ஜெயபால் இரத்தினம்
‘Feet in the Valley.’’ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புதினம், நூலின் ஆசிரியர் திரு. அஸ்வின்குமார் மிஸ்ரா. ஒடிசா மாநில அரசில் பல்வேறு முக்கியப் பொறுப்புக்களில் பணியாற்றி செயலாளர் நிலையில் ஓய்வு பெற்ற மூத்த அலுவலர். ஒடிசா சாகித்திய அகாதெமி செயலாளர், ஒடிய மொழியில் பத்து கவிதை தொகுப்புகள், ஆங்கிலம், இந்தி, வங்காளி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தலா ஒரு கவிதைத் தொகுதி என ஏராளமான கவிதைகள் எழுதி வெளியிட்ட புகழ்பெற்ற கவிஞர், கதாசிரியர், புகழ்மிக்க உள்நாட்டு வெளிநாட்டு இதழ்களின் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், சிறந்த மொழி பெயர்ப்பாளர், என்பவை உள்ளிட்ட ஏராளமான சிறப்புகளைப் பெற்றிருக்கும் பன்முக ஆளுமை இவர்.

இந்த ஆங்கிலப் புதினம் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு ‘ஆரண்யத் தாண்டவம்’ என்ற பெயரில் ‘பொன்னுலகம் புத்தக நிலையம்’ வெளியிட்டுள்ளது. தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர், பேராசிரியர் திரு. க.மூர்த்தி. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், இதுவரை ‘கள்ளிமடையான்’ மற்றும் ’மோனோலாக் கதைகள்’ ஆகிய தலைப்புக்களில் இரண்டு சிறுகதைத் தொகுப்புக் களையும், ‘பங்குடி’ என்னும் தலைப்பில் ஒரு புதினமும் எழுதியுள்ளார். இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் இந்த ’ஆரண்யத்தாண்டவம்’. பெரம்பலூரில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர் அஸ்வின்குமார் மிஸ்ரா, நேரில் கலந்து கொண்டு நூல் தொடர்பாகவும் இலக்கியம் தொடர்பாகவும் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க ஒடிசா மக்களின் வாழ்வியலை குறிப்பாக, விளிம்புநிலை மக்களது வாழ்வியலையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளையும், அம்மக்களின் ஆறாத ரணங்களையும், மக்கள் குறைகளைத் தீர்க்கவேண்டிய பொறுப்பிலுள்ள கள அரசு அலுவலர்கள் சிலரது பேராசைகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் அதன் முடை நாற்றத்துடனும் பதிவு செய்துள்ள புதினம் இது. மொத்தம் எண்பத்து மூன்று சிறு அத்தியாயங்கள் கொண்டதாக இப்புதினம் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், மூன்று வெவ்வேறு களங்களில் நடைபெறும் மூன்று விதமான முக்கிய நிகழ்வுகளை விவரிக்கும் பிரிவுகளை இப்புதினம் கொண்டிருக்கிறது என்பதே சரியான பகுப்பாகக் கொள்ளவேண்டியுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் கதைக்குத் தொடர்புடையதும் அல்லாத்துமான உட்கதைகளும் உண்டு. இக்கதையின் நாயகன் சோமன் என்னும் இளைஞன். அவனைச்சுற்றியே கதை நகர்கிறது.
மேற்குறித்த மூன்று களங்களில் முதல் மற்றும் முக்கியக் களமாக அமைந்திருப்பது ‘பீத்தல்கர்’ நகரம். எவ்விதப் பகட்டும் புகழ் வெளிச்சமும் பெற்றிடாமலும், ஒடிசா மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு மலைப் பிரதேசத்திலும் அமைந்த ஒரு சிறிய நகரம் இந்தப் ’பீத்தல்கர்’.. சிறிய நகரம் என்றாலும், வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து சமிதி), நகராட்சி(முனிசிபாலிட்டி), வன அலுவலர், மின்துறை ஆகிய மாநில அரசின் முக்கிய உள்ளூர் நிர்வாக அலுவலகங்களும். இரயில் நிலையமும் அமைந்த நகரம் அது. படிப்பறிவுள்ளவர்கள் மிகவும் குறைந்த அளவே வாழும் அந்நகரத்தில் விளிம்புநிலை மக்களே அதிகம் வசித்து வந்தனர்.
