வெ. ரேவதி
“நான் பிறக்கும்போது, நானும் ஒரு பெண் குழந்தை என்பதால், எங்கள் வீட்டு மாட்டுக் கொட்டகையில் எங்க வீட்டுப் பசு மாடு ஈன்ற பெண் கன்றுக் குட்டிக்கு இருந்த மதிப்பு, மரியாதை கூட ,பெண்ணாய்ப் பிறந்த எனக்கில்லை.”

இரா. தட்சணாமூர்த்தியின் “அன்புள்ள மகளே அம்மாவின் கடிதங்கள்” எனும் இக்குறுநாவலினை அறிமுகம் செய்ய இவ்வரிகளை முதலில் எழுதித்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மனிதன் பிறப்பெடுத்த காலத்திலேயே பெண் அடிமைத்தனம் இருந்திருக்கும்போல. அதான் இன்றைய காலம் வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
பல்வேறு அறிஞர்கள் போராடினாலும் ஆண்களை அதிகாரப் படுத்தியும் பெண்களை அடிமைப்படுத்தியும் ஆண்களை மகிழ்விப்பதற்காகவே பெண்கள் படைக்கப்பட்டதாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. இதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பெண்களாக இருந்தால் அவர்கள் இந்தப் பூமியில் பிறந்ததே தவறு என்று நினைக்கும் வகையில் அடிமைப்படுத்துகின்றனர். இந்த அடிமைகளிலிருந்து நீங்குவதற்கு ஒரு முக்கிய ஆயுதமாக இருப்பது கல்வி. நன்றாகப் படித்து முடித்து உயர்ந்த வேலையில் சென்று அமரும்போது எவ்வித சாதியும் அங்கு பேசப்படப்போவதில்லை. இக்குறுநாவலின் ஆசிரியர் பெண்ணின் பிறப்பு, படிப்பு, பெண்கள் வளரும் நிலை, பெண்களின் கோலம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுச் செய்திகளையும் அறிவியல் பூர்வமாகவும் இந்நூலினை எழுதியுள்ளார்.
ஆண், பெண் இருவருக்கும் திருமணமாகி முதலில் பிறக்கும் தளச்சம்பிள்ளை ஆணாக இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு. பெண் குழந்தை பிறந்தால்” ”பொட்ட பிள்ளை” பிறந்திருச்சு. செலவு மட்டும்தான் இருக்கும் என்று பச்சிளம் குழந்தையாக இருக்கும்போதே கள்ளிப்பால் கொடுத்து கொன்ற பழக்கமும் நம் முன் இருந்து வந்தது. அதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் சேர்ந்து வாழும் சேரியில் பிறந்த பெண்களின் நிலை என்பது மிகவும் கொடுமையானதாகும். இதனை, மாலதி என்ற பெண்ணின் கதை மூலமாக தன்னுடைய மகள் ஜனனியின் கடிதத்திற்குப் பதில் மனதில் நினைப்பதுபோல பெண்களின் நிலையை அழகாக உணர்த்தி கதையை நகர்த்துகிறார்.
“அதுபோதும் பெண்களுக்கு… கல்வி ஏன்?” என்று கேட்டவர்கள் மத்தியில் பெரியார் அவர்கள் அதனை மறுத்து போராட்டம் செய்தார். உயர் ஜாதிப் பெண்களுக்குக் கல்வி கற்கும் முறை சற்று சுலபமாக இருந்தால் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மிகவும் கடினமான முறையாக இருந்தது. சேரிப் பெண்கள் பள்ளிக்குச் சென்றால் உயர்ந்த சாதி மக்களைத் தொடக்கூடாது, கேள்வி கேட்கக்கூடாது என்று நினைத்தும் உயர்ந்த சாதி மக்களுக்கு சமமாக தாழ்த்தப்பட்டோர் இருத்தல் கூடாது என்றும் சிந்தித்துப் போராடினர்.
