ஆயிஷா. இரா. நடராசன்
உலகின் ஒப்பற்ற அறிஞர் ஆல்பிரட் ஐன்ஸ்டீன் 1955-ல் ஏப்ரல் 18 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 76. அமெரிக்க நியூ ஜெர்சி மாகாணத்தில் பிளென்ஸ் பாரோ என்று சிறிய நகரம். அங்கே பிரின்ஸ்டன் மருத்துவமனையும் உள்ளது. அந்த மருத்துவமனையில்தான் அவர் கடைசியாக உடல் நலக்குறைவு (மூச்சுத் திணறல்) ஏற்பட்டு சேர்க்கப்பட்டிருந்தார் உண்மையில் அவரது இதயம் ரத்த நாளங்களில் ஒன்று பழுதாகி வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டபடி இருந்தது.

‘ஒரே ஓர் அறுவை சிகிச்சை உங்களை காப்பாற்றி விடும்’ என்று மருத்துவர்கள் கெஞ்சியபோது அதை ஏற்க அவர் மறுத்தார். ‘நான் போய்விட விரும்புகிறேன்… செயற்கையாக வாழ்க்கையை தொடர்வதில் பயனில்லை’ என்றார். ‘நான் என் பங்கிற்கு மனித குலத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டேன். போவதற்கான தருணம் இதுதான் என்றால் நான் அதையும் நேர்த்தியுடன் எதிர்கொள்ளத்தான் வேண்டும்’ என்றார்.
‘நான் அப்படி போய் சேர்ந்த பிறகு என்னைக் கொண்டாட வேண்டாம்’ என்பது அவரது இறுதி வாசகங்களில் ஒன்று. அவரது விருப்பப்படியே அவர் வாழ்ந்த வீடு, அவரது அலுவலக அறை எதுவும் நினைவாகமாகவோ, அருங்காட்சியமாகவோ மாற்றப்படவில்லை. அவரது உயிலின்படி அவரது உடல் எரியூட்டப்பட்டு உலகிற்கு அறிவிக்கப்படாத ஓர் இடத்தில் சாம்பல் தூவப்பட்டது.
தனது கோட்பாடுகளால் தனக்குக் கிடைத்த பெரும் புகழை அவர் எதிர்கொண்ட விதம் போலவே தனது மரணத்தையும் அந்த அறிஞர் மிக எளிதாக கடந்து சென்றார். ‘சிறு வயதில் நான் விரும்பியதெல்லாம்… நான் வாழ்க்கையில் எதிர்பார்த்தது எல்லாம்… ஒரு மூலையில் எனக்கு நானே தனியாக அமர்ந்து உலகமே என்னை எவ்விதத்திலும் தொந்தரவு செய்யாத சூழலில் என் வேலையை செய்ய வேண்டும் என்பது.’ ஒரு முறை அவர் ஆதங்கப்பட்டது உண்டு, ‘இன்று பாருங்கள். உலகமே என்னை உற்றுக் கவனிக்கும்படி ஆக்கிவிட்டது என்று பாருங்கள் எனக்கு? (‘டைம்ஸ்’ இதழுக்கான பேட்டி – 1949)
1949 இல் மார்ச் 14 அன்று 7 பல்கலைக்கழகங்கள் ஐன்ஸ்டீனின் 70வது பிறந்த தினத்தை உலகம் வியக்கும் வண்ணம் கொண்டாட விரும்பின. ‘நான் பிறந்தேன் என்பது மட்டுமே உண்மை. அதில் கொண்டாட என்ன இருக்கிறது?’ என்று அவர் ஒவ்வொரு பல்கலைக்கழகக் குழுவையும் தனித்தனியே அழைத்தார் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதிபற்றி அக்கறையோடு கேட்டறிந்து அந்தப் பல்கலைக்கழகங்களில் தலா ஒரு புதிய நூலகம் ஆய்வு பெலோஷிப் ஏற்பட ஏற்பாடு செய்து விட்டு விழாவை ரத்து செய்ய வைத்தார் ஐன்ஸ்டீன்.