இப்புதினத்தின் கதைநாயகன் சோமன். பீத்தல்கர் நகர இரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் பிரிவின் மேலாலராகப் பணியாற்றி வரும் ராய்பாபு என்பவரது மகன் சோமன். வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரான ராய்பாபு வாழ்வாதாரம் காரணமாக இந்நகரில் வாழ்ந்து வருகிறார். நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டும் தவறுகளைக் கண்டால் அஞ்சாமல் சுட்டிக்காட்டுபவராகவும் வாழ்ந்து வரும் ராய்பாபு அவ்வூரிலுள்ள இரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். ராய், அவரது மனைவி, மகள் மினாட்டி, மகன் சோமன் ஆகியவர்களைக் கொண்ட சிறிய குடும்பம் அவர்களுடையது. மினாட்டிசோமனுக்கு மூத்தவள். இருவருக்கும் திருமணமாகவில்லை. அரசுப் பணியில் கிடைக்கும் ஊதியத்தை மட்டுமே வருவாயாகக்கொண்டு எளிமையான வாழக்கை வாழ்ந்து வந்தனர்.
இராசயனப் பாடத்தில் சிறப்பான மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்ற சோமன், அரசு வேலைக்கு முயற்சி செய்து வரும் பல இலட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவன். நல்ல திறமையும் புத்திக்கூர்மையும் கொண்ட அவன் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வாக விரும்பி, ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்திய போட்டித் தேர்வுகளில் பலமுறை கலந்துகொண்டிருந்தாலும் நியமன வாய்ப்புப் பெற முடியவில்லை. அவன் சோர்வடையும் போதெல்லாம் அவனதுத் தாய்-தந்தையரும் சகோதரியும் அவனுக்கு ஆறுதலும் ஊக்கமும் அளித்து வந்தனர்.
நிச்சயம் ஒருநாள் சோமனுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்தக் குடும்பத்தில் அனைவருக்கும் இருந்து வந்தது. நகரில் வாழும் படித்த, பிறர்க்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட மற்றும் புத்திக் கூர்மையுள்ளவன் என்பதால் பீத்தல்கர் நகரில் வாழும் பலரும் அரசு அலுவலகங்களுக்கு மனு செய்ய மற்றும் தங்களது சார்பில் அதிகாரிகளிடம் பேச என்று பலவித உதவி கேட்டு சோமனை அணுகுவார்கள். அவனும் வேண்டிய உதவிகளைச் செய்து தருவான். பிரதீப் என்ற இளம் வழக்கறிஞர் சோமனின் நெருங்கிய நண்பன்.
பீத்தல்கர் நகரில் அமைந்த அரசு அலுவலகங்களின் ஊழல் மலிந்த நிர்வாகம் மற்றும் அரசு வகுக்கும் மக்கள் நலத்திட்டங்களின் நோக்கங்கள், திட்டங்களின் பலனை நேரடியாக மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பொறுப்பில் உள்ள கள அலுவலர்களால் எவ்வாறெல்லாம் சிதைக்கப்பட்டு, பலன்கள் அலுவலர்களது சொந்த நலனுக்கு மடை மாற்றம் செய்யப்படுகிறது என்பதையும், அவர்களை எதிர்ப்பவர்கள் எப்படிப் பழி வாங்கப்படுகிறார்கள் என்பதையும் அரசு நிர்வாகத்தில் அலுவலர்கள் எப்படியெல்லாம் மக்களையும் உயர் அலுவலர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பது குறித்தும், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை எப்படியெல்லாம் ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து மோசடியான நடைமுறைகளைப் பின்பற்றி தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள் என்பது குறித்தும், விரிவாக உரையாடப்பட்டுள்ளது.
