நிகழ் அய்க்கண்
‘மார்க்சிஸ்ட்’ தமிழ் மாத இதழின் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான தோழர். என். குணசேகரன் இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலினைப்பற்றி குறிப்பிடும்போது, நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக மக்களிடையே திராவிட இயக்கம் செல்வாக்கு செலுத்திவருகிறது. அந்த இயக்கம் சாதித்தவைகளை அங்கிகரிப்பதும், அத்துடன் திராவிட இயக்கம் துவக்கக் காலங்களில் முன்வைத்த இலக்குகளை ஏன் அடையவில்லை என்கிற காரணங்களை ஆராய்வதும் அவசியமானதாகும். திராவிட இயக்கங்களைச்சரியாக மதிப்பிடுவது என்பது, எதிர்காலத் தமிழகம், அடித்தட்டு மக்கள்நலன் சார்ந்து, சரியான பாதையில் பயணிக்க உதவிடும் என்கிறார்.

இந்நூலானது 1913ல் சென்னையில் துவங்கி செயல்பட்டுவந்த ‘திராவிடர் சங்கம்’ முதல் 2016 வரையிலான திராவிட இயக்கங்களின் அரசியலைப்பற்றி 52 தலைப்புக்களின்கீழ், வரலாற்று அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. அவற்றினைப்பற்றி மிகச்சுருக்கமான அறிமுகத்தினைக் காணலாம்.
ஆங்கிலேயர் ஆட்சியில், நிர்வாகம், கல்வி, மற்றும் தொழில்களில் பிராமணர்கள் தங்கள் இடத்தை நிலை நிறுத்திக்கொண்டு மற்றவர்கள் உள்ளே நுழையவிடாமல் பார்த்துக்கொண்டனர். இதனை நேரடி சாட்சியாக பிராமணல்லாதோர் கண்டனர். இதன் வெளிப்பாடாகவே, 1916ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று, ‘தென்னிந்திய நல உரிமைச்சங்கம்’ எனும் பெயரில் தனி அரசியல் கட்சி துவங்கப்பட்டது. அதுவே பின்னர் நீதிக்கட்சியாக, சுயமரியாதை சமதர்ம கட்சியாக, திராவிடர் கழகமாக உருவானது. அதனைத் தொடர்ந்து, திமுக, அதிமுக.. என வளர்ந்தும் பிளவுபட்டும் வந்துள்ளது.
நீதிக்கட்சியின் நிறைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, பெரும்பான்மை மக்களின் சமூக அரசியல் பொருளாதார உரிமைப் போராட்டம் என்பது ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். இந்தக் கோணத்தில் நீதிக்கட்சி பிராமண மேலாதிகத்திற்கெதிராக செயல்பட்டது. அதன் குறைகளாக, சாதி, மதத்தின் பெயரால் பிராமணர்கள் பிறர்மீது நிகழ்த்திய ஒடுக்குமுறை மற்றும் அவர்களினது அந்தஸ்து ஆகியவற்றினை எதிர்க்காமல், நிர்வாக அமைப்புக்களில் மட்டும் அவர்களது ஆதிக்கத்தினை அகற்றி, தங்களது பங்கினைப்பெற முயன்றது.
திராவிட இயக்கம் தன்னைப் பலவகையில் அடையாளப்படுத்தி வந்துள்ளது. அது, பகுத்தறிவுக்கான பாசறை, சமூகநீதி, பிற்பட்டோருக்கான இயக்கம், பெண் விடுதலை, தமிழுக்காக உயிர்கொடுக்கும் இயக்கம் என அடையாளப்படுத்தி வந்துள்ளது. இந்த அடையாளங்களையெல்லாம் வெறும் முழக்கங்களாக மட்டும் வைத்துக்கொள்ளாமல், வெகுமக்களையும் தனது செல்வாக்குத்தளத்திற்குள் கொண்டுவந்தது.
கல்வி – வேலைவாய்ப்புக்களில் பிராமணர்கள் அன்று ஆதிக்கம் செலுத்தியதனை, சமஸ்கிருத ஆதிக்கமாகவும் பார்க்கப்பட்டது. இது, ஆரிய – திராவிட இன முரண்பாடாகச் சித்தரிக்கப்பட்டது. இச்சர்ச்சையானது தமிழின உணர்வை வளர்த்தது. நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றழைக்கப்பட்ட இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள்கூட, தேசிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற உணர்வுடன் அடையாளப்படுத்தப்பட்டனர். இதனால் மக்கள் ஆதரவு நீதிக்கட்சிக்கு கிடைத்தது.