தனது எழுபதாவது பிறந்தநாளில் எங்கே போனார் அவர்? உலகெங்கும் இருந்து தெரிந்தவர் சிலர், தெரியாதவர் பல ஆயிரம் பேரிடம் இருந்து வாழ்த்து அட்டைகள், பிறந்த தினப் பரிசுகள், கேக் என்று வந்த வண்ணம் இருந்த அந்த நாளில் ஜப்பானில் ஹிரோஷிமா அணுகுண்டு பிராந்தியத்தின் பாதிப்படைந்த குழந்தைகளுடன் மிக மிக எளிமையான மதிய உணவு அருந்தி முழு நாளும் அவர்களோடு கழித்தபடி அந்த நாளை அவர் கொண்டாடினார்.மிக மிகக் கடினமான அறிவியல் சிக்கல்களின் ஊடே உழன்றுகொண்டே இருந்தவர் அவர். அவரது சிந்தனை மற்றும் மூளை ஓய்வறியாதது. முழு அறிவியல் புரிதலையும் வேறு கோணத்தில் அணுகி வரலாற்றின் ஆகச் சிறந்த திருப்புமுனையை அவரது கோட்பாடுகள் சாதித்தன.
எளிதில் நேரடியாக புரிந்துணர முடியாத சிக்கல்களின் அறிவியல் அடித்தளத்தை மனித அறிதலுக்கு வசப்படுத்திய வாழ்க்கை அவருடையது. அந்த மாயவித்தை இறுதி மூச்சுள்ளவரை தொடர்ந்தது. தனது அடுத்த சந்ததியர் தீர்ப்பதற்காக பலவகை சவால்களை விட்டுச்சென்றவர் அவர். உதாரணமாக 1917-இல் அவர் முன்வைத்த பிரபஞ்சம் மாறிலி (Cosmological Constant) யை சொல்லலாம். இயற்பியல் உலகம் அவர் அதை முன்வைத்த நாட்களில் அபத்தம் என்று அவதூறு பேசியது. ஆனால் இன்றைய நவீன இயற்பியலாளர்கள் கருத்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை மிகத் துல்லியமாக கணித்திட ஐன்ஸ்டீனின் பிரபஞ்ச மாறிலியை ஒரு அடிப்படைத் தரவாகப் பயன்படுத்தி நமது பிரபஞ்சவியல் துறையையே பல மடங்கு மாற்றி விட்டார்கள்.
ஐன்ஸ்டீனின் எளிய வாழ்க்கையை இன்று நம்புவது கடினம். சொந்தமாக கார் வைத்திருக்காத உலகின் ஒரே நோபல் அறிஞர் ஐன்ஸ்டீன்தான். கடும் குளிரிலும் மழையிலும் நடந்தோ அல்லது நெருக்கி அடிக்கும் பேருந்துகளிலிலோ பயணித்துதான் (பிரின்ஸ்டன்) அலுவலக அறைக்கு தினமும் சென்றார். விமானங்களைவிட ரயில் பயணங்களை மட்டுமே அதிகம் விரும்பினார். மிக ஆழமான இசைப்பிரியர். வயலின் வாசிப்பதை அன்றாட வாழ்வில் அங்கமாகக் கொண்டிருந்தார். கடைசிவரை கவிதைகள் எழுதினார். இவர் இருக்கும் இடத்தில் நகைப்பொலிக்கு குறைவிருக்காது. அவ்வளவு சிரிக்க வைக்கும் ரசனைக்காரர். வாழ்வின் கடைசி மூன்றாண்டுகள் புதுத் துணிமணியோ ஆடம்பரப் பொருட்களோ எதுவும் வாங்கவில்லை, புத்தகங்களை வாங்குவதை மட்டும் இறுதிவரை கைவிடவில்லை.
பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அவரை பராமரித்த அந்த இறுதி நாட்களில் நர்சுகள் கடும் காய்ச்சல், வலிகளின் ஊடாக சதா- சமன்பாடுகளை எழுதிய வண்ணம் இருந்த அவரைக் கண்டு வியந்தனர். காகிதங்களை வரவழைத்து அந்த இறுதி நாளிலும் இஸ்ரேல் நாட்டின் ஏழாம் ஆண்டு ஸ்தாபக தினத்தைப் பொருட்டு ஒரு தொலைக்காட்சிக்கு உரை தாமாகவே எழுதிக்கொண்டிருந்தார் ஐன்ஸ்டீன். அவருக்கு அவர் சொல்வதை எழுத ஓர் உதவியாளர்கூட கிடையாது. அவர் இறந்தபிறகு உடனடியாக என்ன நடந்தது என்பதுதான் இந்தக் கட்டுரைக்கு முக்கியம். உண்மைதான். அவரது விருப்பப்படியே அவரது பூதஉடல் எரியூட்டப்பட்டு அவரது சாம்பல் வெளிப்படுத்தப்படாத அவர் குறிப்பிட்ட இடத்தில் தூவப்பட்டது. ஆனால் அவரது மூளையைத் தவிர.
அவரது மூளை திருடப்பட்டது என்றே சொல்லலாம். 1955ல் பிரின்ஸ்டன் மருத்துவ வளாகத்தில் ஐன்ஸ்டீனின் இறந்த உடலை உறவினர்களுக்கு ஒப்படைக்குமுன் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரின் பெயர் தாமஸ் ஹார்வே. இவர் உடற்கூறாய்வு மேற்கொண்டபோது ஐன்ஸ்டீனின் குடும்பமே அறியாமல் – அவரது மூளையை மட்டும் தனித்தெடுத்து தனது சொந்த ஆய்வுகளுக்காகப் பதுக்கிவிட்டார். தனது வீட்டின் கீழ்த்தளமான குட்டி நூலகத்தில் ஒரு குடுவையில் ஃபார்மால்டிஹைடு சேர்மத்தில் அதைப் போட்டு உலகிற்கே தெரியாமல் தாமஸ் ஹார்வே பராமரித்தார். ஐன்ஸ்டீனின் மூளை- சரியாக அவர் இறந்து ஏழு மணிநேரம் கழித்து – 1230 கிராம் எடை இருந்தது. முதலில் 50% ஃபார்மலினை மூளைச்செல் ரத்த நாளங்கள் வழியே ஹார்வே செலுத்தி அதற்கு ஒரு நிரந்தரத் தன்மையைக் கொடுத்தார். பிறகு 10% ஃபார்மால்டிஹைடு சேர்மத்தில் குடுவைக்குள் அதை மிதக்க வைத்தார். ரகசிய மூளை ஆய்வு ஒரு மோசடி போலவே நடந்ததுதான் கொடுமை. ஐன்ஸ்டீனின் மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் உட்பட யாருக்குமே அடுத்த ஐந்தாண்டு வரை என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
ஐன்ஸ்டீன் கண் டாக்டர் பெயர் ஹென்ரி அப்ராம்ஸ் கொலோடியான். பிளாஸ்டிக்கில் ஐன்ஸ்டீன் உடல் உறுப்பில் ஒரு பகுதியை ஹார்வேயிடமிருந்து பெற்று அவர் தன் பங்கிற்கு ஆய்வு மேற்கொண்டார். அந்த ஐன்ஸ்டீனின் உடல் உறுப்பு கண்! இப்படி ஹார்வே தன் விருப்பத்திற்கு ஐன்ஸ்டீனின் உடல் உறுப்புகளை காட்சிப்பொருளாக்கியது பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியவில்லை. 1978ல் ‘வையர்டு’ எனும் அமெரிக்க இதழ் செய்தியாளர் ஸ்டிவன் லெவி செயற்கை நுண்ணறிவு குறித்த தனது கட்டுரை ஒன்றிற்காக தாமஸ் ஹார்வேயை சந்தித்தார். அப்போது ஹார்வேயின் நூலகத்தில் சத்தமின்றி, சந்தடிஇன்றி குடுவையில் பராமரிக்கப்பட்ட ஐன்ஸ்டீனின் மூளையைக் கண்டு அதை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
ஐன்ஸ்டீனின் மூளை ஹார்வேயால் 240 சிறு சிறு துண்டுகளாக (ஸ்லைஸ்) வெட்டி எடுக்கப்பட்டு ஏற்கெனவே அமெரிக்கா, கனடா என்று வெளியில் தெரியாத பல மூளை- ஆய்வு அறிஞர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஹார்வேயையும் ஐன்ஸ்டீனின் (மிச்சம் சொச்ச) மூளையையும் அழைத்துக்கொண்டு பத்திரிகையாளர் லெவி ஒரு உரைப்பயணம் செய்ததும் தனி வரலாறு. மூளை செல்களை நுண்ணோக்கி வழியே கண்டு ஆய்வு செய்யும் துறைக்கு சைட்டோ ஆர்ச்சி டெக்டோனிக்ஸ் என்று பெயர். 40 வருடங்கள் கழித்து 1998ல் ஐன்ஸ்டீனின் மூளை பற்றிய ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. அவரது மூளையோடு (ஹார்வேயோடும்) பல மைல்கள் பயணித்த பத்திரிகையாளர் மைக்கெல் பாட்டர்னிட்டி தனியே ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்.