இவ்வாறு கதை நகர்ந்துக் கொண்டு இருக்கும்போது வரலாற்றுச் செய்திகளாகத் திகழும் சாவித்திரிபாய் பூலேவின் கல்வி நிலை, சங்க இலக்கிய பாடல்கள் இயற்றிய பெண்பால் புலவர்களின் நிலை போன்ற செய்திகளையும் பதிவு செய்து உள்ளார். சாதாரண விவசாயம் செய்யும் படிப்பறிவு இல்லாத மக்கள் நாட்டுப்புறப் பாடல்களை அவ்வளவு அழகாகப் பொருள் பொதிந்து பாடப்படுவதையும் படிப்பறிவு இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக உள்வாங்கி இருப்பார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
பெண்கள் உடை அணிவதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டி இருக்கின்றது. முன்னர் எல்லாம் மேல் சாதி ஆண்கள் வரும்பொழுது கீழ்சாதிப் பெண்கள் தங்களது மேலாடையை எடுத்து, அவர்களை வணங்கும் பழக்கம் இருந்தது.மனிதர்களுடைய வாழ்வாதாரமாகத் திகழும் உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றுமே சாதி பார்த்துதான் ஒவ்வொருவருக்கும் அமையவேண்டும் என்ற நிலை வந்து விட்டது.
பெண்களின் உடையில்தான் ஆபாசம் இருக்கின்றது. ஆண்களின் பார்வையில் இல்லை என்பதே பெரும்பாலானோரின் பொத்தாம் பொதுவான கருத்தாகும். ஜீன்ஸ் பேண்டும் டீ சர்ட்டும் உடுத்திவிட்டால் அப்பெண்ணின் தொடை, மார்பு, பின் பகுதி எனப் பார்த்து கேலி செய்வதுண்டு. உயர் குடியில் பிறந்த பெண்ணை இவ்வாறு கேலி செய்தால் உடனே நடவடிக்கை எடுப்பதும், அதுவே எளிய குடும்பத்தில் பிறந்தால் அப்பெண்களின் மீது குற்றம் செலுத்தும் நிலையில் உள்ளது இச்சமூகம்.
பெண்ணினுடைய மார்புப் பகுதி என்பது ஒரு குழந்தையின் பசியாற்றுவதாக உள்ளது. அதனையே காம உணர்ச்சியினால் பார்க்கும் குணம் ஆண்களுக்கு உள்ளது. எந்தக் காளை மாடும் பசு மாட்டோட மடியைப் பார்த்தும் எந்த ஆட்டுக் கிடாவும் அந்த மறிக்கை ஆற்றின் காம்பைப் பார்த்தும் சிங்கமோ, புலியோ, மானோ, பாலூட்டும் காம்புகளைப் பார்த்தும் நிறத்தையோ, உயரத்தையோ ரசிப்பதில்லை. ஆனால் இந்த மனிதர்கள் மட்டும்தான் பெண்ணின் மார்பையும் நிறத்தையும் பார்த்து தவறு செய்கின்றனர். இதைத்தான் ஆறறிவு மனிதர்கள் என்று நாம் கூறிக்கொள்கிறோம். இவர்கள் மத்தியில் தான் நானும் வளர்ந்தேன். நீயும் வளர்ந்து கிட்டே இருக்கிறாய் என்று தாய் மகளிடம் கூறவேண்டும் என்று நினைப்பதின் வழியாக ஆசிரியர் கதையைக் கொண்டு போகிறார்.
சேரியில் வாழ்பவர்கள் ஒரு வேளை சோற்றிற்குக்கூட கஷ்டப்படுபவர்கள் அவ்வாறு இருக்கும்போது கல்வி கற்கும் சூழல் என்பது மிகவும் கடினமாகும். இதுபோல இக்கட்டான நிலை ஏற்பட்டு ஆண் இல்லாத வீட்டில் வளரும் பெண் குழந்தைகள் மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போடாதது போன்று இருப்பதாகும் என்று சமூகம் கூறுகின்றது. ஒரு தாய் வளர்த்தால் அக்குழந்தை அதிலும் பெண் குழந்தை கெட்டுப் போய்விடும் என்பது நம்முடைய மனதில் இருப்பவை. ஒரு வீட்டில் அனைவரும் பெண்களாகவே இருந்தால் அதில் மூத்தவள், தான் வேலைக்குப் போகவேண்டும் என்ற நிலை ஏற்படும் மற்றவர்கள் மட்டும் படிப்பை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியும்.
