ச.சுப்பாராவ்
நினா ஃபிராடென்பெர்ஜர் வீடுகளின் அறைகளை அலங்கரித்துத் தரும் Interior Designer. ஒரு வீட்டை இல்லமாக மாற்றுவது எது என்ற கேள்வி அவரது மனதில் நெடுநாட்களாக இருந்து வந்தது. கதவுகள், ஜன்னல்கள், ஏஸி, தரைவிரிப்பு ஆகியவற்றை மீறி அந்த இல்லத்திற்கு நாம் விரும்பும் கதகதப்பை, குளுமையை, இதத்தைத் தருவது எது? என்ற கேள்வி அவருள் எப்போதும் இருந்தது. அந்த வீட்டில் வசிப்போர் தம் மனதுக்குப் பிடித்த பொருட்களால் தம் வீட்டை நிரப்பும்போது வீட்டின் அழகு அதிகரிப்பதாக அவர் அறிகிறார். ஒரு நீண்ட தேடலில் அந்தப் பொருள் புத்தகமாக இருந்தால் கூடுதல் அழகு – அழகுக்கு அழகு சேர்ப்பது என்பார்களே, அது போன்ற கூடுதல் அழகு – சேர்வதை உணர்ந்து அதை ‘Bibliosytle’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ், ப்ரூக்ளின், நியூயார்க், லிஸ்பன், லண்டன், இத்தாலியின் பல கிராமங்கள் என்று 32 புத்தகக் காதலர்களின் வீடுகள், அவர்களது நூலகங்கள், அவர்கள் நடத்தும் புத்தகக் கடைகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் அழகழகான படங்களோடு பதிவு செய்துள்ளார். “புத்தகக் காதலின் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும் அழகான தொகுப்பு இது. வியப்பூட்டும் மனிதர்கள். வியப்பூட்டும் சேகரிப்புகள். வியப்பூட்டும் புத்தகக் கடைகள். சிறிய புத்தகம்தான் என்றாலும் ஒரு பிரும்மாண்டத்தைக் காட்டும் புத்தகம். உங்களுக்கு விருப்பமானதைத் தொடர்ந்து செய்தால் அழகு தன்னால் வந்துவிடும். புத்தகச் சேகரிப்புதான் அந்த விருப்பமான விஷயம் என்றால் ஒவ்வொரு புத்தகமும் வீட்டின் அழகை அதிகரித்துக் கொண்டே செல்லும்” என்கிறார் நினா.
மெக் ஆல்ஃபைன் என்றொரு புத்தகக் காதலர், பழைய தேவாலயத்தை வாங்கி முன்புறம் தங்கும் விடுதியாகவும், பின்புறமும் தனது வீடும், நூலகமுமாக வைத்திருக்கிறார். நூலகத்தில் ஒரு பகுதி பார்வையாளர்களுக்கானது. மற்றொரு பகுதி அவருக்கு மட்டுமானது. அதில் ஒரு பகுதி முழுக்க அவரது எழுத்தாள நண்பர்கள் எழுதியவை மட்டும். ஓர் அறை முழுக்க நாய்கள் பற்றிய புத்தகங்கள். மற்றொரு அறையில் அழகுக்கலை பற்றிய புத்தகங்கள். வேறொரு அறையில் திரைப்படமாக வந்து புகழ் பெற்ற படைப்புகள் மட்டும். இன்னொரு அறை முழுக்க அவரது தனிப்பட்ட ரசனையில் தேர்ந்தெடுத்த விசேஷமான புத்தகங்கள். மனம் துயருறும்போது படித்தால் ஆறுதல் தரும் சக்தி வாய்ந்த புத்தகங்கள் மட்டுமே அங்கு அடுக்கப்பட்டிருக்கும். துன்பம் நேர்கையில் புத்தகக் காதலர்கள் யாழிசையைத் தேடுவதில்லை. புத்தகத்தைத்தான் தேடுவார்கள் என்பதற்கு மெக் ஆல்ஃபைன் வாழும் சாட்சியமாக நிற்கிறார்.
