் பாலினத்தவரை முற்றிலும் ஒதுக்கியும் இழிவுபடுத்தியும் அவமதித்துமே பழகிய அருவருப்பு மனிதர்களாக நாம் மனிதத்தை இழந்து வருகிறோம். அவர்களின் வாழ்வாதாரமே பெரும்பாடு என்றால் கழிவறை துவங்கி பொதுப் பயன்பாடுகள் அனைத்தும் நிராகரிப்பது அவமானம். ஆனால் மு.ஆனந்தன் அவர்கள் திருநர்களின் அவஸ்தைகள், உடல் மாற்றங்கள், உளக்கிளர்ச்சிகள், என அனைத்தையும் கதைக் களங்களாகக்கொண்டு 11 சிறுகதைகளைக் கொடுத்துள்ளார். ஒவ்வொன்றையும் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளார். திருநர்களின் வாழ்வியலைக் கூர்ந்து உள்வாங்கி, அவர்கள் உலகில் புதைந்து கிடக்கும் பல அரிய தகவல்களை வெளிக்கொண்டு வருகிறார். திருநங்கையர் மட்டுமல்ல, திருநம்பி, இதுவரை அறியப்படாத இடைப்பாலினம், இருபாலினம் குறித்தும் கதைகள் படைத்துள்ளார்.

மு.ஆனந்தன் அவர்களின் இந்தத் தொகுப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அனைத்துக் கதைகளிலும் நாயகிகளுக்கு கைரதி என்ற பெயரையே சூட்டியிருப்பது புதிய உத்தி. 140 ஆண்டுகளுக்குமுன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்ட கைரதி என்ற திருநங்கையின் பெயரையையே அனைத்துக் கதைப்பாத்திரங்களுக்கும் சூட்டியுள்ளதாக ஆசிரியர் தன்னுரையில் கூறுகிறார். ஒவ்வொரு கதையிலும் போராளியாக, மருத்துவராக, சமையல் விற்பன்னராக, பெண்ணின தெய்வத்தின் ரூபமாக, அமைதியின் வடிவாக, வலிமை கொண்ட மனித இரும்பாக, சாதனையாளராக, கனவுகளை உதறித்தள்ளிய இறுமாப்பு நெஞ்சகமாக ஒவ்வொரு கைரதியும் ஒவ்வொரு குணத்துடனும் ஆளுமையுடனும் ரூபப்படுகின்றனர். ஒவ்வொரு அவதாரமும் நம் ஆழ்மனதை ரணமாக்கி விடுகின்றன.
அடுத்ததாக & quot;377 பிரிவின் கீழ் கைரதி.” உண்மைச் சம்பவத்தைப் புனைவாக்கியுள்ளார்.
நீதிமன்ற வாயிலில் ஆசனவாய் வலிக்க நின்ற அந்தத் திருநங்கைக்கு இரக்கம் வழங்கப்படவேயில்லை. கைரதியின் சிறைக்கதறல்கள் இதயத்தை உறைய வைக்கிறது. இன்றும் மாளவியா காட்சிப் பிம்பங்களாய் கண்முன் நிழலாடுகிறது. அடுத்து, & quot; மாத்தாராணி கிளினிக் & quot;. காவல்துறையில் இப்படியும் ஓர் அதிகாரியா என வியந்த பாத்திரம். இரக்கமற்ற அதிகாரிகளுக்கு மத்தியில் கனிவான காவல் ஆய்வாளர் விமலா. அவருடைய முயற்சியால் கைரதியின் மருத்துவப்பணி உயிரூட்டப்படுகிறது. விமலா போன்ற நல்லுள்ளம் கொண்ட அதிகாரிகள் சமூகத்திற்கு நிச்சயம் தேவை என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. பல திருநங்கைகள் தம்மையும் தம் கற்பையும் காக்கும் பொருட்டு உயிர்த்தியாகம் செய்து, தெய்வங்களாக உருமாறிய கதைகளே பெண் குலதெய்வ வழிபாடு.
இப்படியான ஒரு தெய்வமாக மாறிய ஓலையக்காவின் வரலாற்றைப் பேசும் ” ஓலையக்கா லாக்கப்” கதை.
ஆங்கிலேயர் காலம் தொட்டு திருனர்களின் மீதான ஆதிக்கத்தையும் காவல்துறை அட்டூழியங்களைப் பற்றியும் பேசுகிறது. விண்ணப்பப் படிவங்களில் திருநர்களுக்கான இடம் மறுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான மாணவர் போராட்டத்தையும் ஒரு பல்கலைக்கழகக் களத்தில் சுட்டிக்காட்டுகிறது “இதரர்கள்” கதை. இன்டர்செக்ஸ் என்கிற இடைப்பாலினத்தவர்களின் உணர்வுச் செறிவுகளையும் அடையாளப்படுத்துகிறது. இருபால் உறுப்புகளுடன் பிறக்கும் இன்டர்செக்ஸ் குழந்தைகளின் ஆண்குறியை வெட்டிவிடுவதால் பல குழந்தைகள் இறக்கிறார்கள் என்ற உண்மை அதிர்ச்சியளிக்கிறது. & quot; கூடுதலாய் ஒரு நாப்கின் & quot; கதையில் தமக்கும் பெண்களைப் போல மாதவிடாய் ஏற்பட வேண்டும்.
நாப்கின் பயன்படுத்த வேண்டும் என்கிற திருநங்கையரின் ஏக்க உணர்வை உளவியல் வேட்கையைத் தொட்டுக்காட்டியுள்ளார் ஆசிரியர்.
