எஸ்.வி. ராஜதுரை
தற்பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் உறுப்பினராக உள்ள, ஜி.ஆர். என்று அன்போடு அழைக்கப்படுகின்ற தோழர் ஜி. ராமகிருஷ்ணன், கடந்த சில ஆண்டுகளாக ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற பொதுத் தலைப்பில் எழுதிவருகின்ற கட்டுரைகளின் மூன்றாவது பாகமே ‘பொதுவுடைமை இயக்கத்தில் பூத்த மலர்கள்’.

இத்தொகுப்பில் 59 கட்டுரைகள் என வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏழு கட்டுரைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன (30ஆம் கட்டுரையில் இரண்டு தோழர்கள்’ 31இல் இரண்டு தோழர்கள்; 39இல் 3 தோழர்கள், 42இல் 2 தோழர்கள், 47இல் 2 தோழர்கள், 49இல் 2 தோழர்கள், 56இல் 2 தோழர்கள்). ஆக மொத்தம் 68 தோழர்கள் பற்றிய குறிப்புகள் இத்தொகுப்பில் உள்ளன எனக் கொள்ளலாம்.
இவர்களில் 39 தோழர்கள் பத்தாம் வகுப்புக்கும் அதற்கும் குறைவான அளவிலும் படித்தவர்கள்; பெரும்பாலோர் 7ஆம் வகுப்புக்குக் கீழேயே படிப்பைத் தொடர முடியாதவர்கள்; எழுத்தறிவே இல்லாத நிலையில் கட்சித் தோழர்களாகியவர்கள் மூவர். அவர்களின் ஒருவர் பெண் தோழர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர்கள் 8 தோழர்கள். மெட்ரிகுலேஷன் படிப்பை முடிக்காதவர் ஒரு தோழர்.இண்டர்மீடியட் வரை படித்துள்ளவர் ஒரு தோழர். பட்டயப் படிப்பு படித்த தோழர்கள் மூவர். பட்டதாரித் தோழர்கள் எழுவர். மேற்சொன்ன தோழர்களில் இத்தொகுப்புக்கான கட்டுரைகள் எழுதப்பட்டு வந்த காலத்தில் ஏற்கெனவே இயற்கை எய்தியவர்கள் இருவர். இவர்களில் ஒருவரான தோழர் ராமய்யாவுக்கு என்று தனிக் கட்டுரை இல்லாவிட்டாலும் சில கட்டுரைகளில் அவர் குறிப்பிடப்படுகிறார். மிக அண்மையில் தோழர் சிவசாமியும் தோழர் ‘ஜூடோ’ இரத்தினமும் காலமாகிவிட்டனர். அமைப்புக்குள்ளக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் எனப் பல வகைத் தொழிலாளர்களாகவும் இருப்பவர்கள் பதினைந்து தோழர்கள். இவர்களில் ஒருவர் ஒரு ஜவுளிக்கடையில் விற்பனை ஊழியராகவும், இன்னொருவர் ரப்பர் தோட்டத்தொழிலாளியாக இருந்து சூப்பர்வைசர் பதவி உயர்வு பெற்றவராகவும் இருந்திருக்கின்றனர்.
பண்ணையடிமையாக இருந்து பண்ணையடிமை முறையையே வெற்றிகரமாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகியவர் ஒரு தோழர்.தாழ்த்தப்பட்ட (தலித்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் மூவர். ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் எனக் கொள்ளப்படக்கூடியவர்கள் 11 தோழர்கள். இவர்களில் பெரும்பாலோர் பிறக்கும்போது மட்டுமே நிலம் சொந்தமாக வைத்திருந்தவர்களின் மக்கள். பலர் நிலத்தை இழந்தவர்கள். ஒருவர், கட்சி செலவுக்காக தன் நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டவர். இன்னொருவர், தலித் குடியிருப்புகளுக்காக ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கியவர். ஒரே ஒரு தோழர் மட்டுமே பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்த பட்டதாரி.டி.வி.எஸ். நிறுவனத்தில் நல்ல ஊதியம் தரும் கணக்காயர் வேலையைத் தொழிற்சங்கப் பணிகளுக்காகத் தயங்காமல் துறந்து டெல்லியில் பணியாற்றச் சென்றவர்.