கடும் வறட்சி ஏற்பட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அரசாங்கம் ஒதுக்க உள்ள வறட்சி நிவாரண நிதியை எப்படித் தங்களுடைய பைகளுக்கு மாற்றிக்கொள்ளுதல் என்று ஒவ்வொரு அலுவலரும் முன்கூட்டியே ஆலோசிப்பதும், அவர்களுடைய குடும்பத்தார், அந்நிதியிலிருந்து தங்களது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள திட்டமிடுவதும் உரையாடப்பட்டுள்ளது. மேலும் வறட்சி பாதிப்பை நேரில் பார்வையிட்டு நிவாரணத் தேவையை மதிப்பிட வருகை தரும் மத்திய அரசின் குழுவை ஏமாற்ற நடத்தப்படும் நாடகங்களும், அக்குழுவினர் அவற்றை முறியடித்து உண்மையான கள நிலவரத்தை அளவிடுவதும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
பீத்தல்கர் நகரில் உள்ள இரயில்வே நிலத்தை ஆகிரமிப்பு செய்து வேத் பிரகாஷ் என்பவனால் கட்டப்பட்ட சகல வசதிகளும் நிறைந்த ‘ஓட்டல் அமர்’, முறைகேடுகள் செய்வோருக்கான உல்லாசபுரியாக விளங்குகிறது. வாழ வழி இல்லாமல் புலம் பெயரும் குடும்பங்களிலுள்ள பள்ளி மாணவர்களது இடைநிற்றலைத் தடுத்தி நிறுத்தி அவர்கள் கல்வியைத் தொடர ஆவன செய்யப்போராடும் ஆசிரியர், ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் அவரது மகள் பாண்டியா மற்றும் அவ்வூழல்களுக்கு உடந்தையாக இருந்து அத்துமீறும் மோகன் என்ற கவுன்சிலர் என்று பல விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த கதைக்களம், ஜூடாபந்த், பீத்தல்கரிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்த மலைவாழ் மக்களது வாழிடம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் வாழ்ந்த அவ்விடத்தை அவர்களுக்கு அந்நியமாக்கி, அப்பழங்குடி மக்களது வாழ்வுரிமை மறுக்கப்படுவதையும் அவர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை மற்றும் வன்முறைகளையும், அவர்கள் படும் துன்பங்களையும், அம்மக்களது தலைவனான மாலியா கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதும், சூலுற்றிருந்த அவன் மனைவிக்கு உரிய மருத்துவ மற்றும் மகப்பேறு உதவி கிடைக்காமல் போவதும் விரிவாக உரையாடப்படுகிறது. சோமன் மற்றும் அவனது நண்பன் பிரதீப் ஆகியோரது உதவிகள் பெறும் மாலியா, மக்களை ஒன்றுதிரட்டி வெறித்தனமாகப் போராடுகிறான்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் என்ற பெயரில் பல்வேறு ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் மக்கள் அஞ்சாமல் களத்தில் நின்றனர். நியாய உணர்வுள்ள மாவட்ட ஆட்சித்தலைவரும் அமைச்சரும், உள்ளூர் அலுவலர்கள் தந்திரமாகப் போட்ட முட்டுக்கட்டைகளை எல்லம் தகர்த்தெறிந்து போராட்டக்காரர்கள் கோரிக்கைக்கு இணங்கி ”ஜுடாபந்த்’ தை ஒரு வருவாய் கிராமமாக அங்கீகாரம் செய்கின்றனர். சோமன் வழிநடத்தி வெற்றிபெற்ற போராட்டம் இது. பழங்குடியினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் பலகாலமாக இருந்துவந்த மோதல் போக்கு முற்றிலுமாகத் தகர்ந்து இணக்கமான சூழல் உருவாகிறது.
மூன்றாவது களம் பெங்களூரு, கர்நாடக மாநிலத் தலைநகர். பெங்களூருவிலுள்ள பட்டுத்துணிகள் உற்பத்தி செய்யும் தனியார் பெருநிறுவனம் ஒன்றின் நிர்வாகியாக நல்ல ஊதியத்தில் நியமனம் பெற்றுப் பணியில் சேரும் சோமன், அங்கு நிர்வாக அளவில் பல சோதனைகளை சந்தித்து தனது தனித்திறமையால் தான் பணியாறும் நிறுவனத்துக்குப் பலம் சேர்ப்பதைப் பற்றியும், பெங்களூருவிலேயே தனது மனைவியுடன் நிரந்தரமாகத் தங்கிவிடும் சூழ்நிலைகளை உருவாக்கிக்கொள்வதைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
உள்ளூர் அளவில் செயல்படும் அலுவலங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அலுவலர்களின் அத்துமீறல்கள், பல துறை அலுவலங்களிலும் நடைபெறும் முறைகேடுகள், ஏற்படுத்தப்படும் நிர்வாகக் குழப்பங்கள், மக்கள் வஞ்சிக்கப்படுதல், அரசின் உதவித்திட்டங்கள், திட்ட நிதிகள் எப்படி மடைமாற்றம் செய்யப்படுகிறது ஆகியவை மிகத் தெளிவாக விவரிக்கப்படுகிறது. அதேபோல சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் கையாளுதல் தொடர்பான நடைமுறைகள், ஜூடாபந்த் கிராமத்தை ஒரு வருவாய் கிராம நிலைக்கு உயர்த்த எடுக்கப்படவேண்டிய வருவாய்த்துறை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள், வனச்சட்டம் ஆகிய அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மிகத் தெளிவாக விவரிக்கிறார் கதாசிரியர்.