பெர்லினின் இம்மானுவல் டி பேஸரின் நூலகமும் இது போன்றதுதான். அவர் எப்போதும் 2-3 புத்தகங்களை வாசிப்பவர். எளிதான புத்தகம் ஒன்று. கடினமான புத்தகம் ஒன்று. இரண்டையும் சமன்படுத்த சுமாரான புத்தகம் ஒன்று என மூன்று புத்தகங்களை எப்போதும் சுமந்து திரிவார். அவரது வீடு முழுக்க 16 அடி உயர புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. மும்மூன்றாக படித்து முடிக்க வேண்டுமே என்பதால் அவர் எந்தப் புத்தகத்தையும் – அது எவ்வளவு சிறந்தது என்றாலும் – மறுமுறை வாசிப்பதில்லை.
வீடு முழுக்க ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் நிரம்பி வழிய உட்கார இடமின்றி வாழும் ப்ரூக்ளினின் விக் மூனிஸ் தன்னை புத்தகச் சேகரிப்பாளன் என்று சொல்லிக்கொள்ள கூச்சப்படுகிறார் “நான் மிகவும் ஏழ்மையான சூழலில் வளர்ந்தவன். ஏழைகள் எதையும் தூக்கிப் போடுவதில்லை. எதற்கேனும் பயன்படும் என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். அதுதான் இவ்வளவு புத்தகங்கள் சேர்ந்ததற்குக் காரணம்” என்கிறார்.
வாஷிங்டன் டி.சி.யின் ஆர்ச்சர் சிட்டியில் வசிக்கும் மக்மர்ட்டி 26 புத்தகக் கடைகள் வைத்திருக்கும் முதலாளி. அவரது சொந்த சேகரிப்பான 4,50,000 (தவறுதலாக 0 போட்டுவிடவில்லை. நாலரை லட்சம்தான்!) புத்தகங்களை 4 மிகப் பெரிய கிடங்குகளை வாடகைக்கு எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்.
சான்பிரான்சிஸ்கோவில் வசிக்கும் டோட் ஹிடோவின் வீட்டு நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரிய புகைப்படக் கலைக்கான பிரத்யேக நூலகம். ஆடைகள் குறித்த மிகப் பெரிய பிரத்யேக நூலகம் ஜோர்டானா மர்க் மார்டினின் வீட்டு நூலகம். வீட்டின் அத்தனை பொருட்களும் நீலநிறத்தில். ஜோர்டானாவின் மூக்குக்கண்ணாடி கூட நீல நிறத்தில், திருவிழாக்களில் குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தரும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது.
ப்ரூக்ளின் ஜொனாதன் சஃப்ரான்ஃபோயர் தனது நூலகத்தில் உலகின் அத்தனை பிரபல எழுத்தாளர்களின் லெட்டர் ஹெட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார். ஒரு மிகப் பெரிய அறையில் சுவர் முழுக்க விதவிதமான அளவுகளில் அவை அழகழகான சட்டங்களில் பத்திரமாகத் தொங்குகின்றன.
லாஸ்ஏஞ்சல்ஸின் மைக்கேல் சில்வர் பிளாத் நூலகத்திற்கு வீட்டில் இடம் போதாமல், ஒரு வீட்டில் வசிப்பது, பக்கத்து வீட்டில் நூலகம் என்று வீட்டையும், நூலகத்தையும் அடுத்தடுத்த வீடுகளில் வைத்துக் கொண்டு விட்டார். மார்க் லீக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் வீடு. வீட்டில் 500 அலமாரிகளில் புத்தகங்கள். சுமார் 20,000 புத்தகங்கள் இருக்கும். மனிதர் அவற்றில் சுமார் 70 சதவிகிதத்தைப் படித்து விட்டாராம். கொராலியா பிக்ஃபோர்ட் ஸ்மித் பென்குவின் புக்ஸின் அட்டை வடிவமைப்பாளர் என்பதால் அவரது நூலகம் முழுக்க விதவிதமான வித்தியாசமான அட்டைகள் கொண்ட புத்தகங்கள். பெட்ரோ ரியஸும், அவரது மனைவி கார்லா ஃபொ்னாண்டஸும் மெக்சிகோக்காரர்கள். மாதாமாதம் 200 – 300 புத்தககங்கள் வாங்குபவர்கள். ரியஸ் அடிக்கடி பயணம் செல்பவர். ஒவ்வொரு பயணத்திலும் மூன்று சூட்கேஸ்கள் நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வருவாராம்.