பதினோரு தோழர்கள் சிறு தொழில் நடத்தி வந்தவர்கள் (மண்பாண்டத் தொழில், அச்சுக்கூடம் போன்றவை). இருவர் முறுக்கு விற்பனை, மளிகைக் கடை போன்றவற்றை நடத்தி வந்த குறு வணிகர்கள். ஒருவர் ஃபோர்ஜிங் தொழிலில் கூட்டுப் பங்காளியாக இருந்தவர். அரசாங்க அலுவலகங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிந்தவர்கள் 15 பேர் (இவர்களில் ஒருவர், ரயில்வேயில் கார்பெண்டராகவும் இன்னொருவர், தினக்கூலிக்கு வேலைசெய்யும் தையல் தொழிலாளியாகவும் இருந்தவர்).
இவர்கள் அனைவருமே கட்சிக்குள் வந்த பிறகு வர்க்கத்தன்மையையும் சாதித்தன்மையையும் முற்றாக அழித்துக்கொண்ட தோழர்கள். அதுமட்டுமின்றி, தங்கள் துறையைச் சேர்ந்த ஊழியர்களையும் தொழிலாளர்களையும் தொழிற்சங்க அமைப்புக்குள் கொண்டு வந்ததுடன் பல்வேறு தொழிலாளர்கள் நடத்திய வர்க்கப் போராட்டங்களுக்குப் பல வகையில் ஒருமைப்பட்டைத் தெரிவித்ததுடன் நிற்காது உறுதுணை புரிந்தவர்கள். ஒரே ஒரு தோழர் மட்டுமே சனாதன தர்மக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் சிறப்புமிகு சமதர்மவாதியாய்த் திகழந்தவர்.
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள மறுத்தவர் ஒரு தோழர். ஆலைத் தொழிலாளிகளாக இருந்தவர்கள் (இஞ்சினீயரியங் தொழிற்சாலைகள் உட்பட) பத்தொன்பது தோழர்கள் (காலஞ்சென்ற தோழர் ராமய்யா உட்பட). பெண் தோழர்கள் எழுவர் (தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் காந்தியின் பேத்தி இலா காந்தி உட்பட) இவர்களில் தோழர் ராஜலட்சுமி எழுத்தறிவு பெறாதவர்). இவர்கள் தவிர பல பெண்கள் இக்கட்டுரைத் தொகுப்பில் ஆங்காங்கே குறிப்பிடப்படுகின்றனர். எழுத்தாளர்களாகவும் மொழிபெயர்ப்பாளர்களாகவும் சிறந்து விளங்கிய/விளங்கும் தோழர்கள் மூவர். மற்ற தோழர்கள் பலரும் கலை இலக்கியத் தொண்டாற்றியவர்களாகவும் கலைஞர்களாகவும் பாடகர்களாகவும் நாட்டார் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உடற்பயிற்சியாளராகவும் இருந்திருக்கின்றனர்/ இருக்கின்றனர்.இப்படி நான் கணக்கிட்டு வகைப்படுத்துவது கிட்டத்தட்ட சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முதலாளிகளின் குண்டர் படைகளாலும் ஆர்.எஸ்.எஸ்.பாசிஸ்டுகளாலும் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளனர். கூடவே ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியிலும் தலைசிறந்த விளங்கிய, மறைந்த தோழர்களும் பல இடங்களில் நினவுகூரப்படுகின்றனர். எனக்கு வியப்புத் தரும் வகையில் புதிய செய்திகளாய், மகிழ்ச்சியூட்டுவனவாய் இருப்பவை மூன்று: 1. தன்னடக்கத்தின் உருப்பிழம்பாய் இருந்து எண்ணற்ற மார்க்ஸிய நூல்களையும் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களையும் பற்றிய நூல்களையும் எழுதியுள்ள தோழர் என்.ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வாழும் மூத்த தலைவர்களிலொருவரான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் இளவல்; 2.என் அபிமானத்துக்குரியவர்காக இருந்த திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவரான ஜூடோ ரத்தினம் மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர். (3) அதேபோல என் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் பிரியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சுப்பையா நாயுடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்தவர்.