பிராமணல்லாதோர் கருத்தாக்கத்தின் பின்னணி பற்றிக் கூறும்போது, மன்னராட்சியின்கீழ் கோயில்கள் பிராமணர்களின் அதிகார மையமாக விளங்கியது. நிலங்களும், பல கிராமங்களும் பிராமணர்களின் உடைமையாக இருந்தன.
நில வருவாய், கோயில் காணிக்கை அனைத்தையும் பிராமணர்களே அனுபவித்தனர். மடங்களும் கோயில்களும் பிராமணக் கருத்துக்களைப் பரப்பிடும் மையங்களாகத் திகழ்ந்தன. இந்த நிலை இயல்பாகவே பிராமண மேலாதிக்கத்தின்மீது எதிர்ப்புணர்வு எழுவதற்கு களம் அமைத்திருந்தது. இந்தப் பின்னணியில்தான் பிராமணர்களை ஆரிய இனம் என்று அடையாளப்படுத்திப் பார்க்கும் பார்வையும், பிராமணர் அல்லாதோரை திராவிடர்கள் என அடையாளப்படுத்திப் பார்க்கும் கருத்தாக்கங்களும் வளரத் துவங்கின.
நீதிக்கட்சி என்ன சாதித்தது என பார்க்கும்போது, பிராமணல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு நிறைவேற்றிக்கொண்டனர். இதுதவிர, தேவதாசிமுறை ஒழிப்பு, பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆவதற்கு வழிவகை செய்தது, கல்வியில் சில முற்போக்கு அம்சங்களை அமல்படுத்தியது ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.
பிரிட்டிஷ் ஆட்சி ஒரு கிரிமினல் ஆட்சி எனும் பகுதியில், நீதிக்கட்சி செல்வாக்கு இழந்ததற்கு காரணமாக, மக்களிடையே வேகமாகப் பரவி வந்த விடுதலை உணர்வும், மக்கள்மீது, ஆங்கிலேய அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சியினர் ஆதரித்ததுமே என்கிறார்.
சுயமரியாதை இயக்கம் எவ்வாறு வளர்ந்தது எனக்கூறும்போது, அன்றையத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கல்கள் பன்முகத்தன்மை கொண்டவை. பொருளியல், சாதி, மதம், இனம், மொழி எனப் பலவற்றை உள்ளடக்கி எழுந்த முரண்களின் களமாக இருந்த தமிழகத்தினை சுயமரியாதை இயக்கம் எதிர்கொண்டது. 1925ல் உருவான சுயமரியாதைக் கொள்கைகளின்படி, ஒவ்வொரு மனிதரும் தன்மானத்தோடு வாழவேண்டும்; எந்தக் காரியமானாலும் காரியம் அறிந்து செய்யவேண்டும் என்ற பகுத்தறியும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. ஆண்- பெண் சமத்துவம், சமத்துவம், சாதி, மதம், வர்ணம் வேறுபாடுகளை களைந்தெறியப்பட வேண்டுமெனவும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற பிரச்சாரங்கள் பிராமணக் கருத்தாக்கங்களுக்கு எதிரான தாக்குதலாக அமைந்தது.
சுயமரியாதையும், இடதுகருத்தியலும் என்கிற பகுதியில் கூறும்போது, ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய இரண்டிலும் ஒருங்கிணைந்த பார்வையுடன் கம்யூனிஸ்டுகள் இயங்கினர். ஆனால், அவர்கள்மீது ஆங்கிலேய ஆட்சி கடும் அடக்குமுறையை மேற்கொண்டது. இதுபோன்ற காரணங்களால், கம்யூனிஸ்டுகள் வெகுமக்கள் இயக்கமாக வளர இயலவில்லை. உண்மையில் சுயமரியாதை இயக்கம் எழுப்பிய அனைத்து சீர்திருத்தக் கொள்கைகளும் இடதுசாரி இயக்கங்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கின்றன.
சோசலிஸம், சமூகச் சீர்திருத்தம் – கருத்தியல் கூட்டணி பகுதியில் கூறும்போது, நீதிக்கட்சிக் காலத்திலிருந்து பிராமணிய மேலாதிக்க எதிர்ப்புடன் வளர்ந்த திராவிட இயக்கம் அதன் சுயமரியாதைக் கட்டத்தில் ஒரு முக்கிய திருப்பத்தினைக் கண்டது. சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண் விடுதலை போன்ற இலட்சியங்களோடு மற்றொரு பரந்தநோக்கு சேர்ந்தது. அதாவது, சோசலிச எதிர்காலப் பார்வை கலந்த சமூக சீர்திருத்தக் கருத்தியலானது திராவிட இயக்க வரலாற்றில் இடம்பெற்றது. இந்த இணைப்பு மார்க்சியச் சிந்தனையாளர் சிங்காரவேலர் வாயிலாக நிகழ்ந்தது.