நியூயார்க்கின் சோஹோ பகுதியில் வசிக்கும் ஆர்ட் ஸ்பீகல்மென்னும், அவர் மனைவி பிரான்சிஸ் மோலியும் வித்தியாசமான நூலகம் வைத்திருக்கிறார்கள். புலிட்சர் விருது பெற்ற படைப்பாளியான ஆர்ட் ஒரு காமிக்ஸ் பிரியர். அவர்களது நூலகம் முழுக்க காமிக்ஸ்கள், சிறார் நூல்கள்தான். பிரதர் கிரிம்ஸ் படைப்புகளுக்கு ஓர் அறை, வால்ட் டிஸ்னிக்கு ஓர் அறை என்று மிகப் பெரிய சேகரிப்புகள் உள்ள நூலகம்.
நினா பார்த்த நூலகங்களும், புத்தகக் காதலர்களும்தான் எத்தனை விதம்! அமெரிக்கா முழுவதும் விதவிதமான சங்கங்களின் வினோதமான நூலகங்கள் நிறையவே உள்ளன. நியயார்க்கில் மனநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் நூலகம். லாஸ்ஏஞ்சல்ஸில் பில்லி சூனியம் வைப்போர் சங்க நூலகம்! சான் பிரான்சிஸ்கோவில் மெக்கானிக் சங்கத்தினரின் நூலகம்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆல்ப்ஸ் மலை ஏறுவோர் சங்கத்தின் நூலகம் ஒன்று லண்டனில் இருக்கிறது. இது மிகப் பழமையான சங்கம். ஆல்ப்ஸ் மலைகள் பற்றி அங்குள்ள விலங்குகள், தாவரங்கள், மலைகளின் வரலாறுகள் பற்றிய நூல்கள், ஆல்ப்ஸ் மலைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட புனைவுகள் என ஆயிரமாயிரம் புத்தகங்கள். மலையேற்ற வீரர்களின் அனுபவங்கள், உலகின் பல மலையேற்ற சங்கங்களின் வெளியீடுகள் என எத்தனையெத்தனையோ ஆவணங்கள். எட்மண்ட் ஹில்லாரி சங்கத்தில் தன்னைச் சேர்த்துக்கொள்ளும்படி சமர்ப்பித்த விண்ணப்பக் கடிதத்தை சட்டமிட்டு நடுநாயகமாக வைத்திருக்கிறார்கள். உறுப்பினராக வேண்டும் என்றால் ஆல்ப்ஸ் தொடரில் 20 கடினமான சிகரங்களில் அல்லது அதற்கிணையான உலகின் வேறு கடினமான 20 சிகரங்களில் ஏறியிருக்க வேண்டும். நூலகர் ஏனைய பணியாளர்கள் அனைவரும் மலையேற்ற வீரர்கள்தான். பிறர் அங்கு உள்ளே நுழையவே முடியாது.
இது போன்றதுதான் மிக் குட்டிப் புத்தகங்களின் (minature books) சங்கத்தின் நூலகமும். இச்சங்கத்திற்கு இரண்டு முறை தலைவராக இருந்தவரான ஆல்பர்ட்டின் சொந்த நூலகத்தில் 4,500 குட்டிப் புத்தகங்கள் உள்ளன. ஷேக்ஸ்பியரின் முழுத் தொகுப்பு, செகாவ் தொகுப்பு (இதுதான் உலகத்திலேயே மிகச் சிறிய புத்தகமாம்) என அனைத்தையும் பூதக் கண்ணாடி வைத்துதான் படிக்க வேண்டும்.
பிரேசிலின் பிம்பிப்ரே ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியாளர். நம்மில் எத்தனையோ பேர் புத்தகத்தை வாசனை பார்த்து மகிழ்ந்திருப்போம். அந்தப் புத்தக வாசனை பற்றி ஆய்வு செய்பவர் அவர். கேலண்டர் கோட்டை எனப்படும் 365 அறைகள் கொண்ட 15ம் நூற்றாண்டின் கோட்டையில் வசிக்கும் அவர் ஏராளமான பாட்டில்களில் புத்தக அலமாரிகளின் தூசிகளை சேகரித்து வைத்து ஆய்வு செய்து வருகிறார். புத்தக வாசனை பைண்டிங், காகிதம், அட்டை, அச்சு மை, அந்தப் புத்தகம் வைக்கப்பட்ட அலமாரி என்று பலவற்றிலிருந்து உருவாகிறது. ஆனாலும் புத்தகத்தை வாசனை பார்ப்பவர்கள் அந்தப் புத்தகத்தில் அறிவின் வாசனையை, தமது மொழியின் வாசனையை உணர்கிறார்களாம். அதுதான் நம்மை பரவசப்படுத்துகிறதாம். இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அப்படியே ஒரு கணம் நிறுத்தி, இந்தப் பக்கத்தின் வாசனையை நுகருங்கள். அது நம் தமிழின் வாசனை!