பல கட்டுரைகளில் தோழர் எஸ்.ஏ.பி. அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. இத்தொகுப்பில் குறிப்பிடப்படும் ஆலைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் எல்லோரையும் என் பேராசான்கள் என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது கம்யூனிச அர்ப்பணிப்பும், போராட்டக் குணமும், அனுபவ அறிவும் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரைகளில் குற்ப்பிடப்படும் தோழர்கள் ஆற்றிய அரும்பணிகளை விவரிக்க ஒரு நூலையே எழுத வேண்டும்: இந்தத் தோழர்கள் கட்சிப் பணிகள், தொழிற்சங்கப் பணிகள், விவசாய சங்கப் பணிகள், அரசு மற்றும் பொதுத்துறைத் தொழிலாளர்களின் பணிகள் ஆகியவற்றை மட்டுமே செய்திருக்கிறார்களா? இல்லை.
முதலாளிகளின் தனிக்கூலிப் படைகளும் அரசாங்க ஒத்துழைப்பும் சேர்ந்து தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், பிற உழைக்கும் மக்கள் ஆகியோர்மீது நடத்திய தாக்குதல்களைத் தங்களின் உயிரைப் பணயம் வைத்து முறியடித்ததுடன் அவர்களது உரிமைகளைப் பெற்றுத்தருதலுடன் அவர்களின் பணி நின்று விட்டதா? இல்லை. தலித் மக்களின் ஆலய நுழைவு உரிமை, தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகள், தலித்துகளுக்கும் பிற ஏழை உழைக்கும் மக்களுக்கும் நில விநியோகம், வீட்டுமனைப் பட்டாக்களையும் அவர்களின் அனுபோகத்தில் இருந்த நிலங்களுக்கான பட்டாக்களையும் வாங்கிக் கொடுத்தல், தலித்துகளுக்கு மயானம் அமைத்தல், அனைத்து சாதியினருக்கும் பொதுவான மயானங்கள் உருவாக்குதல்,மின்விளக்கு, சாலைகள் போன்ற அகக்கட்டுமானங்களை உருவாக்குதல், கழிப்பறைகள் – குறிப்பாகப் பெண்களுக்கான கழிப்பறைகள்- கட்டித் தருதல்.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பாசிசக் குண்டர்களின் தாக்குதலை தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தல், பொது வினியோக முறை சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துதல், ரேஷன் கடை இல்லாத இடங்களில் ரேஷன் கடைகளை அமைத்துத் தருதல், நீர்ப்பாசனம் உரிய முறையில் கிடைக்காது தவிக்கும் விவசாயிகளுக்குப் பாசன வசதிகளைப் போராடிப் பெற்றுத் தருதல், முஸ்லிம் சகோதரர்களைப் பாதுகாத்தல், மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கும் மக்களிடையே அறிவியல் அறிவொளியைக் கொண்டு செல்லுதல், சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று எளிய மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுதல், நச்சுக் கலாசாரம் பரவியிருக்கும் இருள் சூழ்ந்த இந்த நாட்களில் புரட்சிகர கலை இலக்கியங்களை மக்களிடம் கொண்டுவருதல், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் விசைப்படகு மீனவர்களுக்குமிடையே உள்ள பூசல்களைத் தீர்த்து வைத்தல், துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காக மட்டுமின்றி, அவர்களது மானுட கெளரவத்துக்காகவும் போராடுதல், தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டப் போராடுதல், பெரும் வெள்ளமொன்றால் அடித்துச் செல்லப்பட்ட அக்குழந்தைத் தொழிலாளர்கள் சிலரின் உடல்களை மீட்டுத் தருதல்.