தமிழகத்தின் இழப்பு எனும் பகுதியில் கூறும்போது, தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் சமதர்மப் பாதையில் நடைபோட்ட காலங்களில் அதற்கான நம்பிக்கை துளிர்விட்டது. பெரியார் இத்தருணத்தில், சோசலிச இலட்சியத்தைக் கைவிடுவது என்கிற நிலை எடுத்தபிறகு, நேரேதிரான திருப்பம் ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் தேய்ந்துபோகும் நிலையும், வீழ்ந்துகிடந்த நீதிக்கட்சி புத்துயிர்பெற்று மீண்டும் வளர்ச்சி காணும் சூழல் ஏற்பட்டது. அதாவது, அரசியல் துறையிலும், சமூகப்பொருளாதாரத் துறையிலும், முற்போக்கான, உழைக்கும் மக்களுக்கான வேலைத் திட்டம் இல்லாமல், சமூகச் சீர்திருத்தம் இலட்சியம் என்ற தடத்தில், அன்றையத் திராவிட இயக்கம் செல்லத் துவங்கியது. இது ஒரு முக்கியமான சறுக்கலாகும்.
மொழிக்கிளர்ச்சி அரசியல் எனும் தலைப்பில் கூறும்போது, 1937 முதல் 1940 வரை நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழக அரசியலில் அன்றும், அதன்பிறகும் மிக முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியை ஆராயும்போது, பிராமணியக் கருத்தியல், சமஸ்கிருதமொழி, இந்துமத மேலாதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும் வெளிப்பாடாகவே இந்தித் திணிப்பு எதிர்ப்பு அமைந்தது.
மக்கள் கிளர்ச்சி: பலன் என்ன எனும் பகுதியில் கூறும்போது, 1937ல் ராஜாஜி பிறப்பித்த இந்தி மொழித்திணிப்பு ஆணையை, அந்த அரசு பதவி விலகிய பிறகு, 1940ல் ஆங்கிலேய அரசாங்கம் ரத்து செய்தது. மக்கள் நலன் மற்றும் உரிமைப் போராட்டங்களுடன், 1960 வரை நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களையும் திராவிட இயக்கத்தினர் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். அதுவே 1967 ல் திமுக ஆட்சிக்குவர வழிவகுத்தது.
மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம் எனும் பகுதியில் கூறும்போது, அரசியல் தளத்தில் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை, சமூகத் தளத்தில், சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை என்ற இரண்டு தேவைகள் அன்றைய சென்னை மாகாண அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு இருந்தன. நாட்டு விடுதலை பேசிய காங்கிரஸ் சமூக விடுதலையை கண்டுகொள்ளவில்லை. சமூகச் சீர்திருத்தம் பேசிய பிராமணல்லாதவர் இயக்கம் நாட்டு விடுதலைப் பற்றி கவலை கொள்ளவில்லை.
இந்நிலையில் இரண்டையும் முன்னெடுத்துச்சென்ற கம்யூனிச இயக்கமும் ஆங்கிலேயர் அடக்குமுறை காரணமாக அமைப்புரீதியாக வளர்ச்சிபெற முடியவில்லை. இதற்கிடையே, பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன்பிறகு அவ்வியக்கத்திற்கு ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்கழகமானது பிராமணியக் கருத்தியலுக்கு எதிராக, திராவிடக் கருத்தியலை முன்வைத்தது. இதில் தமிழ் மொழி, தமிழின மேன்மை, தொன்மை முன்வைக்கப்பட்டன. இந்தி, சமஸ்கிருதம், ஆரியம் அனைத்தும் திராவிடத்தின்மீது பிராமணியம் தொடுக்கும் தாக்குதல்களாக விமர்சிக்கப்பட்டது.
திராவிட நாடு கோரிக்கை: தோற்றமும் மறைவும் எனும் தலைப்பில் கூறும்போது, 1940 முதல் 1960 வரையில் இந்தித் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து எழுந்த போராட்டம் தீவிரமாகிய நிலையில், திராவிட நாடு கோரிக்கை எழுப்பப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் அமைய கம்யூனிஸ்டுகளும் இதர சக்திகளும் தீவிரமானப் போராட்டங்களை நடத்தினர். இதனால், 1956ல் மாநிலங்களை மறுசீரமைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபிறகு, திராவிட நாடு கோரிக்கை வலுவிழந்தது.
