இன்னொரு தேசிய அறிவியல் தினம் வந்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி வந்தாலே இந்தியாவில் அறிவியல் கோலாகலமாக மிகவும் எழுச்சிமிக்க அளவில் கொண்டாடப்பட்டு வந்த காலம் ஒன்று உண்டு. செவ்வாய்க் கிரஹத்திற்கு ஒரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி முடித்ததோடு மோடி அரசு பதவியேற்றது 2014ல். அப்போது உலக அளவில் திறம்பட மேம்பட்ட அறிவியல் ஆய்வு சமர்ப்பிக்கும் தரத்தில் நம் நாடு 14% எனும் சாதனை அளவை எட்டி இருந்தது. அன்றைய மன்மோகன் அரசு அதற்காகப் பாராட்டப்படவில்லை. சீனாவில் 27% என்று கிண்டலடித்தார்கள் (அன்றைய உலக சராசரி 4%). ஆனால் இன்று அதே விழுக்காடு 8% சதவிகிதமாகக் குறைந்து நலிந்து போனது.
கோவிட் தடுப்பூசி, 104 செயற்கைக்கோள்களை ஒரே வீச்சில் அனுப்பி சாதனை என்றெல்லாம் மார்தட்டும் அரசு – நம் நாட்டில் மிகச் சிறப்பான நூற்றுக்கணக்கான அறிவியல் திட்டங்களை முடக்கி விட்டது. செயற்கை – நுண்ணறி தொடர்பான தேசிய ஆய்வகம் முடமாகி அந்த திட்டப் பணம் கோடி கோடியாக அதானி குழுமத்தின் தனியார் ஆய்வகத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. CERN ஐரோப்பிய உயிரியல் கழகம் உட்பட 12 சர்வதேச ஆராய்ச்சிக் குழுமங்களில் பங்களிப்பதை அரசு நிறுத்தி விட்டது. அந்த விஞ்ஞானி வீட்டிற்கு அனுப்பப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அறிவியல் – தொழில்நுட்பத்திற்கு – நேரடி அரசின் ஆய்வு முதலீடு நமது ஒட்டுமொத்த உற்பத்தி (GDP)யில் 0.48%மாகி அதிலும் அம்பானி குழும மானியமாகி நமது பல்கலைக்கழக – நிறுவன அறிவியல் அறிஞர்களை மிகக் கடுமையாகப் பாதிக்க வைத்துவிட்டது.
சி.வி.ராமன், மெக்னாட் சாகா, விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, ராஜா ராமண்ணா, அப்துல் கலாம் எனத் தொடரும் ஒரு பாரம்பரியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது.
இதற்கிடையே, அறிவியலுக்கு எதிரான பிற்போக்குப் பிரச்சாரம் என்பது இன்று கொடிகட்டிப் பறந்து நாறிக் கொண்டிருப்பது சர்வதேச அளவில் இந்திய அறிவியலின் தரத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளிவிட்டது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் (சாத்வி பிரக்யா சிங் தாகூர்) மாட்டுமூத்திரம் தொடர்ந்து குடித்ததால்தான் – புற்றுநோயில் இருந்து மீண்டதாக அறிவிக்கிறார். அவர் நவீன-மருத்தவத்தின்படி மூன்று முறை பிரமாண்ட மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் – பலவாறான புற்றுநோய் சிகிச்சை ஆதாரங்களை வெளியிட்டும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டு தொலைக்காட்சி சானல்களும் பத்திரிகைகளும் அதை வெளியிடக்கூட இல்லை. உத்தரப்பிரதேசம் முதல் கா்நாடகம் ஏன் புதுவையில்கூட மாட்டுமூத்திரம் சிறந்த தேவ மருந்து என்றும் சர்வார்க்கர் பறவை மீதேறி பறப்பார் என்றும் குறிப்பிடும் பிற்போக்குப் பாடங்களை பள்ளிப் புத்தகங்களில் பார்க்க முடிகிறது. இதுமட்டுமல்ல.
சர்வதேச ஆய்வுக்குழுமங்கள் வெளியிடும் ஆய்வு அறிக்கைகளைக்கூட அரசு குப்பையில் வீசி விடுகிறது. காற்றுமாசின் காரணமாக உ.பி. முதல் பீகார், தில்லி என்று பல லட்சம் பேருக்கு டி.பி. சுவாச நோய், சிலிகோஸிஸ் என ஏற்பட்டு மரணங்கள் அதிகரித்துளளதாக குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் 2020 அறிக்கை வெளிவந்தும் – சூழலியல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘யாரும் அதை நம்ப வேண்டாம். துளசிச் செடி நடுவோம். மரணம் என்பது அவரவர் தலைவிதி..’ என பாராளுமன்றத்தில் உளறினார். நேச்சர் சர்வதேச இதழில் இதை கேலி செய்து கேலிச்சித்திரம் வெளிவந்து இந்தியாவில் நாறாக்கப்பட்டது.
300க்கும் மேற்பட்ட தேசிய அறிவியல் விருதுகள் முடக்கப்பட்டு விட்டன. பல்கலைக்கழக – அறிவியல் நிறுவன ஆய்வுத் திட்டங்களுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய – பெரும்பாலும் சங்கி மனப்பான்மை கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ‘பாரம்பரிய இந்திய அறிவியல்’ சம்பந்தமான காவிமய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இவற்றுக்கெல்லாம் மேலாக சி.எஸ்.ஐ.ஆர், டி.ஆர்.டி.ஏ. மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்ட ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு – முக்கியப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுவரும் ராமர் கோயிலில், ஸ்ரீராம நவமி தினத்தன்று ராமர் – சிலைமீது சூரிய ஒளிபடும் வண்ணம் ஒரு சிறப்பு அறிவியல் அமைப்பை ஏற்படுத்தித் தர கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் தேசிய அறிவியல் தினம் ஒரு கறுப்பு தினமாகும். நம் நாட்டின் பெருமைக்குரிய அறிவியல் எழுச்சி சாதனை ஆண்டுகளை மீட்டெடுக்க இந்த நாளில் உறுதி ஏற்போம். அறிவியல் புரட்சியை விதைத்திட அனைவரும் ஒன்று கூடுவோம்.
