கவிஞர் யாழன் ஆதி
வாசித்தல் அனுபவம் என்பது மானிடரின் அரிய பண்பு. காலத்தின் பல நூற்றாண்டுகளில் மனிதர்கள் தங்கள் அறிவினை வாசித்தல் என்னும் செயல்பாட்டின் மூலம் பெற்றார்கள். அனுபவமும் வாழ்வியலும் தரும் படிப்பினைகள் கருத்துருக்களாக மாறி, அவை எழுத்துகளாக உருமாறும்போது படைப்பின் ஆதாரம் நமக்கு வாய்த்துவிடுகிறது. அது அறிவியலாக இருந்தாலும் புனைவாக இருந்தாலும் மேம்பட்ட தன்மையில் சொல்லப்பட்டவை படிப்பதற்கு என்றானபின்தான் அவை அறிவின் கூறுகளாக மாறுகின்றன.

சி. முத்துகந்தனின் ‘இயல்பால் அறிவோம்’ நூலும் ஒருவிதமான வாசிப்பின் அனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரூப ஓவியத்தைக் காணும் பார்வையாளனின் மனம் வரையும் சித்திரங்கள் அவர் பார்க்கும் ஓவியத்தின் ஊடாக அவர் வாழ்வைப் பார்க்கிற தன்மையைப் போல் முத்தகந்தனின் இந்தப் பத்திகள் மூலம் நம் வாழ்வை நாம் பார்க்கிறோம்.
அவர் சொல்லுகிற பலூன் வெடிக்காமல் இந்த நெடுஞ்சாலையின் அடர்த்தி மிகுந்த போக்குவரத்தில் பத்திரமாகக் கடந்து சென்றுவிடாத என்று நாமும் அல்லலுறுகிறோம். ஆனால் அவர் சொல்லும் பலூன் வெறும் பலூன்தானா? காற்று அடைக்கப்பட்ட அந்த ரப்பரைப்போல மூச்சுக்காற்று அடைக்கப்பட்ட மனிதர்கள் இங்கே பத்திரம்தானா? இந்த வாழ்வு நெரிசலில் அவர்கள் உடையாமல் போய்விடுவார்களா? ஆனால் சில பலூன்கள் இங்கு உடைப்பதற்காகவே ஊதப்படுகின்றனவே, அந்தப் பலூன்களின் காற்று வெளியேறாமல் அமைகிற சமூக அமைப்பிற்கான ஏக்கப்பெருமூச்சுகள் இந்த நாட்டின் வெளியெங்கும் சுற்றி அலைகின்றனவே, அவற்றின்மீதான் நம் எதிர்வினை என்ன என்றெல்லாம் நம் எண்ணங்களை ஓட்டும் தன்மை இந்த நூலின் எழுத்துகளுக்கு உண்டு.
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத, ஆனால் சகட்டு மேனிக்கு எல்லாமே ஒரு நாவலின் பத்திகளின்போலக் காணப்படுவது என்பது புதிய வகைமை. புதிய தொழில்நுட்பங்கள் வரலாறுகளைக்கூட பேட்டரி தீர்வதற்குள் வருகையைப் பதிவு செய்யவைக்கிறது. வாயாலே பேசி பேச்சச்சு செய்த நூல்களைப் பேசாமலேயே விற்றுவிடக்கூடிய சூழலில் எங்களைப்போல எழுது என்னும் குரலுக்குத் தேவையான பதிலை கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

உரையாடல்களும் அதனால் ஏற்படும் அறிவின் மாறுபாடுகளும் குறித்த விவாதங்கள் எழுப்பப்பட்டபோதும் கடவுளாகிவிட்ட மாணவர்களும், மணற்கூடுகைக்கு வந்த பெருங்கவிக்கோவும் ஒற்றை உரையாடலைக் கேட்காதவர்களாக மாறிவிடுகின்றனர். அறிவியல், ஓவியம், சிற்பம் என விரிந்துகிடக்கும் மொழியின் பரிமாணங்களைத் தவிர்த்து வெறும் கலை இலக்கியங்களை மட்டும் மொழியின் கூறுகளாக மாற்றுவதைக் குறித்து எழுதப்பட்ட பத்திகளில் முத்துகந்தன் பல புதிய சிந்தனைகளைப் பதிவிடுகிறார்.
எழுதுதல் என்பது எதற்காக, வாசித்தலைக் கோருதல் மட்டுமா அல்லது தன் தினவைத் தீர்த்துக்கொள்ளவா, நகுலன் புதுமைப்பித்தன் போலவோ அல்லது அரசமரத்தடிக்கு வருகின்ற அவர்களின் மெக்கானிக் வரையும் எண்ணையிலான ஓவியம் வெறும் நம்பர் பிளேட்டை ஊற்று நோக்கி வண்டி எண்ணை மனப்பாடம் செய்யவா? எங்கு போனாலும் வந்துவிடும் வீட்டுப் புறாக்களைப் போல்தான் எத்தனைத் தத்துவங்களைப் பேசினாலும் எழுதினாலும் வாசித்தாலும் இயல்புக்கு வரும்போது நெட்டித்தள்ளுகிறது யதார்த்தம்
அறம் எது என்பதை அறிவதிலிருந்துதான் உயிர்பெறுகிறது.