கலைஞர் மு.கருணாதியின் சமத்துவபுரம் திட்டம் நடைமுறைக்கு வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தலித்துகளும் தலித் அல்லாத பிற்படுத்தப்ப்ட்ட மக்களும் ஒரே இடத்தில் வாழ்வதைச் சாத்தியமாக்குதல், சாதி, மத மறுப்புத் திருமணங்களை நடத்துதல், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்ற பழைய கருத்தை முறியடிக்கும் வகையில் கணவரை இழந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுதல், பிறப்பால் இஸ்லாமியரான ஒர் கட்சித் தோழரை இந்து மக்கள் வழிபடும் பிள்ளையார் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பொதுமக்களே மனம் விரும்பி ஒப்படைக்கச் செய்தல் எனக் கட்சி சாராது அனைத்து மக்களுக்கும் பொதுவான பணிகளை, வாக்கு வங்கியைப் பெருக்கும் எண்ணம் கடுகளவுகூட இல்லாமல் செய்து வருதல் – இவை போன்ற எத்தனையோ மக்கள் பணிகளை ஆற்றிய, ஆற்றி வரும் தோழர்களில் எவரைக் குறிப்பிட்டுச் சொல்வது, எவரைக் குறிப்பிடாமல் இருப்பது? இததோழர்களனைவருக்கும் பொதுவானது கம்யூனிச சமுதாயம் நோக்கிய தியாகப் பயணம் என்று சொல்வதை மட்டுமே என்னால் இப்போது செய்ய முடியும்.
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றுக்கான சரியான பாதை அடையாள அரசியல் அல்ல, தலித் மக்களையும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களையும் வர்க்க உணர்வு பெற்றவர்களாக ஆக்கி, அவர்களை ஒன்றிணைத்து செயல்பட வைப்பதுதான் என்று தோழர்
ஜி.ஆர்., இந்த நூலில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். கீழைத் தஞ்சையில் பெற்ற அந்த அனுபவத்தை தமிழ்நாடு முழுவதற்கும் எடுத்துச்செல்கிறது இன்று சிபிஎம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. அதே பாதையில்தான் சிபிஐ கட்சியின் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கமும் பாசிச எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டுவதில் முனைப்பாக உள்ளதும் சிபிஎம், சிபிஐ கட்சிகளுடன் நல்லுறவை வளர்க்க விரும்புவதுமான சிபிஐ எம்-எல் லிபரேஷன் கட்சியும் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளன. இந்த இரு கட்சிகளும்கூட கீழைத்தஞ்சைப் போராட்ட மரபுக்குரியவர்கள்தான்.
சிறு குறைகள் இதில் தென்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தோழர் ஜி.ஆர்.,இத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் எழுதியதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகே அவை ஒரு தொகுப்பாக இப்போது வெளிவந்துள்ளன. எனவே அதற்கேற்றாற்போல் அவர் நேர்கண்ட தோழர்களின் வயது விவரங்களும் மாற்றப்பட்டிருக்க வேண்டும்; இரண்டாவதாக, தோழர் டி.செல்வராஜ் இயற்கை எய்தி இரண்டாண்டுகள் ஆகின்றன. இதுபோன்று நூலில் இடம்பெற்ற தோழர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் அந்த விபரங்களையும் நூலில் கொடுக்க வேண்டும்.
இந்த நூலில் பெரும்பாலான கட்டுரைகள் ‘பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது’ என்ற வரிகளுடன் முடிவடைகின்றன. இது தோழர் ஜி.ஆர். எழுதியுள்ள இந்த நூலுக்கும் பொருந்தும்.