நினா புத்தகக் கடைகளையும் விட்டு வைக்கவில்லை. நியூயார்க்கின் புகழ் பெற்ற ஸ்டிராண்ட் புத்தகக் கடை பற்றியும் எழுதியுள்ளார். அங்கு விற்பனைக்கு உள்ள புத்தகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்தால் 18 மைல் நீளத்திற்கு வருமாம். வீட்டு அலங்கார நிபுணர்கள் வீடுகளை அலங்கரிக்க அங்குதான் புத்தகங்கள் வாங்குவார்களாம். “நம்ம லைப்ரரிக்கு பிங்க் கலர்லதான் பெயிண்ட் அடிக்கப் போறோம். அதுனால, பிங்க் கலர் அட்டை இருக்கறதா ஒரு 2,000 புக் கொடுங்க என்றோ, ஆறு மீட்டர் நீளம், நாலு மீட்டர் அகல அலமாரில அடுக்கற மாதிரி கொஞ்சம் புத்தகம் எடுத்துப் போடுங்க என்றோ கேட்டு வாங்கி லாரியில் அள்ளிக் கொண்டு போவார்களாம் !
‘கலிபோர்னியாவின் ஓஜாயில் உள்ள பார்ட்ஸ் புக்ஸ் என்ற கடைதான் உலகின் மிகப் பெரிய நடைபாதை புத்தகக் கடை’ என்கிறார் நினா. அங்கு சுமார் 1,30,000 பழைய புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. வேண்டிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு, அங்கு வைத்திருக்கும் அட்டைப் பெட்டியில் நம்மால் முடிந்த பணத்தைப் போட வேண்டியதுதான். விலை கேட்பது, பேரம் பேசுவது எதுவும் இல்லை.
பாரீசின் ஷேக்ஸ்பியர் அண்ட் கோ புத்தகக் கடையையும் நினா விட்டுவிடவில்லை. அது பற்றி ஒரு பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார் ஆனால் அங்குள்ள அரிய புத்தகங்கள் அறையின் தகவல் பலகையில் அந்தக் கடையை வாழ்த்தி நான் தமிழில் எழுதி வைத்திருந்த வாழ்த்துச் செய்தி பற்றி அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டதற்கு என் வன்மையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன் !

நினாவின் புத்தகத்தைப் படித்தால் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள், அவற்றை அழகழகாக அடுக்கி வைக்க, அற்புதமாகக் கலைநயத்தோடு கட்டப்பட்ட மாளிகைகள், அறைகள் என ராஜ வாழ்க்கை வாழ்வோரின் புத்தகக் காதலின் ஆழம் புலப்படுகிறது. வாழ்வின் முழு சம்பாத்தியத்தையும் புத்தகங்களுக்காகச் செலவிடும் மனிதர்கள் ! இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது,
‘வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல்போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதிவிட்டுச் செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ’
என்ற மாலனின் கவிதை வரிகள் வரிக்கு வரி அப்படியே பொருந்தும். எங்கள் 8 எல்.என்.பி. அக்கிரஹார வீட்டில், நாற்பதாண்டுகளுக்குமுன் ஓர் அட்டைப் பெட்டியில் ‘கண்ணீர்ப் பூக்கள்!’, ‘மிஸ்.தமிழ்த்தாயே! நமஸ்காரம்’, ‘புலரி’, ‘செகண்ட் லேடி’, பொன்னியின் செல்வனின் 2வது பாகம் மட்டும், ‘கொரில்லா சாம்ராஜ்யம்’, ‘மணிமொழி நீ என்னை மறந்து விடு!’, ‘சத்திய வெள்ளம்’ என்று கிடைத்ததையெல்லாம் சேகரித்து நான் வைத்திருந்த எனது குட்டி நூலகம் நினா குறிப்பிடும் இந்த 32 பேரின் நூலகத்திற்கு இணையான அழகு உடையதுதான், எனது புத்தகக் காதலும் அவர்களது புத்தகக் காதலுக்கு இணையானதுதான் என்று தோன்றியது.