எழுத்துத் தோன்றும் உணர்வுச்சூழல், எழுத்தைப் பிரிக்கும் சமூகச்சூழல், பாலின சமத்துவம் பேசிக்கொண்டே பால்கவர்ச்சிக்கு ஆளாவதை ஆண்புத்தி அறுபடாமை என்கிறார் முத்துகந்தன்.மொழி பேதம் பார்க்காமல் இருக்கிறது. ஆனால் மேல் எழுத்து, கீழ் எழுத்து ஆண் எழுத்து பெண் எழுத்து புரியும் எழுத்து புரியாத எழுத்து எனப் பிரித்துக்காட்டும் கோடுகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. எவ்வெழுத்தாயின் என்ன, மானுட உயிர்ப்புக்காகவும் அவர்களின் மாண்புக்காகவும் எழுதப்படும் எதுவும் அதிகாரத்தின் குரலாக இல்லாமல் பண்பாட்டின் குரலாக, மாற்றுக் குரலாக அவை அமைய வேண்டும் என்னும் கருத்தியல் களத்தில் தன் காய்களை நகர்த்துகிறார் முத்துகந்தன்.
எழுத்தின் மூலத்தைக் குறித்த விவரணைகள் முக்கியமானவை. மக்களிடமிருந்து எழுதப்படும் எதுவும் அவர்களின் அப்பட்டமான வாழ்வைப் பேசக்கூடியதாக இருக்கும். வயதான பாட்டியும் அன்னம்மாவும் காட்டும் மொழியின் கெட்டித்தன்மை புனைவுவழி வாய்க்கும்போது எழுத்தையும் பேச்சையும் இந்தச் சமூகம்தான் கொடுக்கிறது. அதன் தரவுகள் அனுபவங்களின் மீது கட்டமைக்கப்படுகின்றன.மனித சமூகத்தை அவர்கள், இவர்கள் எனப் பிரிக்காமல் எழுதுவதற்கான அனுபவங்கள் பயணங்கள் தரவுகள் மூலம் உருவாக்கப்படுதல் மிக அவசியமாகிறது.
குழந்தை மனநிலை என்பது தூயநிலை. அந்நிலை பல படைப்பு வெளிகளைக் கொண்டது. அவர்களின் கிறுக்கல்கள் பல நவீன ஓவியங்களின் அடித்தளமாகிறது. ஒரு பறவையின் முதல் பறத்திலில் அசையும் சிறகுகளின் அழகியல் அது என்பது முத்துகந்தனின் நுண் கவனிப்பு.எல்லோருக்குமான எழுத்தை உண்டாக்கும் தளத்தில் தலித்தியம் பெண்ணியம் என கட்டமையும் விளிம்புநிலை எழுத்துக்களையும் நம் வாசிப்பில் மட்டுமல்ல, உள்வாங்கலிலும் வாழ்விலும் வரவு வைக்க வேண்டும்.
குழந்தைமையின்மீதான ஆச்சர்யம் குன்றாத பல அவதானிப்புகளை முத்துகந்தனின் பத்திகள் கூறுகின்றன. அவர்களின் அனைத்துப் பருவ நிலைகளிலும் அவர்களுக்கான மனம் என்னும் அந்தப் பந்தில் எப்போதும் நிறைந்திருக்கும் வாழ்மையின் தன்மை பொதுவில் உணரக்கூடியதாக இருக்கவேண்டும். கல்லூரி மாணவர்களின் வாழ்வியல் என இப்பத்திகள் அலசுவது ஓர் ஆசிரியர் தன் மாணவர்களின்மீது கொண்டிருக்கும் அக்கறையும் அதனை அவர் வெளிப்படுத்தும் உளவியல் ரீதியான முறைமைகளும் ஈண்டு நோக்கத்தக்கன.
ஓர் ஆவணப்படம் எடுப்பதாய் இருந்தாலும் ஓர் எழுத்தோவியத்தை உருவாக்குவதாக இருந்தாலும் மெய் என்பது அடிப்படை. நல்லறத்தை மையமாகக்கொண்டதே ஆகச்சிறந்த எழுத்தும் பேச்சும். வாழ்வின் உன்னத நிமிடங்கள் எல்லாம் உண்மையின் கண்ணே இருக்கின்றன. சுயவிமர்சனம் சுயானுபவம் இவற்றினூடே தோன்றும் படைப்பில் நிகழும் மெய்ம்மையின் கூற்றினை அய்.டி. பணியாளர்களை வைத்து கவிதை எழுதச் செய்வதின்மூலம் உணர்த்துகிறார் முத்துகந்தன்.
இப்படி ஏழு அத்தியாயங்களில் பல பத்திகளில் முத்துகந்தன் தரும் வாசிப்பு அனுபவம் மிகவும் மாறுபட்டவைகளாக அமைகிறது. ஒவ்வொன்றை முடிக்கும்போதும் தொடங்கும் மனநிலை அடுத்த பத்தியிலும் பற்றிக்கொள்கிறது என்பது இந்த வகைமையின் புது மாதிரி வடிவமாக இருக்கிறது.
நூலை வாசித்து முடிக்கையில் ஒரு தனிமனிதனின் வாழ்வுக்குள் நாம் சென்றுவந்த உணர்வெழுச்சி நமக்குள் ஏற்படுகிறது. அந்தத் தனிமனிதனின் தேடல்கள் நம் தேடல்கள், அந்தத் தனிமனிதனின் தத்துவம் நம் தத்துவம். அந்தத் தனிமனிதன் அடைய விரும்பும் படைப்பின், கலை இலக்கியங்களின் தகுதி நாம் அடைய நினைப்பது. அந்தத் தனிமனிதன் கோரும் சமூகம் நாம் கோருவது. அந்தத் தனிமனிதன் ஆசைப்படும் வாழ்க்கை நாம் நிறுவ முனையும் வாழ்க்கை. முத்துகந்தனின் நூலில் இதை நாம் இயல்பாய் அறியலாம்.