இவர் அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அரசு அலுவலர் என்பதால், தனது பணிக்காலத்தில் அவர் கற்றவைகளும், நேரில் காண நேர்ந்த கள அளவிலான அவலங்களும் இவரது தெளிவான மற்றும் சீரான உரையாடல்களுக்குப் பெரும் உதவியாக அமைந்திருப்பதை உணரமுடிகிறது.
மற்றொரு சிறப்பு, இவர் தேர்ந்த கவிஞர் என்பதால் காட்சி விவரிப்புக்களை கவித்துவமான வரிகளின் கோர்வைகளாகவே அமைத்துள்ளதுடன், சூழல்களுக்குப் பொருத்தமான அளவில் ஆங்காங்கே ஜான்கீட்ஸ், ரூமி, பாப்லோ நெருடா, எண்டிமியான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட கவிஞர்கள் மற்றும் நாடக ஆசிரியர்களது புகழ்மிக்க மேற்கோள்களைப் கதாப் பாத்திரங்களின் கூற்றாகவோ அல்லது மனவோட்டமாகவோ இடம் பெறச் செய்துள்ளார். மொத்ததில் நூல் முழுவதிலும் கவிதை மணம் செறிவாகவே வீசுகிறது.
இப்புதினத்தில், மூன்று திருமண நிகழ்வுகள் அதாவது, மோகன்-பாணிட்டா, மினாட்டி, சோமன் – ஆராத்தி ஆகியோரது திருமண நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. வங்காளி மற்றும் ஒடிசா முறைப்படியும் அவரவர் இனம் தொடர்பான முறைப்படியும் நடைபெற்ற திருமணங்கள் இவை. திருமணச் சடங்களும் நடைமுறைகளும் விரிவாகவே விவரிக்கப்பட்டுள்ளன. தவிர, சோமனின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் மேற்கொள்ளும் தெய்வ வழிபாட்டுச் சடங்கு முறைகள், மற்றும் பழங்குடி மக்களது வழிபாட்டு முறைகள் ஆகியவையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
திருமணம் மற்றும் தெய்வ வழிபாட்டு முறைகள் ஆகியவை, அவரவர் இனம் மற்றும் மொழி சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் ஆகும். அந்த வகையில் வங்காளி மற்றும் ஒடிசா பண்பாட்டு அடையாளங்கள் இந்நூலின் வழியாகத் தமிழ் நிலத்துக்கு அறிமுகம் ஆகின்றன. அத்திருமண சடங்குகளில் சில தமிழ்நாட்டில் நிலவும் சடங்குகளை ஒட்டியே அமைந்திருக்கின்றன என்பது ஆய்வாளர்கள் கவனத்திற்குரியது.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களுடன் இந்நூலைப் படைத்திட்ட மூல நூலின் ஆசிரியர் திரு. அஸ்வின்குமார் மிஸ்ரா பாராட்டிற்குரியவர்.
ஆங்கில மொழிப் புலமையும், தமிழ் மொழி மீதான பட்டறிவும், கதாசிரியர் என்ற முன் அனுபவமும் கொண்டு, மூலநூலின் சிறப்புக்கள் சிதையாவண்ணம் மிக நேர்த்தியாகவும் கவித்துமான அழகுடனும் இப்புதினத்தைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள திரு.க.மூர்த்தி. பாராட்டிற்குரியவர்.
