ஸ்ரீதர் மணியன்
சிறுகதைகள் நுட்பம் பொதிந்தவை. அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, அவலங்கள், மக்களின் துடிப்புகளை உள்ளடக்கியவை. வட்டார வழக்குக் கதைகள் இத்தகைய கூறுகளைக் கொண்டவை. இத்தகைய கதைகள் வழிவழியாக செவிவழக்குக் கதைகளாக அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டன. பின்னர் அவை வரிவடிவங்களாக உருப்பெற்றன. சமகால இலக்கியத் தளத்தில் இவற்றை எழுதுவோர் அருகிவருவது குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகு நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற பல பரிமாணஙக்ளைக் கடந்து இன்று ஆட்டோபிஷன் என்னும் நிலையினை எட்டியுள்ளது.
இச்சூழலில் தனது பகுதி மக்களின் வாழ்க்கையினை இருபத்து மூன்று படைப்புகளில் பதிவாக்கியுள்ளார் விஜிலா தேரிராஜன். தேரிராஜன் என்னும் பெயரே அவர் குறித்தும் அவரது கதைகள் எப்பகுதி குறித்தனவாக இருக்கும் என்பதனைத் தெளிவாக்குகிறது. இச்சொல் இன்றைய தலைமுறைக்கு பரிச்சயமானதா என்ற வினா இங்கு எழுவதும் இயல்பே.
இந்நூலில் இறுதிக் கதையாக இடம் பெற்றிருக்கும் இக்தையே முதல் கதையாகப் பேசப்படும் தகுதியைப் பெறுகிறது. இதுவரை எந்தப் படைப்பாளியும் பேசாத, பேசத் தயங்கிய கருவினைக் கொண்டுள்ளது.

ஆண்களாலும், அவர்களது உணர்வுகளாலும் இடையறாது இயங்கிக்கொண்டும், ஆளப்படும் சமூகத்தில் ஒரு பெண்ணின் அவஸ்தைகள் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகின்றன? ஒரு பெண் அதனைக் கடந்து செல்ல எத்தகைய அவலங்களை, அவமானங்களை அடைகிறாள் என்பதை ஒரு பால் சார்ந்த படைப்பாளியே அழுத்தமாக, நுட்பமாகப் பதிவிட இயலும் என்பதனை இக்கதை விளக்குகிறது. சமத்துவம், உரிமை என இனிக்கப் பேசினாலும் அவர்களுக்கான எதார்த்த நிலை என்னவாக உள்ளது என்பதும் இக்கதையில் காணக்கிடைக்கிறது.
இலவசம் சிறுகதை அரசு எந்திரத்தின் அலட்சியம், மெத்தனம் ஆகியவற்றை உணர்த்துகிறது. பொருள் படைத்தோர் எல்லா சலுகைகளையும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பெற்றுவிடுகின்றனர். எளிய சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் அதனிலிருந்து மாறுபட்டவை. புலி வாலைப் பிடித்தவன் நிலையாக அவன் சூழல் இருப்பதனை இக்கதை கூறுகிறது. இலவசம் என்று அறிவித்தாலும் தந்திரமாக இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அரசு தக்கல் என்றொரு திட்டத்தினை அறிவிப்பதும். அதனையே காரணமாகக்கொண்டு அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை பணம் கறந்து கொள்வது குறித்து இக்கதை விவரிக்கிறது. மின்சார வாரிய அலுவலகத்தில் ஒரு தருணத்தில் அதிகாரி முத்துசாமியைப் பார்த்து சிரிக்கிறார்.
அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு சிரிக்கக்கூடத் தெரியுமா என்று முத்துசாமி வியப்புறுவது அவர்கள் வாடிக்கையாளர்களான சாமானிய மக்களை எவ்வாறு எதிர்கொண்டு நடத்துகின்றனர் என்னும் அவலத்தினை இயல்பாகப் பதிவாக்குகிறது. இறுதியில் வேறு வழியின்றி கோழிகளை விற்பது வரை செல்லும் முத்துசாமிக்கும், மாசாணிக்கும் ஆழ்துளைக் கிணற்று நீர் எவ்வித மகிழ்ச்சியினையும், நிம்மதியையும் அளிப்பதில்லை என்னும் கசப்புமிக்க சொற்களுடன் இக்கதை நிறைவு பெறுகிறது.
ஆசிரியான தோழர் விஜிலா பள்ளிகளில் நிகழும் சம்பவங்கள் குறித்தும் சில கதைகளை இத்தொகுப்பில் இணைத்துள்ளார். வளரிளம் பருவம் மிகச் சிக்கலானது மட்டுமன்றி, உணர்வு பூர்வமானது. அதனைக் கடந்து செல்லும் வரை அவர்களை மிகக் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் கையாள வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கானது.
மாறிவரும் சமூகச் சூழல், ஊடகங்களின் தாக்கம், தகவல் தொழில் நுட்பத்தினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இவற்றின் விளைவால் மாணாக்கர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு அவர்களைக் திறந்த மனதுடன் தோழமையுடன் அணுகவேண்டியது அவசியமானது. இதனை எந்த அளவிற்கு கற்பிப்போர் கை கொண்டுள்ளனர் என்பது விடைகாண இயலாத வினா. ஏனெனில் பல பள்ளிகளில் அரசுப்பள்ளிகளானாலும், தனியார் கல்வி நிறுவனங்களானாலும் ஆசிரியர்கள் பலர் தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தண்டனை பெறுவதும் அனைவரும் அறிந்தது. தற்போது இதில் சிறார்கள் பயிலும் தொடக்கப்பள்ளிகளும் அடங்குவது வேதனைமிக்க அவலம். இச்சூழலில் மாணாக்கர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் என்னும் கவுன்சிலிங்கை தருவதனைக் காட்டிலும் ஆசிரியர்களுக்கு இதனை வழங்குதல் நலம் என்பதை வலியுறுத்தும் கதைகளை இத்தொகுப்பில் உள்ள சில கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.