திராவிடர் கழகத்தில் பிளவு பற்றிக் கூறும்போது, பெரியாரோடு திமுக முரண்பட்ட காரணங்களாக, ஒன்று, சமூகப் பணியைத் தொடர தேர்தல் அரசியல் தடையாக இருக்கும் என பெரியார் கருதியதால் ஏற்பட்டது. இரண்டு, ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவான பெரியாரின் நிலைப்பாடு விடுதலை உணர்வுக்கு மாறானது எனக் கருதியது. மூன்று, பெரியார் மணியம்மையை திருமணம் செய்துகொண்டது. நான்கு, திராவிட நாடு கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்காதது ஒருபக்கமிருக்க, இன்னொரு பக்கம், காங்கிரஸானது, பிராமண ஆதிக்கத்தின் கட்சியாக விளங்குவதையும் ஆதலால், காங்கிரஸ் கையில் நாடு செல்வதையும் பெரியார் விரும்பவில்லை. இதனையொட்டியே, பெரியார் 1947 ஆகஸ்டு 15 விடுதலை தினத்தை கறுப்புதினமாக அனுசரிக்க அறைகூவல் விடுத்தது ஆகியவற்றினைக் கூறிடலாம்.
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுகவானது, தேர்தல் அரசியலை முன்னெடுத்தது மட்டுமல்லாது, கருத்துநிலைகளில் பல சமரசங்களையும் செய்துகொண்டது. ஆட்சி அதிகாரத்தினைப்பெறும் நோக்கில் மொழி, இனப்பிரச்சினைகளைக் கையிலெடுத்து, கிளர்ச்சியரசியல், பேச்சு – எழுத்து வழியாக கருத்தியல் பிரச்சாரம், கூட்டங்களின் மூலம் மக்களைச்சந்தித்தனர். 1967ல் ஆட்சியைக்கைப் பற்றி, அண்ணா முதலமைச்சரானதும் தமிழ்நாடு எனப் பெயர்மாற்றம், சீர்திருத்த திருமணச் சட்டம், மும்மொழித் திட்டத்திற்குப் பதிலாக இருமொழித் திட்டம், உலகத்தமிழர் மாநாடு ஆகியவற்றினை நடத்தினார்.
அண்ணா இறந்தபிறகு, கருணாநிதி முதலமைச்சரானதும், அண்ணாவின் பாதையைப் பின்தொடர்ந்தார். சமூகநலத் திட்டங்கள், மொழி, இனம், இட ஒதுக்கீடு சார்ந்து செயல்பட்டார். அதன்பின்னர், அஇஅதிமுகவின் எம் ஜிஆர் முதலமைச்சரானதும் சத்துணவு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களில் கவனஞ்செலுத்தினார். எம்ஜிஆர் மறைவுக்குப்பிறகு ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆரின் நடைமுறைகளைப் பின்பற்றியே ஆட்சி நடத்தினார். இருப்பினும், ஒருபக்கம் ஊழல் மலிந்தது போக, இன்னொருபக்கம் மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், அயோத்தி இராமர் கோயிலுக்கு கரசேவை செய்வதை ஆதரித்தும் பேசினார்.
திராவிட இயக்கம் தொடக்கக் காலங்களில் முன்வைத்த பல கொள்கைகளில் அஇஅதிமுக தெளிவற்ற பார்வை கொண்டிருந்தது. திராவிடக் கருத்தியலின் அங்கங்களான பிராமணிய எதிர்ப்பு, நாத்திகம், சாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் போன்ற சித்தாத்தங்கள் சார்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அஇஅதிமுக நேரெதிரானப் போக்கையே கடைபிடித்தது.
நவதாராளமயக் கொள்கையினை திராவிடக்கழகங்கள் ஆதரித்துச் செயல்பட்டதின் விளைவாக, சமத்துவமின்மைக்கும், தொழிலாளர் விரோதப்போக்குகளுக்கு துணை நிற்பதையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.. இதுதவிர, கூட்டணி அரசியல், இலங்கைப் பிரச்சினை, எம்ஜிஆரின் பிம்ப அரசியல், கவர்னர்களின் செயல்பாடுகள் பற்றியும் இன்ன பிற குறித்தும் பேசப்படுகிறது.
பக்கங்களின் விரிவஞ்சி 1949 – 2016 காலகட்டங்களின் அரசியல் நிகழ்வு பற்றி விரிவாகப் பதிவு செய்திட முடியாதது சற்று வருத்தமே.