மாதவிடாய் உணர்வை செயற்கையாக ஏற்படுத்தி, நாப்கின் பயன்படுத்தி மகிழ்கிறாள். இவையனைத்தும் இதுவரை சமூகம் நமக்கு போதித்த திருநங்கைகள் மீதான கற்பிதங்களை உடைத்தெறிகிறது. ” ஜாட்ளா” கதை இருட்டடிப்புச் செய்யப்பட்ட சமூகத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. அவர்களின் சமூகக் கட்டமைப்பு, சேலா, தந்தா, மடி கட்டுதல் போன்ற வாழ்க்கை நடைமுறைகள், ஜமாத், தனிப்பட்ட உலகம், அவர்களே உருவாக்கிக்கொள்ளும் நானிம்மா, குருபாய்கள் போன்ற உறவுகள், பாலுறுப்பு நீக்கமான ‘ தாயம்மா நிர்வாணம் ‘, திருநர்களுக்கான வாரியம், அரசின் உதவித்தொகை, அதிலும் 100 பிரச்சனைகள், அலைக்கழித்தல் என இதுவரை நாம் உணர்ந்தறியாத ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
இஸ்லாமிய இளம் பெண் நஸ்ரியாவிற்குள் கொப்பளித்துக்கொண்டிருக்கும் ஆண்மை உணர்வை அலசும் கதை, “நஸ்ரியா ஒரு வேஷக்காரி.” வாழ்வியல் ஒழுங்குகள் அதிகளவில் பின்பற்றப்படும் இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பின் கனத்த சுவர்களை உடைத்துக்கொண்டு இத்தனை காலம் தனக்கு ஒவ்வாத பெண்மை என்கிற போலிப் பிம்பத்தை உதறித்தள்ளி ஆண் ரூபம் எடுத்து முகம்மது நஸ்ருதீனாக வெளியேறுகிறான்.

இருபால் உணர்வுகளும் கொண்ட கைரதன்/கைரதி, கணவனாக புஷ்பலதாவுடனும் பெண்ணுணர்வு மேலோங்கும் காலத்தில் மனைவியாக வேலாயுதத்துடன் வாழ்ந்து தமது விருப்பங்களை பூர்த்தி செய்து கொள்வதைப் பேசும் கதை, இலா. புராணங்களில் புதனின் மனைவி ‘ இலா ‘ என்கிற பாத்திரத்துடன் ஒத்துப்போகும் கதையாகச் சித்தரித்துள்ளார். இது, ஆதிகாலந்தொட்டே இருபாலினர் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கான சாட்சி. அவர்களை நம் சமூகமும் ஒதுக்கிவிடாமல் கொண்டாடித்தான் வந்துள்ளன.
உணர்வுகளும் உணர்ச்சிகளும் பாலுறவின் நுண்ணுணர்வுகளும் அனைத்துப் பாலினருக்கும் உரித்தானது. பசுமை மணலின் ஈரத்தில் இரு உள்ளங்களின் பேரன்புகளை காதலாக்கிய கதை ” அழகன் என்கிற போர்க்குதிரை.” இக்கதையின் கதாபாத்திரமாக மாரிமுத்து, சாதாரண மனிதர் மத்தியில் மாரிமுத்து சமூகத்திற்கான எடுத்துக்காட்டு. திருநங்கையரின் வழிபாட்டுத் தெய்வங்களான மாத்தாராணி, போத்ராஜ் மாதா, கூத்தாண்டவர் திருவிழா, நாட்டாறு பெண் குலதெய்வ வழிபாடான ஓலையக்கா நோன்பு பற்றிய அறிமுகமும் விவரனைகளும் அருமை.
பல அரிய தகவல்கள், அறிந்திராத சம்பவங்கள், வரலாறுகள், புராணங்கள், மருத்துவம் சார்ந்த உடலியல் கூறுகள் என கற்பிதத்தின் நிலை வாசல் இத்தொகுப்பு. மாறிய பாலினரில் பாலிலி, இடைப்பாலினம் என்கிற இன்டர்செக்ஸ், இருபாலினம், திரினர் போன்ற பல வகைமைகள் இருப்பது இந்த நூலின் வழியாக அறியும் வாசகர்கள் திகைப்படையாமல் இருக்க இயலாது. ஹிஜரா, அலி, யூனக், இருனர், திரினர், அரவாணி, திரிபுனர் போன்ற மாறிய பாலினத்தவரை அடையாளப்படுத்தும் பல்வேறு சொற்களை அறிமுகம் செய்துள்ளார். “ஒம்போது” போன்ற நீச்சமான சொற்கள் மக்கள் மொழியிலிருந்து நீக்கப்பட வேண்டும். நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஆசிரியரின் தன்னுரையும் முக்கியமானது.
நாம் இதுவரை கண்டும் காணத் தவிர்த்த மூன்றாம் பாலினத்தவர்களை நோக்கி நமது பார்வையைத் திருப்புகிறது இந்த நூல். திருநர்கள் குறித்த புரிதல் ஏற்படுத்துவது மட்டுமல்ல, அவர்களின் அடிப்படைத் தேவைகளிளேனும் மாற்றத்தைக் கொணர வேண்டும் என்கிற முனைப்பு எழுகிறது. சமூக மாற்றத்திற்கான நகர்தலைத் தூண்டுகிற இலக்கியப் படைப்பை அளித்த மு.ஆனந்தன் அவர்களுக்கு மனமார்த்த வாழ்த்துகள்.