‘இரத்தத்தின் இரத்தம்’ சிறுகதை ஆணாதிக்கம் நிரம்பிய உலகில் பெண்களுக்கான ஆசுவாநத்தினை எடுத்துக்காட்டுகிறது. பெண்கள் எத்தகைய உறவு முறையானாலும் அவர்களுக்கான வாழ்பவனுங்கள் ஒரே மாதிரியானவை என்பதும் ஆணாதிக்க மனப்பான்மை மரபாக கடத்தப்பட்டு முளைவிடுவதனை இக்கதை மெய்ப்பிக்கிறது. அதுபோலவே ‘புதைகுழி’ என்னும் கதையினையும் குறிப்பிடலாம். தன்னைச் சார்ந்தே மனைவி வாழ முடியும் என்பதும்தான் எத்தகைய நடத்தையுள்ளவனானாலும் மனைவிக்கு வேறு தீர்வில்லை என இறுமாந்திருக்கும் கணவனுக்கு தங்கம் அளிக்கும் அதிச்சி வைத்தியம் இத்தகைய கணவர்களுக்கான எச்சரிக்கையாகிறது. ‘
‘சவால்’ என்னும் கிறுகதையும் இதுபோன்றே அவலத்தினை அனுபவிக்கும் மனைவி குறித்த கதையே. பெண்கள் பணிக்குச் சென்று பொருளீட்டி சுயசார்பு பெறுவதை ஆணினம் விரும்புவதில்லை, அத்தகைய தன்னிறைவானது தங்களது இருப்பிற்கான சவாலாகவே அது கருதுகிறது. தன்னால் பொருளீட்டி குழந்தையையும் காப்பாற்றி கண்ணியமாய் வாழ இயலும். ஆனால் இதெல்லா உன்னால முடியுமான்னு யோசி? என தனது கணவனை நோக்கிக் கேட்கும் கேள்விக்கு அவன் பதிலளித்தானா? என்பது கதையில் கூறப்படாததே இதன் சிறப்பு. இதில் இன்னும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய கருத்தும் உள்ளது. ‘கண்ட நாயும் வாலாட்டும்’ என கணவன் அவளிடம் கூறுகிறான். கணவனைப் பிரிந்து வாழும் எண்ணற்ற இத்தகையோரை ஆணினம் என்ன கண்கொண்டு பார்க்கிறதென்பது இக்கதை நம்முன் வைக்கும் ஆணித்தரமான கருத்தாகிறது.
‘பட்டுமனம்’ கதையும் மனித மனதின் அடியாழத்தில் உறைந்திருக்கும் அன்பையும், கருணையையும் எடுத்துக்காட்டுகிறது. அமுதா ஒரு கதை சமகாலப் பாலியல் வக்கிரத்தின் வெளிப்பாட்டினை காட்டமாகக் கூறுகிறது. பெண் குழந்தைகள் பிறக்க ஆண் காரணம், பெண்ணல்ல என்று ஆசிரியை பாடம் நடத்தியதும் மகிழ்ச்சியுடன் தன் தாயிடம் இந்த அறிவியல் கூற்றினைக் கூறி அவளுக்கு இதமளிக்க வேண்டும் என்று அமுதா வீட்டிற்குச் செல்கிறாள். பெண் குழந்தை பெற்றெடுத்ததால் அன்றாடம் சித்திரவதைக்குள்ளாகும் தனது தாயின் நிலை அப்பிஞ்சு மனதில் எத்தகைய வடுவினை உண்டாக்கியிருக்கும் என்பது மட்டுமல்லாது, கதையின் முடிவும் வாசகனுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
கிரீஷ் காசரவள்ளி இயக்கியுள்ள ‘ஹசீனா’ என்னும் திரைப்படம் இதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம். மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான ஹசீனா மீண்டும் கருவுறுகிறாள். அவளது கணவன் சட்டவிரோமாக மருத்துவருக்குக் கையூட்டளித்து கருவின் பாலினத்தைத் தெரிந்துகொள்கிறான். அக்கருவும் பெண்தான் என்பதால், அவளைவிட்டு பிரிந்து விடுகிறான். எங்கும் அவளது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில் அவள் என்னவாகிறாள் என்பதைப் படம் கூறுகிறது. பல விருதுகள் பெற்றுள்ள குறிப்பிடப்பட வேண்டிய திரைப்படமாக மிளிர்கிறது ஹசீனா.
‘இறுதிச் சொட்டு’ என்னும் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரான தோழர் விஜிலா தேரிராஜன் ஆசிரியப்பணி நிறைவு பெற்றவர் அறிவொளி இயக்கம், அறிவியல் இயக்கம் மற்றும் த.மு.எ.க.சங்கத்திலும் பங்கு பெற்றுள்ளார். எளிய தேரிக்காட்டு மாந்தர்களின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களுடன பல கருப்பொருட்களைக்கொண்டு உருவாக்கியுள்ளார். பல கதைகள் மனதில் துடிப்பினையும், வருத்தத்தினையும் உண்டாக்குகின்றன.
அன்றாட வாழ்வின் சிறு தெறிப்புகளிலிருந்து கதைக்கான கருக்களை தோழர் விஜிலா பெற்றுள்ளது சிறப்பானது. இத்தொகுப்பினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு வளரும் படைப்பாளிகளை இனம் கண்டு வளர்த்தெடுக்கும் தனது நிலைப்பாட்டினை மற்றுமொரு முறை உறுதி செய்கிறது.