ஆனால் இக்குறு நாவல் அதற்கு எதிராக ஒரு தாய் வளர்த்த பெண் குழந்தைகள் முன்னேறுவதை எதார்த்தமாகவும் உணர்ச்சியுடனும் எடுத்துச்செல்கின்றது. பள்ளியில் மதிய உணவுத் திட்டம் வந்தவுடனும் தலித் மக்களுக்கு கல்வி உதவித் தொகை வந்த உடனும் எவ்வளவு நன்மை அளிக்கின்றது என்பது தெரியவருகின்றது. ஆனால் நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் அவர்களுக்காக நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திட்டமும் அக்குடில் பிறக்கும் பெண்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இக்கதையில் பெண்களின் ஒவ்வொரு நிலையையும் அதுவும் சேரிப் பெண்களின் அவல நிலைமையை எடுத்துரைத்துள்ளார்.
பெண் குழந்தை பிறப்பு முதல் பூப் புனித விழா, திருமணம், விதவை போன்ற பல்வேறு நிலையினைக் கூறியுள்ளார். மஞ்சள் நீராட்டு விழாவின்போது அவர்களை தனித்து ஒதுக்கி உட்கார வைப்பது என்ற நிலை ஏற்படும்.அவை ஒரு பெண் குழந்தை வளர வளர அவள் ரத்தத்தில் சத்து கூடிக்கொண்டே போகும். ஆகையால் அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் கூடியதை உணர்ந்த பியூட்டரி என்ற சுரப்பி உணர்ந்துகொண்டு ஈஸ்ட்ரஜன் என்ற ஹார்மோனை அவளது சினைப்பையில் உற்பத்தி செய்யத் தூண்டும்போது உடலில் மாற்றம் ஏற்பட்டு சினை முட்டை உடைந்து அவையே உதிரப்போக்காக மாறுகின்றது என்ற அறிவியல் பூர்வமான முறையைப் பார்த்து ஆசிரியர், பெண்கள் மீதாக இருக்கும் மூடநம்பிக்கையைக் கூறுகிறார்.
பெண்களின் விதவைக் கோலம் துயரமான ஒன்றாக உள்ளது. பூவும் பொட்டுமாக இருந்தால் அவர் சுமங்கலி, தொட்ட காரியம் துலங்கும், மகாலட்சுமியை போன்று எதிரில் வந்தால் நல்லது என்று கூறிய ஜனங்கள் அவள் விதவை ஆகிவிட்டால் முண்டச்சி,அமங்கலி, தாசி, வேசி, விதவை போன்ற அடைமொழிப் பெயர்கள் பெண்களுக்கு மட்டுமே உள்ளது. ஆண்களுக்கு எவ்விதப் பெயரும் இல்லை மறுமணம் என்ற ஒன்றையும் ஆண் சமூகத்திற்கும் மட்டும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இவ்வாறுபட்ட சூழ்நிலையில் எல்லாம் பெண்கள் குறிப்பாக சேரியில் பிறந்த பெண்கள் அனுபவிக்கின்றனர் அப்பெண்களுக்குக் கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றியும் மாலதி என்ற பெண்ணின் மூலம் அவளது மகள் ஜனனி எழுதிய கடிதத்திற்குப் பதில் மனதில் நினைத்துக்கொண்டு இருப்பதுபோலவும் மாலதி தன் அனுபவத்தாலும் படிப்பாலும் வளர்ந்த விதத்தையும் பெண்களுக்கு கல்வி அறிவு முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறுவது போல அறிவியல் கருத்துக்களையும் சமூக உண்மைகளையும் குறுநாவல் வடிவத்தில் படைத்துள்ளார்.