சராசரி மனித மூளையைவிட ஐன்ஸ்டீனின் மூளை வேறுபடுகிறது என்று ஹார்வே தனது ஆய்வுக்கட்டுரையில் ஐன்ஸ்டீன் மூளையில் மூளைசூல் சுவர் (Parietal operculum) எனும் பகுதி மூளையில் இருபக்கமும் இருக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். மூளை புகைப்படங்கள் மூளைவரிப்பள்ளம் (Syluian Fissure) அதீத வளர்ச்சி அடைந்துள்ளதைக் காட்டுகின்றன. 1999ல் மேக் மாஸ்டர் பல்கலைக்கழகம் (அது ஹாமில்டனில் உள்ளது) அவரது மூளையின் மூளைவரிப்பள்ளத்தின் ஒரு பகுதியான வேட்டர்ஸ் சல்கஸ் எனும் முன் மூளை உறுப்பே காணப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. சராசரியாக இருப்பதைவிட இதனால் நியூரான் இணைப்புள்ளிகள் ஐன்ஸ்டீன் மூளையில் பல மடங்கு அதிகம் இருந்ததை ஊர்ஜிதப்படுத்த முடியும். அதனால்தான் மற்றவர்களின் சிந்தனை ஓட்டத்தை ஒப்பிடும்போது அவரது சிந்தனையின் அணுகுமுறையே வேறுபட்டதாக இருந்தது.
‘சாண்ட்ரா விட்டில்சன் எனும் நரம்பியல் துறைப் பேராசிரியர் தலைமையில் மற்றொரு ஆய்வு நடந்து அதன் முடிவுகள் ‘தி லான்சட்’ (The Lancet) இதழில் வெளிவந்தன. அவர் ஐன்ஸ்டீனின் மூளை ஆட்டிச மனநிலை குழந்தைகளின் மூளை அமைப்பை ஒத்திருப்பதாக முடிவுக்கு வருகிறார். ஐன்ஸ்டீனே ஒரு முறை குறிப்பிட்டத்தைப்போல அவரது சிந்தனைகள் வார்த்தை வடிவில் இல்லாமல் வடிவங்களின் வடிவில் இருந்தன. 1980களில் கலிபோர்னிய பல்கலைகழகத்தின் பெர்க்லி மருத்துவக்கல்வி நிறுவனப் பேராசிரியர் ஆய்வாளர் மரியன் டைமண்ட் ஐன்ஸ்டீன் மூளையினுடைய ஒரு வில்லை தனக்கும் அனுப்பட்டதாக அறிவித்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் மூளை தொடர்பான முதல் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டதே மரியன் டைம்ண்ட் அம்மையாரின் ஆய்வுக்குழுதான். அது வித்தியாசமான ஓர் ஆய்வு.
மரியன் டைமண்ட். ஐன்ஸ்டீனின் மூளையை – பராமரிக்கப்பட்ட ஏனைய பதினொறு விதவிதமான ஆண்கள் மற்றும் ஏழு பெண் மூளைகளோடு ஒப்பிட்டு – அந்த ஆய்வை நடத்தி அசத்தியிருந்தார். கிளியல் செல்கள் ஐன்ஸ்டீன் மூளையில் எண்ணிக்கையில் மற்றவர்களின் மூளைகளிடம் இருந்து வேறுபட்டதைப் பதிவு செய்தார் டைமண்ட். கிளியல் செல்கள் என்பவை மைலீன் எனும் புரதத்தின் வடிவத்தில் செல்களுக்கு வலு சேர்க்கும் – அமைப்பு.
அவை நியூரான்கள் போலவே சிமிக்கை வெளிப்பாட்டிலும், பலகோண அணுகுமுறை ஆற்றலையும் மூளையில் தூண்டும் இயல்பூக்கிகளாகும். மரியன் அம்மையாரின் ஆய்வகம் தங்களுக்கு வழங்கப்பட்ட ஐன்ஸ்டீன் மூளையின் பகுதியை ஆறு மைக்ரோ மீட்டர் (தலைமுடியைவிட கால் பங்கு) அளவுக்கு மிக மிக மெல்லிய செதிலாக எடுத்து நுண்நோக்கி ஆய்வுக்கு உட்படுத்தியது. இடது மூளையின் கிளியல் செல்களின் எண்ணிக்கைக்கும் வலது மூளையின் அதே கிளியல் செல்களின் எண்ணிக்கைக்கும் (பொதுவாக யாவருக்கும் ஒரே எண்ணிக்கையில் இருப்பது) ஐன்ஸ்டீனின் மூளையில் பல மடங்கு வேறுபட்டு இடது மூளைப்பகுதியில் கிளியல் செல்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது.
கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர். டாலியா செய்டல் தனக்கு ஹார்வே வழங்கிய ஐன்ஸ்டீன் மூளை வில்லைகளின் மேல் நடந்த ஆய்வு முடிவுகளை மிகவும் காலதாமதமாக 2001ல் வெளியிட்டார். அவர் முன்பே ஆய்வுக்கு இதேபோல உட்படுத்தப்பட்ட கணித மேதைகளான காரல் பெட்ரிக் காஸ் மற்றும் சோஃபியா கவாலவ்ஸ்கயா ஆகியோரின் மூளை ஆய்வுகளோடு ஒப்பிட்டு இவர்கள் மூவருக்குமே கார்பஸ் கொலோசம் எனும் மூளையின் இரு பகுதிகளையும் இணைக்கும் பகுதி சராசரியைவிட பெருத்துக் காணப்பட்டதை உறுதிசெய்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்விதழான பிரெய்ன் – இதழில் – 2012 வரைகூட ஐன்ஸ்டீனின் மூளை பற்றி தனி தொடர்கட்டுரைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
அந்த ஆகச்சிறந்த அறிஞரின் மூளையை தற்போதும்கூட யார் வேண்டுமானாலும் எடுத்து சோதனைக்கு உட்படுத்தும் விதமாக இரண்டு நூலகங்களில் வைத்து பராமரிக்கிறார்கள். ஐன்ஸ்டீனின் மூளையே ஒரு நூலகம்தான் என்றாலும் பிரின்ஸ்டன் மருத்துவ மைய நூலகத்திலும் பிலடெல்ஃபியாவின் மட்டுர் – அருங்காட்சியக நூலகத்திலும் ஐன்ஸ்டீனின் மூளை கிடைத்தவரை இரு பகுதிகளாக காட்சியில் மிகுந்த அக்கறையோடு பாதுகாப்பாக பராமரிக்கப்படுகிறது. இதில் பிலடெல்பியா நூலகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பிலடெல்ஃபியா நூலகத்தில் ஐன்ஸ்டீன் மூளை பற்றி எழுதப்பட்ட ஜெர்மன், ஆங்கிலம் ஜப்பானிய சீனமொழி… உட்பட 18 மொழிகளில் வெளிவந்த 600 புத்தகங்கள், 1,270 ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை ஐன்ஸ்டீன் மூளை – நூலகப் பிரிவில் தனியே பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒப்பற்ற ஒரு மனிதரின் மூளைக்காகவே செயல்படும் ஒரு தனி நூலகம் எனும் பேறுபெற்ற பிலடெல்ஃபியா மட்டூர் அருங்காட்சியக நூலகத்திற்கு நீங்களும்கூட சென்று ஐன்ஸ்டீனின் மூளை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால் அதை ஐன்ஸ்டீன் விரும்புவாரா என்பது வேறு விஷயம்.
